இரா. கலையரசியின் இரண்டு கவிதைகள் (தாமரைக்குளம், வாடை)

Era. Kalaiarasi Writes Two Poetries in Tamil Language. இரா. கலையரசியின் இரண்டு கவிதைகள் (தாமரைக்குளம், வாடை)1. தாமரைக்குளம்

சிவந்த இதழ்கள் விரிந்து
அழகை அள்ளி இரைத்தது.
ரோஜா மலர் முகம் திருப்பி
அசூகையை உலவ விடும்.
சிவப்பு போட்டி நடந்தால்!

கோயில் குளத்தில் துளிர்த்திட்ட
உயர் சாதி மலரன்றோ?!
இறைவன் திருமேனி அடைவது
மனிதர்க்கும் இல்லாத சலுகை!

மொட்டு அவிழ மறந்தநொடியில்
மொத்தமாய் பறித்து சென்று
குறிப்பிட்ட கடவுளர்களுக்கு
செல்ல பிள்ளையாகவும் ஆகும்!

கூடுதல் அழகில் முகம் சிவக்க
எப்போதும் தனி கவனிப்பு!
பாசிகளும் பூச்சிகளும்
விதியை நொந்தபடி கிடக்கிறது.

தாமரையின் தண்டும் வேர்களும்
தாங்கி பிடித்த கதைகள்
கசடுகளில் மூச்சிரைத்து
கேட்பாரின்றி காணாமல் போயின!

மூக்கு துவாரங்கள் அடைக்க
மூச்சு முட்டி போகும் முகர்ந்தால்!
புறத் தோற்றத்தில் கதைஅளந்து
ஆட்சியை பிடித்திடும் அசந்தால்!

Era. Kalaiarasi Writes Two Poetries in Tamil Language. இரா. கலையரசியின் இரண்டு கவிதைகள் (தாமரைக்குளம், வாடை)

2. வாடை
*********

நனைந்து போன பஞ்சுகள்
ஈரத்தை வாடை பிடிக்க
நெளிகிறது உடல்.

குருதி கொடை அளித்து
உயிர்ப் பரப்பை
பெருக்குகிறது
ரத்தவாடை.

அடிவயிறு இலக்கம்
கொடுக்க
அயர்ந்து போன தசைகள்
ரத்தக் கசிவினை
நிறுத்தாது
தொடர்கிறது பணியை!

கவனம் சிதறிய நேரத்தில்
ஆடையை நனைத்து விட்டு
ஆயாசமாய் இருந்து
விடுகிறது
ரத்தவாடை.

பெரும்பாடு தான் இந்த
வாழ்க்கைப்பாடு
உரத்து சொல்கிறது
ரத்தவாடை..

பெருகும் ஊரணி
ஊர் வளர்த்து விட
பெருகும் ரத்தபெருக்கு
உயிர் வளர்த்து விடுகிறது.

யாரும் பார்க்கா நேரங்களில்
புறமுதுகு பார்க்க
எத்தனிக்கும்
பெண்களின் உளவியலில்
வீசுகிறது ரத்தவாடை.

இதயம் நனைத்த கருணை
அன்பைப் பொழிகிறது.
உடலை நனைத்த ரத்தம்
உயிரைக் குறைக்கிறது.

விளக்கிப் பேசா மௌனமாய்
எழுத்துகளில் அடைய விரும்பி
மனதைச் சொல்லி விட்டது
ரத்தவாடை

அடர் நிறத்து ஆடைகளில்
அழகாய் மறைத்துக்
கொண்டு
பேசும் பெண்களின்
ரத்தவாடை வலி மிகுந்தது.

உடலைக் கடந்து மற்றவர்
பார்த்து மோப்பம்
பிடித்து விட்டால்
கூசி நாணி நெளிந்து
விக்கித்துப் போகிறாள்.

எதையும் கண்டு
கொள்ளாது
ரத்தப் பெருக்கை
இனிதே செய்து முடித்து
ரத்தசோகையைப் பரிசாக்கியது
ரத்தவாடை.

–இரா. கலையரசி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.