தனியார் நூல் ஆலையில் உற்பத்தி மேலாளராக பணிபுரியும் அன்பு நண்பர் இரா மதிராஜ் அவர்களின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. எல்லோரது இனிமையான பருவமாகவும் மறக்க முடியாத நினைவுகளைச் சுமந்த பருவமாகவும் விளங்கும் இளமைப் பருவத்தின் மீள் பார்வையில் தனது பள்ளி ஆசிரியர்களை நினைவு கூறும் கவிஞரின் மனதில் எப்போதும் போல காதலும் தாயன்பும் பெருங்கருணையும் இயற்கை மீதான பிரியமும் பீறிட்டு வருகின்றன.

மனிதன் குழந்தையாக இருக்கும் போதும் வளர்ந்து ஆளாகும் போதும் வழித்துணையாக எப்போதும் மறையாது உடன் வரும் நிலாவை உற்ற தோழியாக்கி உரையாடி மகிழும் கவி மனதிற்கு தன்னையே சிறப்பான தோழியாக மாற்றி நிலாவோடு பேசவும் துணிகிறது உள்ளம். கனவுகளையும் காட்சிகளையும் வாழ்வின் அனுபவித்து தீராத பெருங்கருணையையும் தான் காணும் உயிர்களிடத்தில் கண்ணுறும் போதும் தானே அவைகளாக மாறி நின்று உருமாறும் போதும் நிலாவிடம் சொல்லி அழவும் சிரிக்கவும் தயாராகும் மனதை விரித்துச் செல்கிறது நூலின் வரிகள்.

தீர முடியாத தவிப்புகளில் வட்ட நிலாவின் வெளிச்சத்தை எண்ணியபடியும் ஆனந்தக் கூத்தாடும் தருணங்களில் நிலவை தனது துணை எனக் கண்டும் பேசியும் பார்த்தும் ரசித்தும் தன்னை உயிர்ப்பிக்கும் மனதில் இருந்து நம்மை குளிர்ச்சிப்படுத்துகின்றன கவிதை வரிகள்.

தனது வாழ்வை மட்டுமே வளப்படுத்தும் குறுகிய மனங்களுக்குள் பிற உயிர்கள் மீதான பிரியமும் கருணையும் பிறந்து விடுவதில்லை. எல்லா உயிர்களையும் சமம் என்று நேசித்தும் இயற்கையின் அளவிலாப் பரிசுகளை எண்ணி பெருமை அடைந்தும் உலகின் போக்கில் நிலவிடும் சமூகக் கொடுமைகளைக் கண்டு வேதனைப்படுதலும் கோபம் என உருமாறி சீறிப் பார்க்கின்றன. அன்பென கை தீட்டி அழகு பார்க்கின்றன.

தான் அறியாமல் தரையில் சிந்தும் பொருட்களின் வழியே உலகில் பல் உயிர்கள் உயிர் வாழ்வதை ஈகை எனச் சொல்லி
“”திறமைகள்
வெற்றி பெறுவதற்கு
மாத்திரம் போதும்
உலகம்
இயங்குவதற்கு போதாது””
என்று தன்னைத்தானே உணர வைத்துக் கொள்ளும் அன்பில் உயிர்கள் வாழத் தேவையான ஈரம் கசிகிறது.

தனக்கான சவக்குழியை தானே தனது செயல்களின் வழியே தோண்டிக் கொள்ளும் மனிதனின் இன்றைய நிலையில் இயற்கையை அழிக்கப் பார்க்கின்றன. வளங்களை நசுக்கி வனங்களை பாலையாக்கி உலகின் வெப்பத்தை உயர்த்தி விடுகின்றன. தனக்கான தவறுகளை உணராமல் கண்களை திறந்தபடியே பயணித்துக் கிடக்கும் மனிதர்களை ஒற்றை மரமாவது வளர்த்துங்கள் என அன்போடு கெஞ்சுகிறது. இயற்கையைக் காத்திட வேண்டும் என்ற தவிப்பில் மனிதனிடம் வேண்டிக் கொள்கிறது. ஒற்றை மரத்தை வளர்த்திடும் கரங்களின் வழியே நீளும் வேர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள் அவைகள் ஒன்றாய் தான் இணைந்திருக்கும் என்ற வரிகளின் வழியே நிகழ்காலப் போக்கின் நிதர்சனத்தை உணர்த்துகிறது கவிஞரின் மனம்.

காலச்சூழல் கண்ணெடுத்தும் பாராமல் உலகத்தைக் கட்டி இழுத்து ஓடிக் கொண்டிருக்கும் பொழுதில் கிணறுகளின் தேவையோ சடங்குகளின் நிலைமையோ எண்ணிப் பார்த்திட இயலுவதில்லை. ஆடி அடங்கும் மனித வாழ்வில் பிணமான பின் நீர்மாலை எடுத்தல் பாடை எடுத்தல் இடுகாட்டுச் சடங்குகள் என இறுதி ஊர்வலக் காட்சிகள் யாவும் கதிரவனிடம் காணாது போன பனியின் நிலையாமை போல நம் கண்களில் இருந்து காணாமல் போய்விட்டன. பெருங்கூட்டம் எனக் கூடி சாவுக்கும் வழி அனுப்பிய தலைமுறை தொலைந்து சுகமோ துக்கமோ நாலு பேராக கலைந்து போய்விடும் காலப் பெருவெளியில் உலவிக்கொண்டிருக்கும் நிலையில் நிற்பதை வேதனையோடு கண்ணீர் வடிக்கிறது கவிஞரின் உள்ளம்.

தாய்ப்பாசத்தை அனுபவித்த மனங்களில் உயர்ந்த நிற்கும் அம்மாவின் சித்திரம் எத்தனை காலம் ஆயினும் அழியாது வளர்ந்து கொண்டே இருக்கும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைப் போல தாய்மையின் வழிகாட்டலை உணராதவர்களுக்கு அன்னையின் அவசியமும் கருணையும் பெரிதாகப்படுவதை கொண்டாடித் தீர்க்கிறது இக்கவிதை
“அன்னையை இழந்த
பிள்ளைகளாலேயே
அதிகமாக
கொண்டாடப்படுகிறது
இங்கு அன்னையர் தினம்””

எல்லோருக்கும் அவரவர் அம்மாவை கொண்டாடி தீர்க்கும் வேளையில் தனது இறுதிக் காலம் வரை உடன் வரவேண்டும் அம்மாவின் பாசமும் பந்தமும் என்ற தீராக் கனவு ஒலித்துக் கொண்டே இருக்கும் வகையில் அம்மா உயிரோடு இருந்திருந்தால்
“”நெடுநாள் எரியாமல் இருக்கும்
முகப்பு விளக்கு சரி செய்யப்பட்டு இருக்கும் ஆம் அம்மா உயிரோடு இருந்திருந்தால் நானும் கூட ஒரு முறை மன்னிப்பு கேட்டிருப்பேன்”
என்று அக்கவிதையை முடிக்கும் தருணத்தில் எத்தனையோ முறை அம்மா சொல் கேட்காமலும் அம்மாவின் வழியை பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாக தான் செய்த செயல்களை எண்ணிப் பார்க்க விளைகின்ற மனத்தை ஆற்றுப்படுத்துதல் அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

காதல் உள்ளத்தில் பூக்கையில் காணும் உயிர்கள் எல்லாம் புன்னகை வாசம் வீசத் தொடங்கி விடும். பார்க்கும் இடமெல்லாம் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். நெஞ்சுக்குள் சொற் குவியல்கள் வந்து விழுந்து அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி என வார்த்தைச் சிற்பங்களை வடிக்கத் தொடங்கிவிடும்.
“எப்போது திறக்கும் என
எதிர்பார்ப்பது
சொர்க்கவாசல் மட்டுமல்ல
உன் வீட்டு
வாசலும் தான்”
என்று தவம் கிடக்கும் கவிஞரின் காதலும் அப்படியானதொரு ஆனந்தத் தருணத்தை நமக்குள்ளும் எழுதிச் செல்கிறது.

கவிஞர்களின் ஆதார சுருதியே அவர்களின் மனங்களுக்குள் எழும் வார்த்தைக் குவியல்களே எனலாம். எவ்வளவுதான் புதுப்புது சொற்களைத் தேடி மொழியின் வழியே நம் சிந்தைகளை நிறைத்திட நின்றாலும் எல்லாவற்றையும் உண்டு களித்து சிரித்துப் போய் விடுகிறது இயற்கை என்பதை அழகாகச் சொல்கிறது
“இதுவரை
எழுதாத கவிதைகள்
அனைத்தும்
இயற்கையிடமே
இருக்கிறது “
என்ற கவிதை.இயற்கைக்கும் மனித உயிர்களுக்கும் இடையிலான பந்தத்தை விட இயற்கைக்கும் பூச்சிகளுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பந்தம் மிகப்பெரியது. காலச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மனிதர்களைவிட சிறு உயிரிகள் முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும். அந்த வகையில்
“மழைக்கு மறுநாள்
நடக்கும் போது
முன்பு வந்து
ஒரே இடத்தில்
தரை இறங்காமல்
வட்டமடிக்கும் அந்த
வண்ணத்துப்பூச்சி
சொல்கிறது
இன்னும்
சில தினங்களில்
பசுமையைக்
காணலாம் என்று ”

இயற்கையின் பிரசவத்தை முன்கூட்டியே நமக்குச் சொல்லி ஆனந்த கூத்தாடுகிறது வண்ணத்துப்பூச்சி.

தல விருட்சம். கவிதைப் பொங்கல். கரும்புச் சாறு, காக்கை குருவிகள் எங்கள் ஜாதி என ஒவ்வொரு கவிதையும் இயற்கையின் பால் கவிஞர் கொண்ட நேசத்தை வெளிக்காட்டும் அதே வேளையில் ஒவ்வொரு கவிஞரின் மனங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் காதலின் தோல்விகளையும் அங்கங்கே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

வாழ்வெனும் வானத்தில் நட்சத்திரங்களும் மின்னுகின்றன நிலாவும் அழகு காட்டுகிறது. இவரின் நிலா மகளுக்கு ஒரு தோழி அவ்வாறு கவிதையின் வழியே வானவில் தருணங்களையும் படம் பிடிக்கிறது வாழ்வியல் அழகியலையும் காட்சிப்படுத்துகிறது வறுமையின் தாண்டவத்தையும் கூறுகிறது. சிறப்பான கவிதைகளை எழுதிச் சென்று இருக்கும் நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.

 

நூலின் தகவல்கள்:- 

நூல் : “நிலா மகளுக்கு ஒரு தோழி”

நூலாசிரியர் : இரா மதிராஜ்

வெளியீடு : இயக்கி பதிப்பகம் சென்னை

முதல் பதிப்பு :  மார்ச் 2024

விலை : ரூ.120

பக்கம் : 96

நூலறிமுகம் எழுதியவர்:- 

இளையவன் சிவா

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *