இரா. முருகன் / Era. Murugan Writes லண்டன் டயரி / London Diary Book Review By Karuna Murthy. லண்டன் வரலாறு (History)

இரா. முருகன் எழுதிய *லண்டன் டயரி* – கருணா மூர்த்தி“லண்டன் டயரி”
இரா. முருகன்
கிழக்கு பதிப்பகம் வெளியீடு 
முதல் பதிப்பு 2009
விலை ரூ. 170
மொத்த பக்கங்கள் 168.
சென்னை எப்படி உருவானது என்பதை சென்னை நகர கதை படித்து அறிந்து கொள்ளலாம். அதுபோலவே லண்டன் எப்படி உருவானது என்பதை இந்த லண்டன் டயரி படித்து தெரிந்து கொள்ளலாம்.
பயணம் !
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது .
பாதை எல்லாம் முடிந்துவிடும் பயணம் முடிவதில்லை என்றார் கவிஞர் கண்ணதாசன்.
செலவு சுற்றுலா பயணம் என்று எப்படி சொன்னாலும் பயணம் இனிக்கத்தான் செய்கிறது.
வாழ்க்கைப் பாடங்கள் படிப்பதற்கு மிகச்சிறந்த ஆசான், பயணங்கள். பல ஊர்களுக்கும் சென்று, வித விதமான மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறலாம். சில பயண நட்புகள் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
புது வகை புது உணவுகள், மனித பழக்க வழக்கங்கள், பிரமிக்கத்தக்க கட்டிடங்கள், கலைகள், பூகோள அமைப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இவற்றை காணும்போது மனம் குதூகலிக்கும். சுற்றுலா வேறு; பயணம் என்பது வேறு. கண்களை காதுகளைத் திறந்து பயணிக்கும்போது, பலவிதமான அனுபவ நிஜங்கள் நம்மைத் தாக்கும், புன்முறுவல் செய்ய வைக்கும், படிப்பினை தரும்.
கவிஞர் வைரமுத்து எழுதிய பாடலில் “எட்டு எட்டா மனித வாழ்வை, பிரிச்சிக்கோ…” அதில், *ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமும் அல்ல! நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமும் அல்ல* இப்படி ஒரு வரி வரும். உண்மைதான். 50 வயதுக்குள் உலகில் பல்வேறு இடங்களுக்கு சென்று பயணிப்பது இவ்வுலகை ரசிக்க, ஆழமாக நேசிக்க, புரிந்து கொள்ள உதவும். பயணம் செய்ய வயது ஒரு தடையல்ல! இருப்பினும், வயதான காலத்தில் சில இடங்களுக்குச் சென்று பார்த்து ரசிக்க உடல் இடம் கொடுப்பதில்லை. எனவே, வாய்ப்பு கிடைக்கும் போது, “பயணம் செய்யுங்கள் “என்பதே.
ஆசிரியர் குறிப்பு:
பொதுவான எழுத்துக்களிலிருந்து மிகவும் வேறுபட்டது .தனித்தன்மை கொண்டது. இந்த நாவலுக்கான களத்துடன் அவரது மொழிநடை ஆகச்சிறந்த அளவில் இயைந்து போகிறது. இரா. முருகன் அவர்கள் முதல் கவிதையை 1977ஆம் ஆண்டும் முதல் சிறுகதையை 1984 ஆண்டும் கணையாழியில் எழுதினார். தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஐந்து நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள் ,இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். வளமான மொழி ஆற்றல் மிக்கவர். மலையாளத்திலிருந்து தமிழுக்கு குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகளை செய்துள்ளார். இவரது பல படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன .
கதா விருத, இலக்கிய சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல விருதுகள் பெற்றுள்ளார். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற முருகன் தற்போது சென்னையில் இருப்பிடமாகக் கொண்டு வசித்து வருகிறார். எனக்கு பிடித்த ஆசிரியர்களும் ஒருவர். அகம் கவர்ந்த முகநூல் நண்பர் இவர். இவர் எழுத்துக்களை முகநூலில் நிறைய வாசித்திருக்கிறேன். தனித்து புத்தகமாக “1975 “வாசித்து உள்ளேன். சாற்றுக் கவி வெண்பாவில் கிரேசி மோகன் அவர்கள் இரா.முருகனை புகழ்ந்து தள்ளியுள்ளார்:
“துயிலேறும் மாலும், மயிலேறும் வேலும் கயிலையின் சூலமும் காப்பு –ஒயிலான கற்பகமும் சேர்ந்துமை காத்திடுவார்,
உம் கதையை நற்பொருள் நாவல் சிறப்பு ….!” என்று படிக்கும் போதே நமக்கும் உற்சாகம் பீறிட்டு வருகிறது.
இனி லண்டன் டயரி குறித்து பார்ப்போம்:
ஆசிரியர் தனது லண்டன் பயணத்தின் பயனை இரண்டு விதமாகப் எழுதியிருக்கிறார் .அன்றைய சரித்திரமும் இன்றைய நிஜ நிகழ்வும் குறித்து இரண்டு விதமாக எழுதியிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் முன்பகுதி சரித்திரமும் பின்பகுதி அன்றைய தினம் பார்த்த நிகழ்வுகளும் ஆசிரியர் அழகாக எழுதி பகிர்ந்து இருக்கிறார். ஆசிரியர் தான் பார்த்ததும் லண்டனில் சரித்திரமும் நிகழ்காலத்தையும் இறந்த காலத்தையும் ஒப்பிட்டு நம் கண்முன்னே நிறுத்தி எழுதிய எழுத்து சுவையாக இருக்கிறது. பொதுவான எழுத்துக்களிலிருந்து மிகவும் வேறுபட்டது .தனித்தன்மை கொண்டது. இந்த நாவலுக்கான களத்துடன் அவரது மொழிநடை ஆகச்சிறந்த அளவில் இயைந்து போகிறது..
இருபத்தி ஆறு அத்தியாயங்களில். இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
​லண்டன் சலோ.
​எச்சில் காசுக்கு எடுத்த டிக்கெட்.
​பாதாள ரயில் பார்வையில்.
​அரண்மனை விஜயம்..
​ஆவிஉலவும் தியேட்டர்.
​நாடாளுமன்றத்துக்கு ஒரு நடைபயணம் .
​கேன்சிங்டன் குபேரர்கள்.
​பிளாக் டிக்கெட் பாட்டுக்கச்சேரி.
​இட்லி சாம்பார் லண்டன்.
​கோபுர தரிசனம்.
​அரசாங்க உபசாரம்.
​காக்கா வளர்க்க காசு.
பாலத்துக்கு பயணம்.
​தேம்ஸ் நதியின் மிசை வெயிலினிலே.
மாப்போடு ஒரு க்விஸ்.
​அணைக்க மறந்தால் ஆபத்து.
​புட்டுச் சந்தும் நெருப்பு நெருப்பு நினைவுகளும்.
​கொத்தவால்சாவடி, லண்டன்.
​சட்டை உரித்த உருளைக்கிழங்கு.
​முப்பாட்டன் காலத்தில் காப்பி இருந்தது.
​பிசாசு பாடும் அரங்கு.
​தினசரி 4 காட்சி– எழுத்தாளர் சண்டை
​காலர் விற்ற காசு.
​பிக்கடிலிச் சோழர்கள் .
​கடைத்தெரு கதைகள் .
​அலுமினியக் சிலையும் அலுக்காத நகரமும் என்று லண்டன் சரிதத்தையும் தான் பார்த்த லண்டனையும் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
லண்டன் டயரி 1
இரா. முருகன் / Era. Murugan Writes லண்டன் டயரி / London Diary Book Review By Karuna Murthy. லண்டன் வரலாறு (History)கிபி முதல் நூற்றாண்டில் தான் லண்டனுக்கான வரலாற்றின் ஏடுகள் தொடங்குகின்றன. ரோமானியப் பேரரசு விரிவடைந்து கொண்டிருந்த காலம் அது. நாட்டுக் குடிமக்களில் பாதி பேரை நாளுக்கு நாலு திசையிலும் அனுப்பி வைத்தது. ரோமானிய அரசு அந்த அளவுக்கு விரிவாக்க என்று உருவாக்கப்பட்ட அந்த திட்டப்படி
கி.பி. 43ஆம் வருடம் ஒரு படைப்பிரிவு தேம்ஸ் நதிக் கரைக்கு வந்து சேர்ந்தது. நதியைக் கடக்க பாலம் கட்ட ஆரம்பித்ததே ரோமானிய படை. அந்தப் பாலம் எழுந்தபோது பாலத்தை ஒட்டி நதிக்கரையில் வசிக்க கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வரத் தொடங்கினார்கள்.
லண்டன் இந்த குடியேற்றத்தில் தான் பிறந்தது. ரோமானிய வழக்கப்படி *லண்டீனியம் *என்று கம்பீரமாக நாமகரணம் செய்யப்பட்ட அந்த கிராமம் வளர்ந்து பெரிய நகரமான போது சிக் என்று* லண்டன் *ஆனது. ரோமானிய எதிர்ப்பு உச்ச கட்டத்தை அடைந்தது. எதிர்ப்பாளர்கள் தேம்ஸ் பிரதேசத்தை முற்றுகையிட்டு ஊரை அழித்தது. லண்டனை அழித்து தரைமட்டமாக்கியவர் ஒரு பெண்மணி. பெயர்பாவுடிகா ராணி. இகினி என்ற உள்நாட்டு பரம்பரையில் வந்தவர்.
மீண்டும் ரோமானியர்கள் லண்டன் நகரைக் கைப்பற்றி உருவாக்கினார்கள். அங்கிருந்து தேம்ஸ் நதியை வழியாகவும் தரை மார்க்கமாகவும் ஐரோப்பா முழுக்க போவது எளிது. ரோமாபுரி மாதிரி அதிக வெப்பம் அதிக குளிர் இல்லாத காலநிலை வருடம் முழுவதும் நிலவுகிற இடம். எனவே பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க லண்டன் நகரின் பிரபுக்கள் வசிக்க மாடமாளிகைகள் நிறைய எழுந்தன.
டயானா என்ற பெண் தெய்வத்தின் கோவில் இருந்த இடத்தில் தான் புனித பால் தேவாலயம் அமைந்துள்ளதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
ரோமானியர்களின் ஒரு நல்ல பழக்கத்திற்கு சான்று கூறும் சில தடயங்கள் தேம்ஸ் கரையோர அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்திருக்கின்றன. *குளியல் விடுதிகள்* தான் அவை. நூறு வருடங்கள் கழித்து லண்டனில் களப்பிரர் ஆட்சி அதாவது தமிழகத்தில் பல்லவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் யார் அவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்பதே தெரியாமல் இருந்த காலம் என்றும் களப்பிரர் காலம் என்றும் நம் நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதுபோல்.
ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்து அவர்களை ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கிற வியாபாரத்தில் இந்த இருண்ட கால ஆட்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு இருந்ததாகவும் ,லண்டன் இந்த வியாபாரத்துக்கான முக்கிய இடமாக செயல்பட்டது என்றும் தெரிய வருகிறது.
விக்டோரியா மகாராணி காலம்வரை இங்கிலாந்து நாடு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த ஈனமான தொழிலே கணிசமான வருமானம் ஈட்டி இருக்கிறது.
கிபி 450 ஆங்கிலோ சாக்ஸன் வம்சாவழியினர் தேம்ஸ் நதி சார்ந்த நிலப்பரப்பில் ஊடுருவ முற்பட்டார்கள் .லண்டன் நகரம் கிழக்கு சாக்சன் ராஜாவுக்கு சொந்தமானது.
கிருத்துவ மதம் லண்டனிலும் மற்ற இங்கிலாந்து பகுதிகளிலும் அறிமுகமானது இந்த நேரத்தில்தான். கிபி 597, லண்டனை ஆண்ட கெண்ட் வம்ச அரசன் எதெல் பெர்ட், புனித பால் தேவாலயத்தை எழுப்பியதைத் தொடர்ந்து, உரோமாபுரியிலிருந்து அப்போதைய போப்பாண்டவர் முதலாம் கிரகோரி லண்டனுக்கு அகஸ்டின் பாரதியாரை அனுப்பி வைத்தார். கிபி 640 பதில் தற்போதைய பிக்கடிலிக்கு அடுத்த சேரிங் கிராஸ் மற்றும் ஸ்ட்ராண்ட் பகுதி லண்டன் பெருவர்த்தகர்கள் குடியிருப்பு ஆனது.
கிபி 830 தொடங்கி வைக்கிங் வம்சத்தினர் ஆங்கிலோ சாக்ஸன் ஆட்சியில் இருந்த இங்கிலாந்து பிரதேசங்களை முழுமூச்சாக முற்றுகையிட்டார்கள். ஆல்பட் அரசனின் லண்டன்பர்க் திரும்ப எழுந்தது. சில நிகழ்வுகளுக்கு பிறகு கிபி 1042 இல் கான்யூட் அரசனின் தத்துப் புத்திரன் எட்வர்ட் அரியணை ஏறினான்.
மன்னனின் மருமகன் வில்லியம் பிரபு நார்மண்டி தேசத்து அரசன் லண்டனை கைப்பற்றினான். லண்டன் பெரு நகரின் மக்களுக்கு உரிமை வழங்கி பாதுகாப்பு அளிக்க வில்லியம் மன்னன் எழுதி வைத்த அந்த சாசனம் கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு அப்புறம் இன்னும் அழியாமல் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கே சீனியரானது லண்டன் மாநகராட்சி. அதிகார பலத்தாலும் கார்ப்பரேஷன் தான் முதலிடத்தில்.
லண்டன் மேயர்கள் பாரம்பரியம் 1193 தான் தொடங்குகிறது. மும்பையிலும் டெல்லியிலும் தூதரகம் திறந்திருக்கிறது லண்டன் மாநகராட்சி. ஏற்கனவே இருக்கும் பிரிட்டிஷ் தூதரகம் இல்லை இது; இலண்டன் மாநகர தூதரகம். முக்கிய வியாபார கேந்திரமாக திகழ்ந்த லண்டன் தொழில் மையமாக ஆனது பதினைந்தாம் நூற்றாண்டில் துணி உற்பத்தி செழித்து வளர்ந்தது இலண்டனில் தான். 1647 ஆறாம் எட்வர்ட் ஆட்சிக்கு வந்தபோது கத்தோலிக்க வழிபாட்டு இடங்களை இடித்து விட்டு அழகான மறுமலர்ச்சி கால மாளிகைகள் அமைக்கப்பட்டு பிரபுக்கள் குடி புகுந்தார்கள். மடாலயங்களில் வீழ்ச்சி லண்டனில் மதகுருமார்கள் மூலம் நடைபெற்ற கல்வியறிவு பெருக்கத்தையும் பாதித்தது. படிக்க இடமும் போதித்த ஆசிரியர்களும் இல்லாமல் சாதாரண மக்களின் குழந்தைகள் கஷ்டப்பட்ட நிலை பரவிய காலம் அது.
இரா. முருகன் / Era. Murugan Writes லண்டன் டயரி / London Diary Book Review By Karuna Murthy. லண்டன் வரலாறு (History)
ஆறாம் எட்வேர்ட் 1853 இல் இறந்த பிறகு ராணி ஆட்சி தொடங்கியது; மேரி மகாராணி பட்டத்துக்கு வந்தாள். முதலாம் எலிசபெத் ஆட்சி தொடங்கிய 1658 ஆம் ஆண்டு ஸ்பானிஷ்காரர்கள் லண்டன் மேல் படையெடுத்து வந்தார்கள். ஸ்காட்லாந்து லண்டனை கைப்பற்றிய காலத்தில் திட்டம் போட்டு கட்டியதுதான் கிரீன்விச் அரண்மனை, ராணி வீடு பகுதி மற்றும் ஓயிட்ஹாலில் விருந்து மண்டபம் ..
முதலாம் சார்லஸ் மன்னனுக்கு அடுத்து இலண்டனிலும் இங்கிலாந்திலும் ஆலிவர்கிராம்வெல் தலைமையில் முதலில் குடியாட்சியும் சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது. ஆலிவர் கிராம்வெல்லை வீழ்த்தி அடுத்தாற்போல் முதலாம் சார்லஸ்ன் மகன் இரண்டாம் சார்லஸ் அரசாளத் திரும்பி வந்த பிறகு இன்று வரை இங்கிலாந்து முடியாட்சி நாடு தான். அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் நாட்டை ஆள கௌரவத் தலைவராக நாட்டின் சட்ட அமைப்புக்குக் கட்டுப்பட்ட அரசனோ அரசியோ விளங்கும் நாடு.
திடீர் கொள்ளை நோயும் திடீர் தீ விபத்தும் லண்டன் நகரத்தை ஒரு வழியாக பாழ்படுத்தி விட்டன.அதன்பிறகு சுகாதாரத்தை பாதுகாக்க 1672 இல் (The Sewers Act)சாக்கடை சட்டம் கொண்டுவரப்பட்டது. 1688 இல் இரண்டாம் ஜேம்ஸ் காலமான பிறகு இளவரசர் வில்லியம் அரசனாக முடிசூட்டிக் கொண்டார்.
*கென்சிங்டன் அரண்மனை *தற்போது சரித்திர சின்னங்களில் ஒன்றாக நிமிர்ந்து நிற்கிறது. 1715 திலும் 1745ம் இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்து அயர்லாந்திலும் எழுந்த மத சம்பந்தமான புரட்சிகள் மக்களின் ஆதரவோடு ஒடுக்கப்பட்டன.
1821 நாடாளுமன்ற நடவடிக்கைகளை பிரசுரித்த குற்றத்திற்காக ஈவினிங் போஸ்ட் என்ற பத்திரிக்கை ஆசிரியரும் பதிப்பாளரும் கைது செய்யப்பட்டார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதாவது விக்டோரியா காலம் பிரிட்டனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவுக்கும் பெரும்பாலும் ஆசியா ஆப்பிரிக்காவுக்கும் சுரண்டல் காலமாக இருந்த இந்த நூறு வருடமும் பிரிட்டனின் பொற்காலம்.
ஜார்ஜ் அரசை தொடர்ந்து பட்டத்துக்கு வந்த அவருடைய மகள் விக்டோரியா மகாராணி பக்கிங்காம் அரண்மனையில் குடிபுகுந்தார். சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விக்டோரியா காலத்தில் இங்கிலாந்து என்பதால் மற்ற நாடுகளுக்கு பல காரணங்களுக்காக பயணம் செய்ய எகிப்திய சூயஸ் கால்வாய் போன்ற முக்கிய கப்பல் போக்குவரத்து வழிகள் உருவாக்கப்பட்டன . “பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ” என்று பாரதி பாட இன்னும் நிறைய காலம் இருந்தது. 1856 இல் இந்தியாவிற்கு கொண்டு வந்த தந்தி மூலம் 1857இல் நாட்டில் எழுந்த முதல் சுதந்திரப் போராட்டம் முறியடிக்கப்பட்டது.
பிரிட்டன் நாடு முழுக்க ரயில்பாதை அமைக்கப்பட்டது. பாதாள ரயில் பாதை நகரங்களில் பல பகுதிகளை இணைத்தது. டிராம்கள் ஓட , கார்கள்ஒட்ட ஆரம்பித்தார்கள். லண்டனில் முறையாக பாதாளச் சாக்கடை விக்டோரியா காலத்தில் அமைக்கப்பட்டது. விக்டோரிய பொற்காலம் தான் லண்டனில் தஞ்சம் அடைந்த அரசியல் அகதிகளின் காலம். அவர்களில் முக்கியமானவர் காரல் மார்க்ஸ்.
1851 இல் விக்டோரியா மகாராணியின் கணவர் ஆல்பர்ட் இளவரசர் லண்டன் ஹைட் பார்க்கில் உலக வர்த்தக தொழில் கண்காட்சி வெற்றிகரமாக நடத்தினார்.
இது தான் உலகில், எக்ஸ்போ இன்டர்நேஷனல் டிரேட் ஃபேர் போன்றவைகளுக்கு முன்னோடி. இளவரசர் ஆல்பர்ட் நினைவாக கென்சிங்டன் பகுதியில் தேசிய வரலாற்று அருங்காட்சியகமும், ராயல் ஆல்பர்ட் அரங்கமும் ,ஆல்பர்ட்டின்நினைவுச் சின்னமும், சிலையும் லண்டனுக்கு அழகு சேர்த்துக் கொண்டு நிற்கின்றன..
1901ஆம் வருடம் ஜனவரி 21ஆம் தேதி விக்டோரியா மகாராணிக்குப் பிறகு, இரண்டு உலகப் போர்களை வெற்றிகரமாக சந்தித்து விட்டு ,கம்பீரமாக உலகின் முக்கியமான நகரமாக நிமிர்ந்து நிற்கிறது *லண்டன் *;இனியும் நிற்கும்.
லண்டன் டயரி 2.
அத்தியாயத்தின் அடுத்த பாதியில் இவர் லண்டன் சென்ற பிறகு கண்ட காட்சிகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் .அதனை காண்போம். ஒரு விடுமுறை நாளில் லண்டனை சுற்றி பார்க்க ஆசைப்பட்டு புறப்பட்டு பிக்கடிலி பாதாள ரயில் நிலையம் செல்கிறார். அங்கிருந்து கிராஸ்கட் ரோடு, தெற்குகென்சிஙடன், நைட்ஸ்பிரிட்ஜ், ஹைட்பார்க் மூலை, பக்கிங்ஹாம் அரண்மனை, லீஸ்டர் சதுக்கம், லீஸ்டார் சதுக்கம், பல இடங்களுக்கு சென்று பார்வையிட செல்கிறார். லீஸ் டர் சதுக்கத்தில் சேரிங் கிராஸ் தெரு பழைய புத்தகக் கடைகளின் உலகம். ஸ்ட் ராண்ட் , வைக்கோல் சந்தை பகுதி நாடகம் கொட்டைகளுக்கு டிக்கெட் விற்க்கின்ற பகுதி இது.
இரா. முருகன் / Era. Murugan Writes லண்டன் டயரி / London Diary Book Review By Karuna Murthy. லண்டன் வரலாறு (History)
வெஸ்ட்மின்ஸ்டர் பாதாள ரயில் நிலையத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதையில் கழிவறைக்குப் போகும் பாதையில் தரையில் துண்டு விரித்து வைத்து ஒரு இளைஞர் அற்புதமாக வயலினில் இசை வாசித்துக் கொண்டிருக்கிறார் . இங்கே *பஸ்கிங் * அனுமதிக்கப்பட்டு உள்ளது என்று எழுதியிருப்பது ஆச்சர்யம் தரத்தக்கதே. இங்கிலாந்தில் ஆட்டோக்கள் புதிதாக அறிமுகமாகி இருக்கின்றன. எல்லாமே நம்மூர் தயாரிப்புதான் என்பதில் நமக்கும் பெருமை.
வெஸ்ட் மின்ஸ்டர் சுரங்கப்பாதையில் புகுந்து நான்காம் வாசல் வழியாக தேம்ஸ் நதித் தீரத்துக்கு போகலாம். நம்ம ஊர் கூவமாக இருந்த தேம்ஸ் இப்போது சுத்தமும் சுகாதாரமும் பளிங்கு போன்ற தண்ணீருமாக காணப்படுகிறது. கென்சிங்டன் பகுதிகளில் குபேரர்கள் வசிக்கும் பகுதி .
கிளாஸ்டர் வீதி பழைய புத்தகக் கடை வீதி, இங்கு புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் கிரகாம் கிரீன் மருமகப்பிள்ளை நடத்தும் கடை. கிரகாம் கிரீன் நம்ம ஊர் ஆர்.கே. நாராயணனும் உற்ற நண்பர்கள். ராயல் ஆல்பர்ட் அரங்கம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. தற்போது வருடாவருடம் பிரிட்டிஷ் ஒலி ஒளிபரப்பு நிறுவனமான பிபிசி கோடைகால இசை விழாவான *பிராம் * என்ற ப்ரோமன்ட் விழா நடத்துகிறது இங்கே. லண்டனில் இந்திய சாப்பாட்டுக்கு நிறைய வரவேற்பு உள்ளது.
லண்டன் டவர் னு சொல்வது ஒற்றை கட்டடம் அல்ல .சின்னதும் பெரிதுமாக 20 கோட்டை,கோபுரம் அகழி எல்லாம் சேர்ந்த இடம் முழுக்கவே லண்டன் டவர் தான் .
வெள்ளை கோபுரம் ,செங்கல் கோபுரம் , மணிக் கோபுரம், ரத்த கோபுரம்,தொட்டில் கோபுரம், நடுக்கோபுரம், உப்புக்கோபுரம் கிணற்றுகோபுரம் இப்படி 20 கோட்டை. முதன்முதலாக கட்டியது வெள்ளை கோபுரம் .இது கிபி 1078 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கிபி 1536 இல் ஆன் போலின் அரசியை அவரின் கணவன் எட்டாம் எட்வேர்ட் சிரச்சேதம் செய்த இடம் இது. லண்டன் டவர் வளாகத்தில் நிறைய காக்காய்கள் இருக்கும்.
இங்கிலாந்து ராஜவம்சம் போல இங்கே டவர் காக்கா வம்சம் ஐந்நூறு அறுநூறு வருஷமாக தொடர்ந்து இருக்கு. இப்பொழுது எட்டு காக்காய் மட்டும் இருக்கிறது .இது எல்லாம் பறந்து போனால் இங்கிலாந்து சாம்ராஜ்யத்துக்கு அழிவு காலம் ஆரம்பமாகி விட்டது என்ற நம்பிக்கை இங்கு நிலவுகிறது. டவர் வளாகம் வாட்டர்லூ பாரக்ஸ் பகுதியில் *ஜூவல் ஹவுஸ்* நகை இல்லம் இருக்கிறது. பிரிட்டிஷ் அரச வம்சம் காலகாலமாக சேமித்து வைத்த நகைகள் விலை உயர்ந்த வைரங்கள் எல்லாம் காட்சிக்கு வைத்திருக்கும் இடம் .நமது இந்திய நாட்டின் கோகினூர் வைரம் கூட இங்கேதான் இருக்கிறது.
நகரும் கன்வேயர் பெல்ட்டில் ஏறி நின்றால் ஒரு பிரதட்சணம் செய்து பார்க்க வேண்டியதை பார்த்துவிட்டு வெளியே வந்துவிடலாம். லண்டன் கோபுரம் பாலம் பார்க்கும் போது ராமேஸ்வரம் பாம்பன் பாலம் நினைவுக்கு வரும் .பாம்பன் பாலத்தில் தொழில்நுட்பம்தான் லண்டன் டவர் பாலத்துக்கும் அடிப்படை. தேம்ஸ் நதியில் கப்பல் வரும்போது இந்தப்பாலம் இரண்டாகப் பிரிந்து மேலே உயர்ந்து கப்பல் போக வழி விடும் .கப்பல் கடந்த பிறகு திரும்பவும் ஒன்றாக இணைய அதன்மேல் வாகனப் போக்குவரத்து தொடரும். கப்பல் வந்தாலும் கால்நடையாக போகிற பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் கடக்க பெரிய பாலத்துக்கு உச்சியில் இன்னொரு கால் நடை பாலம் உண்டு.
டவர் பாலம் அருகில் *எச் .எம் .எஸ் . பெல்ஃபபாஸ்ட்” என்ற போர்க்கப்பல் இரண்டாம் உலக யுத்த காலத்தில் இங்கிலாந்து கடற்படையில் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஜெர்மனியை 1944 ஜூன் மாத இறுதி கட்ட போரில் வென்ற பிறகு தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் பாரம்பரியம் பிரகாரம் தேம்ஸ் நதிஆண் நதி, அம்மா இல்லை, நதி அப்பா. மதுக்கடைகளில் பப் க்விஸ் என்ற வினாடி வினா சிறப்பாக நடத்தப்படுகிறது. 1626 ஆம் வருடம் தாமாஸ் என்கிறவர் ரொட்டிக் கடையில் அடுப்பை அணைக்காமல் சென்றதன் காரணமாக ஊரெங்கும் மூன்று நாட்கள் விடாமல் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்தது.
நினைவுச்சின்னத் தெருவும் மீன் தெருவும் சந்திக்கிற இடத்தில் தீ விபத்தின் நினைவாக கட்டப்பட்ட கோபுரம் 61 மீட்டர் உயரமுள்ளது அமைக்கப்பட்டிருக்கிறது.
கொத்தவால்சாவடி போல கோவண்ட் தோட்டம் என்ற லண்டன் கோவன்ட்கார்டன் சந்தை விசித்திரமாகவும் பெருமையாகவும் சொல்லத்தக்க அளவில் உள்ளது.
1974இல் கோவண்டு தோட்ட அங்காடியை அங்கிருந்து மூன்று மைல் தொலைவில் இடம் மாற்றியபோது 300 வருட பரபரப்பு ஓய்ந்து மயான அமைதியில் கிடந்த அந்தப் பெரிய நிலப் பரப்பையும் காலியான கட்டடங்களையும் பார்க்க லண்டன் மக்களுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. இங்கிருந்து தெற்கு திசையில் காப்பி கடைகள் செழித்தோங்கிய மெய்டன் சந்து இருக்கிறது. மெய்டன் சந்து 10ஆம் எண் வீட்டில் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்டேர் அகதியாக தஞ்சம் புகுந்த வீடு இருக்கிறது. இலக்கிய மேதை பெர்னாட் ஷா எழுதிய புகழ் பெற்ற நாடகமான* பிக்மேலியன் * கோவன்ட் தோட்டம் ராயல் ஆபரா ஹவுஸ் வாசலில் தான் தொடங்குகிறது.
இரா. முருகன் / Era. Murugan Writes லண்டன் டயரி / London Diary Book Review By Karuna Murthy. லண்டன் வரலாறு (History)
பழைய லண்டன் டவர் மிருகக்காட்சி சாலையை சுற்றி வந்து * புலிக் கவிதை * எழுதிய கவிஞர் வில்லியம் ப்ளேக்கும் கோவண்ட் வாசிதான். ஆவி என்றதும் நினைவுக்கு வருகிறவர், திடுக்கிட வைக்கும் திகில் சினிமா படங்களை இயக்கிய ஆல்பிரட் ஹிட்ச்சாக் கோவஅண்ட் காய்கறி கடை வியாபாரி ஒருவருடைய மகன் என்பது பெருமிதம் கொள்ள வைக்கும். பிக்கடிலி என்றதும் கோடிக்கணக்கான தையல்காரர்கள் ஒரு நொடி இயந்திரத்தை நிறுத்தி காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு பெருமைப் பட்டுக்கொள்ளலாம் காரணம் தையல் இல்லாவிட்டால் பிக்கடிலி இல்லை. *பிக்கடில் *என்பது விரைப்பான சட்டை காலருக்குப் பெயர். 1612 ராபர்ட் பேக்கர் என்ற தையல்காரர் பிக்கடில் களை தயாரித்து விற்று பெரும் பணம் சம்பாதித்த உலக கோடீஸ்வரர்.
1839 இல் உருவான பர்லிங்டன் ஆர்கேட் தான் லண்டனின் நாகரிகமான பெரிய கடைகள் நிறைந்த முதல் அங்காடி. கடைத்தெரு கதைகள் என்ற தலைப்பில் ஏராளமான விபரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. பர்ரி தெருவில் லண்டனில் திறக்கப்பட்ட முதல் கடையை இன்றும் பார்க்கலாம் . 1666 வியாபாரம் தொடங்கி இன்னும் அமோகமாக நடந்து கொண்டிருக்கும் ஸ்பிங் அண்ட் சன் கடை இங்கே தான் இருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளின் ஓவியப் படைப்புகள் பழைய நாணயங்களை விற்க திரு ஸ்பிங்கும் அவருடைய மகனவும் வியாபாரம் தொடங்கியது இங்குதான். ட்ரூஃப்பிட் அண்ட் ஹில் உலகிலேயே பழமையான முடிதிருத்தும் இங்குதான் உள்ளது 1090 தொடங்கி சளைக்காமல் முடி வெட்டி தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
லோப்ஸ் கடையில் மெல்லிய தோல் வாடை வீசுகின்ற காலணி விற்கின்ற கடை. ஒருவர் சென்றால் அப்போதே அளவு எடுத்து வேண்டிய தோலில் வேண்டிய டிசைனில் செய்து கொடுக்கக் கூடிய திறன் வாய்ந்த கடையது. ஃப்பாக்ஸ் சுருட்டுக் கடையில் சுருட்டு வாங்கி புகைத்து இன்புற்ற பிரமுகர்களில் முக்கியமானவர் இரண்டாம் உலகப் போர்க்கால பிரிட்டிஷ் பிரதமர் சாட்சாத் சர்ச்சில் தான். பெர்ரி சகோதரர்களின் பலசரக்குக் கடையில் அந்தக்கால மண்டிக் கடை தராசுகள் இன்னும் துலாபாரத்தில் தயாராக தொங்குகின்றன. எடை கோதுமை பிஸ்கட் காப்பிக்கொட்டை வாங்க வேண்டுமானால் இங்கு வரலாம்.
செயிண்ட் ஜேம்ஸ் வீதியில் வில்லியம் இவான்ஸ் கடையில் ரக வாரியான துப்பாக்கிகளை அழகாக அடுக்கி 1888 இல் இருந்தே விற்பனை செய்து வருகிறார்கள். ப்ருக்ஸ் கடையில் ஏராளமான வகை ஒயின் வாடை வீசுகின்ற நிலையிலேயே 1788 இல் தொடக்கம் முதல் இன்று வரை சுவைக்க ஏற்ற கடை. அலுமினிய சிலையும் அலுக்காத நகரமும் ஆகிய லண்டனில் மனம் மகிழ் தக்க வகையில் பிரயாணம் செய்யலாம். பிக்கடிலி வட்டார சோஹோ பகுதியில் சைனாடவுன் இருக்கிறது. எங்கும் எதிலும் பரவியிருக்கும் மெலிதாக மஞ்சள் பூசிய சீனச்சூழல் சீனத் தலைநகர் பீஜிங்கில் இருப்பதுபோல உணரலாம்.
1970இல் சீனர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே குடியேறி இந்தப் பகுதியின் தோற்றத்தையே மாற்றி முழுக்கமுழுக்க சீன சூழலை கொண்டு வந்திருக்கிறார்கள்.
கொலைக்கு கொஞ்சம்கூட அஞ்சாத மாபியா கும்பல்கள் புழங்கும் இடம் சைனாடவுன் என்று சொல்லப்படுகிறது. பிக்கடிலி சதுக்க விளம்பரங்களுக்கும் நூல் நூறு வருட வரலாறு உண்டு. 1819 வடிவமைக்கப்பட்ட பிறகு இந்த சதுக்கம் இதுவரை ஓய்ந்து உறங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிக்கடிலி சதுக்கத்தின் அழகை மேம்படுத்திக் காட்டும் நீரூற்று கண்கொள்ளாக்காட்சி. அம்பு எய்ய தயாராக நிற்கும் ஈராஸ் தேவதை சிலை ஆடைகளைந்த சிலையை 1892இல் நீரூற்றுக்கும் மேலாக வைக்கப்பட்ட போது எல்லோரும் எதிர்த்தார்கள்.
இந்த சிலையின் விசேஷம் கருங்கல்லில் வெண்கலத்தில் உருவாக்கப்படாமல் முழுக்க முழுக்க அலுமினியத்தால் வார்த்து எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் சிலையை அகற்றி விட்டார்கள். திரும்ப இங்கே வந்து வைத்தபோது ஈராஸ் தேவதை தெற்கே ரீஜன்ட் தெருவை குறிவைத்து அம்பை எய்ய ஆரம்பித்தது.
லண்டன் நகர் அலுத்துப் போனால் வாழ்க்கையே அ லுத்து போனதாக அர்த்தம் என்றார் இலக்கிய மேதை சாமுவேல் ஜான்சன். எனக்கு வாழ்க்கையும் அலுக்காது; லண்டன் நகரமும் அலுக்காது. இந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகு எனக்கு ஒரு பாடல் கண்ணதாசன் எழுதியது நினைவுக்கு வருகிறது .
“நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை .”
நான் பார்த்த லண்டனை
அவர் பார்க்கவில்லை
அவர் பார்த்த லண்டனில்
நான் பார்க்கவில்லை .
அவர் பார்த்த லண்டன் நகர காட்சிகளிலெல்லாம் சரித்திரத்தை உள்புகுத்தி அருமையாக எழுதப்பட்டிருக்கிற விதத்திற்காகவும் மொழிக்காகவும் நடைக்காகவும் இரா. முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *