தமிழ் இலக்கிய படைப்புலக வரலாற்றில் ‘ஆயிஷா’வுக்கென்று ஒரு தனித்துவமான இடம் உண்டு. கல்வியில் ஆர்வமிக்க ஒரு மாணவி வகுப்பறையில் சித்தரவதைக்குள்ளாவதை மையமாக வைத்து புனையப்பட்ட இக்குறுநாவல், இன்றைய கல்விமுறையின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியும், மாற்றுக்காக செயல்படவும் தூண்டிய ஒரு சிறந்த படைப்பு. இரா.நடராசன் இதன் படைப்பாளி.
தலித்துகள், ஒடுக்கப்பட்ட பெண்கள், பாலியல் தொழிலாளர்கள், அரவாணிகள் போன்ற விளிம்புநிலை மனிதர்களை கதைமாந்தர்களாகப் புனைந்து தமிழ் இலக்கியத்துக்குப் புதிய பரிமாணங்களை தந்து கொண்டிருப்பவர். ஒவ்வொரு படைப்பிலும் புதுப்புது உத்திகளையும் சோதனை முயற்சிகளையும் செய்துவருபவர். கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அத்தனை வடிவங்களிலும் பங்களிப்பு செய்திருக்கிறார். பல அறிவியல் நூல்களை எழுதியிருப்பவர்.கடலூரில் ஒரு தனியார் பள்ளியில் முதல்வராகச் செயலாற்றிக் கொண்டி ருக்கிறார். கடலூரில் கடற்கரையோரம் அமைந்துள்ள செயின்ட் டேவிட் கோட்டையின் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு அவருடன் இந்த உரையாடலை நிகழ்த்தினோம்.
(இந்தியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒன்றான இந்த செயின்ட் டேவிட் கோட்டைதான், இந்திய அளவிலேயே ஆங்கிலேயரின் முதல் தலைமையகம். 1752இல் கட்டப்பட்டிருக்கலாம். பிறகு பிரெஞ்சுக்காரர்களின் கைகளுக்குப் போய் விடுகிறது. அதன் பிறகு மீண்டும் அதை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி மீட்டெடுத்துக் கட்டினார்கள் – இரா.நடராசன்)
உங்களின் பல கதைகளில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை நுட்பமாகச் சொல்லி இருக்கிறீர்கள். உங்களின் குடும்பப் பின்னணி வேறுவிதமாக இருந்த போதிலும், இப்படியான கதைகளை எழுதுவதற்கான அனுபவமும் உத்வேகமும் வாய்ப்பும் உங்களுக்கு எப்படி கிடைத்தன?
நான் பிறந்தது திருச்சி மாவட்டம், லால்குடியில். வளர்ந்தது, படித்தது எல்லாம் பெரும்பாலும் திருச்சி மாவட்டத்தில்தான். அப்பா ஓர் அரசு அதிகாரி. அவர் நேர்மையான அதிகாரியாக இருந்ததால் பல்வேறு ஊர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டார். மாற்றம் செய்யப்பட்ட ஒவ்வொரு ஊரிலும் எங்களுக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. அந்தக் குடியிருப்புகள் பெரும்பாலும் தலித்துகள் வாழ்கிற பகுதிகளின் அருகிலேயே இருந்தன. நான் ஓடி ஆடி விளையாடிய, பழகிய நண்பர்கள் எல்லோரும் பள்ளத் தெருவைச் சேர்ந்தவர்களாகவோ, பறத்தெருவைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தார்கள். இத்தகைய நட்புச் சூழலில், கிட்டத் தட்ட ஒன்பது ஊர்களில் – அதுவும் கிராமப்புறங்களில்தான் படித் தேன். அப்போது ஏராளமான மனிதர்களோடு – தலித் சமூகத்தினரோடு நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
கரூரில் ‘ப்ளஸ் டூ’ படிக்கும்போது, அங்கே பி.ஆர்.குப்புசாமி என்றொரு சிந்தனையாளர் இருந்தார். இப்போதும் இருக்கிறார். அவரோடு நாங்களெல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டோம். அப்போதுதான் ‘இந்திய மாணவர் சங்க’த்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அப்போது நான் கவிதைகள் எழுதத் தொடங்கி விட்டேன்.
பேராசிரியர் ஆத்ரேயா என் மேடை கவிதைகளால் உந்தப்பட்டு எனக்கு இ.எம்.எஸ். எழுதிய Gandhi and his Ism. புத்தகத்தை இரவலாக படிக்கக் கொடுத்தார் (இன்றுவரை நான் அதைத் திருப்பிக் கொடுக்கவில்லை; இன்றுவரை அவரும் விடுவதாக இல்லை), அது என்னைத் தீவிர வாசிப்புத் தளத்துக்கு இழுத்து வந்துவிட்டது. அவர் மூலம்தான் எனது தேடல்களை நிகழ்த்தத் தொடங்கினேன்.
மிகக்குறைந்த விலையிலே அப்போது கிடைத்த ரஷ்ய இலக்கியங்களைப் படித்துத்தான் நான் இலக்கியவாதி ஆனேன். சின்ன வயதிலிருந்தே பல மனிதர்களுடன் பழகியிருந்தாலும்கூட வாசிப்புத் தளத்திலே நான் தனியனாக உணர்ந்திருக்கிறேன். தனியனாக இருக்கிற ஒரு வாசகனுக்கு நட்புரீதியாக இருக்கக்கூடியது புத்தகங்கள்தான்.
இந்தப் புத்தகங்களை நான் நாடி நாடி விரும்பிப் படித்தேன். எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரிலோ அல்லது பக்கத்து ஊரிலோ நூலகம் இருக்கிறதா என்று தேடி கண்டுபிடித்து, அங்கிருந்து அப்பா எப்படியாவது புத்தகங்களை தருவித்துக் கொடுத்து விடுவார். மணிக்கணக்கில் படிக்கும் பழக்கம் அவரிடமிருந்து வந்ததுதான்.
நான் பள்ளி நாட்களிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கி விட்டேன். திருச்சி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் 1976-ல் என் கவிதை முதல்முதலாக பிரசுரமானது. ஆனந்த விகடனில் வெளிவந்த அந்த என் முதல் கவிதையே பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. அந்தக் கவிதையில், நம் நாட்டில் இருக்கக்கூடிய பிரச்சினைகளையெல்லாம் எடுத்துச் சொல்லிவிட்டு, கடைசியில் ‘ஜாஹே ஜஹான்ஸே அச்சா’ என்று ‘இந்துஸ்தான் உலகத்தில் தலைசிறந்தது’ என்ற பொருளில் கிண்டலாக முடித் திருப்பேன்.
மிகச்சிறந்த ஒரு தேசியப் பாடலை நான் அவமானப்படுத்திவிட்டதாக பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதை எதிர்த்தும் ஆதரித்தும் வந்த கடிதங்கள் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்டன. முதல் படைப்பிலேயே இப்படி நான் அறியப்பட்டது எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. எட்டு வருடங்கள் நான் கவிஞனாக செயல்பட்டேன்.
உங்கள் கவிதைகளில் மிகமுக்கியமானது ‘கருப்பு யுத்தம்’. அதை எந்தச் சூழலில் எழுதினீர்கள்?
தென்னாப்பிரிக்காவின் பெஞ்சமின் மொலாய்ஸ் தூக்கிலிடப்பட்டபோது எனக்குள் எழுந்த உத்வேகத்தைத்தான் அந்தக் கவிதையாக வடித்திருக்கிறேன். ஒரு கவிஞனை வெள்ளை அரசாங்கம் தூக்கிலிடுகிறது என்பது ஒரு பெரிய அராஜகமாக உணர்ந்தேன். சிறு வயதிலிருந்தே நான் ஐரோப்பியமயமாக்கலுக்கு எதிரானவனாகவே இருந்திருக்கிறேன். நான் வாசித்த விசயங்களும் சரி, என்னை வளர்த்துவிட்ட இயக்கங்களும் சரி, என்னை அப்படி பார்க்க வைத்தன.
அந்த அடிப்படையில் பெஞ்சமன் மொலாய்ஸ் கல்லறையின் முன்னால் போய் நின்றால், நமக்கு என்ன தோன்றும் என்பதைத்தான் நான் கவிதையாக வடித்திருக்கிறேன். அது நூலாக வெளி வந்தபோது, நெல்சன் மண்டேலா பற்றிய சில கவிதைகளையும் இணைத்தேன். அதற்கு இன்குலாப் ஒரு முன்னுரை எழுதியிருந்தார்.
அந்தக் காலகட்டத்திலேயே அந்தக் கவிதைத் தொகுதி பரவலாக அறியப்பட்டதையும், பல மேடைகளிலே அந்தக் கவிதைகளை மாணவர்கள் சப்தமாக வாசித்து உத்வேகத்தை ஏற்படுத்திக் கொண்டதையும் நான் பார்த்தேன்.
விவசாயிகளின் பிரச்சினைகளை மையமாக வைத்து ‘தொலைப்புச் செய்திகள்’ என்கிற நீண்ட கவிதையை எழுதியிருக்கிறீர்கள். அது எந்த அளவுக்கு தமிழ் வாசகப் பரப்பில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டுள்ளது?
விவசாய கிராமம் ஒன்றில் தொழிற்சாலையை ஒரு முதலாளி கட்டமைத்து உருவாக்கும்போது, அந்த விவசாய நிலங்கள் எப்படி அழிக்கப்படுகின்றன, விவசாயிகளாக இருந்தவர்கள் கூலித் தொழிலாளிகளாக மாறும்போது அந்த வாழ்க்கைக்கான மாறுதலை ஜீரணிக்க முடியாமல் அவர்களுடைய அடையாளங்கள் எவ்வாறு சிதைந்து அழிக்கப்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘தொலைப்புச் செய்திகள்’ எழுதினேன்.
அதற்கு அப்படியொரு பெயர் வைத்ததே வித்தியாசமான முயற்சி என்று பாராட்டி, பொன்னீலன் ஒரு முன்னுரை எழுதினார். இந்தத் தொலைப்புச் செய்திகள் எனக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்தது. அதிலே ஒரு முக்கியமான பாடம், ஒரு கதையை கவிதையாக எழுதுகிறபோது, அது சாதாரண வாசகர்களிடமிருந்து சற்று விலகிப் போய்விடுகிறது என்பதுதான். அந்தப் படிப்பினைக்குப் பிறகுதான் மிகச்சாதாரண மனிதர்களும் வாசிக்கக் கூடிய வடிவமான கதைக்குத் தாவிவிட்டேன்.
உங்களின் முதல் சிறுகதை?
என்னுடைய முதல் கதை ‘இரவாகி’. பார்வையற்ற ஒருவரை ஒரு ரயில்வே ஸ்டேஷனில் விட்டுவிட்டு அவரது குடும்பத்தினர் ரயிலேறி போய்விட்டார்கள். அவர், அந்த இரவில் எப்படியெல்லாம் திணறியிருப்பார் என்பதைத்தான் கதையாக எழுதி னேன். அது ‘கணையாழி’யின் ஒரு தீபாவளி சிறப்பிதழில் வெளிவந்தது. அந்தக் கதைக்குப் பிறகு, இன்றுவரையில் என் கண்ணில் படுகின்ற ஒவ்வொரு விசயத்தையும் உள்வாங்கி கதையாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். கதைக்குள் என்னை இழுத்து வந்தவர்கள் இந்திரன், ‘காவ்யா’ சண்முகசுந்தரம், ‘ஸ்நேகா’ நண்பர்கள்.
அரவாணிகளை மையப்படுத்தி ‘மதி எனும் மனிதனின் மரணம் குறித்து’ என்றொரு கதையை எழுதினீர்கள். அந்தக் காலச் சூழலில் சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ நாவலுக்கு அடுத்து பதிவாகிய அரவாணிகளைப் பற்றிய முக்கியமான சித்திரப்பு இதுதான். உங்களின் இந்தக் கதையை இயக்குநர் லெனின் திரைப்படமாகவும் எடுத்துள்ளார். இந்தக் கதையை எழுதிய அனுபவம்…?
விளிம்பு நிலையில் இருப்பவர்களோடு இயல்பாகவே நெருங்கிப் பழகக்கூடியவன் நான், ஒரு நீண்டதூர ரயில் பயணத்தில் என்னுடைய இருக்கையைப் பகிர்ந்துகொண்ட ஓர் அரவாணியுடன் நான் பேசிக்கொண்டே வந்தேன். நட்பு முறையில் டீ, டிபன் சாப்பிட்டுக்கொண்டே பேசினோம்.
ரயிலில் வருகிறவர்களெல்லாம் என்னை ரொம்ப கேலியாக ஒரு மோசமான மனிதனைப் பார்ப்பதுபோல பார்த்தார்கள். அவர் “எந்த ஊருக்குப் போவதென்று தெரியவில்லை. வீட்டை விட்டு விரட்டிவிட்டார்கள்’’ என்று புலம்பிக்கொண்டே வந்தார். நான் அவருக்குச் செய்த உதவியை இங்கு சொல்ல விரும்பவில்லை. அவரின் அவல வாழ்வையும் துன்ப துயரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்கிற உத்வேகம் எனக்கு ஏற்பட்டது.
சார்த்தர் ஓரிடத்தில் சொல்லி இருப்பார், “ஒரு நல்ல கதை என்பது, அதைப் படித்து முடித்தவுடன் அதை தூக்கிப் போட்டு விட்டு எரிச்சலடைய வைத்து ஓட வைக்க வேண்டும். மாறாக, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு தூங்க வைக்கிறதென்றால் அது நல்ல கதை அல்ல’’ என்று. அந்த மாதிரியான ஒரு வெறியோடு தான் அந்தக் கதையை எழுதினேன். அதைப் படித்துவிட்டு இப்போதும்கூட அரவாணிகள் கடிதம் எழுதுகிறார்கள். சமீபத்தில், எய்ட்ஸ் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றில் சென்னையில் கலந்து கொண்ட என்னை அறிமுகப்படுத்தியபோது, “அந்த நடராசனா நீங்கள்?’’ என்று ஓடிவந்து விசாரித்தார்கள். அந்த அளவுக்கு அரவாணிகள் மத்தியிலேயே வாசிக்கப்பட்ட ஒரு கதையாக அது இருந்தது.
அந்தக் கதையை வைத்து எடிட்டர் லெனின் எடுத்த திரைப் படத்தை இப்போதும்கூட அரவாணிகள் எங்கெல்லாம் கூடுகிறார் களோ, எங்கெல்லாம் திருவிழாக்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் திரையிடுகிறார்கள். அந்தக் கதைக்குக் கிடைத்த வரவேற்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று அரவாணிகள் தங்களது உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். இந்த மாற்றம் சிலிர்க்க வைக்கிறது.
அடுத்ததாக, பாலியல் தொழிலாளர்களை வைத்து ‘ரத்தத்தின் வண்ணத்தில்’ என்றொரு கதையை எழுதி யிருந்தீர்கள்…
‘களம் புதிது’ கரிகாலன், ‘விபச்சாரிகள் சிறப்பிதழ்’ கொண்டு வர முயற்சித்தார். அந்தச் சிறப்பிதழுக்காக எழுதிய கதைதான் அது. அந்தச் சிறப்பிதழ் வெளிவராததால், அது ‘இந்தியா டுடே’யில் வெளியானது. அந்தக் கதைக்கு ‘இலக்கியச் சிந்தனை’ப் பரிசு கிடைத்தது. அது ‘செல்லம்மா’ எனும் முழுநீள திரைப்படமாக இயக்குநர் சிவக்குமாரால் எடுக்கப்பட்டுள்ளது.
உங்களின் ‘ஆயிஷா’, தமிழின் மிகமுக்கியமான கதைகளுள் ஒன்று. சமீபத்திய வேறு எந்தப் படைப்புக்கும் இல்லாத வகையில் பல்லாயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு ஓர் இயக்கமாகவே மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகிறது. அது திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. ‘ஆயிஷா’ உண்மையில் நடந்த சம்பவமா? ஒரு படைப்பாளியாக அந்தக் கதையின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கிராமப் புறங்களில் நடக்கிற அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவன் நான். நெருஞ்சிப்பாடி எனும் இடத்தில், ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது, “இந்த சூரியன் ஏன் வெப்பமாக இருக்கிறது என்றால், சூரியன் எரிந்து கொண்டிருக்கிறது குழந்தைகளே’’ என்று சொன்னேன். உடனே, தலையெல்லாம் கலைந்துபோய், வெறும் பாவடை மட்டும் கட்டிக்கொண்டு இடுப்பிலே குழந்தையை வைத்துக்கொண்டிருந்த ஒரு சின்னப் பெண்குழந்தை “அப்படியானால், சூரியனில் புகை வரவில்லையே ஏன்?’’ என்று கேட்டது.
இந்தக் கேள்வியை என்னால் தகித்துக் கொள்ள முடிய வில்லை. இந்தக் கேள்வியை அந்தக் குழந்தை கேட்டு பதினைந்து வருடங்களாகிவிட்டன. அந்தக் குழந்தை இப்போது எங்கே இருக்கிறது, என்ன ஆகியிருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அப்படிப்பட்ட அறிவார்த்தமான ஒரு கேள்வியைக் கேட்க முடிந்த குழந்தைக்குச் சரியான ஒரு கல்வியை நாடு கொடுத்திருக்குமானால் இன்றைக்கு ஒரு பெண் விஞ்ஞானியாக அக்குழந்தை வந்திருக்க வேண்டும்.
ஆனால் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத ஒரு நாடடில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு வேண்டுமானால் மத்திய தர வர்க்கத்திலும் பெரிய ஊர்களிலும், நகரங்களிலும் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை நாம் பார்க்கலாம். எதார்த்தம் என்னவென்றால் உண்மையில் பெண் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்படுவதில்லை. இந்த எதார்த்தத்தை கிராமப்புறங்களுக்குச் சென்றுதான் புரிந்துகொள்ள முடியும். இந்தச் சூழலில் – அந்தக் கேள்வி என்னை கொன்று கொண்டிருந்த சூழ்நிலையில் உருவான ஒரு பாத்திரம்தான் ஆயிஷா. கேள்விகளால் இந்த உலகத்தில் வேள்விகள் செய்ய வந்தவள் அவள். \
கேள்விகளைக் கேட்பதுதான் ஒரு குழந்தையின் வேலை. ஆனால், பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்ததுமே கேள்வி கேட்கும் அந்த ஆற்றலை முற்றிலுமாக தகர்த்தெறியக்கூடிய ஒரு கல்வி முறையை நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழைந்ததும் முதலில் சொல்வதெல்லாம் “கையைக் கட்டு; வாயைப் பொத்து’’ என்பதைத்தான். வாயைப் பொத்திக் கொண்டு கவனிக்கவேண்டும் என்கிற ஒரு சூழலே மிகப்பெரிய வன்முறை என்று கருதுகிறேன்.
பள்ளிக்கூடம் விட்டு மாணவர்கள் வீட்டுக்கு வந்ததும், மாணவர்களோடு தாய்மார்கள் ‘ஹோம் ஒர்க்’ எழுத உட்கார்ந்து விடுகிறார்கள். அப்போது தாய்க்கும் மகனுக்கும் இடையே நடக்கின்ற அந்தக் கொடுங்கோன்மை இருக்கிறதே…! இந்தக் கல்விச் சூழலில் ஆசிரியனும் முரடு; பெற்றோரும் முரடு. இவர்களுக்கிடையே இந்தப் பிஞ்சுக் குழந்தைகள் மனப்பாடம் செய்கிற எந்திரங்களாக வளர்ந்துவிடுகிறார்கள். இந்தக் கல்விச் சூழலை எப்படி கேள்விக்குட்படுத்துவது? அடித்து உதைத்து சித்ரவதை செய்து, மனப்பாடம் செய்ய வைக்கிற இந்தக் கல்வி முறை நமக்குத் தேவையா என்று கேட்கிற காலம் வந்துவிட்டது.
E= MC2 என்கிற சமன்பாட்டைக் கொடுத்தவர் யார் என்று தான் கேள்வித்தாளில் கேட்டுக் கொண்டிருக்கிறோமே தவிர, “E= MC2 என்று அவர் சொல்லியிருக்கிறாரே, அதை நீ ஒப்புக்கொள்கிறாயா? இதில் வேறு ஏதாவது மாற்றுக் கருத்து உண்டா?’’ என்கிற கேள்வியை என்றைக்கு நாம் குழந்தைகளிடம் கேட்கத் தொடங்குகிறோமோ, அன்றைக்குத்தான் நாம் குழந்தைகளின் சிந்தனையை மதிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். இதையெல்லாம் வெளிப்படுத்துவதற்கு வந்தவள்தான் ‘ஆயிஷா’. ஆயிஷா என்கிற பாத்திரம் என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த பல லட்சம் குழந்தைகளின் ஒட்டுமொத்த பிரதிநிதி.
நானும் ஓர் ஆசிரியன். அதுவும் தலைமை ஆசிரியன். இந்தக் கல்வி முறையில் சிக்கிக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், நான் செய்கின்ற பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடுகின்ற ஓர் ஆசிரியனாக இருந்துகொண்டுதான், பதற்றத்தைத் தாங்க முடியாமல் நான் ஆயிஷாவை எழுதினேன். அதை ஒரு பிரமாண்டமான நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை போல் வடிவமைத்திருந்தேன். அதை பத்திரிகைகளுக்கு அனுப்பியபோது, இந்த உத்திமுறையை புரிந்துகொள்ள முடியாமல் கிட்டதட்ட ஆறு ஏழு பத்திரிகைகள் திருப்பி அனுப்பின.
‘கணையாழி’யில் குறுநாவல் போட்டி நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டபோது, அதற்கு அனுப்பினேன்.
சற்று நீளமான கதை என்றாலும் அதை வெளியிட்டு முதல் பரிசு கொடுத்து ‘கணையாழி’ என்னை கௌரவித்தபோது, அந்தக் கதையையும் புரிந்துகொள்கிற உள்வாங்கிக் கொள்கிற மனிதர்கள் இருக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது.
அதன்பிறகு ஆயிஷா ஏற்படுத்ததிய அலை இருக்கிறதே, அதிலே எனக்குப் பங்கில்லை. அது ஆயிஷா செய்தது. ஆயிஷாவின் வாசகர்கள் செய்தது. ஆயிஷாவின் வாசகர்களாக இருந்து ஆயிஷாவை எடுத்துக்கொண்டு போகிற ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் நியாயமான கல்விமுறையைக் கொண்டுவர வேண்டும் என்பதற்கான குரலை எழுப்பக்கூடிய மாமனிதர்களாக இருக்கிறார்கள். ஆயிஷா ஒரு கதை அல்ல; அது ஓர் இயக்கம். அந்த வகையில் அந்த வேலை முடிந்து விடவில்லை. இப்போதுதான் தொடங்கி உள்ளது.
‘ஆயிஷா’ இன்றைய கல்விச் சூழலில், எத்தகைய மாற்றங் களை ஏற்படுத்தி இருக்கிறது?
பல பள்ளிக்கூடங்களில் ஆயிஷாவை முன்வைத்து ஆசிரியர்களின் முரட்டுத்தனம் குறைக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் உட்பட மூன்று பல்கலைக் கழகங்களில் ஆயிஷா பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அதைப் படித்த மாணவிகள் ஆசிரியரான பிறகு நான் ஆயிஷாவைப் படித்ததனால் ஆசிரியை ஆனேன். இப்போது ஒரு முன்னுதாரண ஆசிரியராக திகழ்ந்து கொண்டிருக்கிறேன். பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை அழைத்து மாலை நேர இலவச வகுப்புகளை நடத்துகிறேன்… என்றெல்லாம் அவர்கள் எழுதும்போது என்னில்தான் பிறந்து அவர்கள் ஆசிரியர் தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்து நான் பூரிப்படைகிறேன்.
ஆயிஷாவைப் படித்துவிட்டு மாணவர்கள் மத்தியிலிருந்து வந்த பல கடிதங்களின் மூலமாகத்தான் அறிவியல் நூல்களை எழுதியாக வேண்டும் என்கிற கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. தமிழில் இதுவரை 23 அறிவியல் நூல்களை எழுதியிருக்கிறேன். இவை அனைத்துக்குமான முகம் ஆயிஷாதான்
குழந்தைகளின் மனஉலகத்தை மையப்படுத்தி நீங்கள் எழுதியுள்ள ‘ரோஸ்’ குறுநாவல் பற்றி?
‘ஆயிஷா’ ஓர் ஆசிரியரின் பாவமன்னிப்பு என்றால், ‘ரோஸ்’ ஓர் அப்பாவின் பாவமன்னிப்பு!
தலித் மக்களின் வாழ்க்கைச் சூழலை மையப்படுத்தி நீங்கள் எழுதிய ‘பாலித்தீன் பைகள்’ நாவலை எந்தச் சூழலில் எழுதினீர்கள்? எந்த அளவுக்கு கவனிப்பைப் பெற்றிருக்கிறது?
நான் பிறந்த லால்குடி, மற்றும் நீடாமங்கலம், அதைச் சுற்றி அமைந்துள்ள தலித் கிராமங்களில் இருந்தவர்களின் வாழ்க்கைச் சூழலை மையப்படுத்தியும், அங்கு அவர்களிடம் கற்றுக்கொண்ட பல விசயங்களை வைத்தும்தான் ‘பாலீத்தின் பைகள்’ நாவலை எழுதினேன். உண்மையில், கவிதைகள் எழுதுவதை நிறுத்திய பிறகு – சிறுகதைகள் எழுத ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இந்த நாவலை எழுதத் தொடங்கிவிட்டேன்.
நம் சமூகத்தில் ஒரு பெண் எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகிறாள் என்பதையும், இந்தச் சமூகத்தின் அடித்தளத்தில் வைக்கப்பட்டு, எல்லாருடைய மிதிபடலுக்கும் ஒரு தலித் எவ்வாறு ஆளாகிறான் என்பதையும் ஒப்பிட்டு இந்த நாவலை எழுதத் தொடங்கினேன். முதல் பகுதியை எழுதி முடித்துவிட்டேன். ஆனால், இரண்டாம் பகுதி எழுதாமலே இருந்தது. முதல் பகுதியை எழுதியதற்கும் இரண்டாம் பகுதியை எழுதுவதற்கும் இடையில் நான் ஒரு கதை ஆசிரியனாகி இருந்தேன். அந்தக் கதைகளின் ஊடாக வாசகர்கள் என்னை நோக்கி வந்தபோது என்னை ஒரு தேர்ந்த எழுத்தாளனாக ஒரு சிற்பியைப் போல் செதுக்கினார்கள். என்னிடம் இருக்கின்ற மோசமான பக்கங்களை எல்லாம் மெல்ல மெல்ல நீக்கி அவர்களுக்கு உண்டான ஓர் அற்புத எழுத்தாளனாக என்னை அவர்கள்தான் வடிவமைத்தார்கள்.
அந்த நாவலில் கோயில் நுழைவு போராட்டம் என்பது இந்த நாட்டில் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை நான் நிரூபிப்பேன். திராவிட இயக்கங்களும் மற்ற பிற அரசியல் சக்திகளும் எப்படி போலித்தனமான பாதைகளின் மூலம் தாங்கள்தான் மக்களின் சேவகர்கள் என்று காட்டிக் கொண்டார்கள் என்பதை இடதுசாரி சிந்தனைகளை மையமாக வைத்து புதிய உத்திகளின் மூலமாகவும் கொடுத்திருக்கிறேன். இந்நாவல், திருப்பூர் தமிழ்ச் சங்க பொன்விழா ஆண்டின் முதல் பரிசு பெற்றது. திருநெல்வேலி அருகில் ஒரு குக்கிராமத்திலிருந்து ஒரு வாசகர் 62 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை எழுதியபோது அதுதான் அப்படைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று புரிந்து கொண்டேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது ‘நாகா’ நாவலை எழுதியிருக்கிறீர்கள். அதை எழுதிய பின்னணி?
‘பாலித்தீன் பைகள்’ முதல் பகுதி எழுதியதற்கும், இரண்டாம் பகுதியை எழுதி அந்த நூல் வெளிவருவதற்கும் நடுவில் நான் ஆசிரியர் தொழிலுக்கு வந்துவிட்டேன். ஆசிரியர் தொழிலுக்கு வந்துவிட்ட பிறகான என்னுடைய எழுத்தினுடைய பெரும் பகுதியை மாணவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். ஆகவே, மாணவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் குறித்த பல்வேறு பதிவுகளை நான் மேற்கொள்ளத் தொடங்கினேன். இதற்கிடையில் சிறுகதை உலகம் எனக்காக பரந்து விரிந்து என்னை வரவேற்றது. பல்வேறு சோதனை சிறுகதைகளை நான் எழுதத் தொடங்கிய போது மீண்டும் நாவல் முயற்சி என்பதை நான் பலமுறை ஒத்தி வைத்துக் கொண்டேதான் வந்தேன். ‘பாடலீஸ்வரம்’ என்கிற தலைப்பில் பல ஆண்டுகளாக – இப்போது நாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறோமே, இந்த ‘செயின்ட் டேவிட் கோட் டை’யை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலைப் படைக்கவேண்டும் என்று முயற்சி மேற்கொண்டு பல பக்கங்கள் எழுதித் தீர்த்தேன். ஆனால், என்னால் அதன் முழுமையை உணர முடியவில்லை. ஏதோ ஒன்று அதற்குள்ளே தடங்கலாக இருந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் ‘நாகா’ என்கிற பாத்திரம் எனக்குள்ளே உருவாகிக் கொண்டிருந்தது. என் கண் முன்னால் நான் கண்டு கொண்டிருந்த என்னுடைய மாணவர்களின் ஒரு வடிவமாக நான் நாகாவைக் கண்டேன்.
கடந்த 2004 டிசம்பர் 26 அதிகாலையில் சுனாமி ஆழிப் பேரலை இந்தக் கோட்டையைச் சுற்றிலும்கூட தாக்கியபோது அந்த நேரத்தில் இந்தக் கடற்கரையில் இந்தக் கோட்டையை அடிப்படை யாகக் கொண்டு, சாரணப்படை ஒன்று இங்கு இருந்திருந்தால், அந்த மாணவர்கள் எப்படி அதை எதிர் கொண்டிருப்பார்கள் என்பதையும் ‘பாடலீஸ்வரம்’ என்ற என் மனதில் இருந்த நாவலையும் இணைத்து ‘நாகா’ என்கிற புதிய நாவலைக் கட்ட மைத்தேன்.
நம்முடைய சிறுவர்கள் இந்த நாவல் முழுவதும் இருந்துகொண்டு பெரியவர்களான நம்மை தங்களுடைய சிந்தனை ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள். இனி வருங்காலத்தில் சிறுவர்கள் நாவல் குறித்த மிகப்பெரிய ஓர் உலகம் உருவாவதற்கு இந்த ‘நாகா’ பயன்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். 24 மணி நேரமும் தொலைக்காட்சிப் பெட்டிக்கருகே உட்கார்ந்திருக்க விரும்புகிற குழந்தைகளை நாம் படைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நுகர்வுக் கலாச்சார அமைப்பு என்பது சிறுவர்களை நுகர்வோர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
இன்றைக்கு உறவெல்லாம் முறிந்துபோய், உறவுகளின் அருமையும் தெரியாமல் தனக்கிருக்கின்ற அறிவின் அருமையும் தெரியாமல் அழிந்து கொண்டிருக்கக்கூடிய பெரிய உலகமாக சிறுவர் உலகம் இருக்கிறது. இந்த உலகத் திற்குள் பாடலீஸ்வரத்தை இழுத்து வரவேண்டும் என்கிற அடிப் படையான முயற்சிதான் ‘நாகா’.
விளிம்பு நிலை மக்களைப் பற்றி நீங்கள் எழுதுகிறீர்கள். சமீப காலமாக அவர்களிடமிருந்தே சுயசரிதைகளாக, வாய்மொழி வரலாறுகளாக பல படைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
பெண்ணியம், தலித்தியம் ஆகிய இரண்டுமே இலக்கிய அளவில் தன் அனுபவங்களை வெளிப்படுத்துவது ஒரு பக்கம்; கோட்பாட்டு அளவில் எழுதப்படுவது இன்னொரு பக்கம். இலக்கியக் கோட்பாடுகள் என்பவை நீங்கள் யாருடைய ஆளாகச் செயல்படுகிறீர்கள் என்கிற இடத்திற்கு இ-ழுத்துச் செல்கிறது.
இரா.நடராசன் குரல் இரா.நடராசனுடையதுதான். ஆனால் அவர் யாருக்காகக் குரல் எழுப்புகிறார். அந்த இடத்தில்தான் என்னுடைய கதைகள் பரிசீலிக்கப்படவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்த இடத்திலிருந்து பார்க்கிறபோது துயரப்படுகின்ற ஓர் அரவாணிக்காகவோ, துன்பப்படுகின்ற ஒரு விலைமாதருக்காகவோ, வாழ்நாள் முழுவதும் பல்வேறு வக்கிரங்களுக்கு ஆளாக்கப்படுகிற, கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகிற ஒரு தலித்துக்காகவோ, வகுப்பறையில் அவமானங்களையே தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிற ஒரு குழந்தைக்காகவோ இரா.நடராசன் குரல் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நான் கேட்கிறேன்.
‘பெடரிக் டக்ளஸ்’ஸை எந்தப் பார்வையில் மொழிபெயர்த் தேனோ அதே உந்துதலோடு என் படைப்பையும் இருப்பிற்கு எதிரான அரசியல் செயல்பாடாகவே நான் பார்க்கிறேன். அப்படி பார்க்கிறபோது அவர்களில் ஒருவராக நான் ஏன் உணரக்கூடாது. என் வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல சம்பவங்களை அவர்களோடு ஏற்பட்ட சம்பவங்களோடு இணைத்து நான் ஏன் பதிவு செய்யக் கூடாது. மேலும், என்னுடைய வாசகர் யார் என்பதில் எனக்குத் தெளிவு இருக்கிறது. என்னுடைய வாசகர்கள் எதை வாசிக்க வேண்டும் என்று தீர்மானிக்கட்டும் என்றுதான் நான் விட்டு விடுகிறேன்.
மொழிபெயர்ப்பாளராகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள், மொழிபெயர்ப்புக்கான படைப் புகளை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?
நான் மொழிபெயர்த்திருக்கின்ற ‘பயாபராவை நோக்கி’ எனும் நாவலை வாசித்துக் கொண்டிருந்தபோதே, அதைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்கிற வெறி எனக்கு ஏற்பட்டது.
அதே போலத்தான், கூகிவா தியாங்கோவினுடைய ‘இடையில் ஓடும் நதி’ என்கிற கென்ய நாவலையும் மொழிபெயர்த்தேன். உண்மையில் இந்த நாவலைவிட கூகியினுடைய Bettels of Blood என்கிற நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் The River Between (இடையில் ஓடும் நதி) என்கிற நாவலில் ஒரு வெள்ளையன் அந்த ஊரிலே வந்து பிரித்தாளுகிற சூழ்ச்சியைச் செய்கிறபோது இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு ஓர் உண்மையான ஆசிரியன் எப்படியெல்லாம் திணறிப்போகிறான் என்பதை உணர்ந்து உணர்ந்து வாசித்து ரத்தக் கொதிப்பை ஏற்படுத்திக் கொண்டவன் நான். இப்படி என்னை ஆளுமைப்படுத்துகிற நூல்களை என்னால் மொழிபெயர்க்காமல் இருக்க முடிவதில்லை.
இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?
ஜெர்மன் மொழியில் ஹான்ஸ் என்ஸென்பர்க்கர் எழுதி, ஆங்கிலத்தில் ரோடார்ட் பர்னர் மொழிபெயர்த்த The Number Devil எனும் அற்புதமான ஒரு கணித சிறுவர் நூலை முழுமையாக தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.
புதிய புத்தகம் பேசுது.
ஜூலை 2006
சந்திப்பு : சூரியசந்திரன்