இரா.பிரேமா தொகுத்த "நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்" புத்தகம் | Era Prema's Nooru Pengal Nooru Sirukathaikal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இரா.பிரேமா தொகுத்த “நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்” – நூல் அறிமுகம்

 “நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்” – நூல் அறிமுகம்


‘அவளுக்கு அன்று தலை தீபாவளி. கதவருகில் நின்று தன் கணவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள். அவளின் வயது எட்டு. ‘ இப்படி ஆரம்பித்த ஒரு கதையில் தான் முதன்முதலாக என் இதயம் அதிர்ந்ததை உணர்ந்தேன். என் மகளின் வயது எட்டு. அவளது பிறந்த நாளுக்காக கடல் தேவதையின் பொம்மையைப் பரிசாகக் கேட்டு வைத்திருக்கிறாள். எனக்கு இந்த வரிகள் பெரியதொரு தாக்கத்தைக் கொடுத்திருப்பதில் சந்தேகமில்லை. ஏன் ? இதை வாசிக்கும் அனைவரையுமே ஒரு கணம் தூக்கிப் போடும் வரிகள் தான். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது இயல்பு என்று ஏற்றுக்கொள்ள மனம் கொஞ்சம் அவகாசம் எடுக்கத்தான் செய்யும்.

நூறு வருடங்களாகப் பெண்கள் கடந்து வந்த சமூக வாழ்வை எழுத்தின் வழியாக ஊடறுத்துச் செல்லும் ஒரு காலச்சக்கரமாக வந்திருக்கிறது ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடான ‘நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்’ என்ற புத்தகம். நூறு என்று தலைப்பிட்டுவிட்டு நமக்கெல்லாம் போனஸாக பத்துக் கதைகளையும் சேர்த்தே கொடுத்திருக்கிறார் முனைவர் இரா . பிரேமா.

எந்த அங்கீகாரமுமின்றி வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்கள் ஆசிரியர்கள், ஐ ஏஸ் எஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பொறியியல் வல்லுநர்கள், காவல் அதிகாரிகள், கவிஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், மருத்துவர்கள் என்று முன்னேறி நூற்றாண்டுகளில் பற்றிப் படறி தங்களைத் தகவமைத்துக் கொண்ட நூற்றாண்டுக் கதைப் பொக்கிஷம் இந்தப் புத்தகம். பெண்களின் நூறு வருட எழுத்தை ஒரே இடத்தில் வாசிக்கக் கிடைத்தது என் வரையில் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ஆரம்பகாலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களே அதிகம் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்குத் தான் அப்போது எழுத வாய்ப்பிருந்திருக்கிறது. கிடைத்த வாய்ப்புகள் அனைத்திலும் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அவர்களின் படைப்புகள் பற்றிய சிறு குறிப்பையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். சில பெண்கள் பாடசாலைக்குக் கூடப் போக வழி இருக்கவில்லை. வீட்டிற்கு வரும் தினசரிகள் பார்த்து மொழியைக் கற்றுக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். இந்தச் செய்திகளெல்லாம் அவர்கள் இயங்கிக் கொண்டிருந்ததன் முக்கியத்துவத்தையும் நமக்குக் காட்டுகின்றன.

பெரும்பாலான கதைகள் குறிப்பிட்ட சமூகத்துக்குள், வீடுகளுக்குள் நடக்கும் கதைகளாகவே விரிந்தாலும் அதை அவர்கள் வெளியில் சொல்லத் தலைப்பட்டதும், அதை இன்றும் நாம் வாசித்துக் கடக்க முயல்வதும் கால ஓட்டத்தில் நிகழ்ந்த மாற்றம் இது.

பால்ய விவாகம், ஆண்களின் பலதார மணம், சிறு வயதிலேயே கைம்பெண் கோலம் , மாமியார் கொடுமை, நாத்தனார் நச்சரிப்பு, அன்பில்லாக் கணவன் , கல்வி மறுப்பு என்று பெண்ணடிமைத்தனத்தின் உச்சத்தில் எழுதப்பட்ட ஆரம்பகாலக் கதைகளில் கோபமோ, புரட்சியோ, போராட்டக்களமோ தென்படவில்லை. மாறாக அவர்கள் நடந்ததை அப்படியே எழுதிக் கொட்டியிருக்கிறார்கள். இன்று கல்வி, வேலைவாய்ப்பு, பணிச்சுதந்திரம் என்று இன்றைய தலைமுறை அனுபவிக்கும் பலதும் அன்று யாரோ பலர் செய்த , இல்லை செய்யத் திணிக்கப்பட்ட தியாகங்கள் என்ற புரிதலைக் கொடுக்கும் விதமான கதைகள் இதில் நிறைய இருக்கின்றன.

முந்தைய தலைமுறைப் பெண்களால் சொல்லப்படாமல் , சொல்ல முடியாமல் விடப்பட்ட ஆணதிகார, சமூகச்சீர்கேடுகளை தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எழுதிய பெண்களின் எழுத்துகள் தோலுரித்திருக்கின்றது. நவீன எழுத்துகளில் அது இன்னும் மெருகேறி காதல், திருமணம், மறுமணம், பாலியல் வல்லுறவுகள், உடலரசியல் என்று பேசாப்பொருளையும் பேசும் பெண்கள் அதை அனாயசமாயகக் கதைகளின் வழியே கடத்திச் சென்றிருக்கிறார்கள்.

இதில் பெரும்பாலான பெண் எழுத்தாளர்களின் பெயர்கள் கூட அறிமுகமே இல்லாத (என் போன்ற ) நிலையில் அவர்களையெல்லாம் தேடிப்பிடித்து வாசிக்க வைத்திருக்கும் ஒரு திறவாக இந்தப் புத்தகத்தை நான் நினைக்கிறேன். இது போன்ற தொகுப்புகள் நிறைய வெளிவர வேண்டும். இந்தத் தொகுப்பில் எனக்குப் பிடித்த சில கதைகளைப் பற்றி சிறு அறிமுகம் செய்கிறேன்.

ராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய ஊசியும் உணர்வும் – சீலி என்ற பசுவுக்கும், ஜோகி என்ற ஒரு மனிதனுக்குமான உணர்வை ஒரு ஆயர்குலப் பின்னனியை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். தவறுதலாக ஊசியை விழுங்கிவிட்டதால் சீலியைக் காப்பாற்ற ஜோகி எடுக்கும் முயற்சி தான் கதை. தன்னலம் பாராது மற்ற ஜீவராசிகளையும் ஒரு சக உயிர் போல பாவிக்கும் ஒரு குணத்தை எழுத்தின் வழி அட்டகாசமாய்ப் பதிவு செய்திருக்கிறார்.

ஆர் சூடாமணியின் புவனாவும் வியாழக்கிரகமும் – செவ்வாய்க் கிரகம் பற்றித் தெரியும். ஆனால் வியாழன் கிரகம் எப்படி ஒரு பெண்ணின் வாழ்விலும், அவள் குடும்பத்திலும் சோதனைகள் கொடுக்கிறது என்பதைப் பேசியிருக்கும் கதை. சோதிடத்தை நம்பி பெண்ணைப் படுகுழியில் தள்ளிய ஒரு தந்தையும், பெண்களிடம் கொடுக்க வேண்டியது கல்வி என்று அதன் முக்கியத்துவம் உணர்ந்த ஒரு தந்தைக்குமான ஒரு சந்திப்பை ஒட்டி நிகழும் கதையை உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.

செண்பகம் ராமசுவாமியின் பறவைகளும் ரேசன்கார்டும் – சூழலியல் குறித்தான அறிவு பெண்களுக்கு இயற்கையான ஒன்று. ஒரு நிலத்தின் வரையறையை அங்கு வசிக்கும் பறவைகளின் வழி அறியலாம் என்று எங்கோ படித்திருக்கிறேன். அவை எழுப்பும், ஒலியில் ஆரம்பித்து அவைகளின் வாழ்வியல் மனிதனுக்கு எப்போதும் ஒரு பாடத்தைக் கற்பித்துக்கொண்டே இருக்கும். அவ்வாறான ஒரு மாய எதார்த்தமாக அன்றாடங்களில் சிக்கித் தவிக்கும் ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையை பறவைகளின் ஊடாகக் கடத்திச் செல்லும் ஒரு கதை.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய ரோஸா லக்ஷம்பார்க் வீதி – இலங்கைப் போரின் பாதிப்பில் இருந்து தப்பி வேறு நிலம் ( பெர்லின்) குடியேறிய புலம்பெயர் வாழ்வின் மிச்சங்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் ஒரு கதை. நிச்சயம் தவறவிடக்கூடாத ஒரு கதை. நிலங்கள் மாறினாலும் ஆட்சியும் , அதிகாரமும் நிகழ்த்தும் கொடுமைகள் உலகெங்கும் ஒரே மாதிரியாக விரவிக்கிடக்கின்றது என்பதை , அதிகாலையில் வீடுகளுக்குப் பத்திரிக்கை போடும் சுமதி என்ற பெண்ணின் வழியாகச் சொல்லிக் கேட்கும்படியான கதை. போரின் பாதிப்பால் வேலை இழந்து , பொறுப்பை இழந்து குடிபோதைக்கு அடிமையாகி பொறுப்பற்ற கணவனாக மாறிப்போனவனை விடவும் முடியாமல், பொறுத்துக்கொள்ளவும் முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் உணர்வைப் பதிவு செய்திருக்கிறார் இராஜேஸ்வரி.

அனுராதா ரமணனின் கன்னிகாதானம் – சில கதைகள் வெறும் கதைகளாகவே நின்று விடுகின்றன. இப்படியெல்லாம் நடந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று உதட்டோரம் புன்னகை வரவைக்கும்படியான ஒரு கதை. பெண்கள் தங்களால் நிகழ்த்த முடியாத ஒன்றை கதைகளாகவாவது எழுதிவிடுவோம் என்று எழுதியிருப்பார்களோ என்று சந்தேகம்கொள்ளும்படியான ஒரு கதை.

எம் ஏ சுசீலாவின் முகமூடி – நடுத்தர வயதைக் கடந்த இரு பெண்கள், கேதார்நாத் ரிஷிகேஷ் பயணம் செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு உதவியாளாக வந்த ஒரு வடநாட்டவரிடம் அவர்கள் கொள்ளும் அபிப்பிராயம் தான் கதை. முன்பின் அறியா ஒருவரை முன்தீர்மானத்தோடு அணுகினால் கிடைக்கும் சாதக பாதகங்கள் பற்றிய கதை.

கமலாதேவி அரவிந்தனின் சூரியகிரகணத்தெரு – சிங்கப்பூரில் ‘வெளிநாட்டு வேலை’ என்று அழைத்துவரப்பட்ட பெண்கள் ஒரு மோசமான ஏஜெண்டால் ஏமாற்றப்படுகிறார்கள். பாஸ்போர்ட் , பணம் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அந்தப் பெண்கள் அதிலிருந்து மீழ வழியில்லாமல் பாலியல் தொழிலாளர்களாக மாறிப்போனதை ராமக்கா, அன்பு ரோஜா, ராமாயி, மஞ்சு, சரோசா போன்ற பெண்களின் வாழ்க்கைக் கதையோடு எழுதியிருக்கிறார்.

வத்ஸலா அவர்களின் மூலை – கைம்பெண்ணாக மாறிய (?) ஒரு பெண்ணை குடுப்ப உறவுகள் நடத்தும் விதத்தை காட்சிப்படுத்தியிருக்கும் கதை. வண்ணப்புடவைகள், மனதுக்குப் பிடித்த செயல் , பொட்டு வைத்தல் என்று மாறிப்போனாலும் குடும்ப அதிகாரம் பறிக்கப்பட்டு மூலையில் முடக்கிப் போடப்படும் பல பெண்களின் கதை.

புதியமாதவியின் ராஜமாதா – நூற்றிப் பத்துக் கதைகளிலும் தனித்துத் தெரியும் ஒரு கதை. இதிகாசங்கள், புராணங்கள், மத நூல்கள் அனைத்துமே பெண்களுக்கு எதைச் சொல்லிக்கொடுக்கிறது என்ற கோணத்தில் எழுதப்பட்டிருக்கும் கதை. சீதை தீக்குளித்தாள், கண்ணகி மதுரையை எரித்தாள், பாஞ்சாலி சபதம் வென்றாள். சரி அடுத்து ? ஏன் அப்படி ? இப்படித்தான் நிகழவேண்டுமா என்று பெண்கள் கேள்வி கேட்டால் ஒரு தருமசாஸ்திரமும் நாட்டில் மிஞ்சாது. பெண்கள் மதம் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும். மத சாஸ்திரங்கள் மீதான விமர்சனம் வேண்டும். பெண்கள் ஏன் ஆண் மகவைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆணதிகாரத்தை அதன் வழியிலேயே சென்றடைந்து ராஜமாதாக்களாக வலம் வரும் பெண்களைத் தோலுரிக்கும் வரலாற்று வழியான ஒரு அற்புதப் புனைவு. ‘ உன்னை வைத்து இழந்த பிறகு என்னைப் பணயம் வைத்தாயா ? ‘ பாஞ்சாலியின் கேள்விக்கு எந்தத் தரும சாஸ்திரத்திலும் பதில்கள் இல்லை.

ப சிவகாமியின் அரியமலர் – ஆட்சி அதிகாரம் ஒரு மாயை. சமூக அதிகாரம் மட்டுமே உண்மையான விடுதலை. இந்தியாவின் உயரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரியாகவே இருந்த போதிலும் தான் எதிர்கொண்ட சாதியப் பாகுபாடுகளையும் , சாதிய அடுக்குகள் நம் நாட்டில் எவ்வாறாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்கிறது என்பதையும் தான் பணிபுரிந்த இடத்தின் நிலத்தில் இருந்து எழுதியிருக்கிறார்.

தமிழச்சி தங்கபாண்டியனின் களவாணி மழை – வட்டார மொழியோடு அழகாக புனையப்பட்ட கதை. கிராமத்தில் பொறுப்பின்றிச் சுற்றித்திரியும் ஒருவனோடு காதல் வயப்படும் மகள் வள்ளிமயிலைக் கையும் களவுமாகப் பார்க்கும் ஒரு தகப்பனின் இடத்தில் வைத்து எழுதப்பட்டிருக்கும் கதை. பெண்ணைப் பெற்றவர்கள் கிராமங்களில் எதிர்கொண்டவற்றை மேலோட்டமாகச் சொல்லிச் செல்கிறது கதை.

ஜெயந்தி சங்கரின் சேவை – வாடிக்கையாளர் சேவைகள் இன்று பெரிதளவில் வளர்ச்சி கண்டுவிட்ட ஒரு துறை. இதற்கெல்லாம் கூட சேவை மையமா என்று வியக்கும் வண்ணம் அதன் எல்லை பெருகிவிட்டது. தனித்து இருக்கும் முதியவர்கள், தனிப்பெண்கள் என்று பலருக்கும் இது ஒரு வகையில் உபயகமான ஒன்றாகத்தான் இருக்கிறது. அவ்வாறான சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒருவன் தன் தாய்க்காக ஒரு ஊழியரை நியமிக்கிறான். அது தன் தாய் என்று சொல்லாமல் வாடிக்கையாளர் என்றே அவரிடம் சொல்கிறான். பின்னர் அவன் தாய்க்கும், அந்த ஊழியருக்கும் நடக்கும் ஒரு நாள் நிகழ்வு தான் கதை. நவீன உலகில் தடம் மாறிப்போன மனித உறவுகளைப் பற்றி அழகாகச் சொல்லிச் செல்கிறது கதை. நல்ல கதை.

தமிழ்நதியின் நித்திலாவின் புத்தகங்கள் – புத்தகங்களை நேசிக்கும் ஒரு பெண். அவளுக்குப் புத்தகங்கள் தான் எல்லாம். ‘இப்படிப் புத்தகம் படிச்சிட்டே இருந்தா நீ உருப்படாம போயிருவ ‘அம்மாவிடமிருந்து தொடர்ச்சியாக வசவுகளை எதிர்கொள்ளும் நித்திலா. கல்வி, வேலை, திருமணம் என்று வாழ்வில் பல மாற்றம் வந்த போதும் விடாமல் பற்றிகொண்டிருக்கும் புத்தகங்கள். திருமண வாழ்வும் நிலைக்காமல் போன போதும் புத்தகங்களை மட்டுமே கைக்கொண்டு வாழ நினைக்கிறாள். புத்தகங்கள் மீதான அவளின் காதல் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்து கிடப்பதை கதையெங்கும் காட்சிப் படுத்தியிருக்கிறார்.

சுமதி ரூபனின் வடு – சிறுவயதில் லண்டன் மாமாவால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் மல்லிகாவின் கதை. சிறுவயது மனவோட்டங்கள் யாராலும் கணிக்க இயலாதது. தனக்கு எது வேண்டும் என்றோ, நல்லது கெட்டது குறித்தான சமூகப்பார்வையோ அற்று வெறுமனே விளையாட்டு மனநிலை கொண்ட பருவம். அதில் அத்துமீறல்களை வகை பிரிக்கத் தெரிந்ததில்லை. ‘ முதுகைப் பிடித்துத் தள்ளிவிட்ட எதிர்வீட்டுப் பையனைப் பற்றி அம்மாவிடம் கோள்மூட்ட முடிந்தது , ஆனால் உடல்ரீதியாக அத்துமீறும் லண்டன்மாமாவைப் பற்றி புகார் சொல்லாமல் ஏன் மறைத்தேன் ‘ என்று அவளுக்குள் எழும் சுயவிசாரணைகள் நிறைந்த ஆழமான கதை.

ஈழவாணியின் நிர்வாண முக்தி – ஒப்பீட்டளவில் ஈழப்பெண்களின் கதைகள் ஆழமாகவும், அழுத்தமாகவும் வெளிவந்திருக்கின்றன. அவர்களின் நிலம் எதிர்கொண்ட போர்ச்சூழல் ஒரு காரணமெனக் கொண்டாலும் அதை அழுத்தமாகப் பதிவு செய்து இருப்பது அவர்களின் பலமாகத் தெரிகிறது. நிர்வாண முக்தியில் , போரின் பாதிப்பால் மாற்றுத் திறனாளியான சீலன். அவனைக் காதலிக்கும் கவிதா. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் பெற்றுத் தருவதாகச் சொல்லி பணம் கிடைத்ததும் அவர்களை ஏமாற்றிவிட்டு ஓடிப்போகும் ஜெயம். போரினால் எதிரிகளால் மட்டும் இழப்புகள் ஏற்படுவதில்லை. சொந்தங்களும் எதிரிகளாக மாறிப்போகும் என்ற உண்மையை எழுதியிருக்கிறார்.

மாதங்கியின் புரு – வயதான பெற்றோர்களைக் கவனிக்காமல் விடும் உறவுகளுக்குள் நிகழும் கதை. ஒரு அறிவியில் புனைகதையில் நகைச்சுவையாய் ஒரு நிதர்சனத்தைப் பதிவு செய்திருக்கிறது புரு.

கவின் மலரின் இரவில் கரையும் நிழல்கள் – இந்தக் கதை என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. பெண்கள் தங்கள் தோழிகளுடன் எத்தனை காலம் நட்பு பாராட்டிக்கொண்டிருக்க முடியும் ? நீடித்த, நிலைத்த நட்பென்று பெண்களுக்கு ஏதேனும் உண்டா ? அதைத் தீர்மானிக்கும் உரிமையையும் இந்தச் சமூகமே எடுத்துக் கொள்கிறது. ஒன்று திருமணம் ஆகும் வரை அது நிலைத்திருக்கலாம். அதன் பிறகும் தொடர வேண்டுமென்றால் கணவரும் , அவர் வீட்டினரும் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ‘ கல்யாணம் குழந்தைன்னு ஆயிருச்சு .. இனியென்ன ஃப்ரண்ட்ஸ்.. ஊர்சுத்தல்… ‘ என்று பெற்றவர்களே தடை சொல்லிவிடுவார்கள். அதெயெல்லாம் தாண்டி நட்போடு இருந்தால் அப்படியிருக்க சுயத்தை இழக்க வேண்டும். எப்படி என்று கேட்கிறீர்களா ? அதைத்தான் இந்தக் கதை பேசியிருக்கிறது. பெண்கள் நட்புறவில் நீடிக்க அவர்களின் சோஷியல் ஸ்டேட்டஸ் பெரும்பங்கு வகிக்கிறது. அவள் தனிப்பெண்ணாகவோ, விவாகரத்தானவராகவோ, அல்லது இந்த சோ கால்ட் சமூக கட்டமைப்புக்குள் விழாதவராகவோ இருந்தால் அவர்களுக்குள்ளான நட்பு ? நட்புக்கு ஒன்றும் பாதகமில்லை. ஆனால் அங்கே மகிழ்வில்லை.

நான் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்தது கவிஞர் தாமரையின் ‘சவிதா வயது பதினொன்று’ கதையும் , பிரியா தம்பியின் ‘அப்பா மகள்’ கதையும் . மிகவும் பிரபலமாக அறியப்படுகின்றவர்கள் எழுதிய கதைகளில் தீவிரம் இல்லை. தாமரையின் கதையில் விவாகரத்து பெற்றுக்கொண்ட தம்பதிகளின் குழந்தைகள் அனாதை ஆசிரமத்தில் சேர்ந்துகொள்வது போலவும், பிரியா தம்பியின் கதையில் பெற்றோரின் கடும் கட்டுப்பாட்டில் வளரும் பெண் படிப்பு வேலை என்று நகரத்திற்குக் குடியேறியதும் ஆண்களால் பாதிக்கப்பட்டுப் பின் அப்பாவின் கண்டிப்பான வளர்ப்பு தான் சிறந்தது என்று கண்ணீர் சிந்துவதாகவும் இருந்தது.

கதைகளில் முற்போக்கு, பிற்போக்கு என்று வகைமைகள் தேவையில்லை. 1940ல் எழுதிய பெண்களிடம் எந்த முற்போக்கான எழுத்தும் தென்படவில்லை. ஆனால் அவர்களிடம் ஒரு நேர்மை இருந்தது. விசாரணைகளின்றி நடந்ததை அப்படியே எழுதிப்போகும் அறம் இருந்தது. அதை வாசிக்கும் இன்றைய நம் தலைமுறைகள் அதற்கான தீர்ப்பை எழுதிக்கொள்கிறோம். எழுத்து அதற்கான இடத்தை அடைந்துகொள்ளும். நாம் சரி தவறென்று தீர்மானித்து புகுத்தும் கருத்தியல்கள் நாம் அடைந்த முன்னேற்றத்தைப் பல வருடங்கள் பின்னோக்கி எடுத்துச்சென்றுவிடும்.

கலைச்செல்வியின் செந்நிற வெள்ளம், அமரந்தாவின் பால்கட்டு, ஜா தீபாவின் குருபீடம், ஜெயராணியின் ஆதியிலொரு அன்பிருந்தது என்று வாசிப்பை ருசியாக்கிய கதைகளின் எண்ணிக்கை நீண்டுகொண்டே செல்லும். அதனால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வாழ்வைச் சொல்லிச் செல்கிறது. வருடத்தின் ஆரம்பத்தில் கிடைத்த ஒரு நல்ல வாசிப்பு அனுபவம்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்
ஆசிரியர்: இரா.பிரேமா
வெளியீடு:
ஹெர் ஸ்டோரிஸ்
விலை: ₹.1200
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 சாந்தி சண்முகம்

 

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *