“தஞ்சை வட்டாரச் சிறுகதைகள்” – நூல் அறிமுகம்
தமுஎகசவின் 16 வது மாநில மாநாட்டை முன்வைத்து தொகுக்கப்பட்ட சிறுகதை தொகுப்பு. 14 முக்கிய தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களின் கதைகளை ஏந்தி நிற்கிறது நூல்.
*எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ்* அவர்கள் எழுதிய “கியாமத் எனும் இறுதித் தீர்ப்பின் நாள்” தொகுப்பின் முதல் சிறுகதை ஒரு இஸ்லாமிய சமூகத்தின் திரைகளுக்குள் செழித்து வளர்ந்த அரேபியா ரோஜாவை போன்ற நூர் என்கிற பெண்ணுக்கும், ஒரு அடியாளாக காசுக்காக யாரை வேண்டுமானாலும் அடித்துக் கொலை செய்யும் அளவிற்கு குற்றப் பின்னணி கொண்ட ஒரு முரட்டு ரவுடிக்கும் ஏற்படும் காதலும் அதன் தொடர்ச்சியாய் நீளும் நிகழ்வுகளுமாய் ஆன கதை.
இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியல், ஆண்கள், பெண்கள் அவர்களின் பழக்கவழக்கத்தை போகிறவாக்கில் சொல்லிச் செல்கிறது.
அடுக்கடுக்கான அரபி தங்கத்தில் மூழ்கிக்கிடந்த நூர் ஒரு நாளில் அத்தனையும் துறந்து விட்டு இரவோடு ரெங்கராஜனோடு தலை படுகிறாள். எப்படியும் அடியாள் வேலையை விட்டு விலகி திருந்திவிடுவான் என்று காத்திருந்தவளுக்கு காலம் எந்த நல்ல பதிலையும் சொல்லவில்லை. எப்போது வருவான் எப்போது போவான் என்றே தெரியாத வாழ்வு. பல நாள் தனிமையில் மூஞ்சுருவைப்போல வளைக்குள் வாழும் வாழ்க்கை அச்சிறு பெண்ணை மிரட்டுகிறது.
ரங்கராஜனை அவள் மதமாற்றுகிறாள் முத்தாலிப்பு என்று பேரை மாற்றுகிறாள் ஆனால் இறுதிவரை ரங்கராஜனை ஆவளால் மனிதனாக மாற்றவே முடியவில்லை.
தன் காதல், தலைப்படும் காமம் எல்லாமும் சேர்த்து ஒருவனை மாற்ற முடியும் என்று காலம் காலமாய் சொல்லப்பட்ட காரியங்கள் ஏதும் அங்கு நிகழாமல் இருப்பதை வாழ்வு முகத்திலறைந்து சொல்கிறது. என்றாவது அவன் வீடு திரும்பும் நாள் உறங்காத இரவாக இருக்கிறது. அந்த ஒரு நாளுக்காகத்தான் யுகயுகமாய் காத்திருந்ததாய் நிகழ்கிறது.
ஒவ்வொரு நாளும் ரத்தக்களரிகளோடு வந்து சேரும் அவன் வராத நாட்களிலெல்லாம் பிரம்மை பிடித்தவள் போல் காத்திருக்கிறாள்.
ஒரு கட்டத்தில் அவள் அவனைக் கடக்கத் துணிகிறாள். அவனைக் கடக்க வேண்டுமெனில் அவளுக்கு அவளைக் கடக்க வேண்டும். மனிதனாகவே மாற முடியாதவனிடம் இருந்து மீள எண்ணுகிறாள். அவனை மீள்வது என்பது அவளையே மீள்வது என்பதை புரிந்து கொள்கிறாள் அவனை மீற இவள் இவளையே மீறியாக வேண்டும்.
இருவருக்குமான கூடலை எழுத்தாளர் இப்படி சொல்கிறார். பசிக்க, பரிதவிக்கடித்து, சாகவிருக்கும் கணத்திலேயே அமிர்தவர்ஷத்தால் மூழ்கடித்து மூச்சு விட கூட நேரம் தராது இவளை கூடுகிறான். ஏங்கிய அந்த இனிப்பு உடம்பு இப்பொழுது எரிதழலாகிறது அவளுக்கு. இவனைப் போலவே இன்னும் ஒரு குழந்தையா என வெறுப்பின் பால் சொரியத் தொடங்கிட்ட நாட்களில் விழிகள் பார்த்து அழுத்தி இருட்டில் அவளுள் பாய்ந்த அமுதத்தில் வளர்ந்து பாய்ந்த அந்த குழந்தை இன்னொரு ரெங்கராஜனாக இருக்கக் கூடாது என்று எண்ணியவள் என்ன முடிவு எடுத்தாள் என்பதே கியாமத் எனும் இறுதித் தீர்ப்பு நாள்.
இரண்டாவது கதை பாசக்கயிறு *எழுத்தாளர் பித்தகுமாரன்* எழுதியது. படுத்த படுக்கையில் கிடையாக கிடக்கும் ஒரு குடும்பத்தின் மூத்தவளான ஆச்சியை கருணைக் கொலை செய்ய முடிவு எடுத்து உறவுகளுக்குள் ஏற்படும் உடன்பாடுகளையும் தர்க்கங்களையும் பேசுகிறது. ஒப்பாரிபாட்டோடு தொடங்கும் இந்த சிறுகதை இன்னுமொரு ஒப்பாரிப்பாட்டோடு முடிகிறது.
ஏதோ இந்த காலத்தில்தான் பிள்ளைகள் பெற்றோர்களை பராமரிக்காமல் ஆசிரமங்களுக்கு அனுப்புவதாகவும், அந்த காலங்களில் முதியோர்களை எல்லோரும் பரிவுடன் கவனித்து கொண்டார்கள் என்கிற ஒரு மாயை உருவாக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்தக் கதை ஒரு சம்மட்டி அடி. ஏனெனில் எனக்குத் தெரிந்து இதே போல் படுத்த படுக்கையாக கிடப்பவர்களுக்கு சங்கு இலை அரைத்துக் கொடுப்பது எனும் வழக்கம் ஊரிலிருந்து. பின் நாட்களில்தான் தெரிந்தது அந்த இலை விஷம் என்பது.
அதேபோல் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பது. இளநீர் கொடுத்து அதீத குளிர்ச்சியில் அவர்கள் மரணிக்கும் அளவிற்கு மரணச் சடங்கு செய்வது என்று காலகாலத்துக்கும் மனிதன் தன்னுடைய பரிமாணத்தை இப்படித்தான் உலகிற்கு காட்டிக் கொண்டிருந்தான் என்பதை சொல்கிறது இந்த கதை. அக்கால வாழ்வியல், பல பெண்களோடு குடும்பம் நடத்திய ஆண்கள், அச்செயலை பெருமை பேசும் பெண்டாட்டிகள் என்று விரிகிறது.
காட்டேரி மதவு *எழுத்தாளர் சி.எம் முத்து* எழுதியது. கிட்டத்தட்ட ஒரு திகில் கதையாக தொடங்கி அதை நம்ப வைத்து இறுதியில் ஒரு நகைச்சுவையாக, விழிப்புணர்வோடு முடிந்திருக்கும். கோர வாய்க்கா மதவில் தொடர்ந்து அடுத்தடுத்த இறப்புகள் நிகழ அதற்கான காரணமாக பிசாசாகவோ, காட்டேரியாகவோ, நொண்டி முனியாகவும் இருக்கலாம் என்று புரளி கிளம்பி, அந்த இடத்தில் அடுத்தடுத்த தொடர் மரணங்கள் நிகழ்கிறது.
ஊரே அந்திக்கருக்கத் தொடங்கும்போது கதவை அடைத்துக் கொண்டு வீட்டுக்குள் இருக்கிறார்கள். இரண்டு இளசுகள் காதலுற்று அவர்கள் தனிமையில் சந்திக்க காட்டேரி மதவை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆயிற்று என்பதே கதை.
நான்காவதாக *எழுத்தாளர் நா. விச்வநாதன்* அவர்களின் நீர்மை. காவிரிக் கரையோரம் செழித்து வளர்ந்த சங்கீதத்தின் ஆழத்தை, அது சார்ந்த வாழ்வியலை, அதிகாலையில் தொடங்கும் சுப்ரபாதம் போல் அழகாக ஒரு கதையாக விரித்திருக்கிறார். தஞ்சைப் பகுதிகளில் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பிச்சை, வேம்பு என்கிற பெயர்களுக்கான காரணங்களும், அர்த்தங்களும் சுவாரஸ்யம்.
ஐந்தாவது *எழுத்தாளர் யூமா வாசுகி* எழுதிய ஜனனம்.
விரல்களற்ற கரங்கள் கொண்ட குழந்தையை கருவில் சுமந்திருக்கும் மனைவியிடம் அது குறித்து பகிராமல் மறைத்து வைத்திருக்கும் மித்ரன், மனம் புடைக்க, துயரம் பெருக அதை எதிர்கொள்கிறான். மனைவியவள் மருத்துவமனையில் இன்று நேற்று என தலைப் பிரசவத்தை எதிர்பார்த்து படுத்திருக்க, ஒரு நிருபராக மலைப்பகுதியில் நிகழ்ந்த ஒரு ரயில் விபத்து செய்தி சேகரிப்பதற்காக செல்கிறான். குற்றுயுரும் குலையுயிருமாக கிடக்கும் அந்த உடல்களை அங்கிருப்போர் மீட்க தனியே தெறித்து விழுந்து குப்புறக் கவிழ்ந்து கிடந்த குழந்தையின் உடலை காண்கிறான். குழந்தையினுடைய பிஞ்சு கரங்கள் எதையோ இறுகப்பற்றியிருக்க அந்த விரல்களின் இறுக்கத்திலும் அன்போடு வீசிய பளபளப்பு துடிப்புகளில் அந்த கைகளின் சிரத்தை குவிந்திருந்ததைக் காண்கிறான். விரல்களின் பிடியிலிருந்து மெல்ல ஒரு அங்குல நீளமுடைய பிரிக்கப்படாத சாக்லேட்டை பத்திரப்படுத்தி அவனோடு கொண்டு வருகிறான்.
மருத்துவமனையில் இருக்கும் மனைவியின் நினைவு குறுங்கோடாரிகளாக அவன் மீது வீச எந்தவித சமரசமும் இல்லாமல் பிரபஞ்சமே எதிர்க்க வேகமாய் வந்து சேருகிறான். இறுதி வரை மனைவியிடம் விரல்கள் இல்லாமல் பிறக்கப் போகும் குழந்தை பற்றி பகிராத அவனுக்கு என்ன ஆயிற்று? பிரசவம் பார்த்த டாக்டர் ரமணன் ஏன் மயங்க விழுந்தார்? என்பது கதை.
ஆறாவதாக *பன்னிற மாமை எழுத்தாளர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்* எழுதியது. ஒரு வகையில் இந்தக் கதை ஒரு அறிவியல் புனைவு. எதிர்காலத்தில் நிகழ்வது போல ஒரு கதைவிரிப்பு. காலம் காலமாக வன்முறையோடு பிறந்தவன் மனிதன். வன்முறை என்பது அவனுடைய ஆதி குணம். சாதி, மதம், இனம், மொழி, வர்க்கம் என வேறுபட்டு கிடந்தாலும் அதையெல்லாம் கடந்து ஒரு ஒற்றுமையை வளர்ப்பதுதான் நாகரீகம், பண்பாடு. ஆனால் மனித சமூகம் காலகாலத்திற்கும் கட்டமைத்து வைத்திருக்கிற அந்த வேற்றுமையை ஏதேனும் ஒரு வழியில் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டேதான் இருக்கின்றன என்பதை சொல்வதாக இந்தக் கதை இருக்கிறது.
சாதிக்குப் பதில் கழுத்தில் இருக்கக்கூடிய ஒரு வண்ணத் தேமல் அதுதான் ஒவ்வொருவரையும் மற்றவரிடமிருந்து வேறுபடுத்துகிறது. குடியிருப்புகளாக வேறுபடுத்துகிறது. வருங்காலத்தில் எப்படி எல்லாம் இருக்கலாம். உதாரணமாக கறிவேப்பிலை கொத்துகள் கூட 200 ரூபாய்க்கு வாங்க வேண்டி இருக்கும் என்று நக்கலாக… அது அறிவியல் புனைவாக எதிர்காலத்தை சொன்னாலும் பொருளாதார சரிவைச் சாடுவதாக இருக்கிறது. சாக்கடை நீரை சுத்தப்படுத்தும் சோப்பு, ஈமு கோழிகளைப் போல் ஓடும் கொசுக்கள், கொசுக்களின் கழுத்தோரமாக தொங்கும் எச்சில் சுரப்பிகளை பிடித்து இழுத்து விளையாடும் குழந்தைகள் என்று வித்தியாசமான காலகட்டத்தையும் கதைக்களத்தையும் விரித்து இருக்கிறார் நூலாசிரியர் அவர்கள்.

*சோலை சுந்தரபெருமாள் அவர்களுடைய கதை நிவாரணம்* எப்படி தஞ்சை டெல்டா என்பது விவசாயத்தையே முழுமையாக நம்பி மானம் பார்த்த பூமியாக அதே நேரத்தில் பெய்தும் கெடுக்கும் மழையிலும் விவசாயத்தை விட்டு விலகாது அவர்களுடைய வாழ்வியல் முறையையும் அப்பட்டமாக சொல்வதாக இருக்கும். அறுவடை முடிந்து அன்பு மகளுக்கு காது குத்தலாம் என்பது போல ஒவ்வொருவருமே ஏதேனும் ஒரு குடும்பக் காரியத்தை அறுவடையோடு முடித்து வைக்கும் அவர்களுடைய வாழ்வியலை சொல்கிறது. இறுதியாக சென்னையில் இருந்து வரும் பெரிய முதலாளிகளின் பவர் ஏஜென்ட்டிடம் குழி 1000 ரூபாக்கு எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு கோயம்புத்தூர் பக்கம் பொழைக்க போயிடலாம் எனும் மனைவியின் புலம்பலோடு அவர்களுக்கான அன்றைய தீர்வு அதுதான் என்பதை சொல்வதாக இருக்கும்.
மயான காண்டம் இந்த நூலில் இடம் பெற்றுள்ள எட்டாவது கதை *எழுத்தாளர் பள்ளத்தூர் கூத்தலிங்கம்* அவர்கள் எழுதியது பொதிம்மாள் செத்த இரண்டாம் நாள் பால் தெளிப்புக்காக மொத்த சாதிசனமும் கூடியிருக்கும் சுடுகாட்டு நிகழ்வாக விரிகிறது இந்தச் சிறுகதை. ஒரு மரண வீட்டில் என்ன நடக்கும் என்பது பெண்ணுக்கும் ஆணுக்கும் தெரிந்த பொதுவான செய்தி. அதுவே கட்டத்தளையில் என்ன நடக்கும் என்பது ஆண்களுக்கு மட்டுமே தெரிந்தது. அதைப் படிப்படியாக விவரித்திருக்கும் இவருடைய கதைகளம் பெண்களுக்கு நிறையச் சொல்கிறது. அதே நேரத்தில் நாவிதன், வண்ணான் போன்றோர் காலத்திற்கு தக்கன மாறி கொள்வதுதான் எல்லோருக்கும் மரியாதை என்பதான புரிதலை. அந்தக் குடிகளின் பண்டைய வாழ்வியல் முறை, இப்பொழுது அது வேண்டாம் என்று நினைக்கும் பெற்றோர்கள் அங்கிருந்து முன்னேறும் பிள்ளைகள் என்று மூன்று விதமான வாழ்வியலையும் போகிற போக்கில் சொல்லிவிடுகிறது.
*எழுத்தாளர் வேட்டைப் பெருமாள்* அவர்களின் அண்டா சுப்பன் எனும் சிறுகதை அந்தக் காலத்திய கீதாரிகளின் வாழ்வியலையும் அதே நேரத்தில் அவர்களின் ஆட்டைத் திருடி எப்பொழுதுமே கறி வெந்து கொண்டிருக்கும் சுப்பனின் கதையும் சொல்லும். பின்னாளில் சுக்கனின் செல்லமான பிள்ளையான காட்டு ராஜா தன் தந்தை செய்யும் அதே ஆடு திருடும் வேலையை ஆர்வத்தில் செய்யப் போக அதனால் அப்பனுக்கு மகனுக்கும் என்ன ஆயிற்று அந்த மண்ணோடு உறவு எப்படி விட்டு போயிற்று என்பதை சொல்வதாக இருக்கும்.
இந்த கதையில் வரும் சில சொலவாடைகள் தஞ்சை மண்ணுக்கு உரித்தானது. அதில் ஒன்று “மானங்கெட்ட ஜிஞ்சனக்கு மாட்டுக்கறியை விழுந்து நக்கு” அதேபோல் கறி அடுப்பில் கொதிக்கும் போது “தலப்புலக் குட்டையா தம்பட்டக் குட்டையா என்னப் பதம் பார்த்து இறக்குடா குட்டையா” என்று அண்டாவில் வேகும் ஆடே பாடுகிறது.
ஓர் இரவு கீதாரிகள் கிடையமர்த்தியிருக்க சுப்பையா நாடார் தன் படைகளோடு வேட்டைக்கு புறப்பட்டார். சுப்பையா நாடார் மட்டும் பதுங்கி பதுங்கி ஆட்டுக்கிடையை அணுகி கவனமாக கிடந்ததிலேயே சற்று பெரியதான கிடாயை தோளில் தூக்கிக் கொண்டு ஓட, நாலு வயல் தாண்டுகையில் “ஐயோ, அப்பா” என்று சத்தம் கேட்க அப்போதுதான் தெரிந்திருக்கிறது கிடாவுக்கு பதிலாக கருப்பு துப்பட்டி போட்டிருந்த கீதாரியை தூக்கி வந்த கதை. அது எப்படி ஊருக்குள் பரவி ஊரே சொல்லிச் சிரித்தது என்பதை நகைச்சுவை இழையோடச் சொல்கிறது கதை.
*எழுத்தாளர் இரா. இளங்கோ* அவர்கள் எழுதிய சரபோஜி கிணறு, நீரற்ற வறண்ட பிரதேசத்தில் இருந்த ஒரே ஒரு நல்ல தண்ணீர் கிணறு. ஊரே இந்நீரைத்தான் பயன்படுத்த வேண்டும். மற்றவருக்கு மறுக்கப்பட்ட அதன் உரிமை பற்றியும் சரபோஜி கிணறு என்று எதற்காக அந்த கிணருக்கு பெயர் வந்தது என்ற காரணமும் கிணற்றைச் சுற்றி நடந்த துர் சம்பவங்களும் என கதை விரிகிறது. பனிரெண்டு அண்ணன்மார்கள் அடுத்தடுத்து கிணத்து நெடியில் மயங்கி குடகுக்குள் செருகிக் கிடந்த கதை எப்படி வழிநடை சிந்தாக மாறி நாவுக்கு விற்ற முசிறி முப்பத்திரெண்டு கிராமங்களிலும் கிணறு பிரபல்யம்.
ஒரு கட்டத்தில் சாபத்தால் நீர் வற்றி வறண்டுபோகிறது. இறுதியாக ராமநாதபுரத்திலிருந்து நீரோட்டம் கண்டுபிடிப்பதற்கு சீமைக்காரனை அழைத்து வருகிறது. ஊர் பிள்ளைகள் எல்லாம் அவன் கொடுக்கும் பளபளப்பான வண்ணக் கற்களுக்காக பின்னாடியே அலைவதையும் இறுதியான ஒரு இரவில் அந்த நீரோட்டம் பார்ப்பவன் கிணறையே பார்த்துக் கொண்டிருந்து அழுகை முட்ட வேட்டி மடிப்பில் முடிந்து வைத்த பளபளப்பான கூலங்கல்லை எடுத்து அந்த கிணற்றுக்குள் வீச அதன்பின் என்ன நடந்தது என்பது கதை.
இன்னொன்று *சுந்தர சுகன் எழுதிய” சுருட்டுப் பிடிக்கிற பொம்பளைகள்”* பள்ளி சென்று வரும் வழியில் காணும் சுருட்டையும் அது பிடித்த பெண்களின் பெண்ணின் கம்பீரத்தையும் அதில் இழையோடும் சிறு ஆண் தன்மையும் விரிக்கும் இந்தக் கதை. ஆனாலும் ஒரு நாள் சுருட்டு பிடிக்கும் சங்கீதா அம்மா பெட்டி கடைக்குச் செல்ல அவள் பின்னாடியே இவனும் செல்ல கடைக்காரன் கொடுத்த சுருட்டை கண் சுருக்கிக் பார்த்து “கோமாதா சுருட்டு இல்லையா?” என்று கேட்க “இல்லம்மா இது தான் இருக்கு” என்பதற்கு இது “என் வீட்டுக்காரருக்கு சுகப்படாது” என்று சொல்லி திரும்பும் காட்சியோடு முடிகிறது.
*தஞ்சாவூர் ஹரிணி அவர்கள் எழுதிய “அவளும் அம்மாதான்”* என்கிற தினமலர் டிவிஆர் நினைவு சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்றக் கதை. எப்படி ஒரு திருநங்கை இரண்டு பிள்ளைகளுக்கு தயாராகிறாள். தன் மனைவியை இழந்தவர் எப்படி ஒரு திருநங்கை இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டு தன் பிள்ளைகளை வளர்த்து எல்லாவற்றிலும் அவளை விட்டுக் கொடுக்காமல் வளர்க்கிறார் என்பதும், பின்னாளில் மகளின் திருமணத்தின் போது சமூகத்தில் அவர்கள் எதை எதிர்கொள்கிறார்கள் என்பது கதை.
*புலியூர் முருகேசன்* அவர்களின் “தீப்பற்றிய பாய்மரத் துணி” ஒரு சித்தம் கலங்கிய ஒருத்தி எப்படி பித்து பிடித்து வீதி மறந்து, ஊர் மறந்து திரிகிறாள், திரிவது எப்படி அவளுக்கு ஆயாசமாக இருக்கிறது என்பதை அவள் மொழியில் பேசுகிறது. ஒவ்வொரு நாளும் அப்படி அவள் திரிவதற்காக வீட்டில் இருந்து கொண்டு வந்து விட்டுச் செல்லும் மகன் ராசு பற்றி மற்ற பிள்ளைகளுக்கும் அவனுக்குமான மன இடைவெளிகள் பற்றி சொல்வதாக இருக்கும். பரம்பரைக்கு ஒருவர் பித்து பிடித்து சுற்றும் இந்த வழக்கம் எப்படி வந்தது? ராசுவுக்கு என்ன ஆயிற்று என்பது மீதிக்கதை.
இன்னொரு கதை *கவி ஜீவன் அவர்கள் எழுதிய திரும்பத் திரும்ப வரும் பறவை.* குஷ்ட நோய் தாக்கி ஊரிலிருந்து எல்லாவற்றையும் விட்டு அலையும் ஒருவன், மீண்டும் ஊருக்கு வந்து ஒதுக்குப்புறமான அந்த பெரு விருட்சத்தில் தன் கலையைப் பதித்து எப்படிக் கரைந்து போகிறான் என்பது கதை.
தஞ்சை மண்ணின் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்களின் கதைகளை, சமகால எழுத்தாளர்கள் கதைகளோடு சேர்த்து வெளிவந்திருக்கும் இந்த நூல் இன்றைய தலைமுறைக்கு தஞ்சை மண்ணின் மணத்தை கொண்டு சேர்த்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | தஞ்சை வட்டாரச் சிறுகதைகள் | Thanjai Vattara Sirukathaigal (Tanjore Regional Short Stories) |
| தேர்வும் தொகுப்பும்: | இரா.விஜயன் |
| வெளியீடு: |
பாரதி புத்தகாலயம்
|
| விலை: | ₹.- |
| அறிமுகம் எழுதியவர்: |
சுமித்ரா சத்தியமூர்த்தி
|
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
