ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – எரிதழல் கொண்டுவா – பாரதிசந்திரன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – எரிதழல் கொண்டுவா – பாரதிசந்திரன்

 

 

 

 

காட்டாறு உருவாகும்போது அமைதியாகத்தான் உருவாகிறது. ஆனால் போகப், போக ஒவ்வொரு இடத்திலிருந்து வரும் சிறு சிறு ஓடைகள் ஒன்று கூடி, கலந்து, மாபெரும் வேகத்துடன் கண்மூடித்தனமாக வீறுகொண்டு செல்கின்றன. கவிதையும் அதன் வெளிப்பாட்டுத்தனமும் அப்படித்தான். சமூகத்திற்குத் தன் ஆழ்மனச்சிந்தனைகளைக் கூறி விட எத்தனிக்கின்றான் கவிஞன். அதன் புறப்பாடு தெளிவுடைக் கருத்தாக்க ஒருமைத் தன்மையுடன் (Conceptual unity) இருக்கும். கவிதை வடிவம் கொள்ளும்போது, துணைமையாக இன்னும் இன்னும் ஏதேதோ புதுப்புது வெளிப்பாடுகள் இணைந்திருப்பதைக் கவிஞனே சிலநேரம் கண்டு வியந்து போகிறான். அது தான் படைப்பாற்றலின் ஆச்சரியம்.

தமிழ்மாமணி தாழை. இரா.உதயநேசன் அவர்களின் “எரிதழல் கொண்டு வா” நூலின் கவிதைகளும் இவ்வாறு ஒரு கருத்தின் கீழ் அமையாமல், சமூக மேம்பாட்டிற்கான நிறை, குறைகளை ஆராயும் பொருட்டு பல்வேறு தலைப்புக்களில் அமைந்திருக்கின்றன.. அமைதியாய், வீரமாய், கோபமாய், மூர்க்கமாய், ஏக்கமாய், பாசமாய், தெளிவாய் இது போன்ற தன்மையினைக் கவிதைகள் பெற்றுள்ளன. இனமுன்னேற்றம், மொழி முன்னேற்றம், இனத்தின் மாறுபாடுகள் இவற்றைச் சுட்டியே கவிதைகளின் கருப்பொருள்கள் அமைந்துள்ளன.

இயற்கை எழில் கொஞ்சும் அழகை விளக்குதல், பாச நெருடல்கள், சமூக ஏற்ற தாழ்வுகள், சமூகப் பிணக்குகள், மானிட அடிமைத்தனம் என்பவற்றையும் கவிதைகள் மிக அழகாக எடுத்தோதுகின்றன.

“ஓலைக் கீற்றுள் பரவும் ஒளியில்
ஏழைக் குடிசை விளக்கு எரிய
கிழிந்த ஆடையில் விடியல் தேடும்
எளியவர் உயரும் உலகம் வேண்டும்”

எனும் கவிதைக்குள் சமூக மாற்றத்தின் அடிப்படைச் சிந்தனைகளை இனம் காண முடிகின்றது. பொருளாதாரப் பின்னணியில் நலிவுற்றோர் வாழ்வில் உயருகின்ற திட்டங்களை அரசும்-தனியாரும் திட்டமிட்டுச் செயல்படுத்தினால் தான் மேம்பட்டதான சமூக ஒழுங்கமைவு மற்றும் சமத்துவம் நிலவும் என்பதனை இக்கவிதை விளக்குகிறது. இக்கருத்தையே, பல பொருளாதார வல்லுநர்களும் வெளிப்படுத்துவதை நாம் சமூகத்தில் காண முடிகின்றது. இதன்படி உலகம் ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்றி வைத்தால், கிழிந்த ஆடைகள் தரிக்க வேண்டிய தேவைகள் மாறி, எல்லாரும் ஒரேமாதிரியான வாழ்வைப் பெறலாம். இதனைக் கூறுவதாக அமைந்த மற்றொரு கவிதையில்,

“காலம் மாறும் காட்சிகள் மாறும்
வியர்வை நீரும் விண்ணைத் தொடும்
வெண்ணிலா உந்தன் வாசலில் நிற்கும்
வெற்றி வாகைகள் உன்மேல் வீழும்”

என்கின்றார். பயன்வழிக்கொள்கையின் ( Utility policy) படிச் செயலின் முடிவில் காணும் தீர்வுகளும், நடத்தைகளும் சரியான பாதையில் அமையுமானால் கொள்கையின் அடிப்படைச்சித்தாந்தம் சரியாகும் என்பதை ஒப்புமைப்படுத்தும் வரிகளாக மேற்காணும் கவிதை வரிகளுள்ளன. வியர்வை நீர் எப்படி விண்ணைத் தொடும்? சாத்தியமில்லாத ஒன்றல்லவா அது? ஆனால், ஏழ்மையையும், உழைப்பையும் சீர்தூக்கி மதிப்பளிக்கும் தருவாயில், அதன் பிரதிபலன் ஓர்நாள் உலகம் மெச்சும் அளவிற்கு நாம் உயர்ந்து நிற்போம். இதனை ‘கியூபா’ எனும் நாட்டின் வரலாறு கூறும். சிங்கப்பூர் மற்றும் அரபுநாடுகள் போன்ற நாடுகளின் வரலாறுகள் கூறும். கவிஞர் இரா.உதயநேசன் அவர்களின் கவிதைகள் தனிப்பட்ட முறையில் தனிமனிதத்துவம் சார்ந்தவைகளாகப் பெரும்பாலும் இல்லாமல், உலகம் தழுவிய மானிட சமூகத்திற்கான எண்ணங்களின் தெளிவாகவேயிருக்கின்றன. பரந்துபட்ட சமூகமேம்பாடுகளை நோக்கியே கவிஞரின் எண்ணங்களும். சிந்தனைகளும், அவர் தம் கவிதைகளும் இருக்கின்றன.

‘முகவரி’ என அனைத்து வரிகளிலும் முடியும் சிறந்ததொரு கவிதைகயில், கவிஞர் உதயநேசன் அவர்கள் மானுடத்தன்மை குறித்துக் கூறும்பொழுது, “பிழைக்கச் செய்வது மானுட முகவரி” என்கின்றார். பிறரை வாழ வைப்பதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துக் கைக்கொடுக்கும் பொழுது. மிகப் பெரும் வளர்ச்சியை நாடும், ஊரும் பெறும் என்பது எத்தகு மேம்பட்ட சிந்தனை. இக்கருத்தினை ஒட்டியே தம் வாழ்விலும் கவிஞர் ஆண்டுதோறும் ஏழைப் பெண்கள் பலருக்குத் தையல் தொழில்சார்பயிற்சிகளைக் கொடுத்தும், கைவினைப் பொருள் தொழில்சார் பயிற்சிகளைக் கொடுத்தும் பயிற்சி இறுதியில் இலவசமாகத் தையல் இயந்திரங்களை வாங்கிக் கைக்கொடுக்கும் திறனை எண்ணி வியக்கின்றோம். கவிதைகளில் எழுதிவிடுவதோடு நின்று விடுவதில்லை. கவிஞரின் வாழ்வு. அதற்காக எவ்வளவு செலவு ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாது செலவு செய்து தம் கவிதை வரிகளைச் செயல்படுத்துபவராகத்தான் தாழையார் இருக்கின்றார்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும் நான்கு அடிகளையும் 16 சீர்களையும் உடையதாக இருக்கின்றன. சந்த நயம், கவிதை வாசிப்பின் பொழுது இசைநயத்துடன் மனதில் பதிகின்றன. எளிமையான வார்த்தைப் பிரயோகம், ஆழமான பொருட்பாடுகள். உலகம் தழுவிய சிந்தனைப் போக்குகள் காணப்படுகின்றன. மேற்கண்ட படைப்பாக்க உத்தியைத்(Creative strategy ) மொழி, காலத்தால் ஏற்று இவ்வடிவ அமைப்பைப் பரவாலாக்குவதை ஏற்றுக் கொள்கிறது என்பதைச் சமகாலத்தில் உணர முடிகின்றது. அழகியல், மார்க்சியம், பெண்ணியம், சமூகவியல், உளவியல் எனும் கோட்பாடுகளை உள்ளடக்கிய கவிதைகளாகவும் இக்கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் காணப்படுவதை இனம் காண முடிகின்றது.

தாழை. இரா. உதயநேசன் தம் கவிதைகளில், கண்ணதாசன், கம்பன், வள்ளுவர், பாரதி, வ.உ.சி போன்று கவிதைக்காக உழைத்தவர்களைப் பற்றித் தமது கருத்தைக் கவிதையால் புகழ்மாலை செய்து அவர்களுக்கு அணிவித்திருப்பார். இவரின் பார்வையில் மேற்கண்ட கவிஞர்கள் பற்றிய நுணுக்கமான பார்வையை இங்கு வெளிப்படுத்தியுள்ளார். ‘ஆசிரியர்கள்’ சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை,

“தோற்கும் எண்ணம் தொலைக்கவே செய்தவன்
ஏற்றம் இறக்கம் ஏற்கச் சொன்னவன்”

என்கின்றார். எதுகை, மோனை சிறக்க இம்மரபுக்கவிதை ஆசிரியரின் திறனை உலகுக்குச் சொல்கிறது. ‘காதலி’ குறித்துக் கவிதை புனையும்பொழுது, ஆசிரியர் படிமத்தினைப் பயன்படுத்தி அற்புதமான காட்சியைக் கண்முன் நிறுத்துகிறார். இரவில் பூக்கள் மலர்வதில்லை. இரவில் கனவுகளும், கற்பனைகளும் தான் மலர்கின்றன. எனவே, இவை இரண்டையும் படிமப்படுத்தி,

“இரவின் வெளியில் மலர்ந்த பூக்கள்
தனிமைப் பொழுதில் நம்முடன் நடக்கும்”

என்கின்றார். மலரும், கனவும் படிமமாகி நிற்கின்றன. இக்கவிதையில், காதலியின் நினைவுகள் தனிமையில் தான் மனதைப் போட்டு வாட்டும். அதனை, அந்த உணர்வை இக்கவிதை வரிகள் மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளன.

மன உணர்வுகளை அப்படியே வார்த்தைகளாக்கி விட முடியாது. அது அலாதியாக எண்ணி எண்ணி வியக்கத் தக்கதாகும். ஆனால் கவிஞர் தாழையார் முடிந்தளவிற்கு மனவுணர்வுக்களைத் தம் கவிதையில் உள்பொதித்து எழுதியுள்ளார். அதற்குத் தமது கவித்துவ அனுபவமே (A poetic experience) காரணமாக இருக்கலாம். அவ்வாறு அவர் எழுதிய கவிதைகளில் மகள். அப்பா, காதலி. ஆசிரியர், ஊர், பழங்காலம் ஆகிய தலைப்பிலான கவிதைகளைக் கூறலாம். ‘மகள்’ எனும் தலைப்பிலான கவிதை ஒன்றில் மகளின் பாசப்பிணைப்பை அழகாக வெளிப்படுத்தி உள்ளார். அக்கவிதையானது,

“வளையின் ஓசையும் கால் கொலுசு நாதமும்
வளைந்தாடும் அவளின் விழியோரப் பார்வையும்
மகள் வடிவிலே மூவெழுத்து மந்திரமும்
மானுடர் பெற்ற மாபெரும் வரமே”

என்பதாகும். ‘மகள்’ என்பவளும், அப்பா. அம்மா ஆகியோரும் ‘மூவெழுத்து மந்திரமாவர்’ என்பார். இவர்கள் ‘வரமும் அதிசயமும்’ ஆவர் என்பார்.

கவிஞர் தாழை.இரா.உதயநேசனின் இக்கவிதைத் தொகுப்பு நூல் காலத்திற்கேற்றக் கருத்துக்களைக் கூறும் அழகிய கவிதை வடிவமைப்பையுடைய சமூக மேம்பாட்டைக் கூறும் உளவியல் நூலாகும்.

பாரதிசந்திரன் (முனைவர். செ.சு.நா. சந்திரசேகரன்)
தமிழ்ப் பேராசிரியர்

 

நூல்:- எரிதழல் கொண்டுவா
ஆசிரியர்:- தாழை. இரா. உதயநேசன்
வெளியீடு:- கலை உதயம் பதிப்பகம்
முதல் பதிப்பு: அக்டோபர்-2023
விலை- ரூ.120

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *