நூல் அறிமுகம்: எரியும் பனிக்காடு – ஜானகி ராமராஜ்

நூல் அறிமுகம்: எரியும் பனிக்காடு – ஜானகி ராமராஜ்

“Red Tea” என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 38 ஆண்டுகள் கழித்து தமிழில் “எரியும் பனிக்காடு” என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நாவல் இது. தேயிலைத் தோட்டங்களில் கூட்டங்கூட்டமாக பலி கொடுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் நாவல் இது. இந்நூல் குறிப்பிடப்பட்டிருக்கும் ரத்தம் தோய்ந்த வரலாறு தேயிலைத் தோட்டங்களுக்கு மட்டுமின்றி காஃபி மற்றும் ரப்பர் தோட்டங்களுக்கும் பொருந்தும் என ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

1925 ஆம் ஆண்டில் ஒரு டிசம்பர் இரவில் திருநெல்வேலி மாவட்டத்தில் கயத்தாறுக்கு அருகில் இருக்கும் மயிலோடை என்ற சிறிய கிராமத்தில் கதை தொடங்குகிறது. கருப்பன் மற்றும் வள்ளிக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆகியிருந்தன. பக்கத்து ஊர்களில் உள்ள நிலங்களில் கூலி வேலை செய்தே தங்கள் வயிற்றைக் கழுவி வந்தார்கள். பஞ்சத்திற்குப் பின் வேலை கிடைப்பது என்பது அரிதாகிவிட்டதால் தினமும் அரை வயிற்றை நிரப்புவதே போராட்டமாகியிருந்தது.

சூரியன் உதிக்கும் முன் எழுந்து கயத்தாறில் ஏதாவது வேலை கிடைக்குமா என பார்க்கச் செல்கிறான் கருப்பன். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்குகிறான். ஏதாவது ஓட்டல்களில் விறகு உடைக்கும் வேலை கிடைக்குமா என்று கூடப் பார்க்கிறான். ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஓட்டல்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெளியில் உணவு சிரட்டையில் கொண்டு வந்து வைக்கப்படுகிறது. பரிமாற ஆளெல்லாம் கிடையாது. அவர்களே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தரையில் உட்காரந்து தான் சாப்பிட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் எவருக்கும் கேட்பதில்லை என நிரூபிப்பதாக கருப்பனுக்கு வேலை எதுவும் இல்லை என மறுக்கப்படுகிறது.


இந்நிலையில் தான் தேயிலைத் தோட்டத்திற்கு கூலி வேலைக்கு ஆள் பிடித்துச் செல்லும் மேஸ்திரி சங்கரபாண்டியனை கருப்பன் சந்திக்கிறான். இப்படி பட்டினியினில் கிடந்து சாவுவதை விட ஆனைமலை எஸ்டேட்டுக்கு வந்து விட்டால் வருடம் முழுவதும் வேலை இருக்குமெனவும் வருடத்தின் இறுதியில் கை நிறைய பணம் சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறுகிறான் சங்கரபாண்டி. இதற்கு ஒத்துக் கொண்டால் முன்னதாகவே அட்வான்ஸ் தொகை தருவதாகவும் எஸ்டேட்டிற்கு அழைத்துச் செல்லும் முழு செலவும் அவனுடையது எனவும் கூறுகிறான். இதையெல்லாம் நம்பி கருப்பனும், வள்ளியும், கருப்பனின் வயதான தாயை வள்ளியின் பெற்றோர் பொறுப்பில் விட்டுவிட்டு ஆனைமலைக்குச் செல்கிறார்கள். தங்களைப் போன்றே நிறைய பேர் அவர்களுடன் வருகிறார்கள் என ஆறுதலைகிடைகிறார்கள்.

ஆனைமலைக்கு சென்ற முதல் நாளே அது நரகம் என புரிந்து கொள்கிறார்கள். தப்பிக்க வழியில்லாதது கண்டு மனம் வெதும்பி அந்த வாழ்க்கைக்குப் பழக ஆரம்பிக்கிறார்கள். ஒரு வீட்டில் மூன்று குடும்பங்கள் தங்க வைக்கப்படுகின்றன. நாணலைக் கொண்டு தடுப்பு செய்து அவரவர்களுக்கென வீட்டில் ஒரு பகுதியை ஒவ்வொரு குடும்பமும் பிரித்துக் கொள்கிறது. தாங்க முடியாத குளிர், மழை என எல்லா நாட்களிலும் வேலை வாங்கப்படுகிறார்கள். வள்ளியின் மீது தொடர் பாலியல் சீண்டல்கள். இது தவிர மலேரியா, நிமோனியா என காய்ச்சல் குறைந்தது இரு முறையாவது ஒருவரை தாக்காமல் போவது கிடையாது.

இதற்கெல்லாம் முறையான வைத்தியம் பார்க்கப்படுவதில்லை. மருத்துவராக வார்டுபாயே இருக்கிறார். அவர் தரும் மருந்துகள் மட்டும் தான் அவர்களுக்கு. சுத்தம், சுகாதாரமில்லாத மருத்துவமனை, மலம் கலந்து ஓடும் நீர்தான் குடிநீர். காய்ச்சல் குறைந்த உடனே வேலைக்கு அடித்துத் துரத்தப்படுகிறார்கள். படிக்காத பாமர மக்களுக்கு கணக்கு தெரிவதில்லை என்ற காரணத்தால் அவர்கள் உழைப்பு அவ்வளவும் சுரண்டப்படுகிறது. எஸ்டேட்டிற்கு கூட்டி வந்த செலவு, கம்பளி, உடல்நலமில்லாத நாட்களில் கடனாகப் பெற்ற அரிசி என எக்கச்சக்கமாக கடன் அவர்கள் பேரில் எழுதப்பட்டு ஓராண்டு முடிந்தாலும் உன் கடன் கழியவில்லை எனக் கூறி அடுத்த ஆண்டும் கூலிகளாக பதிவு செய்யப்பட்டு வேலை வாங்கப்படுகிறார்கள்.


ஆபிரகாம் என்றொரு மருத்துவர் வருகிறார். அவர் தான் தொழிலாளர் நலனுக்காக சுகாதாரத்தைப் பேண வெள்ளைக்கார முதலாளிகளிடம் போராடுகிறார். கொத்துக் கொத்தாக மனிதர்களும் பச்சிளம் குழந்தைகளும் கூட காய்ச்சலுக்குப் பலியாகிறார்கள். பிழைத்தவர்கள் அதிர்ஷ்டத்தின் பிடியில் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். இந்தக் கஷ்டங்களை எல்லாம் தாங்க முடியாமல் தப்பிக்க நினைப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள்.

மலையின் மேலுள்ள பனிமூட்டத்தினுள் இவர்களின் அவல வாழ்வும் மறைந்தே கிடக்கிறது. இரண்டு வருட உழைப்பிற்குப் பின் கருப்பன் வள்ளி கடன் அடைக்கப்படுகிறது. இருப்பினும் இன்னும் ஒரு வருடம் வேலை செய்தால் கையில் ஏதாவது காசு கிடைக்கும் என எண்ணித் தொடரும் அவர்களது மூன்றாமாண்டு வாழ்க்கை வள்ளியின் இறுதி ஊர்வலத்தில் முடிகிறது.

மலையின் அழகும், அங்கே நடந்த அவல வாழ்வும் அவ்வளவு துல்லியமாக வார்த்தைகளால் வரையப்பட்டுள்ளது. நாம் குடிக்கும் ஒவ்வொரு கப் தேனீருக்குப் பின்னும் ரத்தம் தோய்ந்த ஒரு மனிதனின் வரலாறு இருக்கிறது. மொழிபெயர்ப்பு நாவல் என்று எங்குமே காண முடியாத அளவில் மிக அழகாக எழுதியிருக்கிறார். பட்டியில் அடைக்கப்படும் ஆடுகளைப் போல் எஸ்டேட்டில் அடைக்கப்பட்டு, மனிதத்தன்மையற்ற மிருகங்களால் வேட்டையாடப்பட்ட எளிய மக்களின் கதை இது.

ஜானகி ராமராஜ்

 

நூல்: எரியும் பனிக்காடு

ஆசிரியர்: பி.எச். டேனியல் தமிழில் முருகவேள்

வெளியீடு: பொன்னுலகம் பதிப்பகம்

விலை: ரூ.200

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *