பி.எச்.டேனியல் முன்னுரையில்:
1941 முதல் 1965 வரை தேயிலைத் தோட்டங்களில் மருத்துவ அதிகாரியாக வேலை செய்தபோது, 1900 ல் இருந்து 1930 வரை தோட்டங்களில் பணிபுரிந்த பலரைப் பேட்டிகண்டு,எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களையும் பெற்றதன் அடிப்படையிலேயே இந்நூல் எழுதப்பட்டது.
“உங்களது அமைதி தவழும் இல்லத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் சுற்றியிருக்கையில் மனதுக்கு இதமளிக்கும் ஒரு கோப்பைத் தேனீரை உறிஞ்சும்போது, அதற்காக, அந்த ஆண்டுகளில் உங்களுடையவற்றைவிட எளிய ஆனால் உங்களுடையதைப் போன்றே இன்பமும் அமைதியும் நிலவிய ஆயிரமாயிரம் இல்லங்கள் சிதைக்கப்பட்டன,அழித்து நாசமாக்கப்பட்டன என்பதை நினைவுகூறுங்கள்”.
திரு.வி.வி.கிரி 1969 ல் வெளிவந்த ஆங்கில பதிப்புக்கான முன்னுரையில் அப்போதைய துணை ஜனாதிபதி திரு.வி.வி.கிரி எழுதுகிறார்: “நூலில் வரும் கதாபாத்திரங்கள் வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம்.ஆனால் டாக்டர் டேனியல் விவரித்துள்ள நிலைமைகள் தோட்டங்களில் உண்மையில் நிலவியவைதான்”.
இரா.முருகவேள் :
“தமிழ் இலக்கியம் மிக அரிதாகவே தீண்டிய, அந்த இருண்ட, இரத்தம் தோய்ந்த வரலாற்றை, அந்த மக்களின் கற்பனைக்கெட்டாத சோகங்களை, அவல வாழ்வை நம் கண்முன் நிறுத்துகிறது ‘எரியும் பனிக்காடு’ “.
“இலக்கியத் தளத்தில் தலித் இலக்கியத்திற்கும் பாட்டாளிவர்க்க இலக்கியத்திற்கும் இடையிலான கற்பனையான லஷ்மண் ரேகைகள் மறைந்து, இரண்டும் ஒன்றிணையும் புள்ளியாகவும் இருக்கிறது, எரியும் பனிக்காடாக வெளிவரும் ரெட் டீ” என்கிறார்.
இது நூறுசதம் உண்மை.
இனி நாவலைப்பற்றி….
நூலின் தலைப்பையும்,அழகிய முன் அட்டையையும் பார்க்கும் எவரும், இது தேயிலைத் தோட்டத்துக்காக மரங்கள் எரிக்கப்பட்டதன் கதையாக இருக்கும் என்றுதான் நினைக்கமுடியும்.ஆனால் உள்ளே போனால்தான் தெரிகிறது இது மனிதம் எரிக்கப்பட்டதன் கதை என்பது.
மழை பொய்த்துப் போய் வயலில் வேலை கிடைக்காமல் வறுமையில் தவிப்பதற்கு அம்மனின் கோபம் தணியாததே காரணமோ என எண்ணிக் குழம்பும் வெள்ளந்தி மனிதன் கருப்பன்.அவனுடைய இளம் மனைவி வள்ளி.
இந்த இளம் தம்பதியரிடையேயான காதலும் புரிதலும் நேசமும் அதியற்புதமானது.
திருநெல்வேலி மாவட்டம் மயிலோடை என்ற சிறிய கிராமத்திலிருந்து அருகில் இருந்த சிறிய நகரமான கயத்தாறுக்கு வேலைதேடிப் போன கருப்பன் தேயிலைத் தோட்ட கங்காணியைச் சந்திப்பதில் தொடங்குகிறது இக் காவியம்.”அங்க எவ்வளவு வேணா வேலை கிடைக்கும்,பை நிறைய பணம் பாக்கலாம்டே, எதுக்கு இங்க கஞ்சிக்கில்லாம பட்டினி கெடக்கே?
நாய்க்கமாரும் தேவமாரும் நாயைவிடக் கேவலமா நம்மை நடத்துறானுவ.ஆனா தொரைக நம்மள மாதிரி மாட்டுக்கறி திங்கறாங்க.நம்ம சாதிக்காரவுகதான் தொரைகளுக்கு சோறு சமைக்கிறாங்க, நம்மை சமமா நடத்துறாங்க”
மீன் தூண்டிலில் சிக்குகிறது.முன்பணம் கொடுக்கப்படுகிறது. வறுமையில் தடுமாறிக் கொண்டிருந்த கருப்பனும் வள்ளியும் உறவுகளைவிட்டுப் பிரிந்து மலைக்கு புறப்பட்ட காட்சி கருத்தம்மா படத்தில் வரும் “போராளே பொண்ணுத்தாயி…..”பாடலை தவிர்க்க முடியாமல் நினைவூட்டுகிறது.
ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் ஒரு கவிதை வரி மேற்கோள் காட்டப்படுகிறது.
“விடையளிக்கிறோம் ஒருவேளை என்றென்றைக்குமாக…” என்ற பைரனின் வரிகளைப் படிக்கும்போது இரத்த அழுத்தம் எகிறுவதை உணரமுடிந்தது.
நாற்பது பேருடன் வால்பாறை அருகே குமரன்மலை எஸ்டேட் போய்ச் சேர்கிறார்கள்.
குடியிருப்பு அங்கே ஐந்தாறு அறைகள் கொண்ட வரிசை லைன் எனப்பட்டது. கூலிகளின் குடியிருப்பு பகுதி பாடி எனப்பட்டது. (கணக்கில்லாத ‘டெட் பாடி’களைக் கண்டதாலோ என்னவோ?).
ஒவ்வொரு அறையிலும் இரண்டு மூன்று குடும்பங்கள் தங்க வேண்டும்.
கயத்தாறில் தேனொழுகப் பேசிய மேஸ்திரியிடம் சென்று தனியறை கேட்கும்போது,கிடைத்த வசவுகளும் ஏச்சுக்களும் கருப்பனைத் திடுக்கிட வைத்தது. ” எவ்வளவு அழகான முகமூடி பூண்டிருக்கிறது இந்த நரகம்….” ஷேக்ஸ்பியர்.
கூலிகள் பதிவு செய்யப்படும்போது பொது மேலாளர் வொய்ட் வள்ளியின் மீது கை வைக்கிறார்.கருப்பன் ஆட்சேபிக்கிறான்,வொய்ட்டுக்கு வந்த ரௌத்திரகாரமான கோபத்தில் முகம் சிவக்க”நீ யார் சக்லி நாய், பீ திண்ணி நாய்,கூட்டிக் குடுத்த நாய்…”என்கிறான்.
மேஸ்திரிகளால் குதறப்படுகிறான் கருப்பன்.
“முருகா காப்பாத்து.எத்தனை ஆசையோட நம்பிக்கையோட இங்கன வந்தோம்.மொதநாளே எல்லாம் நாசமாப் போச்சே.” புலம்புகிறாள் வள்ளி. நான் ஊருக்குப் போறேன் என்கிறான் கருப்பன். அட்வான்ஸ்,போக்குவரத்து உள்ளிட்ட எல்லா பணத்தையும் தராமல் போகமுடியாது.தப்பித்து போக நினைத்தால் வழியில் பிடித்துக்கொண்டு வந்து அடித்தே கொல்லுவார்கள் என்றார் அவனுடைய அறையில் தங்கியிருந்த முத்தையா.
“ஒரு தொழிலாளி ஒருதடவ எஸ்டேட்டுக்குள்ள கால வெச்சுட்டா அவ்வளவு தான். மேஸ்திரிங்ககிட்ட இருந்தும் தொரைங்ககிட்ட இருந்தும் லேசுல தப்ப முடியாது. வேலைக்கு வரும்போது நமக்கு தரானே அட்வான்ஸ் அதுதான் நமக்கு விலங்கு.எப்பேர்ப்பட்ட கூலிக்காரனும் மொத வருசத்துல அந்தக் கடனை அடைக்கவே முடியாது.நீ தொடர்ந்து இங்கயே இருக்கறமாதி பண்ணுவானுக”
மேஸ்திரி சங்கரபாண்டியனை கயத்தாறில் நான் பார்த்தது சாபக்கேடான நாள் என்ற கருப்பனிடம்,ஆனா சகுனமெல்லாம் நல்லாத்தானே மாமா இருந்தது என்கிறாள் அப்பாவியாக வள்ளி.”சகுனம்கூட தப்பாத்தான் இருக்கும் போலிருக்கு” என்கிறான் கருப்பன்.
இங்க வெள்ளைத் தொரைங்க மாடு திங்கறதால ஒவ்வொரு வாரமும் நல்லா கொழுத்த பசுமாடுகள வெட்டறாங்க.நான் இந்த எஸ்டேட் வாழ்க்கையை சகிச்சுக்கறதுக்கு இதுவும் ஒரு காரணம் என்றான் முத்தையா.
இங்கிருந்து எழுதப்படும் கடிதங்களும் ஊரிலிருந்து வரும் கடிதங்களும் மேஸ்திரிகள் விரும்பும் தகவல்களை மட்டுமே சொல்லும். ஊரில் அம்மா இறந்தாலும் இங்கே ஒருவர் இறந்தாலும் தகவல்கள் மறைக்கப்படும்.
மருத்துவமனைமாட்டுத் தொழுவத்தைப் போல்தானிருந்தது. துருப்பிடித்த இரும்புத் தகடுகளாலான தாழ்வான கூரையும்,மண் தரையையுமே கொண்டிருந்த கட்டிடம் மருத்துவமனை.
டாக்டர் குருப் சமவெளியில் ஒரு வார்டுபாயாக இருந்தவர். ஆனால் இந்தத் தேயிலைத் தோட்டத்தில் அவர் ஒரு முக்கியமான நபராவார். நாவலின் இறுதிக் கட்டத்தில், குரூப் பதவியிறக்கத்துடன் வேறு எஸ்டேட்டுக்கு மாற்றப்பட்டு ஒரு எல்எம்பி படித்த மனிதாபிமானமுள்ள மருத்துவர் வருகிறார்.
பாலியல் சுரண்டல்
இங்கே உதவி எழுத்தர் தொடங்கி பொது மேலாளர் வரை,அடுத்தவர் மனைவியை,மகளை தங்கள் பாலியல் தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். நம்மள சமமாக நடத்துவார்கள் என்று கயத்தாறில் மேஸ்திரி சொன்னது இந்த விசயத்தில் மட்டுமே நடந்தது.
அந்த நரிகளின் இச்சைக்கு ஒப்புக் கொண்டவர்களுக்கு நிறைய சலுகைகள். மாட்டேனென்றால் அடி உதை உள்ளிட்ட பயங்கர பழிவாங்கல்கள். வள்ளி யாருக்கும் மசியவில்லை.தொடர்ந்து பழிவாங்கப்பட்டாள். எந்தத் தொரை முன்னாலயும் யாரும் செருப்புப் போட்டிருப்பதோ குடை பிடித்துக் கொள்வதோ கூடாது.
தவறினால்”சக்கிலி நாய் பீ திண்ணி நாய் கூட்டிக் குடுத்த நாய்…”
ஆனால் அந்த வெள்ளைக்கார நாய்களுக்கு இவை கீழான வார்த்தைகளென்று தெரிந்திருக்கிறது.
கொளுந்து கிள்ளும் பெண்களைத் தடவும்போது மட்டும் அந்த நாய்களுக்கு ஏனோ சக்கிலிநாய் தெரிவதில்லை.
மலேரியா
கொட்டும் மழையிலிருந்து உடம்பெல்லாம் சேரடித்து,அட்டைக் கடிகளிலிருந்து இரத்தம் ஒழுக அறைக்குள் நுழைகிறார்கள். நனைந்த கம்பளியிலிருந்தும் ஒழுகும் கூரையிலிருந்தும் வடியும் தண்ணீர் குழிகளில் தேங்கி நிற்கிறது. அவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கமுடியும்?
குடியிருப்புகளின் சாக்கடைகள் கலந்து வரும் ஓடை நீர்தான் இவர்களின் குடிநீரும் சமையல் தண்ணீரும். சில நேரம் அதில் மலம் மிதந்து வரும்.விளைவு ஆண்டுதோறும் கடும் மலேரியா, சாவுகள்.
“இப்ப கொஞ்சம் பரவாயில்லை.கொஞ்சம் வருசம் முந்தி வரைக்கும் மொத்தக் கூலிகள்லே பாதிப்பேர் மலேரியாவுலயும் இன்னும் கொஞ்சம் பேர் நிமோனியா,வயித்துப் போக்காலயும் செத்துப் போவாங்க”. புதிய மருத்துவர் சாவு விகிதத்தைக் குறைக்க எண்ணுகிறார்.
“மலேரியா ஒழிப்புக்கும் மருத்துவத்துக்கும் செலவு பண்ண முடியாது,
ப்ளடி நான்சென்ஸ்.கொஞ்சம் பிச்சைக்காரப் பயல்கள் செத்தா என்ன?அந்த நாய்கள்தான் பன்னி மாதிரி பெத்துப் போடறானுகளே”இது தொரை.
“ஒவ்வொரு தேயிலைப் புதருக்கும் ரெண்டு மூணு இந்தியருடைய உயிராவது பலியாகியிருக்கும்னா அது மிகைப்படுத்தலே ஆகாது டாக்டர்”
கிறிஸ்துமஸ்
வருடத்தில் அந்த இரண்டு நாட்கள்தான் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும்.டிசம்பர்24 சம்பளமில்லாமலும் 25 சம்பளத்துடனும். எஸ்டேட்டில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இணைந்தே பண்டிகையைக் கொண்டாடினார்கள். நாடகமும் நல்ல உணவுமாக அம்மக்கள் அடைந்த மகிழ்ச்சியை படிக்கும்போது நமக்கும் சிறிதே ஆசுவாசம் கிடைக்கிறது.
கருப்பன்-வள்ளி
ஓயாமல் நாட்கணக்கில் கொட்டிய பேய்மழைக்கிடையிலும், இரத்தம் உறிஞ்சும் அட்டைக் கடியிலும்,தாங்க முடியாத கடுங்குளிரிலும் இடைவிடாது வேலை செய்யவேண்டியதிருந்தது. இவ்வளவு பயங்கரமான சூழலில் வேலை செய்தும் அவர்களால் ஒரு நாளைக்கு ஒரு அணாகூட சம்பாதிக்க முடியவில்லை. கடும் காய்ச்சல்களும் பழிவாங்கல்களும் நிறைந்த முதலாண்டு முடிந்து ஊருக்குப் போகலாமென்ற கனவில் மண்ணள்ளிப் போட்டார்கள், பொய்க்கணக்கு எழுதும் மளிகைக் கடை காளிச் செட்டியாரும்,பயணச்செலவுக்கும் கம்பளிக்குமெனப் பணம் பறித்த மேஸ்திரியும்.
அத்தனை கஷ்டத்திலும்,வள்ளிக்கு காய்ச்சல் பிசாசு அண்டாமலிருக்க இரண்டு தடவை கோழி பலியிட்டு தாயத்து தரும் முத்துக்கருப்பனுக்கு கனிசமான தொகையை செலவிடுகிறான் கருப்பன்.எத்தனை காய்ச்சல் இருந்தாலும் வேலைக்குப் போக கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இரண்டாவது ஆண்டு இறுதியில் எல்லாம் போக ஐந்து ரூபாய்தான் மீதமிருந்தது.மேலும் கடன்பெற்று ஊர் போய்வர விரும்பாமல் மூன்றாவது ஆண்டும் வேலை செய்து எல்லோருக்கும் புது துணிமணியோடு ஊர் போக முடிவெடுத்தார்கள்.
இன்னும் ஒருபோதும் எட்டவேமுடியாத அந்த நம்பிக்கையைக் கொண்டு ….
மாத்யூ அர்னால்டு.
படுபயங்கரமான மலேரியாக் காலம் வந்தது.ஏராளமான குழந்தைகள் கொத்துக் கொத்தாகச் செத்தன. வள்ளி தொடர்ந்து காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளானாள். வயிற்றில் காய்ச்சல் கட்டி வந்தது. உடல்நிலை சரியில்லாதபோதும் ஊருக்கு போகவேண்டும் என்ற உந்துதலில் தொடர்ந்து வேலைக்கு போனாள். அதேநேரத்தில் கருவுற்றாள். மூன்றாவது ஆண்டு முடிவதற்கு இருபது நாட்களே இருந்த நிலையில் கிறிஸ்துமஸ் வந்தது. மருத்துவமனையில் இருந்த வள்ளியின்ஆசைப்படி மாட்டுக்கறியும் சோறும் வயிறாற ஊட்டினான் கருப்பன்.
மறுநாள் மாலை வள்ளிக்கு குழந்தை பிறந்து இறந்தது.வள்ளி நினைவிழந்தாள்.ஒரு நிமிடம் அவளுடைய கையை விட்டால்கூட அவள் என்றென்றைக்குமாக தன்னை விட்டுப் போய்விடுவாள் என்ற பயத்தில் அவளது கைகளை இறுகப் பிடித்திருந்தான் கருப்பன். சிறிது நேரத்தில் “ஐயோ என்னத் தனியா விட்டுட்டுப் போயிட்டியே வள்ளீ..” என்ற நெஞ்சைப் பிளக்கும் சத்தம் மலைமுகடுகளில் எதிரொளித்தது……
1999 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மரண ஓலமும்தான் இந்தக் காற்றில் கரைந்திருக்கிறது…
இந்தக் கதையை மையமாக வைத்து, பரதேசி திரைப்படம் 2013ல் வெளிவந்தது.
வாசிப்புப் பழக்கமுள்ளோரும் சக மனிதனை நேசிக்கும் மனமுள்ளோரும் கட்டாயம் படித்தே தீர்வார்கள் இந்நாவலை.
ந.சண்முக சுந்தரம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ஈரோடு.