எரியும் பனிக்காடு (Eriyum Panikadu) – நூல் அறிமுகம்
கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீரை சிந்தாமல் இந்நூலை வாசித்து விட்டு கீழே வைக்க முடியாது. உலகத்தில் எவ்வளவோ துயரக் கதைகள் இருந்தாலும் இக்கதையும், அதன் சூழலும், அதன் களமும், உங்களால் யூகித்தறிய முடியாது. ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளிகள் எவ்வாறெல்லாம் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள் என்பதை ஒரு புனைவின் வழியாக விவரிக்கிறது இந்நாவல்.
திருநெல்வேலியிலிருந்து மயிலோடை கிராமத்தில் வேலை வாய்ப்பற்று பசியும், பஞ்சமுமாக, இருக்கும் கருப்பன் வள்ளி தம்பதிகளோடு நாவல் துவங்குகிறது. கதையின் மையச்சரடாக இருவரும் கடைசி வரை பயணித்து மீள முடியாத துயரோடு கதை முடிவடைகிறது. வறுமையை பயன்படுத்தி ஆசை வார்த்தைகள் கூறி, கங்காணிகளால் தேயிலை தோட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட பின், அவர்களின் கோர முகங்களும் குரூர செயல்பாடுகளும் தெரிய ஆரம்பிக்கிறது. கடுங்குளிரிலும், மழையிலும்,, நோய்மைகளிலும், அட்டை பூச்சிக் கடிகளிலும், ஏராளமான மரணங்களிலும், தப்பிப் பிழைத்து ஊர் திரும்பி வர உயிரை உருக்கி உழைத்தும் கடைசி வரை மீள முடியாமல் வள்ளி செத்துப் போகிறாள், கருப்பன் அடிமையாகவே தொடர்வதாக கதை முடிகிறது.
தேயிலை தோட்டத்தில் அதிகாரியாக வேலை பார்த்த டேனியல் அவர்களே இதை எழுதியுள்ளார்கள். தொழிலாளிகளின் உதிரத்தை பிழிந்துதான் நாம் அருந்தும் ஒரு கோப்பை தேநீர் தயாரிக்கப்படுகிறது என்பது கலப்பற்ற உண்மை. தேயிலை கொழுந்தை கிள்ளி எடுப்பதும் ஒரு கலைதான் மீனலை, முத்தலை, என்று இரண்டு வகையாக பிரித்து தான் கிள்ளுகிறார்கள். அதில் தான் எத்தனை இடையூறு, உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டல், வசைமாறிப் பொழிதல் என்று வாசிக்க வாசிக்க துயரத்தில் மனம் நடுங்காமல் வாசித்து முடிக்க முடியவில்லை. வெள்ளைக்காரர்களின் குரூரமான முகத்தை தோலுரித்திருக்கிறார்.
கோடைவாழிடங்களாக உல்லாச பயணங்களை மேற்கொள்ளும் பலரும் ஊட்டி கொடைக்கானல் மூணாறு என்று தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் தேயிலை தோட்டங்களை வாழிடமாக வசிக்க கூடிய தொழிலாளர்களின் வாழ்நிலை அன்றாட நரகம் தான். சொந்த ஊரே சொர்க்கம் எனும் அளவு வெளியேறத் தவிக்கின்றனர். தேயிலை தோட்டத் தொழிலாளி முதல் கங்காணி மேஸ்திரி துரைமார்கள் ஆங்கிலேய அதிகாரிகள் வரை அதிகாரத்தின் படிநிலையில் நின்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் சுரண்டுகிறார்கள். பெண்களை உழைப்புச் சுரண்டலோடு, பாலியல் சுரண்டலுக்கும் ஆளாக்குகிறார்கள் மறுப்போர் கடும் வேலைக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். நோய்க்காலத்திலும் வேலை செய்யச் செல்லும் கங்காணிகளின் கொடூரம் சொல்லும் தரமன்று.
மளிகை கடைக்காரன், கறிக் கடைக்காரன், பித்தலாட்ட சோதிடன் என யாவரும் அவரவர் அளவிற்கு சுரண்டிக் கொழுக்கின்றனர். மருத்துவமனையின் பெயரால் அங்கிருக்கும் சித்திரவதை கூடமோ அடிமைகளை விரைந்து சாகடிப்பதற்கான வைத்தியத்தை பார்க்கின்றது. ஈவு, இரக்கம், மனித நேயம் யாதொன்றிற்கும் அங்கு இடமில்லை. ஏன் எதற்கு என்று கேள்வி எழுப்பவும் அங்கு எவருக்கும் நாவில்லை.
தேயிலை தோட்டங்களில் இன்றைய நிலை என்னவென்று தெரியவில்லை. ஆங்கிலேயேர் காலத்து அடிமைநிலை என்பது பகீர் ரகமாக இருக்கிறது. இனி தேயிலை தோட்டத்தின் வழியாக கடந்து செல்லும்போது நம் முன் எரியும் பனிக்காடே உருகி வழிந்தோடும்.
ரெட் டீ (Red Tea) என்று ஆங்கிலத்தில் பி.எச்.டேனியல் (P.H.Daniel) அவர்கள் எழுதியதை தமிழில் இரா.முருகவேள் அவர்கள் மிகச் சரியாக வாசகர்களுக்கு கடத்தி இருக்கின்றார். ஒரு திரைப்படத்தை பார்ப்பது போல காட்சி அனுபவங்களை எழுத்தின் வழி கடத்தியுள்ளார். அபாரமான எழுத்து மொழி இரா.முருகவேள் அவர்களுக்கு வாழ்த்துகள். எளிய மக்கள் விலையில் எல்லோரும் வாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தி தந்த சீர் வாசகர் வட்டச் செயல்பாடு என்பது போற்றத்தகுந்தது. வாசிப்பாளர் யாவரும் வாசிக்க தவறவிடக் கூடாத முக்கியமான நாவலாக எரியும் பனிக்காடு (Eriyum Panikadu) தீப்பற்றி எரிகிறது .
நூலின் தகவல்கள் :
நூல் : எரியும் பனிக்காடு
ஆசிரியர் : பி.எச்.டேனியல் (P.H.Daniel)
தமிழில் : இரா.முருகவேள்
பக்கம் : 407
விலை : 125
ஆண்டு : 2004
வெளியீடு : சீர் வாசகர் வட்டம்
பதிப்பகம் : ஐம்பொழில்
நூல் அறிமுகம் எழுதியவர் :
செ தமிழ் ராஜ்
வண்டியூர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.