எருமையைக் கொண்டாடுதல்!
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும் மரபில் வந்தோர் நாம். ஆனால், விலங்குகள், பறவைகளிடையேயும் பாகுபாடு காட்டத் தொடங்கினோம். ‘கான மயிலாட கண்டிருந்த வான்கோழி’ தன் ‘பொல்லாச் சிறகை’ விரித்ததான மனிதப் பார்வை பேதம் உடையது. மயிற்பீலியை, அன்னத்தின் தூவியை மென்மையாகப் பாடிய கவிஞர்கள் வான்கோழிக்கு இருப்பது பொல்லாச் சிறகு என்றனர். கணியனுக்கும் மூதுரை ஔவைக்கும்தான் எவ்வளவு இடைவெளி?
இடையில் நுழைந்த சனாதனம், சாதி, மத, இன, நிறவெறி சிந்தனையால், பறவைகள், விலங்குகளிடையேயும் பேதத்தை காண்கிற நிலையை மனிதரிடம் வளர்த்தது.
கருப்பாக இருக்கும் விலங்குகள், பறவைகள், அவலட்சணமாக கருதப்பட்டன. எருமையும் அப்படி தவறாக சித்தரிக்கப்பட்ட ஒரு விலங்கு.
‘நீ எரும மாடு மேய்க்கதான் லாயக்கு’ என மாணவர்களை நிந்திக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சாதாரணரை எப்படி குறைபட்டுக் கொள்வது!
நரி ஏமாற்றும். கழுதை சோம்பேறி. ஆந்தை துர்சகுனம். எருமை மந்தம்.
என பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளிடையே, விலங்குகளுக்குள்ளும் சாதி பிரித்தது.
இந்தக் கதைகளைச் சொல்லியவர்கள், எழுதியவர்கள், பரப்பியவர்களை நாம் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.
என் அருமைப் பங்காளி, குழந்தைக் கதை சொல்லி, நீதிமணி அவர்களிடம் இந்த நுட்பமான சமத்துவப் பார்வை இருக்கிறது. சிறுவர்களுக்காக அவர் எழுதிய ‘எருமையின் நிழல்’ தொகுப்பில் உள்ள கதைகளைப் படித்தேன். எருமையைக் கொண்டாடும் கதைகள் அவை.
குட்டியாக 21 கதைகள். எருமையின் அழகை, அதன் இரக்க குணத்தை , வளத்தை, புத்திசாலித்தனத்தைப் பேசும் கதைகள்.
சின்ன வயதில் என் நண்பன் கனகரத்தினம் வீட்டின் தொழுவத்தில் எருமைகள் நிறைந்திருக்கும். கருகருவென அழான அந்த எருமைக் கன்றுகளைத் தடவிக் கொடுப்போம். பெரியேரியில் குளிப்பாட்டுவோம். அப்போது அதன் முதுகிலேறிக் கொள்வோம். அவை எங்களை சுமந்தபடி நீந்திச் செல்லும்.
தம்மை வளர்த்து அழகு பார்த்தோரை செல்வந்தராக்கி அழகு பார்ப்பவை எருமைகள். கனகரத்தினம் வீட்டிலும் செல்வம் பெருகியது.
மனிதர்களின் பேச்சையே கேட்டு சலித்திருந்த நான், ஒரு பயணத்தில், நீதிமணியின் எருமைகள் சொன்ன கதைகள் கேட்டு மகிழ்ந்தேன்.
எளிய சொற்கள். குழப்பமில்லாத சின்ன வரிகள். குழந்தைகளைச் சிந்திக்கத் தூண்டுகிற இடத்தில் கதையை நிறுத்திவிடும் புத்திசாலித்தனம்.
இந்த நூலுக்காகவே.. ‘நீதிமணிக்கு ஒரு பாலபுரஸ்கார் பார்சல்!’ சொல்லத் தோன்றுகிறது.
கடைசி கதை:
எருமை ஒரு நேர்காணல் கொடுக்கிறது. தன்னை, தமிழ், தமிழர் எவ்வாறெல்லாம் புகழ்ந்தனர்? கூறுகிறது.
தமிழ் நிலத்தில் எருமை என்று ஒரு சிற்றரசன் இருந்தான். எருமைவெளியினார் என்றொரு புலவர் இருந்தார். எருமையை ‘அண்ணல்’ எனத் தமிழ்ப் புலவர் புகழ்ந்தனர்.
ஓரம்போகியார் ஒரு புலவர். ஐங்குறுநூறில் ‘எருமைப் பத்து’ பாடியிருக்கிறார். இனிக்கிறது எருமையின் இன்டர்வியூ.
‘ஒளி வீசும் வளையல் அணிந்த மடந்தைப் பருவத்தவளே! உன் தந்தை ஊரில் அணிமையில் புதிதாகக் கன்று போட்டிருக்கும் தாய்-எருமை தன் கன்றுக்கு தன் சுரக்கும் மடியைத் தந்து பாலூட்டும். அப்படிப்பட்ட எருமை வைத்திருக்கும் உன் தந்தை ஊருக்கு உன்னைப் பெண் கேட்டு வருவேன்’ (எருமைப் பத்து)
என அஞ்சலையிடம் சின்ன வயதில் சொன்னேன்.
கட்டிப்பிடிக்கும் போதெல்லாம் ‘எருமை’ என்பாள். கருத்த எருமை போன்ற தேகம் கொண்ட நான் அதைத் திட்டு எனக் கருதியதில்லை. கொஞ்சுவதாகவே நினைப்பேன்.
பழங்கதைகளை ஞாபகப்படுத்திவிட்டார் பங்காளி!
நூலின் தகவல்கள்
நூல் : எருமையின் நிழல்
ஆசிரியர் : நீதிமணி
விலை : ரூ.100
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
நூலறிமுகம் எழுதியவர்
கவிஞர் கரிகாலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.