நீதியைத் திணிக்காத சிறார் கதைகள் – மு.சிவகுருநாதன்

நீதியைத் திணிக்காத சிறார் கதைகள் – மு.சிவகுருநாதன்

 

 (பாரதி புத்தகாலயத்தின்  ‘Books for Children’  வெளியீடாக வந்துள்ள லியோ டால்ஸ்டாய்  எழுதிய ‘எறும்பும் புறாவும்   என்ற சிறார் கதைகள் நூல் குறித்த பதிவு.) 

சிறார் கதைகள் என்றால் அதிலொரு நீதி சொல்லப்படவேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும்! சிறுவர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள், நீதிப்படுத்தப் படவேண்டியவர்கள் என்று பெரியவர்கள் கருதுகிறார்கள். பொதுவாக இத்தகைய ‘நீதிகள்’ பல நேரங்களில் எல்லாருக்குமான ‘அறமாக’ இருப்பதில்லை. இது இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள் மாறுபட வாய்ப்பிருக்கிறது. ஏன் ஒரு குழந்தைக்கு நீதியாக இருப்பது பெரியவருக்கு நீதியல்லாமல் கூட இருக்கலாம்?

மகாத்மா காந்தி கொண்டாடிய, புரட்சியாளர் லெனின் பாராட்டிய லியோ டால்ஸ்டாய் அன்பு கசியும் எழுத்துகளால் அறியப்பட்டவர். போரும் அமைதியும், அன்னா கரீனா போன்ற புகழ்மிக்க நாவல்களை எழுதியவர். அவரது கைகளில் வழக்கமான புழக்கத்திலுள்ள சிறார் கதைகள் புது உருவெடுக்கின்றன.

டால்ஸ்டாய் ஈசாப் கதைகள் மீது பேரார்வம் கொண்டிருந்தார். கிரேக்க மொழியைக் கற்றும் பல்வேறு நூல்களைப் படித்தும் ரஷ்ய பாணியில் கதைகளைக் கொண்டு வந்தார்.

கிரேக்க ஈசாப் கதைகளாகட்டும் அல்லது வேறு எந்த நீதிக்கதைகளாகட்டும் கதையின் முடிவில் நீதி ஒன்று சொல்லப்படும் அல்லது பதிய வைக்கப்படும். இந்த முறையை மாற்றி கதையை மட்டும் சொல்லிச் செல்லும் உத்தியைப் பயன்படுத்தினார். இறுதியில் தாமே வலிந்து நீதிகளைத் திணிக்காமல் வாசிப்பவர்கள் மற்றும் குழந்தைகள் தங்களது எண்ணவோட்டத்திற்கேற்ப நீதிகளை அல்லது அறங்களை அமைத்துக்கொள்ளலாம்.

எறும்பும் புறாவும் | Buy Tamil & English Books ...

நரியும் நாரையும் ஒன்றுக்கொன்று விருந்து வைத்த கதை (பக்.12&13), காகம் பெரிய கூஜாவில் நீரருந்திய கதை (பக்.49), ஓநாய் வருவதாக பொய் சொன்ன பொய்யன் கதை (51), எறும்பும் புறாவும் ஒன்றுக்கொன்று உதவிய கதை (பக்.53), நரியும் திராட்சையும் கதை (74),  முயலும் ஆமையும் கதை (பக்.113),   இங்கு 102 கதைகளும் இயல்பான கதைகளாகவேச் சொல்லப்படுகின்றன. எதையும் வலிந்து திணிப்பதில்லை; நீதியையும் கூட. அழகான தாளில் வண்ண ஓவியங்களுடன் நூல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை ஒன்றும் புதிய கதைகள் அல்ல; பழைய கதைகள்தான். ஆனால் ‘நீதி’ நீக்கம் செய்யப்பட்டக் கதைகள்.

எடுத்துக்காட்டுக்கு ஒன்று தலைப்புக் கதையான ‘எறும்பும் புறாவும்’

“ஓர் எறும்பு நீர் அருந்த ஓடைக்குச் சென்றது. அலை அதன் மீது மோதியதால் அது நீரில் விழுந்தது. அப்போது புறா ஒன்று மேலே அலகில் இலைக் கொத்துடன் பறந்து சென்றது. எறும்பு தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட புறா, அதை நோக்கி இலைக் கொத்தைப் போட்டது. எறும்பு அதன் மீது ஏறி உயிர் பிழைத்தது. பிறகு ஓர் நாள் வேட்டைக்காரர் ஒருவர், மரக்கிளையில் அமர்ந்திருக்கும் புறாவை அம்பு எய்து கொல்வதற்குக் குறி பார்த்தார். அதைக் கண்ட எறும்பு அவர் அருகே சென்று அவர் காலைக் கடித்தது. காலில் சுள்ளென்று வலித்ததும், வேட்டைக்காரர் அம்பை நழுவவிட்டார். புறா பறந்து சென்றது”. (பக்.53)

நூல் விவரங்கள்:

 எறும்பும் புறாவும்லியோ டால்ஸ்டாய்  

 மொழிபெயர்ப்பாளர்: பியாரி செரீபு

ஓவியர்: ரமாதின்

பதிப்பாசிரியர்: யூமா வாசுகி

வெளியீடு:  ராதுகா பதிப்பக வெளியீடு: 1990

Books for Children  – பாரதி புத்தகாலயம்

முதல் பதிப்பு: நவம்பர் 2017

 பக்கங்கள்: 144

விலை: ரூ.200   (வண்ண ஓவியங்களுடன்..)

தொடர்பு முகவரி: 

 பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.

 தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: [email protected]

இணையம்: www.thamizhbooks.com

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *