‘எசப்பாட்டு’ - நூல் அறிமுகம் - ச. தமிழ்ச்செல்வன்- Esa Paattu Tamil book review by pon vickram - S.TamilSelvan - Bharathi puthakalayam - https://bookday.in/

‘எசப்பாட்டு’ – நூல் அறிமுகம்

‘எசப்பாட்டு’ – நூல் அறிமுகம்

ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் ‘எசப்பாட்டு’ ஆண்களோடு பேசுவோம்.

எசப்பாட்டு என்றதும், “ஏய் எவடியவ எம் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறவ” என்று முதல் மரியாதையில் எழம் சிவாஜி கணேசனின் குரல் தான் ஞாபகத்தில் எழுந்தது.

ஆனால் இது அந்த மாதிரி எசப் பாட்டு அல்ல ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் இசைவாய் இல்லாத ஒரு சோகப் பாட்டு.

படிக்கப் படிக்க மனது கூசுகிறது. குற்ற உணர்ச்சி மேழோங்குகிறது.
“மனிதன் ஒரு மாபெரும் சல்லிப் பயல்” என்றொரு எழுத்தாளர் சொன்னது மிகச் சரி என்றே தெரிகிறது.

கோவில்பட்டியில் ஒரு ராணுவ வீரன், சொந்தக்காரப் பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான். அவள் பேரழகியாக இருக்கிறாள், அதனாலயே வழி தவறிப் போய்விடுவாளோ என சந்தேகம் கொள்கிறான். சந்தேகம் மனதை அரிக்கிறது. அவன் ராணுவத்துக்கும் போயாக வேண்டும். என்ன செய்வது என யோசித்தவன். அவளை மொட்டையடித்து அவலட்சணமாக்கி விடுகிறான். ஆண்டுக்கு இருமுறை விடுமுறை எடுத்தும் வந்துவிடுகிறான். அதாவது மொட்டை எடுத்த தலையில் முடி முளைத்து கூந்தலாக மாறும் நேரத்தில் வந்து, சிறிது காலம் இருந்து மீண்டும் மொட்டையடித்து விட்டு போய்விடுவான்.

அப்படி இருக்கும் காலத்திலும் அந்த ராணுவ வீரனின் தம்பி அவளிடம் தவறாக நடக்க முயல்கிறான். “இது நல்லதில்லை இரு உன் அண்ணனிடம் சொல்கிறேன்” என்கிறாள். ஆனால், அதற்குள் தம்பி முந்திக் கொள்கிறான்,
”அண்ணி தன்னிடம் தவறாக நடக்க முயல்கிறாள்” என்று அண்ணனிடம் சொல்லி விடுகிறான்.

ஏற்கனவே சந்தேக வெறியில் இருக்கும் ராணுவ வீரன் உடனடியாக ஊருக்கு வந்து. என்ன ஏது என்று எதையும் விசாரிக்காமல், அவளுக்கு மொட்டை அடித்ததோடு அவளை நிர்வாணமாக்கி அவளுடைய பெண்ணுறுப்பில் மூக்குப்பொடி சுண்ணாம்பு போன்றவற்றைத் திணித்து, கதவைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய் விடுகிறான். பிறகு அவள் எப்படியோ போராடி கதவை உடைத்துக் கொண்டு நிர்வாணமாகவே வெளியே வருகிறாள். பெரும் போராட்டத்திற்குப் பிறகு அந்த ராணுவ வீரனை கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி. இந்த நூலில் இருக்கிறது.

இந்தக் கொடுமைகளை எல்லாம் படிக்கும் போது, C.s. ஜெயராமனின் குரல் தான் காதில் ஒலிக்கிறது.

”சித்திரத்தில் பெண்ணெழுதி சீர்படுத்தும் மா நிலமே ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழ விட மாட்டாயா “

சித்திரத்தில் பெண்ணை எழுதினால் கூட கண்ணு சரியில்லை, காது சரியில்லை, முடி இப்படி இருந்தால் அழகாய் இருக்கும், மூக்கு இப்படி இருந்தால் அழகாய் இருக்கும் என்று அவள் கால் செருப்பைக் கூட அழகு படுத்தும் மானிடர்களே உயிரோடு இருக்கும் பெண்ணினத்தை வாழ விட மாட்டாயா, என்கிற கண்ணதாசனின் கருத்து தான் இன்று வரை உயிரோடு இருக்கிறது.

அறிவுலகம் என்று நாம் அண்ணார்ந்து பார்க்கும் விஞ்ஞானிகள் கூட, இன்னும் சொல்லப்போனால் நோபல் பரிசு பெற்ற உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகள் கூட பெண்களை சரிநிகர் சமானமாக மதிக்கவில்லை என்பதை வருத்தத்தோடு இந்தப் புத்தகம் பதிவு செய்கிறது

ஆண்டாண்டு காலமாய், எத்தனை ஆண்டுகள் என்று எண்ணிக் கூடச் சொல்ல முடியாது அந்த அளவு ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்தே தான் வாழ்கிறார்கள். ஆனாலும் தனித்தனி உலகமாகத்தான் இருக்கிறார்கள். உதடுகள் பொருந்துகிற அளவு உள்ளங்கள் பொருந்தவில்லை. எந்த இடத்தில் சேரவில்லை, சரியாகப் பொருந்தவில்லை என்பதை ஆராய்கிறது, ஆணின் வக்கிர புத்திகளை பாட்டாய்ப் பாடுகிறது எசப்பாட்டு.

ஆண்கள், தனியாக காட்டிலோ, கடலினுள்ளோ வளர்க்கப்பட்டு பூமியில் கொண்டு வந்து விடப்படும் ஒரு பிராணியல்ல. மாறாக பெண்ணிலிருந்தே தோன்றுகிறான், அக்கா, தங்கை அம்மா, அண்ணி, மகள், மனைவி என்று பெண்களோடு தான் வாழ்கிறான். ஆனாலும் ஏதோ ஒரு நொடியில் பெண்ணுக்கு எமனாக, பேயாக, மிருகமாக மாறுகிறான். அது ஏன்? எதனால் மாறுகிறான் எது அவனை மாற்றுகிறது. இதில் படித்தவன் படிக்காதவன், பக்திமான், ஆன்மீகவாதி, அறிவாளி, முட்டாள் என்று எவ்வித வித்தியாசமும் இல்லை. ஆண் என்றாலே அப்படித்தான் என்பதாகத்தான் இருக்கிறது.

சரி, அப்படி மாறுகின்றவனை மாற்றுவதற்கு இதுவரை யாராவது ஏதாவது செய்தார்களா? அல்லது செய்ய இருக்கிறார்களா?

செய்யலாம் முடியாதது என்று எதுவும் இல்லை. மாற்றம் ஒன்றே மாறாதது.

பெற்றோரிடம் வளர்கிறான் மீதி நேரம் கல்விச்சாலை தான் அவனை வளர்க்கிறது. இப்படி கைப்பிடிக்குள் தான் இருக்கிறான். எங்கே எந்த இடத்தில் தவறுகிறான். அல்லது எது அவனைத் தவறாக நடக்க வைக்கிறது, ஏதோ ஒன்று தவறாக நடக்க வைக்கிறது அது என்னவென்று கணிக்கத் தவறுகிறோமா?

ஒரு ஆண் தவறு செய்கிறபோது அந்தக் குடும்பம் மட்டுமல்ல அவனுக்கு கற்றுக் கொடுத்த கல்வி சாலைகளும் தான் தலைகுனிய வேண்டும். ஆண்டாண்டு காலமாய் கல்வி முறைகளை வகுத்துக் கொடுக்கும் அறிவுலகமும் தான் தலைகுனிய வேண்டும்.

பெண்ணுக்கு ஆண் எதிரியா? என்றால் இல்லை ஆணில்லாமல் பெண்ணும் பெண்ணில்லாமல் ஆணும் வாழ முடியாது என்பதுதான் எதார்த்த நிலை.

மகள் மீது அன்பு வைத்துள்ள அப்பாக்களும், தங்கையின் மீது பாசம் வைத்துள்ள அண்ணன்களும், தாயை நேசிக்கும் தனையன்களும், மக்களின் நல்வாழ்வுக்காக போராடும் தலைவர்களும், கனத்த புத்தகங்கள் எழுதிய ஆன்மீகவாதிகளும் ஆண்கள் தான். ஆனால், பெண்ணுக்கு எதிரான செயலில் ஈடுபடுவதும் அவர்கள்தான்,

பெண்ணை வெறும் போகப் பொருளாக மட்டும் பார்ப்பதும், ஒரு பெண்ணை பல பேர் சேர்ந்து வல்லுறவில் ஈடுபடுவதும், குழந்தை என்றும் பாறாமல் சீரழிக்கப்படுவதும்,அது வெளியில் தெரிந்து விடுமே என்பதால் அந்தக் குழந்தைகளை கொன்று வீசுவதும். அதே ஆண்கள் தான்.

1947இல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது. பெண்களை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓட விட்டனர், பொற்கோவிலுக்குள் 200 பெண்களை நிர்வாணமாக்கி ஆட விட்டிருக்கின்றனர், லட்சக்கணக்கில் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், கொன்று குவிக்கப்பட்டனர். பெண்ணின் மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டன, இப்படி மார்பகங்கள் அறுத்தறியப்பட்டு அதனால் இறந்த பெண்கள் மட்டுமே பல ஆயிரம், மாற்று மதச் சின்னங்களை பெண் உறுப்பிலும் மற்றும் மார்பகங்களிலும் சூட்டுக்கோளால் பிறைச் சந்திரன், சூலாயுதம் என்று தங்களின் மதச் சின்னங்களை என்றும் அழியாத முத்திரையாக குத்தி வைத்ததும் ஆண்கள்தான்.

இவைகளை எல்லாம் செய்தவர்கள் வானத்திலிருந்து திடீரென குதித்து வந்த ராட்சசர்கள் அல்ல, திரைப்படங்களில் காட்டப்படும் கொடுரமான சைக்கோக்களோ, அரக்கர்களோ, பேய்களோ பிசாசுகளோ அல்ல, நேற்று வரை நம்மோடு அண்ணனாய் அப்பனாய் மகனாய் தம்பியாய் வாழ்ந்த மனிதர்கள் தான். மனிதனே இப்படித்தானா? இல்லை மதங்கள் அப்படி மாற்றுகிறதா? எனவே தமிழர்களே மதம் எந்த வேடத்தில் எப்படி உருமாற்றி வந்தாலும் காரியம் இருந்து விரட்டி விடுங்கள்.

இதில், இந்த மதம் அந்த மதம் என்றில்லாமல் எல்லா மதங்களும் இந்தப் புனிதப் போரில் ஈடுபட்டிருக்கிறது. ஆகையால் ஏதாவது ஒரு மதம் நாங்கள் புனிதமான மதம் என்று சொன்னால் அதை செருப்பைக் கலட்டி அடிக்கலாம்.

அதிகமாய் கோயிலுக்குப் போவதும்,பக்தியாய் இருப்பதும் பெண்கள் தான். ஆனால் ஆண்களாலும் ஆண்டவனாலும் கைவிடப்படுவதும், ஏமாற்றப்படுவதும் பெண்கள் தான்.

216 பக்கங்கள் தான் சுருக்கம் சுருக்கமாக ஏராளமான செய்திகள். இந்து தமிழ் திசையில் ஞாயிறு இணைப்பிதழான பெண் இன்று வில் 52 வாரங்கள் தொடராக எழுதப்பட்டது இந்த எசப்பாட்டு.

இந்நூல் எதனையும் விட்டு வைக்கவில்லை அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது, காந்தியா இருந்தாலும் கௌதமபுத்தராக இருந்தாலும் கட்டிய மனைவியை கைவிட்டுப் போவது என்ன நியாயம். அந்த வரலாறு தானே இன்று வரை தொடர்கிறது. என்கிறார் தமிழ்ச்செல்வன்.
யசோதா பென்னை கைவிட்டுப் போன நரேந்திர மோடியை மட்டுமல்ல தனது இடது சாரித் தோழர்களையும் கேள்வி கேட்கிறார், கணவனைப் பிரிந்த பெண்களின் துயரக் குரலாக தமிழ்ச்செல்வனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

காந்தியின் பேரன் தன் நூலில் சமர்ப்பணப் பகுதியில் அருண் காந்தி இப்படி எழுதியிருக்கிறார்.
தங்கள் துணைவர்கள் பெரும் தலைவர்கள் ஆவதற்கு வழி செய்யும் வகையில் தன்னலமற்று சுய தியாகம் செய்து கொள்ளும் பெயர் தெரியாத பெண்கள் அனைவருக்கும் இந்நூல் அர்ப்பணம்.

இப்படி பாட்டியின் துயரத்தை எழுதுவதற்காகவாவது கஸ்தூரிபாவுக்கு ஒரு பேரன் இருந்தான், நரேந்திர மோடி கைவிட்டுப் போன யசோதாபென் னின் துயரத்தை யார் எழுதுவது?

கே ஆர் மீராவின் யூதாஸின் நற்செய்தி காதலை மட்டுமல்ல, எமர்ஜென்சி காலத்தையும் அதில் மக்கள் பட்ட துயரங்களையும் பேச்சுரிமை கருத்துரிமை அத்தனையும் மறுக்கப்பட்டு அதை மீறும் தலைவர்களை கொல்லுவதற்காகவே சித்திரவதைக்கூடங்கள் பல அமைத்து இருந்தது எல்லாம் தெளிவாகக் காட்டியது.

எமர்ஜென்சி யாரால் ஏன் கொண்டுவரப்பட்டது, ஒரு தனிப்பட்ட நபர் தன்னுடைய சுயலாபத்திற்காக இந்திய மக்களாகிய அனைவரின் உரிமையையும் பறிப்பதற்கு ஏதுவாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்படி எதன் அடிப்படையில் யாரால் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவாக காட்டியது வாஞ்சிநாதன் சித்ரா எழுதிய ‘இந்திய மக்களாகிய நாம்’.

யூதாஸின் நற்செய்திக்கும், இந்திய மக்களாகிய நாம், என இரண்டு புத்தகங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்றால்,

அதுபோல “முதல் பெண்கள்”நூலுக்கும் “எசப்பாட்டுக்கும்” கூட தொடர்பு இருப்பதை புரிந்து படிக்க முடிகிறது. சொல்லப்போனால் அருள்மொழி எழுதிய டைரி என்கிற சிறுகதை தொகுப்பும்,தோழர் தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதி தொகுத்த ‘தெய்வமே சாட்சி’ யும் கூட ஒரே வகையான பெண்ணின் வலி பேசுகிற நூல்களாகவே இருந்தன.

எனவே நூல்களை எல்லாம் படித்து பதம் பார்த்து தரும் வாசிப்பு இயக்கத்திற்கு நன்றி. எசப்பாட்டு ஆண்கள் பெண்கள் என அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

 

நூல் அறிமுகம் : 

நூல் : ‘எசப்பாட்டு’ ஆண்களோடு பேசுவோம்

விலை : ரூ.190

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொலைபேசி : 044-24332424

எழுதியவர் : 

பொன். விக்ரம்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

 

Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *