Esappattu ReviewEsappattu Review

வாசிப்பு இயல்பாகவே சுயவிவாதத்தையும் தெளிவையும் உருவாக்கும். அப்படியாக ஆணாதிக்கச்சிந்தனையின் மீதான பெரும் விவாதத்தையும் பெரும் தெளிவையும் ஒருசேர கொண்டிருக்கும் புத்தகம் தோழர்ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் ‘எசப்பாட்டு’ ஆண்களோடு பேசுவோம்..‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறுஇணைப்பான ‘ பெண் இன்று’வில் 52வாரங்கள் தொடர்ந்து வெளிவந்த அத்தியாயங்களின் தொகுப்பாக இது வந்துள்ளது.படிக்கும்போது ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையைப்படிப்பது போன்றஉணர்வு. தான் பயணித்துக்கொண்டிருக்கும் பயணங்களில் நேரடியாகப் பார்த்தவற்றை மிக நுணுக்கமாக எழுதியிருக்கிறார்.அந்த வகையில் ஆணாதிக்க சிந்தனையின் தாக்கம் குறித்த ஒரு கள ஆய்வு நூலை நமக்கு அளித்திருக்கிறார்.இன்றைய காலகட்டத்தில் ஒரு ஆண் எழுத்தாளர் பெண்களின் உணர்வுகளைப் பெரிதும் புரிந்து ஆதிக்க சிந்தனைக்கு எதிராகப் பெண்ணாகவே மாறிப் பேசி இருப்பது இந்த நூலின் சிறப்பு.

புத்தகத்தின் ஒவ்வொரு இடத்திலும் ‘உதாரணம்’, ‘எடுத்துக்காட்டு’ என்ற வார்த்தைகளுக்கு பதிலாக ‘ஒரு சோற்றுப்பதமாக’ என்பதை பயன்படுத்தி இருப்பது அழகு.இது ஆண்களுக்கு மட்டும் அறிவுரைசொல்லிக்கொண்டு போகக்கூடிய புத்தகம் அல்ல. இருபாலருக்குமானதாக நம்கைகளில் சேர்த்திருக்கிறார். பலருக்குள்ளும் ஓரத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் ஆணாதிக்க சிந்தனையை இனம்காண வைத்திருக்கிறார். வரலாறுகளும் , பண்பாடுகளும் உருவாக்கி வைத்திருக்கும் ஆண்மைக்கும் பெண்மைக்குமான கற்பிதத்தை உடைத்திருக்கிறார். குழந்தை செய்யும் தவறை சரிசெய்கின்ற அம்மாவைப்போல் எளிய மொழியில் அனைவரும் புரிந்து கொள்ளும்படியான சொல்லாடல்கள்,கிராமப்புற பழமொழிகள், சொலவடைகளுடன் தரப்பட்டிருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.‘ஆம்பளங்க மட்டும்தா ஊர் உலகத்துல எல்லா தப்பும் பண்றாங்களா..பொம்பளைங்க எந்த தப்புமே பண்றதில்லையா. எப்ப பாரு எங்களையே தப்பு சொல்லிட்டு’என்று ஆதங்கப்படும் ஆண்களுக்காகவும் ‘ ஆணுரிமை பேச மாட்டீங்களா’ என்ற அத்தியாயத்தில் பேசியிருக்கிறார்.ஆண்களுக்கும் பிரச்சனைஇருக்கத்தான் செய்கிறது.ஆனால்பெண்களுக்கு இருக்கும் ஒடுக்குமுறைகளோடு ஒப்பிட்டால் மிகவும் குறைவே என்பதைப் பதிவு செய்திருக்கிறார்.எழுத்தாளரின் நண்பர், ‘அவ வாயைத்தொறந்தா இங்கே ரத்தம் கொட்டும்’என்று நெஞ்சைப் பிடிக்கும் பொழுது “திட்ட திட்ட திண்டுக்கல்லு.. வையவைய வைரக்கல்லு”னு பாசிட்டிவா எடுத்துக்கங்க சார்.உங்க பொண்டாட்டிதான’ என்று எழுத்தாளரின் வழியாக பேசத்தோன்றுகிறது. காதலிக்கும் போது இருக்கும் ஆணின் பிரியங்கள் அனைத்தும் திருமணம் என்ற சமூக நிறுவனத்திற்குள் வந்தவுடன் என்ன மாதிரியான நெருக்கடிகளை சந்திக்கிறது.

அதன் வெளிப்பாடு எப்படியெல்லாம் இருக்கிறது என்பதைக் ‘கடமைக்கு காதலிப்பது’ என்ற அத்தியாயத்தில் கூறுகிறார்.வீட்டுக்குள்ளேயே தனக்கான உலகத்தைக்கொண்டிருக்கும் பெண்களுக்கு தன் மேல் எல்லா விதத்திலும் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்கொள்ள ‘தன்னைத்தானே பட்டினி போட்டுக் கொள்வதும், புழுங்கும் மனதை தன் பேச்சின் வழியே கொட்டித்தீர்ப்பதுமே’ அவள்முன் இருக்கும் ஆயுதங்கள்.‘பட்டினி கொடுஞ்சிறைக்குள்’ படிக்கும்போது, எழுத்தாளரின் நண்பரான கல்லூரிப்பேராசிரியரின் புரிதல் மனம் எல்லாருக்கும் வாய்த்திராதா என்ற ஏக்கம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. இந்த சமூகம் காலங்காலமாய் பெண்ணிற்கான இடத்தை எப்படி உருவாக்கி இருக்கிறது? குறிப்பாக வீட்டு நிலப்பரப்பிலும் கூடஎன்பதை அறியும்பொழுது கோபமும்கொந்தளிப்பும் ஒரு சேர ‘அட பாழாய்போனவங்களா உங்க சிந்தனையில் கொள்ளிய வைக்க’என ஆணாதிக்கத்தின் மீது கொதிக்கிறது மனம்.எக்காலத்திலும் தாங்க இயலாத வன்முறையை மட்டுமே பேசிச்செல்லும் சமூகமாகவே நம் சமூகம் இருக்கிறது. ஆனால் பேசாமல் இருந்தும் சித்ரவதை செய்யமுடியும். அது வெளியில் தெரிவதில்லை.’ ஒரே வீட்டுக்குள்ள பேசாம எப்படி இருக்க முடியும்’ என்று கேட்பவர்களே… தனக்குப் பிடிக்காத ஒரு செயலை செய்யும் மனைவியிடம் பேசாமலேயே வாழ்க்கையை கடத்திச் சென்றிருப்போர் எத்தனை பேர்? , பேசாமலே வாழ்வது கூடவே பயணிக்கும் ஒருவருக்கு எத்தனை பெரிய வலி என சிந்திக்க வைத்திருக்கிறார் ‘மௌனமே கூர்வாளாய்’. தாக்கும் ஆகப்பெரும் வன்முறை சாதனம். ஆணாதிக்க சமூகமே..ஒரு பெண் திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டால், பெரும்பகுதி தாயும் குழந்தையும் ஒன்றாக பயணிக்கும் சூழலே அதிகம். தந்தைக்கு பொருளாதாரத்தின் பின்னான ஓட்டமும், அதற்கான பணியும் என்ற வாழ்க்கை முறையே . ஏன் பெற்ற குழந்தையை பெண் மட்டும்தான் வளர்க்க வேண்டுமா?அதில் ஆணுக்கு எந்தப் பங்கும் இல்லையா.?இதற்கான தீர்வை ‘தாயுமானவர் ஆவோம்’என்று சொல்கிறார். தூணிலும் துரும்பிலும் இந்த ஆணாதிக்க சிந்தனை, சமூகம் முழுவதும் அப்பிக்கிடக்கிறது. இதற்கு யாரும் விதி விலக்கல்ல.என்பதை ‘தோழமை என்ற போதிலும்’, ‘காந்திய வழி’ இவ்விரு அத்தியாயங்களும் உறுதிப்படுத்துகின்றன. சுய விமர்சனங்களே அனைவரையும் பண்பட்ட புரிதல் உள்ளவர்களாக மாற்றும்.

எழுத்தாளர்கள் சுசீ தரு ,கே.லதா வைப்பற்றியும் இளம் ஆய்வாளர். மதுமிதா பாண்டே, டி.என்.ஏ வை கண்டுபிடித்த ரோசலின்ட் ப்ஃராங்க்ளின் பற்றியும் பேசும்போது எவ்வளவு தகவல்களை எசப்பாட்டின் வழி தந்திருக்கிறார் என ஆச்சரியத்தில் கண்கள் அகல விரிகின்றன.எழுத்தாளர் சொல்வது போல ‘நாடே வகுப்பறையாய்’மாறுவதே ஆணாதிக்க சிந்தனைக்கு முற்றுப்புள்ளிவைக்கும். ‘சோவியத் நாட்டிலும்,ஐஸ்லாந்து நாட்டிலும் சாத்தியமாகும் போது இந்தியாவில் ஏன் சாத்தியமில்லை’ என்று கேள்வி எழச்செய்கிறார்.அது மட்டுமல்ல, வரலாறுகள் மட்டுமே பேசி அதன் வழியே இன்னும் பயணித்துக்கொண்டிருக்கும் சீர் கெட்ட ஆணாதிக்க சமூகத்தை சீர் படுத்திட வாசிப்பு அவசியம்..அதனை வலியுறுத்தி ‘தொடர்ந்து வாசித்துத்தான் ஆக வேண்டும்’என்ற அத்தியாயத்தில் தமிழில் 56 புத்தகங்களையும், ஆங்கிலத்தில் 43 புத்தகங்களையும் பரிந்துரைத்திருக்கிறார். ஆண்களின் பிரதிநிதியாக தானே நின்று வரலாற்றின் வாளெடுத்து பெண்களின் கையில் கொடுக்கிறார் ‘என் தலையைவெட்டி எறியுங்கள்’ என்ற தனது 52 வது அத்தியாயத்தின் வழியாக..எசப்பாட்டை வாசித்து முடிக்கும்போது விமர்சனங்களைவிட சுய விமர்சனங்களே மிஞ்சி நிற்கிறது.தோழர்.ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் எசப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாட வழியில்லாமல் ஒவ்வொரு அத்தியாயமும் பெரும்பாலும் ஆமோதிக்கும் பாட்டாகவே முடிந்திருக்கிறது.சக மனிதனின் குரலாக இருபாலருக்காகவும் பேசியிருக்கும் தோழர்.ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.

எசப்பாட்டு (ஆண்களோடு பேசுவோம்)

ஆசிரியர் :ச.தமிழ்ச்செல்வன்

வெளியீடு :பாரதி புத்தகாலயம்

7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,

சென்னை – 600018

பக் : 216 விலை : ரூ.190

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *