எசப்பாட்டு ஆண்களோடு பேசுவோம் : நூல் அறிமுகம்
நூலின் தகவல் :
நூல் : எசப்பாட்டு ஆண்களோடு பேசுவோம்
ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு : நவம்பர் 2018
பக்கம் : 216
விலை : ₹ 190
தமிழ் இந்து திசை நாளிதழில் ஞாயிறு இணைப்பான பெண் இன்று இதழில் 52 வாரங்கள் வெளிவந்த தொடரின் தொகுப்பு நூல் இது.
பட்டங்கள் ஆவதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை கான் என்று கும்மியடி
என்ற முண்டாசுக் கவிஞனின் மொழிகளுக்கு ஏற்ப உலகத்தின் சரிபாதியாக விரிந்து நிற்கும் பெண்ணினத்தை ஆண்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதையும் பெண்களின் மீதான ஆண்களின் ஆதிக்கப் போக்கையும் கேள்வி கேட்கும் கட்டுரைகள் அடங்கிய நூல் இது.
ஆண்களும் பெண்களுமாக சேர்ந்துதான் இந்த ஆண்களுக்கு சாதகமான ஒரு உலகத்தை வரலாற்றின் போக்கில் உருவாக்கி இருக்கிறோம். இதை ஒரு சமத்துவமிக்க உலகமாக நீதியான உலகமாக மாற்ற இருவரும் சேர்ந்துதான் போராட வேண்டும். நீண்ட காலம் சௌகரியமாக வாழ்ந்து அனுபவித்து விட்ட ஆணுக்கு இதில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது என்ற நிலைப்பாட்டில் ஆண்கள் நின்று தம்மைத்தாமே சுய விமர்சனம் செய்து கொண்டால் பெண்களின் மீதான அவர்களது மனப்பான்மையும் பெண்களை எந்த நிலையில் வைத்து நடத்துகிறோம் என்ற குற்ற உணர்வுக்கான காரணமும் தெரியவரும் என்ற அடிப்படையில் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.
உலகம் தோன்றி உயிரினங்கள் தோன்றிய காலகட்டத்தில் ஆண் பெண் பேதம் என்பது அறியப்படாத ஒன்றாக இருந்திருக்க வேண்டும். வேட்டையாடும் சமுதாயத்தில் பெண்களே முதல் நிலையாளர்களாக கருதப்பட்ட காலம். குழுவிற்கும் மனிதர்களை வழி நடத்தவும் பெண்களே முன் நின்று செயல்பட்டார்கள் காலப்போக்கில் அரசுகள் உருவாகி பெண்ணை ஆணுக்கு அடிமையாக மாற்றி வீடு என்னும் கூட்டுக்குள்ளேயே பெண்ணை அடைத்து வைத்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அவர்களை நிறுத்தி வைத்து அழகு பார்த்தது இந்த சமுதாயம்.
இன்று கல்வி என்னும் பேராயுதம் கொண்டு பெண்கள் விட்டு விடுதலையாகி பட்டாம்பூச்சியைப் போல அறிவு வானில் சிறகடிக்கத் தொடங்கியுள்ளார்கள் ஆயினும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளனவா என்றால் ஐயப்பாடு எழுகிறது.
அறிவியலின் துணை கொண்டு உலகையே அளக்கத் துணிந்து விட்ட மனிதர்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்திலும் பெண் ஆணுக்கு அடிமை என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் கூறாத ஆண்கள் உலகை வழிநடத்தும் நிலையில் பெண்களுக்கான சம வாய்ப்பு சமநிலையும் எப்படி கிடைத்துவிடக்கூடும் ?
பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்ற ராய்டர் செய்தி நிறுவனத்தின் புள்ளிவிவரக் கணக்கோடு ஒப்பிடும்போது நாம் பெண்கள் முழு சுதந்திரத்துடன் வாழ்வதற்கான வசதிகளைச் செய்வதில் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும். பெண்களுக்கான முழு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் வழங்க முடியாமல் ஆண்கள் எவ்விதமான சட்டதிட்டங்களுக்குள்ளும் தம்மை உயர்த்திக் கொண்டாலும் சமுதாய முன்னேற்றம் என்பது முழுமை அடையாது என்பதையே இந்த புள்ளி விவரங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
தனக்கு கீழ் வேலைக்காரி ஆகவும் அடிமை எனவும் தனது ஏவலுக்கு பணி செய்யும் ஒரு உயிரியாகவும் பெண்ணை பார்த்து ஆண் சமூகம் இன்று கல்வியறிவு பெற்று அவர்கள் கேள்வி கேட்கையில் அந்த புதிய பாத்திரத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதிகாரம் பறிபோன மன்னர் போல சிம்மாசனத்தை விட்டு இறங்க மறுக்கிறது ஆண்களின் மனம் அந்த அடிப்படையில் தவறுகளையும் குற்றச்சாட்டுகளையும் பெண்களின் மீது திணிக்கப் பார்க்கிறது.
பெண் உடலை வடிவமைக்கும் வேலையையும் ஆண்களே செய்யத் துவங்குகிறார்கள். அவர்களுக்கான ஆடை வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் அவர்கள் எப்பொழுது எவ்விதமான ஆடை அணிய வேண்டும் என்பதையும் ஆண்களே தீர்மானிக்கிறார்கள் தனது உடல் தனது உடை என்ற அடிப்படை உரிமை கூட பெண்ணுக்கு இல்லாத போது அவள் வினா தொடுக்கத் துவங்குகிறாள் அதன் விளைவு சமத்துவத்தின் பக்கம் அவளை இழுத்துச் செல்கிறது ஆனால் ஆண்களின் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
ஆண் மனம் இப்படியாக பெண்களின் மீதான உரிமையை எடுத்துக்கொண்டு கட்டமைக்கப்பட்டதில் சமூகப் பொருளாதார வரலாற்று காரணிகள் நிறைய இருக்கின்றன அதே சமயம் அது பற்றி தனக்குள் எந்த ஒளிவு மறைவற்ற உரையாடலினை நடத்தி உள்ளே மண்டிக் கிடக்கும் இருட்டின் மீது ஒளி வெளிச்சம் பாய்ச்சும் வேலையை ஆண்கள் தயங்காமல் செய்தலே காலத்தின் அவசியமாகிறது.
குடும்பம் உழைப்பு சமூகத்தின் மீதான பொறுப்பு என பல்வேறு தளங்களில் பெண்களுக்கு வழங்கப்படாத சமத்துவமும் சுதந்திரத்துவமும் தாம்பத்தியத்தில் முழுவதுமாக மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. தம்பதியர் இருவரும் மனம் ஒப்பிய நிலையில் மட்டும் தான் உறவுக்கு உடலும் இணங்கும் என்பது எளிய அறிவியல். ஆனால் எத்தனை குடும்பங்களில் பெண்ணின் சுதந்திரத்தின் மீது அவளின் விருப்பத்தின் மீதும் தாம்பத்தியம் நடக்கிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுகிறது வெளிப்பாட்டுக்கே சுதந்திரம் இல்லாத நாட்டில் தாம்பத்தியத்தில் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் எப்படி எதிர்பார்க்க முடியும் என்று ஆசிரியர் எழுப்பும் வினாவில் புரையோடிப் போன ஆண்களின் பொதுப் புத்தி பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.
அழகுணர்ச்சி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒன்று அது ஆரோக்கியமான பண்பாட்டு வளர்ச்சிப் போக்கில் உருவான இயல்பான ஒன்றுதான் ஆனால் பெண் என்றாலே அழகுப் பதுமை என்பதாக ஒரு சித்திரம் வரலாற்றின் பக்கங்களில் வரையப்பட்டு அது பெண்ணின் ஆழ்மனம் வரை செலுத்தப்பட்டுவிட்டது தான் ஆனா அழகு பெண் அம்சமாக மாறிப் போகிறது பெண்ணை அவள் உணர்வை அவளுடைய உடம்புக்குள்ளேயே வைத்து பூட்டும் வேலையைத்தான் ஆணாதிக்கமும் வர்த்தக உலகமும் இணைந்து செய்து வருகின்றன உடம்பிலிருந்து பெண்மை விடுதலை பெற வேண்டும்.
பெண்ணின் உடல் என்பது ஒரு இனத்தின் ஒரு மதத்தின் ஒரு சாதியின் மானத்தின் அடையாளமாக இன்று வரை புரிந்து கொள்ளப்படுகிறது அவள் உடல் மீது செலுத்தப்படும் வன்முறை அவளுடைய இனத்தின் மீது செலுத்தப்படும் வன்முறையாக புரிந்து கொள்ளப்படுகிறது எத்தனையோ போர்களின்போது பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் மீது ஆண்களின் கோபமும் வன்முமும் திசை திரும்புகிறது வரலாற்றில் நடந்த ஆயிரக்கணக்கான போர்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது பெண் இனமே உலகத்தின் வரலாறு என்பது ஆண்களால் தங்களுக்கு சாதகமான அம்சங்களை கொண்டு எழுதப்பட்ட ஒன்றாக மாறிப் போயிருக்கிறது வரலாற்றை முன்னெடுக்கும் சமூகத்தை முன்னெடுக்கும் பணியில் பெண்களின் பங்கு தலை சிறந்தது என்பதை எந்த வரலாற்று நூல்களும் குறிப்புகளும் வெளிப்படுத்துவதில்லை.
எழுதப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் பெண்களின் இருப்பின் மீது அவர்களின் உடல்கள் மீது அவர்களின் நினைவுகள் நம்பிக்கைகள் மீது மௌனம் என்னும் கும்மிருட்டைப் போர்த்தியபடி நகர்கின்றன.
அறிவியல் யுகத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சரிநிகர் சமானமாக நடைபோட ஆரம்பிக்கையில் ஆண் கேள்விகள் அவர்களை முட்கள் எனத் தைக்கின்றன அறிவியலில் பெண்கள் வந்தால் என்ன மாற்றம் வந்து விடப் போகிறது அவர்கள் எதை கண்டுபிடித்து புதுமை செய்யப் போகிறார்கள் என்ற அடிப்படை வாதத்தையே ஆணினம் எழுப்பி பெண்களை எழவிடாமல் அடிமைப்படுத்துகிறது.
சமத்துவம் கற்பித்தல் என்பது கல்விச்சாலை நடவடிக்கையாக மட்டும் இருக்க முடியாது அது சமூக நடவடிக்கையாக மாற்றப்பட வேண்டும் நாட்டின் அரசியல் பொருளாதார பண்பாட்டு நடவடிக்கைகள் அதை நோக்கி திருப்பி விடப்பட வேண்டும் பெண்களை இயல்பாக வாழ விடாத பண்பாடும் எந்நேரமும் அவளை செதுக்கிக் கொண்டே இருக்கும். ஆண்களின் கூரிய பார்வைகளும் தன்னலம் கருதாமல் குடும்பத்திற்காக உழைப்பதே பெண்மையின் இலக்கணம் என்பன போன்ற பத்தாம் பசலிக் கருத்துக்களும் ஒழிக்கப்பட்டு பாலியல் வன்முறைகளும் வக்கிர சீண்டல்களும் தவிர்க்கப்பட்டு பெண்களை நாம் கவனிப்பதில் முழுமையான அக்கறை கொள்ள வேண்டும் என்பதை இந்த நூல் ஆண்களுக்கு பாடமாக எடுத்துக் கூறுகிறது.
எழுதியவர் :
இளையவன் சிவா
Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மகிழ்ச்சி