எசப்பாட்டு ஆண்களோடு பேசுவோம் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : எசப்பாட்டு ஆண்களோடு பேசுவோம்
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan)
வெளியீடு : பாரதி புத்தகலாயம்
பக்கம் : 216
விலை : 190
நூலைப் பெற : thamizhbook . com
ஒரு புத்தக வாசிப்பு என்பது கிணற்றில் போட்ட கல்லாக மூழ்கிவிடக் கூடாது. வாசகனின் இதயத்தை பிடித்து உலுக்க வேண்டும். சமூகத்திற்கான சிந்தனையை எழுத்தாளர் விதைத்திருந்தால் அதைப் பற்றி முளைத்தெழ வேண்டும் அதுவே அந்த புத்தகத்தின் வெற்றி நீங்கள் புத்தகங்களை மெளனமாக வாசிக்கலாம். மெளன வாசிப்பு என்று கூட சொல்லிக் கொள்ளலாம். அதற்காக உரத்த குரலில் அப்புத்தகம் எழுப்பும் கருத்துக்களை கேளாச் செவியினராக கடந்து போய்விடக் கூடாது. வாசிப்பு வழி நடத்தலே புத்தகம் உங்களை சரியான திசைவழியில் நடத்தியிருக்கிறது என்று பொருள்படும்.
வாசிப்பு இயக்கத்தில் அதிக விவாதங்களை கிளப்பியதும், அதிகம் பேர் மனம் விட்டு உரையாடிய நூலாக எசப்பாட்டு அமைந்தது இயல்பான ஒன்றல்ல, ஆண் மனங்களை குறிபார்த்து கல்லெறிந்திருக்கிறார். அத்தனையும் கலகக்கற்கள் செரிமானத்திற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும். வேறு வழியில்லை இப்பொழுது கூட உங்களின் ஆண் மனத்தை எழுப்பாவிட்டால் காலமெல்லாம் சௌகர்யமான கும்பகர்ணத் தூக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கும் ஆண்களின் உறக்கத்தை கலைக்காவிடில் பெண் உணர்வுகளை படுகுழியில் தள்ளிவிட்டு தூங்கி கொண்டிருக்கும் ஆண்களை என்று தான் எழுப்புவது
இந்து தமிழ் திசை நாளிதழில் 52 வாரங்களாக எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுப்பாக வந்துள்ளது. ஆண் எனும் அகம்பாவத்தை 360 டிகிரி கோணத்தில் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் ஒவ்வொரு ஆணும் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டிய தவறுகளை பாரபட்சமில்லாமல் சுட்டிக்காட்டியிருக்கிறார். பேருந்தில் பெண்களை உட்கார விடாமல் கால்களை அகட்டி உட்காருவது வரை உற்றுக் கவனித்திருக்கிறார். நாமும் தான் பேருத்தில் போகிறோம் இதையெல்லாம் எங்கே கவனித்திருக்கிறோம். ஆனால் ஆண்கள் ஊடுறுவும் அந்தரங்கப் பார்வைகளை நுணுக்கமாக கவனித்து தன் இயக்கத் தோழர்கள் என்றாலும் தயங்காது சுட்டிக்காட்டுகிறார்.
ஆண்களின் செளகர்ய உலகும் பெண்களின் அவஸ்தையான உலகும் எவ்வளவு அநீதியானது என்பதை பல கட்டுரைகளில் சுட்டுகிறார் தலையில் குட்டுகிறார். உலகை தகவமைக்கும் போதே பெண்களை எவ்வளவு கீழானவர்களாக ஒரு ஜடப் பொருளாக மாற்றி இருக்கிறோம் என்பதை தாய்வழிச் சமூகம் திரிந்து ஆணாதிக்க சமூகமாக மாறி நிற்பதை ஆண் மனதிலிருந்து விலகி பொதுவில் வைக்கிறார்.
அறிவொளி இயக்கத்தில் துடிப்பாக செயல்பட்ட பெண் காலமாற்றத்தில் சிரம தசையில் சந்தித்து ஒரு வேலை கேட்கையில் அவருக்கு உதவ முடியவில்லை என்று கை விரித்து கவலைப்படுவது ஏற்க முடியவில்லை. ஏதேனும் ஒரு வழியில் உதவியிருக்கலாம். சுய இன்பம் குறித்தான கட்டுரை கொஞ்சம் அதிகமோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலகம் எல்லையற்றது என்றாலும் ஒரு சில எல்லைகள் எழுத்தில் உண்டு தானே, அதே நேரத்தில் கல்வியும், அறிவியலும், நவீனமும், ஆண்களின் ஆண்மனதில் உடைப்பை ஏற்படுத்தி வருவதையும் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும், இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமிருப்பினும் கடந்து வந்த 100 ஆண்டுகால பயணமும் மதிப்பு மிக்கது தான் அதற்கு உதாரணமாக நூலாசிரியரை கை காட்டலாம்,
கட்டுரை முழுவதும் ஒரு உலர்ந்த நடை தென்படுகிறது சீரியசான கட்டுரையில் அழகியலும் நுட்பமும் தேவையில்லை என்று நினைத்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது,இது ஆண்களோடுமட்டும் உரையாட வேண்டிய புத்தகம் அல்ல பெண்களையும் அவசியம் வாசிக்க வைக்க வேண்டிய புத்தகம் ஆண்களின் ஆண் மனதையும் பெண்களுக்குள் இருக்கும் ஆண் மனதையும் உடைத்தெரிய இந்நூல் ஒரு உண்மையின் குரலாக வந்திருக்கிறது. அட்டைப் படத்தில் ஹிட்லரைப் போன்று ஒருவர் விரைத்த நிலையில் முதுகைக் காட்டிய படி பிரம்போடு நிற்கிறார். ஆண்களாகிய நாம் நமக்குள் இருக்கும் ஆணாதிக்க ஹிட்லர்களை என்று விரட்டியடிக்கப் போகிறோம் என்ற கேள்விகளை எழுப்பிச் சென்றிருக்கும் எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன் அவர்களுக்கு வாழ்த்துகள்
நூல் அறிமுகம் எழுதியவர் :
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில் thamizhbook.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

