கொரோனா தொற்று நோயை தடுக்க ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட முறை கண்டு நாங்கள் கவலை மிகவும் கொள்கிறோம். அதிலும் குறிப்பாக எப்போதும் இயங்கி வரும் பொது மருத்துவமனைகளை மூடியதில் ஆழ்ந்த வருத்தம் அடைகிறோம்.

மார்ச் 26ஆம் தேதி கணக்குப்படி, கோவிட்-19 உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 640. சாவு எண்ணிக்கை 17, என அதிகரித்து இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. நமக்குள்ள பரிசோதனை வசதிகள், இதுவரை பரிசோதிக்கப் பட்ட குறைந்த எண்ணிக்கையிலான மாதிரிகளோடு ஒப்பிடும்போது இந்த தொகை மிகவும் அதிகம். எனவே, நோய்த்தொற்று பரவல் இன்னும் அதிகமாக இருக்கும். இதனைக் குறைத்து மதிப்பீடு செய்து வருகிறோம் என்றே கருதுகிறோம். மேற்கொண்டு பரவுவதை தடுப்பதற்காக 21 நாட்கள் ஊரடங்கு பிரதம மந்திரி அறிவித்தார்.

தொடக்கத்தில் கோவிட்- 19 தொற்று பாதித்த 75 மாவட்டங்களில் மட்டுமே ஊரடங்கை அமலாக்கம் செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்தது. பின்னர், நாடு முழுவதும் அது விஸ்தரிக்கப்பட்டது. ஊரடங்கு ஒரு நல்ல அணுகுமுறை. என்றாலும், இதுபற்றி பொது சுகாதார வல்லுனர்கள் இடையே ஒரு ஒருமித்த கருத்து நிலவுகிறது. அது ஊரடங்கோடு சேர்த்து சந்தேகப்படும் அனைவரையும் பரிசோதித்தல், தனிமைப்படுத்துதல், நோய்த்தொற்று இருந்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களை தேடி கண்டுபிடித்தல், கண்காணித்தல் ஆகியவை ஆகும்.

இத்தகைய செயல்பாடுகள் மூலமே சிறந்த நோய் தடுப்பு முறையை கையாள முடியும். இந்த வைரஸ் தொற்று நோயை தடுக்க ஊரடங்கு மட்டுமே தீர்வு என்பதற்கு மிகக் குறைவான ஆதாரங்களே உள்ளன. துவக்க நிலையிலேயே ஊரடங்கு கடைப்பிடித்தும் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகள் தொற்று அளவு அதிகரித்து வருவதை குறைக்க முடியவில்லை. மரணங்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2,912 ஆக ...

அதேசமயம், தென்கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகள், ஊரடங்கு உத்தரவு ஏதும் இன்றியே நோய் தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை, சந்தேகப்பட்ட அனைவரையும் பரிசோதனை செய்தல், நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் மட்டும் ஊரடங்கை வைத்தல் போன்ற நடைமுறைகள் மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதை தெளிவுபடுத்துகின்றன.

நமது இந்திய அரசோ, ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க அவசரப்பட்டதே அன்றி, இதர சுகாதார நடவடிக்கைகளை பலப்படுத்துவதில் போதிய அக்கறை செலுத்தவில்லை.

அதே சமயம், மருத்துவமனைகளுக்கு வரும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளைக் கூட கையாளும் தயார் நிலையில் நம் மருத்துவ மனைகள் இல்லை.

நோய் தொற்றைத் தடுக்க ஊரடங்கை கையாண்ட ஐரோப்பிய நாடுகளில் அதிகப்படியான சமூக பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதன் காரணமாக, ஊரடங்கின் விளைவாக உருவாகும் பாதிப்புகளை அந்த நாட்டு மக்கள் சமாளித்துக் கொள்ள முடியும். எந்தவித சமூகப் பாதுகாப்பும் இன்றி வாழும் இந்திய நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் அரசின் நிவாரணத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். தற்போது இந்திய அரசு 1.7 லட்சம் கோடியும், மாநில அரசுகள் அதன் பங்கிற்கு கொஞ்சம் நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளன. ஆனால், இவை போதுமானது அல்ல. வேலை இழந்து நிற்கும் தினக்கூலி தொழிலாளிகள், குடி பெயர்ந்த தொழிலாளர்கள் கைவினைஞர்கள் உள்ளிட்டோரின் நிதி மற்றும் உணவுத் தேவைக்கு இது போதுமானது அல்ல.

 

जानिए क्या है PM मोदी की 'थाली-ताली ...

மேலும், நாட்டின் பல பாகங்களில் ஊரடங்கு உத்தரவு மிகவும் கொடூரமான அடக்கு முறையின் துணையுடன் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் என்று வகைப்படுத்தப்பட்ட காய்கறி மளிகை கடைக்காரர் கூட பகைமை உணர்ச்சிமிக்க கூட்டத்தினர் போல தாக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கூட இவ்வாறு தாக்கப்பட்டதை காணமுடிகிறது. சர்க்கரை நோயாளிகள், புற்று நோய்க்கான ஹீமோ தெரபி சிகிச்சை பெறுவோர் உள்ளிட்ட நோயாளிகள் திடீரென எந்தவிதமான அறிவிப்பும் இன்றி போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெரும் அவதிக்குள்ளாயினர். முதியோர், உடல் ஊனமுற்றோர் இந்த ஊரடங்கு நேரத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.

கோவிட்- 19, நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் வருவதற்கு முன்பே ஏன் இப்படி செய்தார்கள் என்று புரியவே இல்லை. சுகாதார சேவைகளுக்காக கூட நெருக்கடி கால சிகிச்சைகளை ஒத்தி வைத்தல் என்பது விரும்பத்தக்கது அல்ல. இதேபோன்று, எச்ஐவி, காசநோய் உள்ளிட்ட நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கான சிகிச்சை பற்றியும் அவர்களது நிலை பற்றியும் அரசுகளின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வருகிறோம்.

மேலும், திடீரென அமலாக்கம் செய்யப்பட்ட ஊரடங்கின் விளைவாக, மக்கள் மனங்களில் எழுந்துள்ள பீதி, மன அழுத்தம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் காரணமாக மன அழுத்தம், பதட்டம், குடும்ப வன்முறை மற்றும் தற்கொலை நிகழ்வுகள் நிகழும் வாய்ப்பு அதிகம். தொடர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஊரடங்கு காலம் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

மத்திய மாநில அரசுகள் உடனடியாக ஊரடங்கு உத்தரவை பரிசீலனை செய்து, அறிவியல் முறைப்படி, ஆதாரங்களின் அடிப்படையில், முடிவுகளை எடுக்க வேண்டும். ஊரடங்கு விஷயத்தில் ஒரு தெளிவு அரசுக்கு வேண்டும். எந்தெந்த பணிகளை, எவ்வளவு முடக்கி வைப்பது என்ற தெளிவுடன் அமலாக்கம் செய்யப்பட வேண்டும். ஊரடங்கு அமலாக்கம் செய்வதற்கு முன்னர், ஊரடங்கு உத்தரவால் பாதுகாக்கப்படும் என்று கணித்த உயிர்களையும் அதற்கு பிந்தைய காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் வேலை வருமானம் இன்றி பாதிக்கப்பட்ட உயிர்களையும் கணக்கீடு செய்து பார்க்கவேண்டும்.

Coronavirus Pandemic: Decoded! Why COVID-19 impacts older people ...

ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகும் கோவிட்-19 தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகள் எண்ணிக்கை உயரவே செய்யும். இதனைக் காரணம் காட்டி, எக்காரணம் கொண்டும் தேசம் தழுவிய ஊரடங்கை நீட்டிக்கவே கூடாது என நாங்கள் எச்சரிக்கை செய்கிறோம்.

கள நிலையை மதிப்பீடு செய்து, ஆதாரங்களுடன், நோய் பாதிப்பின் தன்மை அடிப்படையில், பகுதிவாரியாக தேவைக்கு ஏற்ப ஊரடங்கை மாற்றி அமைக்க வேண்டும். இந்த அறிக்கையை வெளியிடும் நேரத்தில், நாட்டிற்குள் குடிபெயர்ந்தவர்கள் மீள் குடிபெயரும் நிலை நேர்ந்திருக்கிறது. தனிநபர்களும், குடும்பங்களும் நகரங்களிலிருந்து பீதியுடன், வேலையின்றி,உணவின்றி, தண்ணீரின்றி, பாதுகாப்பின்றி தங்களின் தொலைதூர கிராமங்களுக்கு மீள் குடிபெயர்ந்து செல்கின்றனர். இவர்கள் கூட்டம் கூட்டமாக நடந்தும் அதீத கட்டணத்தை செலுத்தியும் பயணித்து வருகிறார்கள்.

ஊரடங்கிற்கு பின்னர், தங்கள் மீது பகைமை உணர்ச்சி யோடு ஆட்சியாளர்கள் நடந்து கொள்வார்களோ என்ற அச்சத்திலும் மீள் குடிபெயர்ச்சி வேகமாக நடந்து வருகிறது. நிவாரண முகாம்களின் கூட்டநெரிசல், துயரத்தை வரவழைக்கிறது.

நோய் தொற்று அபாயத்தையும் அதிகரித்துள்ளது. ஊரடங்கிற்கு முன்பே மக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக, பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் மேல் இந்த மீள் குடிப்பெயர்ச்சி தொடங்கிவிட்டது. இதுவும் கூட நோய்தொற்று அபாயத்தை அதிகரித்துள்ளது. ஊரடங்கை நாங்கள் மதிக்கிறோம்.

அத்துடன் கீழ்காணும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும் படி கேட்டுக்கொள்கிறோம்.

1)நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில் தேவையான இடங்களில் மட்டும் இனி வருங்காலத்தில் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்.

2)கோவில்- 19 தொற்று கண்டறியப்படாத பகுதிகளில், ஊரடங்கை விலக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், அப்பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.

3) அனைத்து விதமான தொடர் சுகாதார சேவைகளையும், திட்டங்களையும் தொடர்ந்து இடையூறு இன்றி செயல்படுத்த வேண்டும். இலட்சக்கணக்கான மக்களின் உயிர் காத்து வருகிற‌ இந்த சிகிச்சைகள், ஒரு மரணத்தை தடுக்க மற்றோர் மரணம் நிகழந்துவிடக் கூடாது.

2019 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பேறுகால மரணம் 30,000. மரணம் தவிர்த்திருக்கப் பட வேண்டிய ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 10 லட்சம். காச நோயால் இறந்து விட்டவர்கள் எண்ணிக்கை இருபது இலட்சம். இந்தப் புள்ளிவிவரங்கள் தொடர்சிகிச்சை பணிகளை நிறுத்துவதன் மூலம் ஏற்படும் அபாயங்களை புரியவைக்கும். எப்போதும் போல், மற்ற நோய்களுக்கான சிகிச்சைகள் கிடைக்கும் என்பதை அரசு உத்தரவாதம் செய்து அதனை ஊடகங்களில் அறிவிப்பதும் அவசியம்..

4)அனைத்து மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவில் கோவிட் 19 அறிகுறிகள் உண்டா என பரிசோதிக்கும் வகையில் சிகிச்சை முறைகள் திட்டமிடப்பட்ட வேண்டும். சந்தேகப்படுவோர் அனைவரையும் தனியாகப் பிரித்து பரிசோதனை செய்யும் வசதி வேண்டும். உள்நோயாளிகள் பிரிவு அவசர பிரிவு என எல்லா இடங்களிலும் கோவிட்-19 நோயாளிகளைப் பிரித்துக் கையாளும் வசதிகள் மருத்துவமனைகளில் செய்யப்படவேண்டும்.

5) கண்மூடித்தனமாக பொதுப் போக்குவரத்தை நிறுத்தி வைக்கக்கூடாது. நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்ற அத்தியாவசிய தேவை உள்ள அனைவரையும் தடையின்றி சென்றுவர ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.

6) மன நோய் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சமூக குழுக்கள் மூலமும் ஆன்லைன் மூலமும் தக்க ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

7)ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நலிவடைந்த பிரிவினர், உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் கிராம பஞ்சாயத்துகள் மூலம், சுய உதவி குழுக்கள் மற்றும் ஆரோக்கிய குழுக்கள் மூலமும் நலிவடைந்த பிரிவினரை கண்டறிந்து, குறிப்பாக முதியோர், தனித்து வாழும் பெண்கள், நோயுற்ற குடும்பங்கள், இளம் சிறார்கள் வாழும் வீடுகள் ஆகியவற்றுக்கு தேவைப்படும் வசதிகளை செய்து தரவேண்டும்

8)மேற்படி பிரிவினருக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் பொருட்களை வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். ஆன்லைன் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று, அத்தியாவசிய பொருள்களைப் பெறுவது இந்த மக்களின் சொந்தப் பொறுப்பாக மாற்றி அமைக்க கூடாது.

9)மீள் குடி பெயர்ந்து வரும் குடும்பங்களைச் சென்றடைந்து, அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று சேர, உணவு, வாகன வசதி, மருத்துவ வசதி ஆகியவற்றை செய்து தரவேண்டும். மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் ஏழை எளிய மக்களுக்கு சிரமமின்றி சென்று சேர்வதை மத்திய மாநில அரசுகள் உத்தரவாதம் செய்ய வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு..
டி.சுந்தரராமன்
இரகுனந்தன்
சுலஷனா நந்தி
மற்றும் சரோஜினி.
~~~~~~~~~~
தமிழில்: நா.மணி
~~~~~~~~~~

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *