மாணவர்களை உந்துவித்தல்

ஒரு இணைய வகுப்பறை சிறப்பான முறையில் செயல் பட அதற்குத் தொழில்நுட்ப அறிவு மிகவும் முக்கியம். நாம் தொழில்நுட்பத்தை எப்போது எதற்காகப் பயன்படுத்துகின்றோம் என்ற தெளிவு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கண்டிப்பாகத் தேவை. பத்து ஆண்டுகளுக்கு முன் போல இல்லாமல் இன்றைய அலைபேசித் தொழில்நுட்பங்களும், கல்வித் தொழில்நுட்பங்களும் புதியவர்கள் கற்றுக் கொள்ளவதற்கும் பயன்படுத்துவதற்கும் மிக எளிதாக உள்ளது. ஒரு மனிதன் செய்யக் கூடிய பல வேலைகளை Apple sri, Amazon Alexa Google voice Microsoft Cortana ஆகிய கணினிகளே கூடச் செய்து விடுகின்றன. எனவே தொழில்நுட்ப பயன் பாடு கற்றல் கற்பித்தலுக்காக வரும் போது ஆசிரியர்களும் மாணவர்களும் சில முக்கிய கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே இணைய வகுப்பறை சீராக இயங்கும்.

கடந்த ஓராண்டாக இந்தப் பேரிடர் காலத்தில் அலைபேசி வழி நாம் பாடம் நடத்தும் போது, நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தான் புதிதே தவிரத் தொலை தூரக் கல்வி நமக்குப் புதிது அல்ல. அஞ்சல் வழிக் கல்வியும் திறந்த பல்கலைக் கழகங்களும் தொலைதூரக் கல்வியின் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இன்று நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தால் தூரத்தையும் காலத்தையும் நம்மால் எளிதில் வெல்ல முடிகின்றது என்பது மட்டுமே நடைமுறையில் இருக்கும் தொலைதூரக் கல்விக்கும் இன்று நடை பெற்று வரும் இணையவழிக் கல்விக்கும் இருக்கும் ஒரு வித்தியாசம் ஆகும்.

கொரானா வைரஸ் தாக்குதல் குறைந்த பின்னும் இந்த இணைய வழிக் கல்வி முறையின் பயன்பாடுகள் மேலும் அதிகரிக்குமேயன்றிக் குறையாது. எனவே இந்த காலகட்டத்தை நம்முடைய எதிர்கால கல்விமுறைக்கான ஒரு சோதனை ஓட்டமாக எடுத்துக் கொண்டு நாம் நம் வகுப்பறைச் செயல்களைச் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

அப்படிப் பார்க்கும் போது இத்தனை நாட்களில் நேரடி வகுப்பிற்கும் நடந்து கொண்டிருக்கும் இணைய வகுப்பிற்கும் இடையே ஒரு மிகப் பெரிய வேறுபாட்டை நாம் காணலாம். நேரடி வகுப்பில் நாம் பாடங்களை நடத்த மாணவர்கள் கேட்பார்கள். ஆனால் இணைய வகுப்பில் பல புது விஷயங்களைப் பாடப் பொருண்மை சார்ந்த விவரங்களையும் செய்திகளையும் மாணவர்களோடு ஆசிரியர்களும் சேர்ந்தே கற்கின்றோம்.பல கல்வி நிலையங்களில் அலைபேசி கணினி ஆகியவை பயன்படுத்தக் கூடாது என்ற நிலை போய் கணினியும் அலைபேசியும் கற்றல் கற்பித்தலுக்கான ஒரு முக்கியத் துணைக் கருவியாக மாறி உள்ளது.



முதல் உந்துதல்: பிரச்சனைகளைச் சமாளித்துத் தீர்வு காண உதவுதல்.

நமது கணினி பயன்பாட்டையும் அலைபேசி பயன்பாட்டையும் நாம் ஆராய்ந்து பார்த்தால், நாம் இதுவரை பயன்படுத்தி வந்த ஒரு பொழுதுபோக்குக் கருவியான கணினியும், தொலைத் தொடர்பு சாதனமான அலைபேசியும் நம் தொழில் சார்ந்த கற்றல் கற்பித்தலுக்காகப் பயன்படுத்தப்படும் உபகரணமாக மாறி வருவதை நாம் உணரலாம்.அலைபேசியே கணினியாக மாறி இணையம் வழி உலகை நம் உள்ளங்கையில் கொண்டு வந்தது. ஆனால் தற்போது அதே அலைபேசி ஒரு நாளில் எட்டு மணி நேரம் கற்றல் கற்பித்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. எட்டு மணிநேரம் அலைபேசியில் வேலை பார்த்து விட்டு கண்களுக்கும் மனதிற்கும் ஓய்வு கொடுக்க வேண்டியுள்ளது. எனவே நாம் பொழுது போக்கிற்காகக் கணினியையோ அலைபேசியையோ பெரும் பாலும் நாடுவதில்லை. கணினியையும் அலைபேசியையும் நாம் பயன்படுத்தும் விதம் மாறி விட்டது. அப்படி மாறி வரும் போது போது நம்முடைய பழக்கவழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டியதாய் உள்ளது. பழக்க வழக்கங்களை மாற்ற ஆரம்பிக்கும் போது இணைய வழி கற்றல் கற்பித்தலில் உள்ள பிரச்சனைகளைச் சமாளிக்க ஆரம்பிக்கின்றோம்.

  • கற்றல் கற்பித்தலுக்காகப் பயன்படுத்தும் கருவிகளில் சமூக வலைத்தள செயலிகள் பயன் படுத்துவதில் ஏற்படும் பிரச்சனை
  • வகுப்பில் இணைய வழியில் இணையும் போது ஏற்படக் கூடிய பொருளாதார, கலாச்சாரச் சிக்கல்கள்
  • ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகிய கல்வி நிலைய நிருவாகம் ஆகிய மூவருக்கும் பொதுவான ஒரு தொழில்நுட்பம் இல்லாமை
  • தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு பெற்றோரிடையே இல்லாமை
    ஆகியவை இன்று கற்றல் கற்பித்தலில் உள்ள முக்கியப் பிரச்சனைகளாக உள்ளன..

ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகிய இருவருக்கும் மேற்கூறிய இந்தப்பிரச்சனைகள் பொதுவானவை. இந்த பிரச்சனைகளை எவ்வாறு ஆசிரியர் தீர்க்க முயல்கின்றார் என்பதை முன் மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் பிரச்சனைகளைத் தீர்வு காண முயலுவர். இன்னும் சொல்லப்போனால், மாணவர்கள் சாதுரியமாக இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து அதன் வழி முறைகளைக் கூட ஆசிரியருக்குச் சொல்வர். பிரச்சனைகளைச் சமாளிக்கக் கற்றுக் கொண்டவர்கள், அதை நிரந்தரமான ஒரு தீர்வைக் காண ஆசிரியர்கள் மாணவர்கள் கல்வி நிலையங்கள் பெற்றோர் ஒரு அணியாகச் செயல் பட ஆரம்பிக்கின்றோம். பெற்றோர்களிடத்தும் ஆசிரியர்களிடத்தும் மாணவர்களின் பிரச்சனைகளை எடுத்துச் செல்லும் ஒரு பாலமாக ஆசிரியர்கள் திகழ்கின்றோம். இவ்வாறு மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும் நிலை உருவாகும் போதே இருவரின் தொலைநோக்கு சிந்தனை ஒருமிக்க ஆரம்பிக்கின்றது. இப்படிப்பட்ட ஒருமித்த மனப்பான்மை மாணவர்களின் முதல் உந்து சக்தியாக அமைகின்றது.



இரண்டாவது உந்து சக்தி; எதிர் காலத்தை நோக்கிய எதிர்பார்ப்பு

கற்றல் கற்பித்தல் சூழலில் ஆசிரியரை விட மாணவர்களின் சிந்தனைக்கும் செயலாக்கத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும், ஏன் என்றால் இன்றைய கல்வியின் முக்கிய நோக்கம் எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதே. ஆனால் எந்த ஒரு ஆசிரியராலும், கல்விச்சூழலாலும் மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. முக்கியமாகக் கணினித் தொழில்நுட்பம் வேகவேகமாக வளர்ந்து செயற்கை அறிவுத் திறன் கொண்டு கணினிகள் செயற்பட ஆரம்பித்துவிட்ட இந்தக் காலத்தில் மாற்றங்கள் வெகு வேகமாகவே நிகழ்கின்றன. அந்த மாற்றங்களைச் சந்திக்க ஒரு அடிப்படையாக மட்டுமே இன்றைய இணைய வழிக் கல்வி அமைகின்றது.

ஆசிரியர்களின் கடந்தகால அனுபவ அறிவு எந்த அளவிற்கு வேகமாக மாறிவரும் எதிர்காலத்திற்கு உபயோகமாக இருக்கும் என்று உண்மையாகத் தெரியாது. ஏன் எனில் நம் கடந்த காலத்தை விட மாணவர்களின் எதிர் காலம் முற்றிலுமாக மாறி இருக்க வாய்ப்புக்கள் உண்டு. அதனால் ஏட்டின் வழி கற்றுக் கொடுக்கப்படும் பாடப் பொருண்மையை விட எதிர்கால பிரச்சனைகளைச் சந்திக்கும் வாழ்க்கைத் திறனை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது அவசியமாகின்றது. பிரச்சனைகளுக்கு மாற்று வழி யோசிக்கும் சக்தியும், பிரச்சனைகளை முன் கூட்டிய கணித்து அதற்கு ஏற்றார் போலத் திட்டமிடும் கலையையும் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட வேண்டும்.

அதற்காக வகுப்பில் வாரத்தில் ஒரு நாள் மாணவர்களை வைத்துப் பாடப் பொருண்மைக்குத் தொடர்புடைய மற்ற விவரங்களை பேசச் சொல்ல வேண்டும். பாடப் பொருண்மையை தங்களுடைய வாழும் சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு ஏற்ற படி மாற்றி யோசிக்க வழி வகைகள் செய்ய வேண்டும். ஆசிரியர்களாகத் தங்கள் யோசனைகளை மாணவர்களுக்குக் கொடுப்பதற்குப் பதில் மாணவர்களைத் தங்கள் யோசனையைப் பட்டியலிட்டு அதைச் செயலாக்கும் திறன் குறித்து கற்றுக்கொடுக்க சொல்ல வேண்டும்.

மாணவர்களின் உடனடி எதிர்காலம் என்று பார்க்கும் போது அவர்களின் வேலை வாய்ப்பு பற்றிய விவரங்களை அவர்களை வைத்து அலசி ஆராயச்செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் வகுப்பிற்கு வெளியே கணினிக் கல்வி, ஓவியக் கலை, கட்டிடக் கலை என்று உணவுக்கலை என்று ஏதாவது ஒன்றில் தங்களின் கவனத்தைச் செலுத்தி கற்றுக் கொள்ள வேண்டும். கலாச்சார அடையாளங்கள், மொழி உணவு போன்றவற்றை அடுத்த தலைமுறைக்குப் பாதுகாப்புடன் எடுத்துச் செல்வது எப்படி என்று மாணவர்களைச் சிந்திக்க வைக்கும் நிகழ்வுகள் இணைய வகுப்பில் அடிக்கடி நடக்க வேண்டும். மாணவர்களின் தனித் தன்மையையும் படைப்புத் தன்மையையும் வெளிக்கொணரும் நிகழ்ச்சிகளைப் பாடப்பொருண்மையோடு சேர்த்து நடத்துவது இன்று இணையக் கூட்டங்கள் மூலமாக நடத்துவது மிகவும் எளிது. மாணவர்களின் படைப்புத்திறனையும் மாணவர்களின் தனித் திறமையையும் நாம் ஊக்குவிக்கும் போது அவர்களால் எந்த ஒரு பிரச்சனைக்கும் எளிதில் தீர்வு காண முடியும் என்று மூளை பற்றிய ஆராய்ச்சி கூறுகின்றது. எந்த ஒரு பாடத்திலும் மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் கணினி மொழிகளைக் கற்றலும் கணினிகளுக்கு நிரல்கள் வை கட்டளை அனுப்பவும் தெரிந்திருக்குமேயானால் ஒரு மாணவனுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல் அவனுடைய படைப்பாற்றலும் தனி செயல் திறனும் அதிகரிக்கின்றது. எதிர் காலத்தில் வரும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கணினி மொழியும் நிரலர் மொழியும் கற்ற ஒருவரால் சிறப்பாகச் செய்ய முடியும்.



மூன்றாம் உந்துதல்: மேலாண்மைத் திறனை வளர்த்தல்

நேர மேலாண்மை, ஊடக மேலாண்மை, நிதி மேலாண்மை ஆகிய மூன்றும் இன்றைய உலகிலும் மிக முக்கியமானவையாகின்றன. எதிர்கால உலகமே கணினி மயமாக இருக்கும் போது கணினியால் வரும் கவனச்சிதறல்களும் கணினி, அலைபேசிகளின் அடிமையாவதும் தவிர்க்க முடியாத ஒன்று. முக்கியமாக அலைபேசி வழியாக சமூக ஊடகங்களுக்கான குறுஞ்செயலிகளைப் பாட நேரத்தில் செயலிழக்கச் செய்வது மிக முக்கியமான ஒரு திறனாகும். ஒவ்வோரு கல்வி நிறுவனமும் அதை தங்களின் கல்விக் கொள்கையில் முக்கியமான ஒரு அங்கமாக வைத்திருக்க வேண்டும். கல்விக்கான கருவியாகக் கணினியும் அலைபேசியும் மாறிவிட்ட பிறகு அவற்றைப் பொழுது போக்கிற்காகப் பயன்படுத்துதல் துஷ்பிரயோகத்திற்குச் சமானம் என்ற புரிதலும் தெளிவும் மாணவர்களுக்கு வர வேண்டும்

சமூக ஊடகங்கள் இன்று ஒரு அறிவிப்புப் பலகையாக மட்டுமில்லாமல், ஒவ்வொருவரின் தனிக்கருத்துக்களை வெளியிடக்கூடிய ஒரு இணைய அச்சகமாகச் செயல் பட்டு வருகின்றது. அப்படிப்பட்ட நிலையில் தன் கருத்துக்களைக் காப்புரிமைப் படுத்தவும் கருத்துத் திருட்டு செய்யாமல் இருக்கவும் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட வேண்டும். தங்களுடைய கருத்துக்களுக்குக் காப்புரிமை உண்டு என்ற ஒரு எண்ணம் மாணவர்களின் தனித்திறனையும் படைப்புத்திறனையும் ஊக்குவிக்கும்,

நேரமேலாண்மையை என்பது ஒரு வேலையைச் சீராகச் செய்ய ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மின்னஞ்சல்கள், புலன செய்திகள் குறுஞ்செய்திகள் ஊடகங்கள் , இணைய உலாவல் ஆகியவற்றிற்கு மாணவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதை அவரவர் அலைபேசியில் Screen time என்று பார்த்தால் நம்முடைய அலைபேசி பயன்பாட்டு வகைகளை நாம் மிகத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறாக மாணவர்களுக்குத் தோழமை உணர்வுகளைக் கொடுக்கும் ஒரு துணையாக ஆசிரியர்கள் அவர்களோடு இணைந்து கற்பதும், எதிர்காலத்தைப் பற்றிய ஒரு எதிர்பார்ப்புடனும் மாணவர்களை வழி நடத்திச் சென்று பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் சோதனைக் கூடமாக இணைய வகுப்பறை இயங்க வேண்டும்.

தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

 



தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்



தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்



தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்



தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்




தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்



தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்



தொடர் 8: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்



தொடர் 9: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்

 



தொடர் 10: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *