இணையத்தில் கவனச் சிதறல்கள்
இன்றையக் காலகட்டத்தில் மானவர்களின் கல்வியில் இணைய வழி செய்திகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. முகநூல் டிவிட்டர் இன்ஸ்டகிராம் யூடுப் பின்டெரெச்ட் புலனக்குழுக்கள் ரெட்டிட் ஆகியவை மாணவர்களுக்கு அதிவிரைவிலேயே செய்திகளைக் கொண்டு செல்கின்றன. இந்த சமூக ஊடகங்கள் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதிலும் மக்களை இணைப்பதிலும் முக்கியப்பங்கு வகித்தாலும் அவற்றில் வரும் செய்திகளின் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகவே உள்ளது. முக்கியமாகப் பாடப் பொருண்மை சம்பந்தமாக நாம் தேடு பொறிகளின் தேடும் போது கிடைக்கும் விடயங்களில் எது உண்மை எது பொய் என்ற செய்திகள் மாணவர்களுக்குத் தெரிவதில்லை.
இன்னும் சொல்லப்போனால் கொரானா பேரிடர் காலத்தில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது இணையங்களிலிருந்து தங்களுக்கான விடையைத் தேடி எடுத்து ஏமாற்றுகின்றனர் என்று பல கல்லூரிகள் கூறி வருகின்றன. அண்மையில் அமெரிக்க இராணுவக் கல்லூரியின் பேராசிரியர். தான் தேர்வில் கேட்கப்போகும் ஒரு கடினமான கேள்விக்குத் தவறான பதிலை இணையத்தில் உலவ விட்டார். அதன் பின் , அதே பதிலைத் தேர்வில் எழுதிய மாணவர்களை எழுத்துத் தேர்வில் ஏமாற்றியவர்கள் என்று கண்டு பிடித்தார். அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்த செய்தியே.
மாணவர்கள் இணையம் வழி பெறும் செய்திகளின் நம்பகத்தன்மை மிகவும் முக்கியமானது. Chegg என்ற நிறுவனம் மாணவர்களை சந்தாதார்களாக்கி அவர்களுக்கு இணைய வழித் தேர்வில் வரும் கேள்விகளுக்குப் பதிலை க் கொடுக்கும் சேவையைச் செய்கின்றன.
நாம் கூகுள் தேடு பொறியில் முதலில் ஒரு சொல்லை இட்டுத் தேடும் போது தேடுபொறி முதலில் அந்த சொல்லைப் பல வகைகளாகப் பிரித்துப் பார்க்கின்றது. அதன் பின் அந்த வகைகளுக்குள்ளே உள்ள உட்பொருளைக் கண்காணிக்கின்றது. நாம் இதற்கு முன் அந்த சொல்லைத் தேடி இருக்கின்றோமா? என்று சோதித்துப் பார்க்கின்றது. அதன் பின் தேடப்படும் சொல் எந்தெந்த தேதிகளில் வந்து இருக்கின்றது என்று வகைப்படுத்தி அதில் வரும் சமீபத்தியத் தகவலை நமக்குக் கொடுக்கின்றது. கொடுக்கும் அந்தத் தகவலையும், படங்களாக, காணொலிகளாக, செய்திகளாக, புத்தகங்களாக, விநியோகத்திற்காக என்று ஒரு சொல்லுக்கான செய்தியைப் பல வகைகளில் நமக்குக் அடையாளம் காட்டுகின்றது. இணையத் தேடு பொறிகள் அவ்வாறு நமக்கு வகைப்படுத்திப் பிரித்து செய்திகளைக் கொடுக்க வேண்டிய காரணம். நாம் ஏதாவது ஒரு சுட்டியைச் சொடுக்க வேண்டும்.
நாம் சொடுக்கிய விவரத்தில் குறைந்தது நம் கவனம் மூன்று நிமிடங்களாவது நிலைத்து நிற்க வேண்டும், நாம் சொடுக்கும் செய்திகளை வைத்து அதைச்சார்ந்த விளம்பரங்கள் முதலில் வருவதை நாம் அனுபவத்தில் கண்டு இருக்கின்றோம்.
முதலில் முக்கியமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, இணையம் வழி செய்திகளைப் பரப்பும் நிறுவனங்களான கூகுள், முக நூல் டிவிட்டர் ஆகியவற்றின் அடிப்படை வியாபாரம் ஆகும். எனவே அவர்களின் இலாபத்தை அதிகரிக்கச் செய்யும் எந்த ஒரு செய்திகளையும் அவர்கள் பரப்புவதற்குத் தயாராக இருப்பர். கூகுள் மைக்ரோப்ட், யாகூ போன்ற தளங்களில் விளம்பரங்களாக வரும் செய்திகளைக் கூட உண்மை செய்தி போல அருமையாக எழுதி இருப்பர். எனவே நாம் படிக்கும் செய்தி உண்மையானதா பொய்யானதா என்பதைத் தாண்டி, கொடுக்கப்பட்ட விவரம் நம் கவனத்தைக் கவருவதற்காக எழுதப்பட்டதா? அல்லது நமது அறிவை மேலும் வளர்ப்பதற்காக எழுதப்பட்டதா என்று நாம் ஆராய் வேண்டும். சில செய்தித் துணுக்குகள் உண்மையைப் போல எழுதப்பட்ட நையாண்டிகளாகக்கூட இருக்கலாம். கூகுள் செய்திகள் ஆப்பிள் செய்திகள் சில காலம் நமக்குச் செய்திகளை இலவசமாகத் தந்துவிட்டு பின் அந்த செய்திச்சேவைகளைப் பயன்படுத்தக் கட்டணங்கள் வசூலிக்கின்றன. கட்டணம் வசூலித்தாலும் கூட அதிகமான விளம்பரங்கள் தான் பல இணைய தளங்களில் உள்ளன.
நாம் செல்லும் இணைய தளத்தில் பல விளம்பரங்கள் இருந்தாலும், நாம் செய்திகளைப் படிக்கும் போது பல சாளரங்கள் தீடிரென்று நம் கண்முன்னால் இருக்கும் திரையை மறைத்து முளைக்கும். அவற்றில் சில சாளரங்கள் நமது மின்னஞ்சலைக் கேட்கும். இல்லை எனில் ஆம் இல்லை போன்ற பதில்களைப் பெறக்கூடிய கேள்விகளைக் கேட்கும் சாளரங்கள் நம் கவனத்தைத் திசை திருப்பும். இத்தகையத் தளங்களில் நாம் பெறக் கூடிய செய்திகள் நம் கவனத்தைக் கவருவதற்காக எழுதப்பட்டதா ? அல்லது நாம் தேடும் பொருண்மைக்கான ஆழமான விவரங்கள் அதில் உள்ளதா என்பதை நாம் கவனிக்க வேண்டும். பெரும்பாலும் ஆழமான விவரங்கள் இருப்பது போலத் தோன்றினாலும், முக்கியமான விவரங்கள் மேலோட்டமாகவேக் கொடுக்கப்பட்டு இருக்கும். இரு வாக்கியங்களுக்கு இடையில் இணைய தளத்தின் வேறு ஒரு பக்கத்திற்கோ நம்மை எடுத்துச் செல்லும் சுட்டிகள் இருக்கும். இந்த மாதிரியான இணைய தளங்கள் கொடுக்கும் செய்திகள் மாணவர்களுக்கு ஆழமான அறிவைக் கொடுக்கும் என்பது சந்தேகமே
ஒரு இணையத்தில் ஒரு செய்தியோடு காணொலியும் இருக்குமேயானால், அந்தக் காணொலியில் வரும் விவரங்களும் உரையாடலுமே மீண்டும் உரையாக எழுதப்பட்டு இருக்கும். இப்படி நாம் ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் தெரிந்து கொள்வது போல இருக்கும். இவ்வாறு ஒரே செய்தியைப் பல வடிவங்களில் கொடுப்பதற்குக் காரணம் நம்முடைய கவனத்தை ஈர்த்து கணினி முன் நம்மை அமர வைப்பதே/ நாம் எவ்வளவு நேரம் அவர்களுடைய இணைய தளத்தில் பயனாளர்களாக இருக்கின்றோமோ அவ்வளவு நேரம் அவர்களால் விளம்பரதாரர்களை ஈர்க்க முடியும்.
மின்னூல்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற காரணத்தால் பல இணைய தளங்கள், இலவச மின்னூலைக் கொடுப்பதாக நம் மின்னஞ்சல்களை கேட்கின்றனர். அப்படி நாம் நம் மின்னஞ்சலைக் கொடுத்து அந்த இணைய தளத்தில் சந்தாதாரராக ஆகிவிட்டோம் என்றால் அவர்களிடமிருந்து வாரம் ஒரு முறை ஒரு செய்திக் கடிதங்கள் வரும். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு அவை முக்கியமாகத் தோன்றினாலும் ஆழமாக விவரங்கள் இருப்பதில்லை. அவரது இணையதளத்தைச் சந்தைப்படுத்தும் முகமாகவே இந்தச் செய்தி மலர்களும் அமைந்து இருக்கின்றன. செய்தி மலர்களில் உள்ள சுட்டிகளை நாம் அழுத்துவதன் மூலம்,நாம் அவர்களின் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றோம். அங்கே நம் கவனத்தை இழுத்து வைக்க மேலும் ஏதாவது உத்திகளை அவர்கள் பயன்படுத்தலாம்.
உயிர்க் கொல்லி மருந்துகளைப் போல நேரங்கொல்லிகளாக பல சமூக ஊடகங்களும் இணையதளங்களும் இன்று இருக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது. திறன் பேசி வைத்திருக்கும் ஒவ்வோரு நபரும் இன்று தங்களுடைய சமூக ஊடகங்கள் வழி, blog, vlog youtube போன்றவை மூலம் தங்கள் கருத்துக்களைப் பொழுதுபோக்கிற்காகவும், இணையம் வழி தன் திறமைகளைச் சந்தைப்படுத்தி பொருளீட்டுவதற்காகவும் பயன்படுத்துகின்றனர்.
அச்சில் வரும் செய்தித் தாள்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் நாம் செய்திகளைப் படிக்கும் போதும் பார்க்கும் போதும் அவை நம் கவனத்தை ஓரளவு தான் ஈர்க்க முடியும். ஆனால் கணினியும் சாமர்த்திய திறன் பேசிகளும் இருபத்து நான்கு மணிநேரமும் நம்முடைய கவனத்தை ஈர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் நமது நடவடிக்கைகளையும் கண்காணிக்கின்றன.
நாம் இணையத்தை நமது நல் வாழ்க்கைக்காக, நமது வாழ்வு தொழில் முன்னேற்றத்திற்காகப் பயன் படுத்துகின்றோம் எனும் போது நம்முடைய நேர மேலாண்மை அவசியமாகின்றது. எனவே. நாம் இணையத்தில் ஒரு செய்தியைப் படிக்கும் முன் மூன்று விதங்களில் செய்தியை முதலில் அலசிப்பார்க்க வேண்டும்.
இணையம் வழி ஒருவரோடு ஒருவர் இணைந்து இருப்பது என்பது காலத்தின் கட்டாயம். ஆனால் எப்போது யாருடன் எதற்காக இணைந்து இருக்கின்றோம் என்பது நம்முடையத் தெரிவு. இணையத்தில் ஒரு செய்தியைப் படிக்கும் போது
செய்தியைச் சொல்வது யார்?
அவர் சொல்லும் செய்தி அவருடைய சொந்தக் கருத்தா?
அவர் சொல்லும் செய்தியில் அவருடைய ஆளுமை என்ன? அவர் செய்தியைச் சொல்லும் நோக்கம் என்ன?
செய்தியின் நோக்கம் அறிவை விருத்தி அடையச் செய்வதா?
அல்லது நமது கவனத்தைக் கவர்ந்து பொருட்களை விற்பனை செய்வதற்கும் விளம்பரங்களுக்கும் தளமாக இருக்கின்றதா?
இணைய தளத்தில் சொல்லப்பட்ட செய்தி பொதுவாகச் சொல்லப்பட்டதா அல்லது ஒரு குறிப்பிட்ட வல்லுநர்களுக்காகச் சொல்லப்பட்டதா என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
கணினி சார்ந்த விஷயங்களை அந்தந்த நிறுவனங்களின் தளங்களில் கிடைக்கும் ஆவணங்களை நாம் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். org, edu, ac போன்ற இணைய தள நீட்சிகளில் கிடைக்கும் விவரங்கள் நமக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
உலக செய்திகளை இணையம் வழி அதிவிரைவாக நாம் கண்டு கொள்ளலாம், AP news
Reuters, smart news ஆகிய குறுஞ்செயலிகள் நம்பகத்தன்மை உள்ள செயலிகளாக உள்ளன.
நாம் மின்னஞ்சல்களையும் ஊடகங்களையும் அதிகமான அளவு பயன்படுத்துகின்றோம் என்றால் அதற்கான நேரத்தைச் சரியாக ஒதுக்கி வேலை செய்ய வேண்டும். நம்மில் பலர், அதிகாலையில் எழுந்ததும் நமது கைப்பேசியைத் தான் தூக்குகின்றோம். ஆனால் தூக்கிய அலைபேசியை அதன் பிறகு கீழே வைப்பதில்லை. அதற்குப் பதில் காலையும் மாலையும் மின்னஞ்சல், ஊடகங்கள் ஆகியவற்றுக்குக் குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும். காலை எழுந்து முதல் அரைமணி நேரமும் மாலை படுக்கப்போகும் அரை மணி நேரத்திற்கு முன்னால் நம் கணினியையும் அலைபேசியையும் விட்டு விலகி வாசிப்பதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்.இணைய பயன்பாட்டிலும் அலைபேசிப் பயன்பாட்டிலும் சமநிலை அடையக் கூடிய பழக்க வழக்கங்களை நாமும் பழகி, மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்..
தொடர் 1:
தொடர் 2:
தொடர் 3:
தொடர் 4
தொடர் 5
தொடர் 6:
தொடர் 7:
தொடர் 8:
தொடர் 9:
தொடர் 10:
தொடர் 11:
தொடர் 12:
தொடர் 13:
[…] […]
[…] […]