இணையத்தின் வளங்களைப் பயன் படுத்துவது எப்படி?
நாம் அனைவரும் எந்தத் தகவல் நமக்கு வேண்டும் என்றாலும் உடனடியாக இணையத்தில் தேடுகின்றோம், நூலகத்திற்குச் சென்று வளங்களைத் தேடிய காலம் போய் எதை எடுத்தாலும் நாம் உடனடியாக அலைபேசி வழி இணையத்தைத் தேடுகின்றோம். இணையத்தில் நாம் தேடும் ஒரு சொல்லிற்குப் பலவகையான விவரங்களைத் தேடு பொறி எடுத்துத் தருகிறது.
இந்த இணைய பொறிகளின் வேலை நம்மைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து அதன் மூலம் விளம்பரங்கள் செய்து வருவாய் ஈட்டுவதே ஆகும் இந்நிலையில் எந்த ஒரு தேடுபொறியும் நமக்கு இன்னத் தகவல்கள் தான் வேண்டும் என்று மிகத் துல்லியமாகத் தருவதில்லை. பல விவரங்களைத் தந்து நம்முடைய கவனச் சிதறல்களுக்குக் காரணமாக உள்ளது என்று முன்பேப் பார்த்தோம். ஆனால் கொடுக்கப்படும் விவரங்கள் நமக்குப் பயன்படுமேயானால் அவற்றைப் பயன் படுத்துவதற்கு என்று முறைகள் உள்ளன. அந்த முறைகளை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாம் சட்டச் சிக்கல்களுக்குள் ஆளாக நேரிடும் ஏனெனில் . நாம் கருத்துத் திருட்டு செய்தவர்களாக ஆகிவிடுவோம்.
இணையத்தில் நாம் செய்யக் கூடாத முதல் செயல் கருத்துத் திருட்டு. பலர் படங்களை இணையத்திலிருந்து எடுத்து தங்கள் நழுவல் காட்சிகளில் இடுவர். அவ்வாறு செய்யும் போது அதில் தவறு இருப்பதாக அவர்கள் கருதுவதில்லை. ஏன் எனில் “என் கணினியில் செய்வது வேறு யாருக்குத் தெரியப் போகின்றது? அல்லது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றது நான் அதைப் பயன் படுத்தினால் தவறு ஏதும் இல்லை என்ற எண்ணப் போக்கு காரணமாக இருக்கலாம்.
இணையத்திலிருந்து நாம் ஒரு செய்தியை நகல் எடுக்கும் போது, அதைக்கண்டறிய உலாவியில் ஜாவாஸ்கிர்ப்ட் அல்லது அஜெக்ஸ் நிரல் மூலம் செய்து வழி செய்யப்பட்டு இருக்கும். மேலும் நாம் நமது கணினியில் நகல் எடுத்த விவரத்தை ஒட்டும் போது அந்த விவரம் எந்த இணையத் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்களும் நம் கண்ணிற்குத் தெரியாமல் பதிவாகி விடுகின்றது.எனவே இணையத்திலிருந்து நாம் வளங்களைப் பயன் படுத்தும் போது ,பல வகைகளில் கருத்துத் திரட்டு நடப்பதை வெகு எளிதாகக் கண்டு பிடித்துவிட இயலும். நம் ஆவணத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லாக ஆராய்ந்து, அந்த சொற்கள் வரும் வாக்கியங்களை ஆராய்ந்து இணையத்தில் உள்ள மற்ற வளங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நம்முடைய கருத்துத் திரட்டு எந்த அளவு உள்ளது என்பதைக் கணிக்கும் மென்பொருட்களும் சந்தையில் உள்ளன. படங்களில் உள்ள விவரங்களும் அவ்வாறே ஒரு கோப்பிலிருந்து இன்னொரு கோப்பிற்கும், ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றது எனவே கருத்துத் திருட்டை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.ஒரு முறை நாம் கருத்துத் திரட்டு செய்தவர்கள் என்ற கருத்து இணையத்தில் பதிவாகி விட்டால் நமக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் கிடைப்பது மிகவும் கடினமாகி விடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பு உரிமம் இல்லாத கணினித் தொழில்நுட்பங்களைப் பலர் திருட்டுத் தனமாகப் பயன்படுத்தி வந்தனர். அதைத் தடுக்கவே இப்போது பயனில் உள்ள அனைத்து மென்பொருட்களுமே நாம் பயனாளியாக உள்ளே நுழைந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். மென்பொருட்களும் இரண்டு கணினியில் பயன்படுத்த முடியும். மைக்ரோசாப்ட் 365 ஐந்து கணினிகளில் தங்கள் மென்பொருளைப் பயன் படுத்த அனுமதிக்கின்றது.கூகுள் தொழில்நுட்பத்தை நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் பயனர் சொல்லை உள்வாங்கியே கூகுள் அவர்களின் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்த அனுமதிக்கின்றது. மின் புத்தகங்கள் படிக்கப் பயன்படுத்தப்படும் கிண்டில் வன் பொருளும் யனர் பெயரை உள்வாங்கிய பின்னரே வேலை செய்கின்றது. மைரோசாப்ட் ஆப்பிள் கூகுள் கிண்டில் ஆகிய நிறுவனங்களைப் பயன்படுத்தும் ஒரு பயனர், தங்களுடையப் பயனர் கணக்கில் சென்றால், அவரது கணக்கில் எந்தெந்த கணினிகள், திறன் பேசிகள் உள்ளன என்ற விவரங்கள் மிகத் தெளிவாகத் தெரியும். இதனால் நமது கணினிச் செயல்பாடுகள் அனைத்துமே கணினி நிறுவனங்களின் சேமிப்பகத்தில் பதிவாகி வரும்.
இணையம் வந்த பிறகு,நகல் எடுத்துப் பயன்படுத்துவது மிக மிக எளிதாகவும் மலிவாகவும் போன காரணத்தால் காப்புரிமைச்சட்டங்கள் மிகத் தீவிரமாகச் செயல் படுத்தப்பட்டு வருகின்றன,ஒருவர் எழுதிய உரை, உருவாக்கும் படங்கள், இசை, காணொலிகள் நாடகங்கள், ஓவியங்கள் இன்ன பிற கலையாக்கங்கள் என்று எதை ஒருவர் உருவாக்கினாலும் அதைப் பயன்படுத்தும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. இந்திய காப்புரிமைச்சட்டபடி ஒருவரது படைப்பின் உரிமம் படைத்தவருக்கே அவரது மரணத்தின் பின் அறுபது ஆண்டு வரை உண்டு, இந்தச் சட்டப்படி உரிமையை நம்மில் பலர் மதிப்பதே இல்லை. இணையத்தில் கிடைத்த படங்களை வைத்து தங்கள் மின்னூல்களுக்கு, பயன்படுத்துவதையும், மற்ற இணைய தகவல்களிலும் இட்டு இருப்பதைக் காணலாம். இவ்வாறு ஒரு படைப்பை நாம் பயன் படுத்தும் போது அந்த படைப்பை உருவாக்கியவருக்கு நான் உரியச் சிறப்பை முறையாகச் செய்ய வேண்டும். நாம் அவ்வாறு செய்யாவிட்டால் அது கருத்துத் திரட்டு என்றே எடுத்துக் கொள்ளப்படும். முக்கியமாக இந்தக் கொள்கை கல்வி நிலையங்களில் கண்டிப்பாக ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.
கணினித் தொழில் மென்பொருளாக்கமளென்று வரும் போது நாம் மென்பொருளை, இணைய சேவையை விலை கொடுத்து வாங்கினாலும் ஒரு பயனாளி அதைப் பயன்படுத்த மென்பொருள் நிறுவனங்கள் நியமனங்களை விதிக்கும். நாம் அந்த நியமனங்களுக்கு ஒத்துக் கொண்டாலே நாம் அவற்றைப் பயன்படுத்த முடியும்.
அச்சுப்பிரதிகள் இல்லாத ஒரு புது காப்புரிமைத் தன்மையைத் தொழில்நுட்பமும் கணினித்துறையும் பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளன.இவற்றைத் திறவூற்றுத் தொழில்நுட்பம் என்று அடையாளம் காணலாம்.திறவூற்றுத் தொழில்நுட்பத்தின் ஒரு நல்ல உதாரணமாக விக்கிப்பீடியாவைச் சொல்லலாம். இன்று ஒரு சமூகமே எடுத்து நடத்தும் ஒருக் கலைக்களஞ்சியம் தான் விக்கிப்பீடியா. இணையத்தில் மைரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட என்கார்ட்டா எனும் எண்ணிம ஊடகக் கலைக்களஞ்சியத்திற்கு இணையாக இது உருவாக்கப்பட்டது. மைக்ரோசாப்ட்டின் என்கார்ட்டா 2009ம் ஆண்டு நிறுத்தப்பட்டாலும் விக்கிப்பீடியா இன்றும் பலருக்கு உதவும் பல்லூடகக் கலைக் களஞ்சியமாகத் திகழ்கின்றது.
திறவூற்று தொழில்நுட்ப முறையில் கணினி வன் பொருட்கள், மென்பொருட்கள், பல்லூடகங்கள் எனப் பல விதங்களில் விவரங்கள் தற்போது பயனாளிகளுக்குக் கிடைக்கின்றது. உலகமெங்கும் உள்ள பல தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பல அறிவார்ந்த வளங்களை எந்த வித சட்டச்சிக்கல்களும் இல்லாமல் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவும், ஒருவரது படைப்பை இன்னொருவர் பயன்படுத்திக் கொள்ளவும், ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகின்றனர். பொதுவுடைமை வளங்களை உருவாக்குவதில் இந்த நிறுவனம் பெரும் பங்கு வகிக்கின்றது Creative Commons என்ற தலைப்பின் கீழ் பல தரப்பட்ட காப்புரிமம் விதிகளை இந்நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதனால் திறவூற்று வளங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதும் பயன்படுத்துவதும் நமக்கு எளிதாக உள்ளது. இந்த நிறுவனம் வழங்கும் காப்புரிமை வகைகளை நாம் விரிவாக அடுத்துப் பார்க்கலாம்.தமிழகத்தில் த. ஶ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் கணியம் என்ற அமைப்பு வெகு முனைப்பாக திறவூற்று தமிழ் தொழில் நுட்பத்திற்காக செயல்பட்டு வருகின்றது.
காப்புரிமங்கள் ஒவ்வோரு படைப்பிற்கும் உண்டு என்பதைத் தாண்டி, நாம் நியாயமான முறையில் வளங்களைப் பயன்படுத்தலாம். ஒரு வளங்களை ஆராய்ச்சிக்காகவோ, கற்றல் கற்பித்தலுக்காகவோ, சொல்லப்பட்டக் கருத்ஹ்டிற்கு மாற்றுக் கருத்து கூறவோ அந்தக் கருத்தைக் குறைகூறுவ தோ ஒரு படைப்பை நியாயமாகப் பயன் படுத்துவதாகக் கொள்ளலாம். கற்றல் கற்பித்தலுக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் பயன்படுத்தும் போது கண்டிப்பாக அந்த வளத்திற்குரிய மேற்கோள் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். கலை , மனிதத்துவம் பற்றிய உரைகளை MLA (Modern Language Association) முறைப்படியும், சமூக அறிவியல் பற்றிய விவரங்களை APA(American Psychological Association)முறைப்படியும், பத்திரிக்கைகளுக்கு எழுதும் போது CMS(Chicago Manual of Style) முறையிலும் நாம் வளங்களை மேற்கோள் காட்ட வேண்டும்.நாம் வளங்களைப் பயன்படுத்தும் போது படைத்தவருக்கு இழுக்கோ, நட்டமோ ஏற்படாத வகையிலும், நமது கருத்திற்கும் படைப்பவரின் கருத்திற்கும் வேறுபாடு காட்டியும், மேற்கோள் காட்டப்படும் வளம் பயன் படுத்தப்படும் காரணத்தையும் விளக்கி இருக்க வேண்டும்.
இணையத்தில் கிடைக்கும் வளங்கள் பற்றி இன்னும் பல விவரங்களைத் தொடர்ந்து பார்க்கலாம். ஒரே வாரத்தில் இணைய வளங்களைப்பற்றிச் சுருங்க விளக்குவது என்பது வாசகர்களுக்கு நியாயம் செய்வது ஆகாது என்பதால் இணைய வளங்களைப் பற்றிய மற்ற தகவல்கள் அடுத்த கட்டுரையில் வரும் என்று கூறி விடை பெறுகின்றேன்.
தொடர் 1:
தொடர் 2:
தொடர் 3:
தொடர் 4
தொடர் 5
தொடர் 6:
தொடர் 7:
தொடர் 8:
தொடர் 9:
தொடர் 10:
தொடர் 11:
தொடர் 12:
தொடர் 13:
தொடர் 14:
தொடர் 15:
2 Comments
View Comments