கூகுளின் புதியத் தொழில்நுட்பம் எந்த வகையில் சேரும்?
ஒரு பயனர் தங்களின் உலாவி மூலம் தான் இணையத்தை வலம் வருகின்றனர்.. இணைய தளத்தில் வலம் வரும் பஓது உலாவியின் வழி நமது தனிப்பட்ட விவரங்கள் கடன் அட்டை விவரங்கள் வன்கிக் கணக்குகள் தவிர நாம் எந்த மாதிரியான தளங்களை அடிக்கடி பயன்படுத்துகின்றோம், எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றோம் நாம் எதற்காகப் பயன்படுத்தக் கூடும் என்ற தகவல்கள் உலாவிகள் வழியாக நமக்குத் தெரியாமல் நம் கணினியில் நிறுவப்படும் இணைய நினைவிகளால் வெளியே செல்கின்றது. நம் கணினியில் உலாவி எந்த மாதிரியான தகவல்களை சேகரிக்கின்றது என்பதை நாம் அதன் அமைப்புக்களில் சென்று பார்க்கலாம்.
நாம் பயன்படுத்தும் கணினியிலும் சரி திறன்பேசியிலும் சரி உலாவியின் அமைப்புக்களை ஆராய்வது அவசியம். முக்கியமாக ஒவ்வோரு உலாவியிலும் தனியுரிமைக் கொள்கை, இணைய நினைவிகள் பற்றிய விவரங்களைப் படித்துப் பார்த்து நமக்குரிய தேர்வைச்செய்ய வேண்டும்.. நாம் எதுவுமே செய்யாமல் இருந்தால் நம் நடவடிக்கைகளைக் கணக்கீடு செய்யும் இணைய நினைவிகளும், நமக்கு விளம்பரம் தரக்கூடிய நினைவிகளும் தானாகவே செயல் படும். அதனால் தான் உலாவியின் அமைப்புக்களைச் சீராக ஆராய்வது முக்கியம். நாம் இதுவரை அப்படிச் செய்யவில்லை என்றாலும் இப்போதிலிருந்தே அந்த மாற்றங்களைச் செய்ய வேண்டும். உலாவியின் தனியுரிமையும் பாதுகாப்பும் (Privacy and security) என்ற பட்டியைத் திறந்து அதில் நாம் நமக்குத் தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.
அங்கு இருக்கும் Clear browsing data அதாவது எனது இணையத் தேடல்களின் வரலாற்றுத் தரவுகளை நாம் அழித்து விடமுடியும். இவ்வாறு அழித்து விட்டு நாம் நமது உலாவியில் உள்ள தனியுரிமைத் தகவல்களை மாற்றிக் கொள்ளலாம் இது தவிர நாம் செல்லும் தளங்களின் கடவுச்சொற்களை சேகரித்து வைத்திருந்தோமேயானால் அவற்றையும் சரி பார்த்தும் அவற்றின் தேவைகளை நிர்ணயம் செய்யலாம்.
தாங்கள் வலம் வரும் இணைய தளங்களின் விவரங்கள் மற்ற ஒரு பயனருக்குத் தெரியாமல் இருக்க incognito (மறைமுகமான முறையில்) வழியாகவும் இணையத்தில் வலம் வரலாம். இப்படி செய்வதன் மூலம் அவர்களின் இணைய வல வரலாறு மற்ற பயனாளிகளிடமிருந்து மறைக்கப்படும். இன்று பயன்பாட்டில் இருக்கும் எல்லா உலாவிகளிலும் இந்த முறையைப் பயன் படுத்தி ஒருவர் இணையத்தில் வலம் வரலாம்.
அதாவது நாம் வலம் வந்த தளத்தின் விவரங்கள், அங்கு நான் பதிவு செய்த விவரங்கள், நமது கணினியில் நிறுவப்பட்டும் இணைய நினைவிகள் ஆகியவை அனைத்தும் நாம் உலாவியை மூடும் போது அழிந்து விடும் , இதனால் நாம் என்ன செய்கின்றோம் என்று விளம்பரதாரர்களோ அல்லது மற்ற நிறுவனங்களோ கண்டு பிடிக்க இயலாது.. இவை நம் கணினியிலும் அலைபேசியில் மட்டுமே மறைக்கப்படும் எனவே நம் கணினியை இணையத்தோடு இணைக்கும் சேவை செய்பவர்களின் சேமிப்பகங்களில் கண்டிப்பாகப் பதிவு ஆகி இருக்கும்.
ஒவ்வோரு நுகர்வோர் நிறுவனமும் தங்களின் வாடிக்கையாளர்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொண்டு, அதன் வழி அவர்களுக்குத் தேவையானதை விற்பனை செய்யப் புள்ளி விவரங்களைப் பயன்படுத்துகின்றன. நுகர்வோர்கள் அடுத்து என்ன வாங்கப் போகின்றனர் என்ற விவரங்களையும் அவர்களால் நாம் ஏற்கனவே வாங்கிய பொருட்களிலிருந்து நிறுவனங்களால் கண்டுபிடிக்க இயலும்.. அவர்களுக்கான புள்ளி விவரங்கள் நம் கடன் அட்டை நிறுவனத்தின் நுகர்வோர் அடையாள அட்டை நம் அலைபேசி எண் நம் அஞ்சல் குறியீட்டு எண், நம் இணையப் பயன்பாடு ஆகியவற்றிலிருந்து திரட்ட முடியும். முக்கியமாக ஒரு இணைய தளம் தன்னுடைய இணைய நினைவிகளின் வழியாக பயனாளர்களின் விவரங்களைப் பெற முடியும் என்று ஏற்கனவே கண்டோம். அதில் அவர்கள் மூன்றாம் நபருடைய இணைய நினைவிகள் (third party cookies)
பயனரைச் சார்ந்த இணைய நினைவிகளும், விளம்பரத்திற்கான இணைய நினைவிகளும் (Targetting and advertising cookies) வைத்திருந்தால் கண்டிப்பாக, பயனர்களின் விவரங்களை வைத்து அவர்கள் இலாபம் அடைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. இந்த நினைவிகளின் மூலம் பயனர்களின் விவரத்தைத் திரட்டும் ஒரு முக்கிய நிறுவனம், கூகுள்.
இந்த நிறுவனத்தினர் பல தொழில்நுட்பங்களை மக்களுக்குத் தருவதால் அவர்களைப் பற்றிய விவரங்களைத் திரட்டுவது இவர்களுக்கு மிகவும் எளிதாகின்றது. ஆனால் அதே போல அவர்களுக்குப் பல சட்டச்சிக்கல்களையும் அந்த நிறுவனம் உள்ளாகியுள்ளது 2020ம் ஆண்டு அதனுடைய சேவையான google+ பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் விவரங்களை இன்னுமொரு நிறுவனத்திற்கு விற்றிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்த காரணத்தால், 7.5 மில்லியன் அமெரிக்கன் டாலர்களை பொது மக்களுக்கு நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து கூகுள் ஒரு நுகர்வோருக்கு அமெரிக்க $ 12 என்று கொடுத்தது.அ அது மட்டுமின்றி பொதுமக்களின் பிரதிநிதியாக வழக்கைத் தொடுத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா$ 1500 அமெரிக்க டாலர்களும் , அவர்களின் சட்ட செலவையும் கூகுள் கொடுக்க வேண்டி வந்தது. இதே போல தனியுரிமை மீறப்பட்டதாகத் தொடுக்கப்படும் வழக்குகள் ஏராளம், பொது மக்களின் சார்பில் இவ்வாறு வழக்குகள் வந்து கொன்டேஇருப்பதாலும் தற்போது நினைவிகளைப்பற்றிய விழிப்புணர்வும் அதற்கான சட்டங்களின் தேவையைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதாலும் தான் இந்த நிலை.
இதைத் தவிர ஆப்பிள் நிறுவனம் தனது அலைபேசி இயங்கு தளத்தில் மூன்றாம் நபர் நினைவிகளைப் பயன்படுத்தப் பயனர்களைக் கேட்கின்றது அதனால் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்கள் கூகுள் போன்ற நிறுவனங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்..
கூகுள் இந்த இணைய நினைவிகளைப் பயன்படுத்துவதை விட்டு விட்டு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதாக உள்ளது.இந்தத் தொழில்நுட்பம் நாம் இப்போது பயன்படுத்தும் க்ரோம் இணைய உலாவியின் ஒரு பகுதியாக அமையும்.
இதற்குப் பெயர் FloC அதாவது, Federated Learning of Cohorts (குழுக்களின் ஒன்றாயக் கற்றல் முறை)
குழுக்களின் ஒன்றாயக் கற்றல் முறை) என்பது பயனர்களை, தனித்தனியாக அடையாளம் காணாமல் அவர்களுடைய விருப்பத்தைப் பொறுத்து குழுக்களாக அமைத்து அந்தக் குழு விவரங்களை வைத்து துல்லியமாக விவரங்களைக் கற்றல் முறை ஆகும்..
இந்த முறை எப்படி வேலை செய்கின்றது?
இதுவரை இணைய நினைவிகள் செய்து வந்த வேலையை நமது இணைய உலாவியே செய்யப்படு கின்றது. ஆம். ஒவ்வோரு பயனாளிக்கும், அவரது உலாவி ஒரு அடையாள முத்திரையைக் குறிக்கின்றது. இது நமது இணைய பயன்பாட்டைக் கொண்டோ அல்லது நமது தனிப்பட்ட விவரங்களைக் கொண்டோ அடையாளமிடப்படும். ஒரு பயனாளிக்கு ஒரு அடையாள முத்திரை தானா அல்லது பல அடையாள முத்திரைகள் இருக்குமா என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவரது இனம் நிறம் பற்றிய அடையாளங்கள் சேர்க்கப்பட மாட்டாது என்று மட்டும் தெரிகிறது. அவ்வாறு அடையாளமிடப்பட்டவரின் விவரங்களை ஒன்று சேர்த்து, மற்ற விளம்பரதாரர்களுக்கும் நிறுவனங்களுக்கும் விற்கத் திட்டமிட்டு உள்ளது,.
இந்த தொழில்நுட்பம் இணைய நினைவிகள் செய்யும் வேலையை உலாவிகளே செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒரு பயனாளியின் தனியுரிமைகள் பாதிக்கப்படாது என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. மாறாக ஏற்கனவே உலாவிகளிலிருந்து வரும் புள்ளி விவரங்களையும் சேர்த்து ஒரு பயனாளி கணினியைத் தாண்டி அவருடைய குணாதிசயங்கள் என்ன என்பதைக் கூகுளின் நிரல்கள் முடிவு செய்யும்.
இதனால் தனிப்பட்ட விவரங்கள் தாங்கிய விளம்பரங்கள் நம்மைத் தாக்குவதோடு,. நமது உலாவிக் கொடுக்கும் அடையாள முத்திரையின் அடிப்படையில் கணினியில் நாம் விளம்பரங்களைக் காணலாம்.
இந்த தொழில்நுட்பம் விரைவில் நம் க்ரோம் உலாவியில் வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். அதைப் போலவே ஆண்ட்ராய்ட் அலைபேசிகளிலும் இந்த் தரவு கண்காணிப்பு முறை தொடரலாம்.
தொடர் 1:
தொடர் 2:
தொடர் 3:
தொடர் 4
தொடர் 5
தொடர் 6:
தொடர் 7:
தொடர் 8:
தொடர் 9:
தொடர் 10:
தொடர் 11:
தொடர் 12:
தொடர் 13:
தொடர் 14:
தொடர் 15:
தொடர் 16:
தொடர் 17:
தொடர் 18:
தொடர் 19
தொடர் 20:
தொடர் 21: