இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31– சுகந்தி நாடார்மூன்று முதல் ஐந்து வகுப்புக்களுகான கணக்கீடு முறை சிந்தனைகள்

இன்றைய வகுப்பு ஆசிரியர்கள் தினம் தினம் மும்முனைத் தாக்குதல்களை எதிர் நோக்குகின்றனர். முதலாவது இளம் வயதினருக்கு நேரடியாக கல்வி கற்றுக் கொடுக்க முடியாமல் கணினி வழி பாடம் நடத்த வேண்டிய கட்டாயமான ஒரு பாதுகாப்புச்சூழல், இரண்டாவது திறன்பேசி வழி பயிலும் மாணவர்களின் கவனச்சிதறலும் அதில் உள்ள பாதுகாப்பின்மையும். மூன்றாவது மாணவர்களைத் தேர்விற்குத் தயார் செய்வதோடு அவர்களின் எதிர்கால வேலை வாய்ப்பிற்கும் தயார் செய்ய வேண்டிய சூழ்நிலை. இந்த மூன்று பிரச்சனைகளையும் ஒரு ஆசிரியர் சமாளிக்க ஒரு வழியை மட்டும் கண்டுப்பிடித்தால் போதாது. ஒவ்வோரு மாணவருக்கும் என்றவாறு அவர் பாடங்களைக் கற்பிக்க வேண்டும். மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் மூளை வளர்ச்சி அவர்களுக்குத் திட்டமிடுதல், ஆழ்ந்து கற்றல் வாசித்தல் உயர்நிலை சிந்தனை ஆகியவற்றைச் சிறப்பாகச் செய்யும் ஒரு நிலையில் உள்ளது. இந்த வயது மாணவர்கள் வீட்டிலும் சரி வெளியிலும் சரி பள்ளியிலும் சரி அதிகமான, ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத நிலையில் பெரியவர்களாகிய நாம் பல முறை நிறுத்தப்பட்டு இருக்கின்றோம் இதே நேரத்தில் அவர்களது மூளையை இன்றையக் காலகட்டத்தில் கணினி சாதனங்கள் ஆக்கிரமித்துக் கொண்டு உள்ளன என்பதையும் மறுக்க முடியாது.

எப்போது பார்த்தாலும் கணினியில் விளையாட வேண்டும் திறன்பேசியில் விளையாட வேண்டும் என்ற பிடிவாதமும் ஆசையும் அவர்களுக்குத் தான் அதிகமாக இருக்கும், nomophobia என்று சொல்லப்படும் திறன்பேசிகளுக்கு அடிமையாக்கப் படும் வயதில் நம் மாணவர்களின் மூளை உள்ளது. ஏன் அப்படி? எண்ணியல் தொடர்பு சாதனங்களால் அடிக்கடி வரும் அறிவிப்புக்கள். நினைத்தவுடன் யுகிக்கும் வசதி ஆகியவை மூளையில் உள்ள வேதியல் பொருட்களைத் தூண்டி மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. இந்த மகிழ்ச்சி நிலை நிலைத்து நிற்க நம் மூளை ஏங்க ஆரம்பிக்கின்றது. அது மட்டுமல்ல ஒரு மூளை நாம் பிறருடன் சமூகத் தொடர்பில் இருக்கவும் தங்களின் செயலுக்குக் கிடைக்கும் சமூகப் பின்னூட்டம் வழை தன் அனுபவங்களை வளர்த்து கொள்கின்றது. ஒரு மூளைத் தன்னைத் தானே வளர்த்து கொள்ளக்கூடிய சூழ்நிலையை ஒரு திறன்பேசியும் கணினியும் கொடுப்பதால் அதை அந்தக் குழந்தைகளின் மூளை நாடுகின்றது. இந்த சூழ்நிலையில் கல்விக்காக அதைக் கண்டிப்பாய் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் என்ற சூழ்நிலையில் ஆசிரியர்கள் எவ்வளவு கவனமாக அந்தக் கருவியைக் கையாள வேண்டும், மாணவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். அதை அடுத்து அவர்களின் எதிர்காலத்திற்கும் வழி வகை செய்ய வேண்டும்.

நாம் அடுத்து சந்திக்கும் கேள்வி ஆசிரியர்கள் ஏன் முனைப்பெடுத்து செயல்பட வேண்டும். ஒவ்வோரு முறையும் எங்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பாடத்தைக் கற்றுக் கொடுப்பதே சிரமமாக உள்ளது. அதை இன்னும் சிரமம் எடுத்து நாம் ஏன் கற்றுக் கொடுக்க வேண்டும். கற்றல் கற்பித்தல் சூழலைத் தாண்டி நமக்கும் ஒரு வாழ்க்கை எதிர்பார்ப்பு என்று இருக்கின்றது. ஆசிரியர் பணியில் முன்பு போல ஆத்ம திருப்தி கூட கிடைப்பதைல்லை நாங்களும் மனிதர்கள் தானே என்பது போன்ற கேள்விகளை நாம் நம் மனதிற்குள்ளேயும் வெளியேயும் நம் ஆதங்கங்களை சொல்லிக் கொன்டு தான் இருக்கின்றோம், அதே நேரம் எத்தனை ஆதங்கப்பட்டாலும் ஆசிரியப்பணி ஒரு நல்லக் குடிமக்களை உருவாக்குவது என்பதையும் தாண்டி நாட்டு நலம் வீட்டு நலம் உலக நலம் என்று அனைத்திற்கும் அடிப்படையான ஒரு தார்மீகப் பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கின்றது. அந்தத் தார்மீகப் பொறுப்பை நாம் செய்யத் தவறும் போது தான் அந்நிய நாட்டு அரசுகளுக்கு அடிமையாக மாறி இருந்தது போய் அந்நிய நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புக்களுக்கு அடிமையாகி ஒரு நுகர்வோர்களாக மட்டுமே இருக்கின்ற சமுதாயமாக மாறி விடக்கூடிய அபாயம் நமக்கு உள்ளது. உலகிலேயே மக்கள் இளைய சமுதாயத்தினர் அதிகமான இந்திய மக்கள் தொகை கணினி மூலம் தங்களுக்கான சுய வேலை வாய்ப்பை வளர்ப்பதை விட்டு விட்டு இன்னுமொரு நாட்டின் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு விலை போவதால் நம் நாட்டு வளங்கள் எத்தனை எத்தனையோ சூறையாடப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய தொழில் நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்ப நம் தொடக்கக் கல்வி மாணவர்களை வழி நடத்திச்செல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கின்றது. மாணவர்களின் வாழ்க்கையின் எதிர்காலமும் அரசின் கொள்கைகளில் இருக்கின்றதோ இல்லையோ ஆசிரியர்களாகிய நாம் கற்பிக்கும் முறையில் கண்டிப்பாக இருக்கின்றது. எனவே நாம் நம்முடையக் கற்றல் கற்பித்தலில் சிறு சிறு மாற்றங்களைக் கண்டிப்பாகக் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.அண்மையில் கணினி மின்பகுதி கடத்தித் தகடுகளின் (semi conductor computer chips) பற்றாக்குறையில் உலக நிறுவனங்கள் ஸ்தாபித்து நிற்கின்றன என்று நாம் பார்த்தோம். முக்கியமாக ஜெர்மனி சீன அமெரிக்க நிறுவனங்கள் மின் கடத்திகளை உருவாக்கும் மூலப்பொருட்களுக்காகவும் அதை தயாரித்துக் கொடுக்கும் தொழிலாளர்களுக்கான ஒரு தட்டுப்பாட்டை எதிர் கொண்டு இருக்கின்றன. இன்று இந்த மின் கடத்திகளை உருவாக்கும் மிக முக்கியமான ஒரு நாடு தைவான். தைவான் நாட்டு அரசு தங்கள் ஊடகங்களில் சீன நாட்டிலிருந்து வரும் எந்த ஒரு வேலைவாய்ப்பையும் அறிவிக்கக்கூடாது என்று தங்களுடைய ஊடகங்களுக்குக் கட்டளை இட்டுள்ளது. அதாவது மின் கடத்தித் தகடுகளை செய்யும் திறமையான தொழிலிற்பனர்கள் சீன தேசத்திற்கு வேலை வாய்ப்பை நம்பி சென்று விடக்கூடாது என்பதில் தைவான் அரசு மிகவும் குறிப்பாக உள்ளது. முக்கியமாக டச்சு நாட்டைச் சேர்ந்த ஒரு மின் கடத்தி உற்பத்தி நிறுவனம் அமெரிக்காவிலும் தைவானிலும் புது தொழிற்சாலைகளை உருவாக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் இந்நேரம் திறமையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டிற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதைத் தைவான் அரசு புரிந்து கொண்டுள்ளது. உலகின் இன்னுமொரு மின் கடத்தி உற்பத்தி நிறுவனமான intel ஐரோப்பாவில் மின்பகுதி கடத்தி தகடுகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை உருவாக்க அமெரிக்க டாலர் மதிப்பில் பத்து பில்லியன் முதலீடுகளை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது. 2007ல் திறன்பேசிகள் உருவாக்கப்பட்டு இந்த இருபது ஆண்டுகளில் நாம் ஒரு பெரிய பற்றாக்குறையை எதிர் நோக்கி இருக்கின்றோம் என்றால் உலகிலேயே மிகச்சிறப்பான கணினியான மனித மூளையைச்சிறப்பாக்ப் பயன்படுத்தவில்லை என்று தானே பொருள். அப்படி இருக்க இளம் மாணவர்களைக் கணினியின் வேகத்திற்குச் சமமாகச் சிந்திக்கக் கற்றுக் கொடுக்க வேண்டியது எவ்வளவு முக்கியமானதாக இருக்கின்றது என்பதை ஆசிரியர்களாகிய நாம் புரிந்து கொண்டு அதன் படி நம்முடைய வகுப்பறை செயல்பாட்டை வகுத்துக் கொள்ள வேண்டும்.

மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். என்றாலும் அவர்களைக் கணினியிலிருந்து வெளிக்கொணர்ந்து பாடம் நடத்துவது என்பது மிகச் சிரமமான ஒன்று. ஆனால் கணினியில் அவர்களின் மூளை எதிர்பார்க்கும் ஒன்றை நாம் வகுப்பறையில் கொடுப்பதன் மூலம் அவர்களின் சிந்தனைத் திறனை வளர்ப்பதோடு பாடங்களை இணையம் வழி மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் அவர்களைப் பங்கேற்க வைக்கும் வழியிலும் நாம் நடத்திச் செல்லலாம்

மாணவர்களின் கணக்கீடுத் திறமையும் கணினி நிரல் எழுதும் மேம்படும் விதமாக அவர்களின் மூளை வளர்ச்சியும் இயற்கையாகவே அமைந்துள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இளம் மாணவர்களுக்குக் கதை சொல்வதும் சொற்றொடர் புதிர்களை விடுவிப்பதிலும் இயற்கையாக இருக்கும். நாம் கணக்குப் பாடங்களில் மட்டும் பல வார்த்தை விளையாட்டுகளைக் கணித பிரச்சனைகளை மாணவர்களுக்குக் கொடுத்துத் தீர்த்து வைக்கச் சொல்கின்றோம். அதே போல அனைத்துப் பாடங்களிலும் நாம் மாணவர்களுக்குப் புதிர்களைக் கொடுத்து அவற்றை விடுவிக்க சொல்வதோடு அவர்கள் விடுவித்த வழிமுறைகளை படிப்படியாக விளக்கச்சொல்ல வேண்டும்.இணைய வகுப்பறையாக இருந்தாலும் சரி நேரடி வகுப்பறையாக இருந்தாலும் சரி பாட நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி இந்த வார்த்தை விளையாட்டுக்களுக்காக நாம் ஒதுக்க வேண்டும். வகுப்பின் தொடக்கத்தில் வகுப்பின் இடையில் வகுப்பின் முடிவில் என்று நாம் ஒவ்வோரு நாள் வகுப்பிலும் மூன்று முறை மாணவர்களை இந்த மாதிரியான வார்த்தை விளையாட்டுகளைச் செய்ய வைக்க வேண்டும்.

மாணவர்கள் அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் ஒவ்வொருவருக்கும் வார்த்தை விளையாட்டுகள் நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். முப்பது மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால் நாம் முப்பது கேள்விகளை தயார் செய்து கொண்டு ஒரு வகுப்பில் ஒரு மாணவனுக்கு ஒரு கேள்வி என்று வைத்துக் கொள்ள வேண்டும். வகுப்பின் தொடக்கத்தில் மாணவனுக்கான கேள்வியை நாம் அறிவிக்கவோ கரும்பலகையிலோ எழுதி விட வேண்டும். அந்தக் கேள்விக்கான விடையை யார் கூற வேண்டும் என்றும் நாம் கூற வேண்டும். வகுப்பின் இடையில் கேள்விக்கான பதில்களை வழி முறைகளை விடை கூற வேண்டிய மாணவன் மற்ற மாணவர்களோடு கலந்தோலசிக்க நேரம் கொடுக்க வேண்டும். வகுப்பு முடியும் போது மாணவர் வார்த்தை விளையாட்டிற்கான விடையையும் வழிமுறைகளையும் மற்ற மாணவர்களுக்கு விளக்கிச் சொல்ல வைக்க வேண்டும். மாணவர்கள் தாங்கள் கூற வேண்டிய விடையையும் வழிமுறைகளையும் சைகை மொழியிலோ படங்களைக் குறிப்புக்காட்டியோ மற்றவர்களுக்கு விளக்க வேண்டும். இது போன்ற விளையாட்டுப்பயிற்ச்சியை மாணவர்களுக்கு வீட்டுப் பாடமாகக் கூட கொடுக்கலாம்.

இன்னும் தொடர்வோம்.தொடர் 31:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30– சுகந்தி நாடார்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)