இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 – சுகந்தி நாடார்ஆசிரியர்களின் தேவை

இன்றைய வர்த்தகப் பொருளாதாரத்தில் கல்வியும் மாணவர்களும் தரவுகளாக மாறிப் போய்க் கொண்டிருக்கின்ற காலத்தில் ஆசிரியர்கள் கண்டிப்பாக கால சூழலுக்கு ஏற்ப தங்களுடைய கற்பிக்கும் வழிகளை மாற்றிக் கொள்ள வேண்டும். தரவுகளாக மாறும் மாணவர்களின் விவரங்கள் புள்ளி விவரங்களாகப் பங்குச் சந்தையில் இலாபம் ஈட்டித் தருகின்றன. பங்கு சந்தையில் இலாபம் ஈட்டும் என்பதற்காகவே கணினித் துறை வளர்கிறது என்பது மாறி மனித நேயத்திற்கான தேவை அதிகரிக்கும் போது கணினியை விட சிறந்த நல்லாசிரியர்கள் தேவை என்பதைக் காலம் புரியவைக்கும்.

அது மட்டுமல்லாமல், கணினித் தொழில்நுட்பம் தொடங்கிய காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள் இன்று ஆசிரியர்களாகப் படிக்கின்ற ஒரு நிலை உருவாகியுள்ளது கொரானாத் தொற்றின் காரணமாக இன்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் விரும்பியோ விரும்பாமலோ குழந்தைகளுக்குக் கணினியும் திறன்பேசிகளும் வாங்கிக் கொடுத்து இருக்கின்றோம். அவர்களை அதைப் பயன்படுத்தும் போது ஒரே நேரத்தில் பெருமையாகவும் கவலையாகவும் உணர்கின்றோம். அதே நேரம் கணினித் தொழில்நுட்பமும் திறன் பேசித் தொழில்நுட்பமும் இன்று எந்த அளவிற்கு இன்றியமையாததாக மாறிவிட்டது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும்

கடந்த 25 ஆண்டுகளில் வளர்ந்ததை விட இனி வரும் காலங்களில் கணினித் தொழில்நுட்பம் மிக வேகமாக வளரும். மனிதர்கள் கணினியைச் சார்ந்த ஒரு வாழ்க்கையும் அதிகரிக்கும். அந்த வளர்ச்சிக்கு ஏற்ப கச்சாப்பொருட்களின் இருப்பும் இருக்க வேண்டும். இல்லையேல் மின்சாரமின்றி வேலை செய்யாத கணினிகள் இந்த பூமியில் மக்காக் குப்பையாகச் சேர்ந்து விடும். கணினித் தேவைக்காக பூமி வளங்களை தோண்டி நாம் இயற்கையை மாசுப்படுத்தும் போது இந்த பூமியில் மனிதர்களும் பிற உயிரினங்களும் வாழும் தட்பவெப்பநிலை இருக்குமா என்ற கேள்விக் குறி இப்போதே நம்மை அச்சுறுத்துகின்றது. எந்த ஒரு தொழில்நுட்பமும் மனிதனின் வாழ்க்கை வசதிகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயலுகின்றன, நாம் இதுவரைக் கடந்து வந்த இரு தொழில்நுட்பங்களின் வரலாற்றை நாம் சிறிது பார்த்தால் எதிர்காலத்தில் நம் மாணவர்கள் எத்தகைய வாழ்வு முறையை நம்மால் யூகிக்க முடியும்.

18ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சி அதைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் போது, மின்சாரம், கச்சா எண்ணெய்கள் ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய வாழ்வின் வசதிகளை நாம் பெருக்கிக் கொண்டோம். இயற்கை வளங்கள் என்றும் பொய்க்காது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இயற்கையை நாம் மாசு படுத்தினோம். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகக் கச்சா எண்ணெய்,அணுசக்தி ஆகியவற்றை நம்முடைய வாழ்வின் இயங்கு சக்தியாகக் கொண்டிருந்தோம். இப்போது கச்சா எண்ணெய் பயன்பாடு, நம் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானது என்று கண்டு கொண்டுள்ளோம் அதே போல அணுசக்தி மின்சாரம் தயாரிக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகி என்ற நகரங்களின் அழிவு நமக்கு அணு சக்தியை ஆக்க முறையில் பயன்படுத்த உலக நாடுகளைத் தூண்டியது அதே போலத் தான் இன்றைய கணினித் தொழில்நுட்பமும்.இன்றைய கணினிச்சூழ்நிலைகள் நம் எதிர் காலத்தின் கண்ணாடிகள். நாம் அவற்றை கூர்ந்து கவனித்து, ஆழமாக சிந்தித்து எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்ற சந்ததியரை உருவாக்க ஆசிரியர்களாகிய நாம் தான் திட்டம் தீட்டி செயல் படுத்த வேண்டும்.உதாரணத்திற்கு அமெரிக்காவில் உள்ள கனெடிக்கெட் மாகாணத்தில் கொரானா தொற்றின் காரணமாக இணைய வகுப்புக்கள் நடந்த வேளையில் பல மாணவர்கள் வகுப்பிற்கே வரவில்லை. கிராமப் புறங்களில் உள்ளவர்களுக்கு என்று 80,000 கணினிகள், 40,000 கேபிள் வசதி கொண்ட இணைய வசதி 13,000 அலைபேசி வழி இணைய வசதி என்று ஏற்படுத்திக் கொடுத்தும் பல்லாயிரம் மாணவர்கள் வகுப்பிற்கு வரவில்லை, ஆசிரியர் கொடுக்கும் வீட்டுப்பாடங்களைச் செய்வதில்லை என்ற புள்ளி விவரத்தை அந்த மாநில கல்வி ஆணையம் அறிவித்து உள்ளது. இது போல அமெரிக்காவின் ஒவ்வோரு மாநிலங்களிலும் கல்வியாளர்கள் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். மொழி, வறுமை, வீடு இல்லாமை இணைய வசதிக்குப் பணம் கட்டமுடியாத சூழ்நிலை ஆகியவைக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று politico என்ற இணைய தளம் கூறுகின்றது. இது தவிர பல மாநிலங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 2020 கல்வி ஆண்டின் படிப்பை வரும் ஆண்டும் மீண்டும் நேரடிப் பள்ளிகளில் சென்று படிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். சட்டப்படி அதற்கான மசோதாக்களும் தயாராகி வருகின்றன. அமெரிக்கக் கல்வித் துறை மாணவர்களின் கல்விக்காக $36 பில்லியின் அமெரிக்க டாலர்களை செலவழிக்கத் தயாராக உள்ளது. ஆனால் பேரிடர்க் காலக் கல்வி என்பது இணைய வசதி, கணினி என்பதையும் தாண்டி ஆசிரியர்களைப் பொறுத்தே உள்ளது என்று இன்றையக் கல்வி நிலை தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றது. இணைய வகுப்புகளில் பங்கு கொள்ளாமல் பாதியில் பள்ளிகளை விட்டு விலகி விட்டனர் என்பது கல்வி ஆண்டின் இறுதியில் தெரிய வந்துள்ளது. நேரடி வகுப்பில் ஒரு மாணவன் வரவில்லை என்றால் பள்ளி அதிகாரிகள் நேரில் சென்று பிரச்சனையைக் களைய முற்படுவர். ஆனால் பேரிடர் காலத்தில் ஒவ்வோரு மாணவரையும் தேடிச் சென்று பேசி அழைத்துவரத் தேவையான ஆசிரியர்கள் இருக்கின்றனரா என்பதே சந்தேகமாக உள்ளது.எனவே ஆசிரியர்கள் அவர்களுக்குத் துணை புரியும் மற்ற பணியாளர்களின் தேவை இன்னும் அதிகரித்து உள்ளது.

UNESCOவின் கருத்துக் கணிப்பின் படி, கொரானாத் தொற்றுக்காலத்தில் உலகெங்கும் ஏறத்தாழ 24 மில்லியன் குழந்தைகள் கல்வி நிலையங்களுக்குச் செல்லாமல் வெளியேறி விட வாய்ப்புக்கள் உள்ளது என்றும், வரும் வருடங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிகின்றது. எனவே இணைய வழி பாடம் கற்பிப்பது என்பது உலகம் முழுதும் உள்ள ஆசிரியர்களுக்குச் சவாலாக உள்ளது இந்தப் பிரச்சனைகளை முளையிலேயேக் கிள்ளிவிட 2021 செப்டம்பர் மாதத்திலிருந்து மாணவர்களை நேரடி வகுப்பிற்கு வர வைக்க எல்லா வேலைகளும் இந்தக் கோடை விடுமுறையில் நடந்து கொண்டே இருக்கின்றன..

மாணவர்கள் கல்வி கற்பதில் இருக்கும் சிரமங்களோடு அதிக நேரம் கணினியில் இருப்பதால் அவர்கள் பல விதமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை வழிநடத்திச் செல்லவும் ஆசிரியர்களின் தேவை அதிகமாகி வருகின்றது.

இப்படி எதிர்கால சந்ததியினர் கணினியால் பல சிக்கல்களை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கும் போது,அவர்களின் தலைமுறை கணினித் துறையில் பல ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வரும் என்று நம்பலாம்.அமெரிக்காவின் கலோனியல் பைப்லைன் நிறுவனம் த்தை டார்க்சைட் என்று சொல்லும் நச்சு நிரல்கள் கூட்டம் தாக்கியதைத் தொடர்ந்து மே 14ம் தேதி அயர்லாந்து நாட்டின் சுகாதாரக் கணினிக் கட்டமைப்பைத் தாக்கியுள்ளது. ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் நச்சு நிரல் கணினி நிரல்கள் அமெரிக்காவையும் அயர்லாந்து நாட்டையும் உட்கார்ந்த இடத்திலிருந்து தாக்கி பல மடங்கு பொருளாதார சேதத்தை உருவாக்கி இருப்பது நாம் இங்கு கவலையோடு கவனிக்கத்தக்கது. கணினி மின்பகுதி கடத்தித் தகடுகளின்(semi conductor computer chips) பற்றாக்குறை என்னும் ஒரு பிரச்சனையை எவ்வாறு சமாளித்து எதிர்கால கணினித் தொழில்நுட்பம் மாறக்கூடும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். கணினித் தொழில்நுட்பம் மாறுமே தவிர இல்லாமல் போகாது. கணினித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது அதைப் பயன்படுத்தும் மனிதர்களையும் சார்ந்து உள்ளது. செய்திகள் தகவல்கள் ஆகியவற்றின் பரிமாற்றத்தின் தேவை இருக்கும் வரை கணினியின் தேவையும் அதிகரிக்கும்.

தற்போது முன்னிலையில் உள்ள கணினி நிறுவனங்கள் மக்களின் அதுவும் உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தைப் பெற்று இருக்கும் இந்தியாவின் தரவுகளைப் பெற்றுக் கொள்ள ஆவலாய் இருக்கின்றன. இந்திய மக்கள் பொதுவாக தங்களுக்குத் தேவையான செய்திகளை சமூக வலை தளங்களில் பார்க்கின்றனர். அதனால் உண்மை என்று எண்ணும் வகையில் போடப்படும் பல வதந்திகளை நம்புகின்றனர். இதைத் தவிர்ப்பதற்காகக் கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள முப்பது பதிப்பாளர்களைக் கொண்டு ஒரு சேவையை ஆரம்பிக்கின்றது. அதாவது இந்த பதிப்பகத்திலிருந்து வரும் இணையப்பொருண்மைகளை விலை கொடுத்து வாங்கவும் அவற்றிக்கான ஒரு பொறுப்பாளரை நியமிக்கவும் திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே ஜெர்மனி இங்கிலாந்து போன்ற 12நாடுகளில் ஏற்கனவே இந்தத் திட்டம் அமுலில் உள்ளது. இந்தியாவில் முதலில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் உள்ள பொருண்மைகளைக் கூகுள் பயன்படுத்தத் திட்டமிட்டு உள்ளது.ஆஸ்திரேலியா கனடா பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு செய்திகளை வாங்க கணினி நிறுவனங்கள் விலை கொடுக்க வேண்டும் என்று சட்டங்கள் கொண்டு வந்துள்ளன. இதிலிருந்து நாம் என்னத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பலதுறைகளில் சக்தி வாய்ந்த பொருண்மைகளைப் படைக்க் கூடிய மாணவர்களின் தேவை அதிகரிக்கின்றது. மாணவர்களைக் கல்வி கற்க வர வைப்பதும் அவர்கள் ஒரு தரமான பொருண்மை உள்ள படைப்புக்களைப் படைப்பவர்களாக மாற்றுவது ஆசிரியர் கையில் தான் உள்ளது.

பொதுவாகக் கணினித் துறையிலும் கல்வித் துறையிலும் இப்போது நடந்து வருவதைப் பார்க்கும் போது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த மாதிரியான சிக்கல்களைத் தவிர்த்து இயற்கைக்கும் சுற்று சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கணினித் துறை வளரும் என்பது நிச்சயம். அதே போல அமெரிக்க சைன கணினி நிறுவனங்களை நாம் சார்ந்து இராமல் நமக்கான நம் மொழிக்கான கணினித்தொழில்நுட்பமும் வளரும் என யூகிக்க நம்மால் முடிகின்றது. இந்தப் பின்னணியில் மாணவர்களிடம் எவ்வாறு கணினியையும் மனித நேயத்தையும் எவ்வாறு கொண்டு செல்வது என்பது ஆசிரியர்களுக்குத் தான் தெரியும். எந்த ஒரு ஆதார வளங்களும் இல்லாமல் உணவை மட்டும் நம்பி தனக்குத் தானே எரிசக்தி கொடுத்துக் கொள்ளக் கூடிய வளம் மனித வளம் ஒன்று தான். இந்த மனித வளம். இந்த மனித வளத்தை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு நாம் எவ்வாறு தயார் செய்கின்றோம் என்பது இன்றையக் கணினிகளை விட இன்றைய ஆசிரியர்களுக்குத் தான் தெரியும்,கணினி யுகத்துக் குழந்தைகள், கணினியை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தி வந்தாலும் இந்தப் பேரிடர் காலத்தில் பல சிக்கல்களையும் சிரமங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற காரணத்தால், கல்வியில் கணினியின் பயன்பாடு ஒரு நல்ல ஆக்கப்பூர்வமாக அமையும்.

இன்னும் தொடர்வோம்.தொடர் 30:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30– சுகந்தி நாடார்தொடர் 31:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31– சுகந்தி நாடார்
தொடர் 32:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32– சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 33– சுகந்தி நாடார்

 இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 34 – சுகந்தி நாடார்