இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 36 – சுகந்தி நாடார்நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்புச்சூழல்

நாம் இதுவரை மாணவர்களுக்கு இளமையிலேயே கணினி நிரெல்ழுதும் தன்மையைப் போதிப்பதன் மூலம் வருங்காலத்தில் அவர்களின் வேலைவாய்ப்பும் , கணினியில் ஆளுமையும் கணினியை ஆளும் திறமையும் கொண்டவர்களாக மாற்ற முடியும் என்றும் , கணினி ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், எல்லாப் பாட ஆசிரியர்களும் வழக்கமான பாடத்திட்டத்திலிருந்து சிறிது மாற்றம் செய்த வகுப்பறைச்சூழலை மாணவர்களுக்கு ஏன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், கணினி சார்ந்த உலகத்தில் ஒரு ஆசிரியர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்றும் பார்த்து வந்தோம். இன்று கல்வியும் மாணவர்களும் வர்த்தகத் தரவுகளாகக் கருதப்படும் நேரத்தில் மாணவர்களின் மனநிலை குறிப்பாக நடுநிலைப்பள்ளி மாணவர்களின் மனநிலையைக் கணிக்க ஒரு ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலுமே முடியும் மனிதனின் குணாவசியங்களையும் மனநிலையையும், கணிக்கும் அளவிற்கு இன்னும் கணினியின் செயற்கை அறிவுத்திறன் வளரவில்லை. அது மட்டுமில்லாமல் இந்தக் கொரானாத் தொற்றுக்காலத்தில் அனைவருடைய அதீதக் கணினிப்பயன்பாடு, திறன்பேசியின் பயன்பாடு இணையங்களின் பயன்பாடு ஆகியவை உலக அரசியலிலும் வர்த்தகத்திலும் பல மாற்றங்களைக் கொண்டு வருவதோடு மட்டுமில்லாமல், வளர்ந்து வரும் கணினித் துறையில் இருக்கும் சிக்கல்களையும் ஆபத்துக்களையும் எடுத்துக் காட்டுகின்றது. அப்படிப்பட்ட ஒரு பிரதானமான சிக்கல் மக்களின் மனநிலை. மற்றவர்களைப் பார்க்க முடியாமலும், வெளியே செல்ல முடியாத நிலையில் பணியில் சுமை பொருளாதாரப் பிரச்சனை ஆகிய பலவிதங்களில் மனித மனத்தை ஆக்கிரமித்து அவர்களுக்கு பெரும் மனௌளைச்சலைக் கொடுத்து இருக்கின்றது. கணினி முன்னால் அமர்ந்து இருப்பது மனிதர்களின் மனதில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி இருக்கக் கூடும். கணவன் மனைவி குழந்தைகள் அனைவரும் தங்களுடைய பணிக்கு ஏற்ற வேறுபட்ட சூழல்களை வீட்டிலேயே கொண்டுவருவது பலருக்குப் பிரச்சனையாக இருக்கும்.

நாம் மன உளைச்சல் என்றவுடன், மன நோயாளி என்று பொருள் கொள்கின்றோம். அப்படி இல்லாமல் நுரையீரலின் நலம், இருதயத்தின் நலம் சிறுநீரகத்தின் நலம் என்பது போல மன உளைச்சல் என்பது மனித மூளையின் நலத்தைக் குறிக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு நாம் குறிப்பாக நடுநிலைப்பள்ளி மாணவர்களின் மனநிலையைப் பார்ப்போம். பொதுவாக நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இந்த வயதில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாறுதல்களை அடைகின்றனர். அதில் முக்கியமான ஒன்று சக மாணவர்களின் வழிநடத்துதல்(peer pressure).சக மாணவர்களிடம் பழகுவதன் மூலமே அவர்கள் தங்களைப் பற்றி அறிந்து கொள்கின்றனர். பெற்றோர் ஆசிரியர் இவர்களைத் தவிர்த்து தன்னைப் பற்றிய தேடுதல் அவர்களுக்குள் தோன்ற ஆரம்பிக்கின்றது.ஆனால் இந்தத் தொற்றுகாலத்தில் மாணவர்கள் தங்கள் சக தோழர்களைச் சந்திக்க முடியாமல் அவர்களுடன் ஓடியாடி விளையாட முடியாமல், மிகுந்த மனௌளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

ஒவ்வோரு அமெரிக்கப் பள்ளிகளிலும் மாணவர்கள் தங்கள் மன உளைச்சலைப் பற்றி பேச ஒரு வழிகாட்டி இருப்பார். மே மாதம் 20ம் தேதி வெளிவந்த நியூயார்க் டைம்ஸ் செய்தி ஒன்றில் 55 மில்லியன் குழந்தைகள் தங்கள் சக மாணவர்களைச் சந்திக்காமல் பேசாமல் பழகாமல், சரியான வழிகாட்டுதல் கிடைக்காமல் வீட்டுப்பாடங்களைச் செய்வதில் திணறுவதாகவும் அதனால் அவர்களுடையத் தன்னம்பிக்கை குறைந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகத் தெரிவிக்கின்றது. இது தவிர ஊடகங்களின் எந்நேரமும் எதிர்மறைச்செய்திகள் அவர்களுக்குள் வன்முறையையும் தூண்டுகின்றது என்று தெரிவிக்கின்றது. உறவினர்களை இழந்த துயரம் தங்கள் மன உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை என்று பலவிதங்களில் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்கள் மன உளைச்சலோடு வகுப்பிற்கு வரும் போது அவர்கள் பாடங்களைச் சரியாகக் கவனிப்பது இல்லை.மனித மூளையும் அதன் உணர்வுகளையும் வேதியியல் பொருட்களாகப் பிரித்து நம் உணர்வுகளோடு தொடர்புப்படுத்திக் கூறுகிறார் Habits of Happy Brain என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் Loretta Gtaziano Breuning. அவர் தன் நூலில் கூறுவதாவது,” Dopamine Endorphin Oxytocin Serotonin என்ற மூளையில் உள்ள வேதிப்பொருட்கள் நாம் நேர்மறையாக யோசிக்க உதவும் இரசாயனங்கள் இதில் Dopamine நாம் ஏதாவது சாதித்து வெற்றிபெறும்போது உண்டாகும் ஆனந்தத்தால் மூளையில் சுரக்கிறது. Endorphin தாங்கமுடியாத வலி வரும் போது அதை மூளை உணரா வண்ணம் இருப்பதற்காக மூளை நாம் துன்பப்படும்போது இருவாகின்றது. Oxytocin நமக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. Serotonin தன்னிறைவையும் தன்முனைப்பையும் தருகின்றது. இந்த வேதியியல் பொருட்கள் எப்போதுமே நம் மூளையில் சுரந்து கொண்டே இருப்பதில்லை. நமது ஒவ்வோரு அனுபவத்திற்கும் ஏற்றபடி இந்த சுரப்பிகள் சுரக்கின்றன. இந்த வேதியியல் பொருட்கள் ஒவ்வோரு உயிரினமும் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளவும், ஆபத்துக்களில் பிழைத்தஞ்சி வாழ்வதற்கும்(survival) உறுதுணையாக இருக்கின்றன. இந்த இரசாயனங்களை நாம் சில பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் நம் உடலில் இயற்கையாக உருவாக்கலாம்

மாணவர்கள் ஆசிரியரின் பாராட்டைப் பெறும்போதோ தேர்வில் மதிப்பெண் வாங்கும்போதோ ஒரு மகிழ்ச்சியான மனநிலையில் வெற்றி பெற்ற மனநிலையில் இருக்கும் தன்மையை அவர்கள் வகுப்பிற்கு வரும் முன் முப்பது நிமிடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் பெறலாம். புதிய விஷயங்களை அனுபவங்களை மாணவர்கள் ஆசையோடு எதிர் பார்க்கின்றனர். இதற்குக் காரணம் Dopamine அளவு தான். மாணவர்களின் வாழ்வில் வரும் ஒவ்வொருபிரச்சனையையும் ஆசிரியர்களால் தீர்க்க முடியாது. ஆனால் வகுப்பில் ஆசையாக பாடம் கற்றுக் கொள்ளவும் கவனச்சிதறல் இல்லாமல் பாடம் நடத்துவதைப் புரிந்து கொள்ளுதலும் உடற்பயிற்சியின் மூலம் கிடைக்கும் Dopamine உதவி செய்கின்றது. நேரடி வகுப்பிலோ இணைய வகுப்பிலோ மானவர்கள் கவனம் குறைவாக இருப்பது போலத் தெரிந்தால் அவர்கள் இருக்கும் இடத்திலேயே சிறுசிறு உடற்பயிற்சிகளைச் செய்யச் சொல்லாம். அல்லது ஏதாவது பாடலை இரண்டு மூன்று நிமிடம் ஓட விட்டு அவர்களை நடனம் ஆடச் சொல்லாம். தினமும் உடற்பயிற்சி செய்யும் மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஏதாவது பரிசு தரலாம். அல்லது வகுப்பில் அனைவர் முன்னிலையிலும் பாராட்டலாம். அதாவது எந்த ஒரு பாடமாக இருந்தாலும் உடற்பயிற்சி அந்தப் பாடத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஏன் எனில் நம் மானவர்களின் மூளைத் திறனை நாம் கணினியை விட சிறப்பாக வேலை செய்ய பழக்க வேண்டும்.

Oxytocin மாணவர்களுக்கு எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. தேர்வு நேரங்களில் வரும் மன அழுத்தத்தைக் குறைக்க இது உதவி செய்கின்றது. யோகாப் பயிற்சி முத்திரைப் பயிற்சி ஆகியவை மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். முக்கியமாக வகுப்புத் தொடங்கும் முன் நடத்தப் போகும் பாடத்தைப் பற்றி நிறை குறைகளைச் சொல்லி அவர்களுக்குப் பாடத்தைப் பற்றி நம்பிக்கையூட்ட வேண்டும். மாணவர்கள் வகுப்பில் சொல்லும் கருத்துக்களை நாம் குறை சொல்லாமல் ஏற்றுக் கொண்டு அவர்களுக்குப் புரியும்படி பிரச்சனைகளையும் முடிவுகளையும் விளக்க வேண்டும். மாணவர்களை அணிகளாகப் பிரித்து அவர்களுக்கு வேலைகள் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் மானவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் மற்றவர் உள மறிந் செயல்படவும் இது உதவும். மாணவர்கள் தங்கள் கருத்துக்களைப் பயமின்றியும் தயக்கமின்றியும் பகிர்ந்து கொள்ள அவர்களுக்குக் கருத்துப் பெட்டிகள் நேரடி வகுப்பில் வைக்கலாம். இணைய வகுப்பு என்றால் நமது மின்னஞ்சல். புலன எண்களைக் கொடுத்து, அவர்கள் நம்மைத் தொடர்பு கொள்ள வழி வகுக்கலாம்.இணைய வகுப்புக்களில் இந்த பழக்கத்தை நாம் கட்டாயம் கொண்டு வருவது அவசியம் ஏன் எனில் ஒரு கணினியின் முன்னால் அமர்ந்திருக்கும் போது அது நாம் பாதுகாப்பான சூழலில் இருப்பதாக ஒரு மாயையை மனதிற்குள் உருவாக்குகின்றது. இதனால் நிஜ உலகில் செய்யத் தயங்கும் செயல்களைத் தயக்கமில்லாமல் தைரியமாகச் செய்ய வாய்ப்பு இருக்கின்றது. இதை மாணவர்களுக்கு நாம் நம் செயல்கள் மூலம் விளக்கிக் கூற வேண்டும். அப்போது தான் இணைய வழி மாணவ மாணவியருக்கு ஏற்படும் குற்றங்களைத் தடுக்கும் தற்காப்பு முறைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவர். நாம் எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் நாம் சொல்வதை மானவர்கள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் மாணவர்கள் இணையத்தில் குழந்தைகளைக் கவர வேண்டி நல்லவர்களாக நடிக்கும் கயவர்களிடம் சிக்கிக் கொள்ள வாய்ப்பு அதிகம். அதனால் ஆசிரியர்கள் மாணவர்கள் தங்கள் கருத்துக்களைத் தங்கு தடையின்றி இணையம் வழி பகிர ஒரு நேர்மறையான சூழலை உருவாக்கித் தர வேண்டும்.

எந்த ஒரு வகுப்புச்சூழலிலும் ஆசிரியரும், மாணவரும் சேர்ந்து உணவு உண்ணும் போது மாணவர்களின் தயக்கங்கள் குறைந்து ஒரு ஆசிரியரை நம்ப ஆரம்பிக்கின்றனர். இணைய வகுப்பு நேரங்களில் சில மாணவர்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனையைச் சொல்லத் தயங்குவர். அடுத்து மற்ற மாணவர்கள் முன் தங்கள் கருத்துகளைச் சொல்லவும் தயங்குவர். அவ்வாறு இருக்கும் மாணவர்களுக்குப் பாடத்தைக் கதையாகச் சொல்ல வைக்கலாம். எந்த ஒரு பொருண்மையையும் கதை வடிவில் கொடுக்கும் போது, இரண்டு விஷயங்கள் மூளைக்குள் நடக்கின்றது, முதலாவது கற்பனை உலகு என்று தெரிந்த பிறகு நிதர்சனத்தைச் சந்திக்க வேண்டிய அச்சம் அவர்களை விட்டு அகல்கிறது. இரண்டாவது மாணவர்களின் படைப்புத் திறனும் மொழித் திறனும் அதிகரிக்கின்றது.

கணினி உலகம் என்னும் போது தகவல் செய்தி பரிமாற்றம் தான். தன்னுடைய கருத்தைக் கதை வடிவில் சொல்லும் போது ஒரே கருத்தைப் பல வகைகளில் பிரித்துச் சொல்லலாம் பல்வகை ஊடகங்களாக மாற்றிக் கொடுக்கலாம். முக்கியமாகக் கணினி எழுதும் திறனான பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிமுறைகளை வித்தியாசமாகவும், புத்தாக்க சிந்தனையுடனும் அணுக மாணவர்களுக்குக் கதை சொல்லுதக் பழக்கிக் கொடுக்கின்றது.

ஒரு வகுப்பறைச் சூழலே மாணவர்களின் மனதைக் கல்வியின் பால் ஈர்க்கின்றது. மாணவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வையும் தன்னம்பிக்கையையும் கொடுத்து அவர்களின் மூளையை எப்படி ஒரு கணினி மூளையாக வளர்ப்பது என்பதற்கான அடிப்படைகளை நாம் பார்த்து வந்தோம்ம்எந்த ஒரு பொருண்மையையும் கதையாக எப்படிச் சொல்லலாம் அதனால் கணினி நிரெழுதும் தன்மை எப்படி வளரும் என்று இனியும் பார்க்கலாம் இந்த எண்ணிம காலத்தில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் ஒரு மிகப்பெரிய நிறுவனம் டிஸ்னி . அவர்களின் கதைகள், மூலம் இளம் மாணவர்களை எவ்வாறு சிந்திக்க வைக்கின்றனர் என்று அடுத்துப் பார்ப்போம்.

இன்னும் தொடர்வோம்.தொடர் 30:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30– சுகந்தி நாடார்தொடர் 31:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31– சுகந்தி நாடார்
தொடர் 32:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32– சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 33– சுகந்தி நாடார்

 இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 34 – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 – சுகந்தி நாடார்