நடுநிலைப் பாடங்களில் கற்பனைத் திறனும் கணினி நிரல் எழுதும் தன்மையும்
“முதலில் யோசியுங்கள், அடுத்ததாக நம்பிக்கை வையுங்கள் மூன்றாவதாகக் கனவு காணுங்கள் கடைசியில் தைரியமாய் செயல் படுங்கள்”
என்பது வால்ட் டிஸ்னி அவர்களின் வாக்கு. 1935ல் அசைவுப்படங்களாக முதன் முதலில் குழந்தைகளுக்கான படத்தைத் தயாரித்து வெளியிட்டவர். இன்று திரைப்படத்துறையில் அசைவூட்டத் தொழில்நுட்பத்தில் உலகில் தலை சிறந்து விளங்கும் ஒரு நிறுவனம் வால் ட் டிஸ்னி. அது மட்டும் இல்லாமல் வர்வதேவ அளவில் தொலைக்காட்சி நிறுவனம், இணைய வழி ஒலி ஒளி பரப்பு , விளையாட்டுக் குறுஞ்செயலிகள், பத்திரிக்கைத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி, இணைய வணிகம் என்று தொழில்நுட்பத்தின் எல்லாத் துறையிலும் முன்னணியில் நிற்கின்றது அந்த நிறுவனம் வால்ட்டிஸ்னி நிறுவனத்தைப் போல் குழந்தைகள் பெரியவர் என்று பாரபட்சம் இல்லாமல் அனைவர் மனதையும் கவர்ந்து இழுக்கும் தன்மையுடையன வால்ட் டிஸ்னியின் படைப்புக்கள். அவரது படைப்புக்களிலிருந்து ஒரு கற்பனைக் கதை என்பது மானவர்களின் உள்ளத்தில் எப்படியான தாக்கத்தை உருவாக்கும்? காலத்திற்கு ஏற்ப குழந்தைகளின் மனதைக் கவர்ந்து அவர்களின் கவனத்தை ஈர்த்து வகுப்பறையில் அவர்களை ஈடுபடுத்த வைக்க வேண்டும் என்பதற்கு வால்ட் டிஸ்னி நிறுவனக் கதைகளை நாம் இந்தக் கட்டுரையில் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
இதுவரை கணினி நிரல் எழுதும் தன்மையை நம் மாணவர்களுக்கு வளர்ப்பதன் மூலம் அவர்களின் எதிர்கால வேளை வாய்ப்பை எவ்வாறு அதிகரிக்கலாம் என்று பார்த்துக் கொண்டு இருந்தோம். அந்த வகையில் வால்ட் டிஸ்னி என்ற ஒரு மனிதனின் கற்பனைத் திறன் எப்படிப்பட்ட நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. உலகமெங்கும் எப்படிப்பட்ட வேலை வாய்ப்புகளைக் கொடுத்து உள்ளது என்று யோசித்துப் பார்த்தோமேயானால், ஒருவரின் கற்பனைத் திறமையின் அவசியம் நமக்குப் புரியும்.
ஒரு மொழித் திறனும் கற்பனைத் திறனும் எவ்வாறு நமது மாணவர்களின் மூளையில் ஆக்கப்பூர்வமான வழியில் இரசாயன மாற்றங்களைக் கொண்டு வந்து அவர்களை மன உளைச்சலிலிருந்து வெளிவர வழி வகுக்கும் என்று முதலில் பார்ப்போம். Dopamine நம் மூளையில் எளிதாகச் சுரக்க வேண்டும் என்றால் ஒருவர் தன்னுடைய சிறுசிறு வெற்றிகளைக் கொண்டாட வேண்டும், அடுத்ததாக மிகப்பெரிய வேலைகளைச் சிறிது சிறிதாக நாம் செய்து முடிக்க வேண்டும்.
டிஸ்னிக் கதைகளை நாம் எடுத்து ஆராய்ந்து பார்த்தோம் என்றால். ஒரு குழந்தை தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சவால் களை கதையின் கதாபாத்திரம் ஏற்று நடப்பதாக இருக்கும். அதனால் ஒரு கதாபாத்திரம் வெற்றி அடையும் போது தாங்களே வெற்றி பெற்றதாகக் குழந்தைகள் உணருகின்றனர். அது மட்டுமல்லாமல் கதை முடிவில் கதாபாத்திரம் ஒரு பெரிய வெற்றியைப் பெறாமல் சிறு சிறு பிரச்சனைகளைத் தீர்வுகளை விடுவித்து அதன் முன் முக்கியமான பிரச்சனையைத் தீர்ப்பதாய் அமைந்து இருக்கும். இது Dopamine சுரக்க வழி வகுக்கின்றது. Endorphin நாம் அழும் போதும் சிரிக்கும் போதும் நம் மூளையில் உற்பத்தியாகின்றது. கதைகளில் வரும் ஒவ்வோரு நிகழ்வுகளிலும் நம்முடைய அழகையும் சிரிப்பும் தூண்டப்படும் வகையில் அமைந்திருப்பதை நாம் பார்க்கலாம். நம் உணர்வுகளைப் பயமின்றி எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நாம் உணர வால்ட் டிஸ்னிக் கதைகள் நமக்கு உதவி செய்கின்றன. நம்முடைய பல்வேறு உணர்வுகளை நம்முடன் பம் பார்க்கும் உறவுகளிடமும் பகிர்ந்து கொள்வதால் நம்மைச்சுற்றி இருப்பவர்கள் மேல் நமக்கு நம்பிக்கை உண்டாகின்றது. நாம் நம்மை நம்பும் போதும் நம்மைச்சுற்றி உள்ளவர்களை நம்பும் போதும் Oxytocin என்ற இரசாயனம் நம் மூளையில் சுரந்து நமக்குப் பாதுகாப்பு உணர்வை உண்டாக்குகின்றது. அது மட்டுமல்லாமல் கற்பனைக் கதாபாத்திரங்களை நமது நண்பனாகத் தோழியாக நாம் பார்க்க ஆரம்பிக்கும் போது கூட நமது நம்பிக்கைத் தூண்டப்பட்டு நமக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படுகின்றது. ஒருவர் தன் செயல்களில் பெருமை கொள்ளும் போதும், பிறர் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றோம் என்ற நம்பிக்கை நமக்கு வரும் போதும் Serotonin நம் மூளையில் சுரந்து நமக்குத் தன்னிறைவையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கின்றது.
ஆக கற்பனையில் உருவானாலும் அதை எவ்வளவுக்கு எவ்வளவு தத்ரூபமாகக் கொடுக்க முடியுமோ அவ்வளவு துல்லியமான நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை ஆராய்ந்து அதன் பின்னணியில் வால்ட் டிஸ்னிக் கதைகள் புனையப்பட்டு இருக்கும். இதனால் அந்தப் படைப்பில் மூழ்கி இருக்கின்ற ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரமாகவே மாறி விடுகின்றோம் எனவே ஒரு மணி நேரத்தில் வாழ்வின் ஒரு மூளை அடைய வேண்டிய எல்லா உணர்ச்சிகளையும் டிஸ்னியின் கதைகள் தூண்டுவதால் மூளையின் இரசாயனங்கள் தூண்டப்பட்டு நாம் உற்சாகமாகவும் ஆனந்தமாகவும் செயல்படுகின்றோம். இந்த ஒரு உணர்வே வால்ட் டிஸ்னியின் படைப்புக்கள் மீண்டும் மீண்டும் வெற்றி பெறக் காரணம்.
வால்ட் டிஸ்னியைப் போல நாம் வகுப்புகளில் மாணவர்களைக் கவர்ந்து இழுக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக இணைய வழிக்கல்வியில் இது மிக மிக அவசியமாகின்றது.
கற்பனை என்பது மொழி, வரலாறு என்று மட்டுமில்லாமல், அறிவியல் கணிதம் ஆகிய பாடங்களின் பொருண்மை வழியாகவும் நாம் மாணவர்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும். அதற்காக ஆசிரியர்களாகிய நாம் கதைகள் புனைய வேண்டும் என்று சொல்ல வரவில்லை. நான் கூற வருவது பாடப் பொருண்மை எதுவானாலும் மாணவர்களை அதைக் கற்பனை வடிவில் ஒரு படைப்பாகக் கொடுக்கச் சொல்லுங்கள். மாணவர்களைத் தேர்வுக்காகத் தயாரிப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவர்கள் ஒரு நாளில் எட்டு மணிநேரம் நம்மோடு செலவிடுகின்றனர் என்பதாலும் அதன் பின்பும் நாம் கூறும் வேலைகளைச் செய்வதில் நேரத்தைச் செலவிடுவதாலும் அ நாம் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றும் காரணிகளாகின்றோம் . அதனால் வித்தியாசமான , மாணவர்களின் கற்பனை வளத்தைத் தூண்டக்கூடிய வழியில் அவர்களின் வகுப்பறை செயல்பாடுகளையும் வீட்டுப்பாடங்களையும் நாம் அமைக்க வேண்டும். இது இன்றைய இணைய வகுப்பறையில் முக்கியமான கூறாக இருக்க வேண்டும். ஏன் எனில் மாணவர்களின் மன உளைச்சலை அவர்களின் கற்பனைத் திறன் கட்டுப்படுத்துகின்றது.
எந்த ஒரு பொருண்மையிலும் கற்பனையில் கதை புனையும் போது பிரச்சனைகளைத் தீர்க்கும் வழி வகைகளை மாணவர்கள் பெறுகின்றனர் என்பது இங்கேக் குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவர்களின் கணினி நிரல் எழுதும் திறன் அவர்களின் அனிச்சை செயலாக மாறக்கூடிய சூழ்நிலையைக் கற்பனை, கதைகள் உருவாக்கிக் கொடுக்கின்றன. மாற்றி யோசிக்கும் திறனும், ஒரு கட்டடத்தை விட்டு வெளியே வந்து சந்திக்கும் திறனும்Ithink outside the box) மாணவர்களுக்கு வளர கற்பனையில் கதைப் புனையும் திறன் கொடுக்கின்றது. எல்லாவற்றிலும் முக்கியமாக மாணவர்களின் ஆராய்ச்சித் திறன் வளர்கின்றது.
உதாரணத்திற்கு வால்ட் டிஸ்னி கதைகளை எடுத்துக் கொள்ளுங்கள் ஒரு கற்பனைக் கதையில் தத்ரூபமானப் பின்னணி கொடுக்க வேண்டும் என்றால் படைப்பாளிகள் எந்த அளவிற்கு ஆராய்ச்சி செய்து இருக்க வேண்டும். டிஸ்னியின் ஒவ்வோரு கதைகளிலும் நாம் அதன் பின்னணிக்கான ஆழமான ஆராய்ச்சியை நாம் பார்க்கலாம். உதாரணத்திற்கு The good dinosaur என்ற படக்கதையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் வளரும் மூன்று மகன்களில் மூன்றாவது மகன் ஒரு நோஞ்சானாக ஒரு சாதாரண வேலையைச் செய்ய முடியாமல் ஒவ்வோரு முறையும் தோற்றுப் போகின்றான். வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்று மகனுக்குப் பாடம் எடுக்க வேண்டி தந்தை மகனை அழைத்துச் செல்கின்றார். ஆனால் இந்த நோஞ்சான் மகனின் தவறினால் தந்தை பெரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணம் அடைகின்றார். இந்த வேளையில் விவசாயி சேர்த்து வைத்திருக்கும் தானியத்தைத் தின்ன வரும் ஒரு விலங்கைத் துரத்தப் போய் இந்த நோஞ்சான் மகன் தன் வீட்டை விட்டுத் தொலைதூரம் சென்று விடுகின்றான். அதன் பின் அவனும் அந்த விலங்கும் எப்படி நண்பர்களானார்கள், எந்த மாதிரியான மக்களை ஆபத்துக்களைக் கடந்து அவன் வீடு திரும்புகின்றான் என்பது தான் கதை. இந்தக் கதை ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் விரும்பப்பட்ட ஒரு கதை . காரணம் இங்கே விவசாயக் குடும்பமாக சித்தரிக்கப்படுவது ஒரு டைனோசரின் குடும்பம். விலங்காக வரும் பாத்திரம் மனிதன். அதாவது விலங்கை மனிதனாகவும் மனிதனை விலங்காகவும் காட்டும் அதே சமயம் குடும்பம், தன்னம்பிக்கை என்ற இரு முக்கியமான விடயங்களை இந்தக் கதை போதிக்கின்றது. இந்த அக்கதையைக் கொண்டு ஆசிரியர்களால், மனித வரலாறு அறிவியல் சமூகவியல் என்று பலதரப்பட்ட வழியில் மாணவர்களின் சிந்தையைத் தூண்டி சிந்திக்கவும் கருத்தாழம் மிக்க உரையாடல்களை வகுப்பறையில் நடத்தவும் உதவியாகக் கதைக்களம் இருக்கின்றது. என்னென்ன பொருண்மையின் கீழ் கதையின் பின்ணக்கான ஆராய்ச்சி நடந்துள்ளது என்பதும் வகுப்பறை விவாதத்திற்கு ஏற்றதாக அமைகின்றது
இப்படிப்பட்ட கற்பனை வளங்கள் நம் நடுநிலை மாணவர்களுக்கு இயற்கையாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் சமூகத்தில் தன்னுடைய இடம் என்ன என்ற கேள்வியும் நடுநிலை வகுப்பு மாணவர்களிடையே நாம் காணலாம். அவர்களின் கற்பனை வளத்தை தூண்டுவதன் மூலம் நாம் அவர்களின் தேடலுக்கான விடையையும் கொடுத்து அவர்கள் வகுப்பில் ஆர்வமாகப் பங்கு கொள்ள வைக்க முடியும். வகுப்பில் ஆர்வமாகப் பங்கு கொள்ளும் பொது தேவையில்லாத கவனச்சிதற்ல்களை அவர்களே குறைத்து விடுவர்.
இன்னும் தொடர்வோம்.
தொடர் 30:
தொடர் 31:
தொடர் 32: