இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38 – சுகந்தி நாடார்கணினி மொழி பயில உதவும் தளங்கள்

நடுநிலை மாணவர்களின் கதை சொல்லும் திறனை வளர்க்கும் போது அவர்களின் கணினி நிரெழுதும் தன்மையும் வளரும் என்று பார்த்துக் கொண்டு இருந்தோம். பொதுவாகக் கதை சொல்லும் திறன் கற்பனை வளத்தை மட்டும் தூண்டும் ஒரு மொழிப்புலமையாக மட்டுமே பார்க்கும் காலத்தில் கதை எழுதினால் கணினி நிரல் எழுதும் தன்மை வளருமா என்ற ஐயப்பாடு பலருக்கு வரலாம். ஆனால் சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால் சில உண்மைகளை நாம் விளங்கிக் கொள்ளலாம்

கணினியில் நாம் வேலை செய்வது என்பது என்ன? நாம் கணினிக்கோ, திறன்பேசிக்கோ பலவிதமான உள்ளீடுகளைக் கட்டளையாக அனுப்புகின்றோம். நாம் கொடுக்கும் கட்டளைகளை உள்வாங்கி அந்தக் கணினி நாம் சொல்லும் வேலையைப் புரிந்து கொள்கின்றது. நமது கட்டளைக்கு ஏற்ப கணினி வேலை செய்யவில்லை என்றால், நாம் கணினியை புரிந்து அதற்கு ஏதுவான கட்டளையைக் கொடுக்கவில்லை என்ற பொருள். அதாவது மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ள ஒரு மொழி எவ்வாறு உதவுகின்றதோ அது போல ஒரு கணினியோடு தொடர்பு கொள்வதும் மொழி சம்பத்தபட்டதே.

கணினி என்பது0.1 ஆகிய எண்களைக் கொண்டே நம் கட்டளையை உள்வாங்குகின்றது. மனிதர்களுக்கும் கணினிக்கும் இடையில் ஒரு மொழிபெயர்ப்பாளராக மனித மொழியை இரும எண்களாக மாற்றிக் கொடுக்கும் மொழிக்கு மொழி மாற்றி மொழிகள் compiling languges என்று பெயர். பைதான் ஜாவா ரூபி/ரூபிரெட் ஆன் ரெய்ல்ஸ்/ எச்.டி எம் எல், ஜாவாஸ்கிரிப்ட் சி சி++சி# ஆப்ஜெக்ட்டிவ் சி பி.எச்.பி சிஃவல், ஸ்விஃப்ட ஆகிய மொழிமாற்று மொழிகளில் ஏதாவது இரண்டு மொழிகளையாவது மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் கணினி ஆசிரியர்கள் வழிநடத்துதல் இல்லாமல் மாணவர்களால் அதைக் கற்றுக் கொடுக்க முடியாதே என்ற தடு மாற்றம் இன்றி, இன்று இணைய வழி நடு நிலை மாணவர்கள் தங்களுடைய சுய முனைப்புடன் அதிக செலவில்லாமல் கணினி மொழிகளின் அடிப்படையை மிக எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். தொடக்க நிலை மாணவர்களுக்கென்று சில தளங்கள் இருந்தாலும் அந்த வயது மாணவர்களைக் கணினியில் அதிக நேரம் வைத்து இருப்பது அவர்களின் உடல்நிலைக்கும் மனநிலைக்கும் சரியல்ல. தொடக்கப்பள்ளி மாணவர்களோடு கண்டிப்பால் ஒரு ஆசிரியரோ பெற்றோரோ அமர்ந்து இருக்க வேண்டும். எனவே தான் இங்குக் கொடுக்கப்படும் தளங்கள் நடுநிலை மாணவர்களிலிருந்து யார் வேண்டுமானாலும் சுயமுனைப்போடு இந்த மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம். நடுநிலை மாணவர்களுக்குக் கதை எழுதும் திறனை நாம் வளர்ப்பதன் மூலம் சில தளங்களில் ஆர்வமாக மாணவர்கள் கணினி நிரல் எழுதும் வழிகளைக் கற்றுக் கொள்ளலாம்.கணினி மொழி பயில உதவும் தளங்களில் முதலில் முக்கிய இடம் வகிப்பது. Snap என்ற தளமாகும், இது அமெரிக்க நாட்டில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாகும்.https://snap.berkeley.edu என்ற இணையச்சுட்டியில் பல உதாரணங்கள், ஆதார வளங்கள் கொண்டு மாணவர்கள் கணினி மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.

Scratch எனப்படும் ஒரு தளமாகும் இலவசமாகத் தன் சேவையை இந்த தளத்தின் மூலம் மாணவர்கள் ஊடாடும் கதைகள் அசைவூட்டம் விளையாட்டுக்கள் எனப் பல செய்து மற்றவர்களோடு பகிரலாம்.https://scratch.mit.edu என்பது இதன் இணைய தள முகவரியாகும். இந்தக் களத்தில் மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய கதைகளை மூலமாகக் கொண்டு கணினி மொழியின் அடிப்படையை கற்றுக் கொள்ளலாம்.

கணினி மொழியை மாணவர்கள் தன்னார்வத்தோடு பயில அடுத்து உதவி செய்வது https://www.codecademy.com என்ற இன்னுமொரு தளமாகும். இதிலும் மாணவர்கள் இலவசமாகக் கணினி நிரல் எழுதும் வகையைப் பயின்று கொள்ளலாம். Scratch தளத்தை விட இது முற்றிலும் வேறுபட்டது. ஒரு கணினியே மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பிய கணினி மொழியைப் பல பயிற்சிகளோடு கற்றுக் கொடுக்கின்றது. இந்தத் தளத்தில் இலவசமாகவும் பணம் செலுத்தியும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.

https://code.org என்ற தளம் வழியாகவும் மாணவர்கள் கணினி நிரல் எழுதும் பயிற்சியைப் பெற்றுக் கொள்ளலாம். மாணவர்களின் வகுப்புக்களுக்கு ஏற்ப கணினி மொழிகள் பிரித்தெடுக்கப்பட்டு கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

W3Schools Online Web Tutorials என்ற தளத்திலும் மாணவர்கள் இலவசமாக உதாரணங்களுடன் பல கணினி மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம். இதில் பாடங்களும் அந்தப்பாடங்களைச் செய்து பார்ப்பதற்கு வசதியும் இலவசமாகக் கிடைக்கின்றது.

இன்றையக் கல்வியின் பன்முகத் தன்மை காரணமாக நமது பாடத்திட்டத்தில் ஓரளவு அடிப்படை கணினி மொழிகளைக் கற்க நாம் மாணவர்களைப் பள்ளிக் காலத்திலேயே பழக்க வேண்டும். பாடப் பொருண்மைகளை நம் மொழியல் கணினிக்கு எடுத்துச் செல்வது , கணினிக்குப் புரிய வைப்பது இன்றையக் காலத்தின் கட்டாயம். கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்காவும் சீன நாடும் தொழில்நுட்பத்தில் செய்த பொருளாதார, மனித முதலீட்டினால் இன்று கணினித் துறையில் முன்னணியில் இருக்கின்றன. இந்த நிலை உடனே மாறா விட்டாலும் நாம் கணினித் தொழில்நுட்பத்தில் சுதந்திரம் கொண்ட ஒரு வல்லரசாக வளருவதற்கு, நாம் கற்பிக்கும் பாடப் பொருண்மையோடு கணினி நிரல் எழுதும் தன்மையையும் கணினியை ஆளும் திறமையையும் கற்றுக் கொடுத்தல் மிக அவசியம்.

 இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 37 – சுகந்தி நாடார்