இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்



மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்

இணைய வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் மாணவர்களின் தன்னம்பிக்கையையும் தேர்வு எழுதுவதற்கான அடிப்படை திறன்களை சோதிக்கும் வகையிலும் இருந்தால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வகுப்பறை நேரம் பயனுள்ளதாக அமையும். வகுப்பறையும் பாடங்களும் எந்த விதத்தில் அமைந்தாலும் அவற்றின் குறிக்கோள் தேர்வுகளும் மதிப்பீடுகளும் மதிப்பெண்களும் தான்.வகுப்பறையில் வாழ்க்கை முறைக் கல்விக்காக மாணவர்களின் திறன்களை மதிப்பிடும் செயல் முறைப் பயிற்சிகளைக் கொடுத்து விட்டு மாணவர்கள் மதிப்பெண்கள் அதிகம் பெறாவிட்டால், ஒரு வெற்றிகரமான வகுப்பறையாக அந்த வகுப்பறையை ஒருவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

இணைய வகுப்பின் செயல் பாடுகள் வகுப்பறையில் எந்த ஒரு பாடத்தைக் கொடுத்தாலும், பாடத்தின் எந்த விதமான செய்தியாக இருந்தாலும் அந்தப் பாடத்திலிருந்தும் செய்தியிலிருந்தும் மாணவர்களின் நினைவுத் திறனையும் , பாடப் பொருண்மையையும் சோதிக்கும் வகையில் இருக்க வேண்டும். விரிவுரையாக மட்டும் நாம் பாடத்தை நடத்தினால் அவை மாணவர்களின் கவனத்தை முழுவதும் ஈர்க்காது. ஆசிரியர்களும் மீண்டும் மீண்டும் அதைப் பாடத்தை ஒரே மாதிரியாக நடத்தக் கூடாது. பாடப் பொருண்மையைப் பலவிதங்களில் மாற்றி மாற்றிக் கொடுக்க வேண்டும். நடத்தும் பாடத்தில் புதுமையைப் புகுத்துவதும். மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையிலும் வகுப்பு நேரங்கள் மாணவர்களுக்கு ஈடுபாட்டையும் உத்வேகத்தையும் கவனத்தையும் கொடுக்கும் வகையில் அமைய வேண்டும்.

இதற்காக ஆசிரியர்கள் இரண்டு வழிகளை ஒரு சேரப் பயன் படுத்தலாம். முதலாவது, மதிப்பிடும் பணியை மாணவர்களிடமே ஒப்படைப்பது. இரண்டாவது, வகுப்பறையில் நடத்தப்படும் விரிவுரையைத் தாண்டி மாணவர்களின் தேர்வுத் திறனை மதிப்பிடும் வகையில் வகுப்பறை செயல்களை மாற்றி அமைப்பது.. இந்த இரு வழிகளையும் இணைய வகுப்பறையில் எளிதாக உருவாக்கிப் பின்பற்றலாம்



நாம் பாடம் தொடங்கும் முன் அவர்களுக்கு என்ன நடவடிக்கை வகுப்பில் நடக்கும் என்பதையும் , அவர்களின் நினைவாற்றல், புரிந்து கொள்ளும் திறனை அளவிடும் அளவுகோலை முறையையும் மாணவர்களுக்கு வகுப்புத் தொடங்கும் முன்னரே அனுப்பி அவர்களின் நினைவு ஆற்றல் திறனை மதிப்பிட அவர்களுக்கு ஆசிரியர்கள் உதவி செய்யலாம் எடுத்துக்காட்டுக்கான இரு வகை அளவு கோல்கள் கீழேக் கொடுக்கப்பட்டு உள்ளன. இப்படிப்பட்ட மதிப்பீடுகளை மாணவர்களுக்கு வகுப்பு ஆரம்பிக்கும் முன் கொடுத்து விடுவது, மாணவர்கள் வகுப்பிற்குத் தயார் நிலையில் வரவும் உதவும்.

முன்னேற்றம் தேவைமுன்னேற்றம் தெரிகின்றதுபோதுமானதுசராசரியை விட உயர்வானதுமிகச் சிறப்பானது
முக்கிய சொற்கள்
புரிதலும் ஒப்பிடுதலும்
நேரக் கட்டுப்பாடு
முக்கியக் கருத்துக்கள்
கணினித் 

திறன்

25%50%75%1005
முக்கிய சொற்கள்
புரிதலும் ஒப்பிடுதலும்
முக்கியக் கருத்துக்கள்

 

 

தேர்வுகளின் மதிப்பெண்களையும், வாழ்க்கைத்திறனை மேம்படுத்தக் கூடிய செய்முறைப் பயிற்சிகளையும் இணைக்கும் கருவிகளாக மதிப்பீடு முறைகளும் அளவுகோல்களும் உதவுகின்றன. நாம் இங்கு மதிப்பீட்டு முறைகள் என்று பார்க்கும் போது, வார, மாத பருவ வருடாந்திரத் தேர்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத் தேர்வுகள் Summative assessment என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. அதாவது மாணவர்கள் கொடுக்கப்பட்ட செய்தியை எந்த அளவு புரிந்து கொண்டு இருக்கின்றார்கள்? எந்த அளவு தெரிந்து வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதைக் கண்டு அறியப் பயன் படுகின்றன. மாணவர்கள் தங்களின் தேர்வுத்திறனை மதிப்பிட ஆசிரியர்கள் அள்வுகோல்கலை உருவாக்கி மாணவர்களிடம் வகுப்பு ஆரம்பிக்கும் முன்னால் கொடுத்து விட வேண்டும். இந்த மதிப்பீடுகளை மாணவர்கள் வகுப்பு முடிந்ததும் வீட்டுப் பாடமாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த மதிப்பீடுகள் மாணவர்களின் நினைவாற்றலையும் புரிதல் திறனையும் மட்டுமே சோதிக்கின்றன என்ற போதிலும் அவற்றை மாணவர்களே செய்யும் போது அவர்களின் கற்றல் திறனைப் பற்றி தங்களைத் தாங்களே மதிப்பிட்டுக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் உண்மையிலேயே தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதோடு, தங்களின் குறைபாடுகளைப் போக்குவதற்காக ஆசிரியரின் உதவியை நாடுவதோடு வகுப்பறையிலும் ஈடுபாட்டோடு பங்கேற்கலாம்.



இணைய வகுப்பைப் பாட விரிவுரைக்கு மட்டுமே பயன்படுத்தாமல் மதிப்பீடுகள் செய்யவும் பயன்படுத்தலாம். இந்த மதிப்பீடுகள் ஆசிரியருக்கு மாணவனின் திறனை வெளிக்காட்டும் ஒரு கருவியாகப் பயன் படுவதோடு, அவர்களின் ஈடுபாட்டையும் அதிகரிக்கும். ஒரு மாணவருக்கு நாம் நினைவாற்றலை வளர்க்கும் வகையில் பல செயல்களை இணைய வகுப்பில் செய்யலாம். ஆசிரியர்கள் பொதுவாக நழுவல் காட்சிகள் தொழில்நுட்பத்தை இணையத்தில் பயன் படுத்துகின்றோம்.நாம் ஒரு பாடத்திற்கான விரிவுரையை நழுவல் காட்சியில் தயாரிக்கும் போது நழுவல் காட்சிகளைக் கீழே குறிப்பிட்டுள்ள ஏதாவது இருவகையில் அமையும் படி பாடத்தின் பொருண்மையையும் வகுப்பு நேரத்தையும் பிரித்து நழுவல் காட்சிகளைத் தயாரிக்க வேண்டும். நேரத்தின் அடிப்படையிலும் திறன்களின் அடிப்படையிலும் அமைக்கப் படும் நழுவல் காட்சிகள் மாணவர் ஆசிரியர் கலந்துரையாடலையும் மாணவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலை வளர்க்கும் வழியாகவும் கலந்துரையாடல் இருக்கும்.

இணைய வகுப்பறையில் மதிப்பீடுகளை நடத்த நாம் நழுவல் காட்சிகளைப் பயன் படுத்தும் போது கீழ் கொடுக்கப்படும் உத்தி மிகவும் உதவியாக இருக்கும்

முதல் ஐந்து நிமிடங்கள் : முக்கியச் சொற்கள்

அடுத்த இருபது நிமிடங்கள் : விரிவுரை

அடுத்த ஐந்து நிமிடங்கள் : விரிவுரையிலிருந்து வினாடி வினா

அடுத்த 20 நிமிடங்கள் : முக்கியச் சொற்களின் பற்றிய கேள்வி பதில்

இவ்வாறு வகுப்பில் நாம் வகுப்பு நேரத்தைப் பிரித்து வகுப்பில் நடக்கும் பாடத்தைப் பிரித்துக் கொடுப்பதனால் மாணவர்கள் கவனம் சிதறாமல் வகுப்பில் கலந்து கொள்வதோடு அவர்களின் நினைவாற்றல் திறனுக்கும் புரிந்து கொள்ளும் திறனுக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

 

எண்ணங்களின் வரை படம், வினா விடை அட்டைகள் ஆகியவற்றை நாம் நழுவல் காட்சிகளாகத் தயாரித்து நமது விரிவுரைகளுடன் மிக எளிதாகச் சேர்க்கலாம்.

மாணவர்களின் நினைவாற்றலையும் புரிந்து கொள்ளும் தன்மையையும் வகுப்பில் மதிப்பிடும் இன்னோரு விதமாகவும் நாம் வகுப்பறை விவாதத்தை மாற்றி அமைக்கலாம்

முதல் ஐந்து நிமிடங்கள் : பாடத்தைப் பற்றிய முன்னுரை

அடுத்த பதினைந்து நிமிடங்கள் : மாணவர்களுக்கான கேள்வி பதில்

அடுத்த பத்து நிமிடங்கள் : புத்தகத்திலிருந்து மாணவர்களை வாசிக்கச்சொல்லுதல்

அடுத்த பத்து நிமிடங்கள் : மாணவர்களின் கருத்து, பிரதிபலிப்பு 

அடுத்த ஐந்து நிமிடங்கள் : முக்கிய கருத்தை மாணவர்களை ஒப்பிக்கச் சொல்லுதல்

அடுத்த ஐந்து நிமிடங்கள் : மாணவர்களும், ஆசிரியரும் பாட முன்னோட்டத்தைப் பற்றி மறுபரிசீலனை செய்தல்

இந்த மாதிரியாக வகுப்பறை நேரத்தைப் பிரித்துச் சொல்லிக் கொடுக்க வேண்டிய பாடத்தை வேறு வேறு விதமாக மாற்றி மாணவர்களும் பங்கு கொண்டு செய்யும் படி நாம் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கலாம். இப்படிச் செய்வதனால் மாணவர்கள் வகுப்பில் கவனம் சிதறாமல் பங்கு கொள்வதோடு அவர்களின் நினைவாற்றலும் புரிந்து கொள்ளும் திறனும் வகுப்பு நேரத்திலேயே மதிப்பீடு செய்யப்படுகின்றது.

மாணவர்கள் வகுப்பில் கலந்து கொள்ளும் தன்மையையும் அவர்களது ஈடுபாட்டையும் ஆசிரியர்களால் மதிப்பிட முடியும். இதனால் அவர்களால் பாடங்களை ஒவ்வோரு மாணவர்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கவும், பாடத்தில் சிரமப்படும் மாணவர்களையும் அடையாளம் காண முடியும். ஆசிரியர்கள் மாணவர்களை மதிப்பிடுவது ஒரு புறம் இருக்க, மாணவர்கள் தங்கள் திறனை தாங்களே மதிப்பிட்டு அந்த மதிப்பீட்டு அட்டவணையை வீட்டுப் பாடமாக சமர்ப்பிக்கும் போது, அவர்களை அவர்களே மதிப்பிட்டு தன் குறைநிறைகளை அடையாளம் கண்டு கொள்ள உதவுகின்றது.இணைய வகுப்பறை என்பது, ஆசிரியருக்கும் மாணவருக்கும், இடையிலான தொடர்பையும், ,மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பை ஏற்படுத்தி அதை வளர்த்துக் கொள்ளவும் மிக முக்கியமான கூறு மாணவர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக இணைய வகுப்பு அமைய வேண்டும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பாலமாக,ஒரு ஆரோக்கியமான சூழலைக் கொடுப்பதாக இணைய வகுப்பறை அமைய வேண்டும்.

தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

 



தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்



தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்

 



Show 3 Comments

3 Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *