இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 – சுகந்தி நாடார்



மாற்றம் ஒன்றே மாறாதது

பள்ளிக்காலங்களிலேயே மாணவர்களுக்கு எல்லாப் பாடப் பொருண்மைகளிலும் கணினி நிரல் எழுதும் தன்மையையும் அந்தந்த பொருண்மைகள் சார்ந்த நிரல் எழுதும் பயிற்சியும் அவசியம் என்று பார்த்துக் கொண்டு இருந்தோம்?

ஏன் அதனால் என்ன விளைவுகள் உருவாகும் என்று யோசித்தால் முதலில் நமக்குத் தோன்றுவது வேலைவாய்ப்பு வசதிகளும் சுய வேலை வாய்ப்பிற்கான அதிகமான சாத்தியக் கூறுகளும் உருவாகும். இளம் வயதிலேயே கணினி நிரல் எழுதும் தன்மையை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் போது அவர்களின் கணினிப் பயன்பாடு நெறிமுறைப் படுத்தப்படுவதோடு தங்கள் பாடப் பொருண்மைகளில் ஆவலாக ஈடு பட்டுக் கற்பர். ஆவலாக கற்றல் கற்பித்தலில் ஈடுபடும் போது அவர்களின் உந்து சக்தியாக அது மாறுகின்றது. வருங்கால கணினி உலகை ஆளப்பிறந்த குடிகளாகத் தயாராவதோடு மட்டுமல்லாமல் எந்த ஒரு கணினியையும் இயந்திரத்தையும் அடியிலிருந்து தொடங்கி முடிவரை சிறப்பாகச் செய்யும் திறனும் அதற்கேற்ப ஆராய்ச்சித் திறனும் மெருகேற்றப்படும்.
மாணவர்களிடையே இயற்கையாகவே இருக்கும் கேள்வித் திறனும், துருவி அறியும் திறனும் அவர்களின் வாழ்க்கையில் வரும் எல்லா விதமான மாற்றங்களையும் பெற பள்ளிக்கால ஆழமான கணினி அறிவுத் திறன் அனுபவம் உதவி செய்யும். மாணவர்கள் எப்படிப்பட்ட எதிர்கால மாற்றங்களாக இருந்தாலும் அதை எதிர் கொண்டு வாழும் திறனை கனீனி நிரல் எழுதும் தன்மையும் கணினி மொழிக் கற்றலும் உதவுகின்றன. முக்கியமாக

  • சமுதாய, பொருளாதாரக் கட்டமைப்பு
  • இயற்கை வளங்களைப் பாதுகாத்துப் பெருக்குதல்
  • ஆழ்ந்து ஆராய்ச்சி செய்யும் திறன்
  • பண்பாடு கலாச்சார பாதுகாப்பு
  • தேசிய தனி மனித பாதுகாப்பு

ஆகிய விதங்களில் எதிர்காலத்தில் மாணவர்கள் சவால்களைச் சந்திப்பார்கள்.

சமுதாய, பொருளாதாரக் கட்டமைப்பு முக்கியமாகக் கணினி சார்ந்ததாக இருக்கும். மின்சாரம் போக்குவரத்து வணிகம் விவசாயம் என்று வாழ்வின் எல்லாப் பரிணாமங்களிலும் கணினியின் ஆட்சி இருக்கும். இந்தியாவின் பற்பலப் பிரிவுகளின் மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது, மற்ற நாடுகளின் மக்கள் தொகை குறைவாகவே இருக்கப் போவதால்,மற்ற நாடுகளை விட இயந்திர மனிதர்களின் பயன்பாடு, குறைவாக இருக்கும் என்று நாம் எதிர்பார்த்தாலும் அவற்றை இயக்கும், பழுதுபார்க்கும் கணினிப் பொறியாளர்கள் என்பது தேவைப்படலாம். மனித மூலதனம் வருங்காலத்தில் இந்தியாவில் தான் கொட்டிக் கிடக்கப் போகின்றது. உலகின் எல்லா மூலையிலிருந்தும் இந்தியத் தொழில் நுட்பவல்லுனர்களுக்கும் திறமைகளுக்கும் தேவை அதிகமாக இருக்கும். மருத்துவத் துறையில் பலபல கணினித் தொழில்நுட்பக்கருவிகள் வர இருக்கின்றன.வேளாண் துறையிலும் கூட கணினித் தொழில்நுட்பங்கள் நுழைவதை நாம் காணலாம்
கல்வி கற்கும் முறைகள் இந்தப் பேரிடர் காலத்தில் மெது மெதுவாக மாறி வருவது போல கற்பிக்கும் ஊடகங்களும் மாற ஆரம்பிக்கலாம். பாடப் புத்தகப் பொருண்மைகள் கணினி விளையாட்டுக்களாக மாறிக் கொண்டே வருகின்றன. இவற்றை எல்லாம் பயன்படுத்தும் ஆக்கப்பூர்வமான பயனாளிகளாக நம் மாணவர்கள் வளர்வதோடு, நம் சமுதாய பண்பாட்டுக் கட்டமைப்புக்களுக்கு ஏற்ப அவற்றை மாற்றும் திறன் நம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.



இயற்கை வளங்களைப் பாதுகாத்துப் பெருக்குதல் எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு இந்தப் பேரிடர் காலம் கண்டிப்பாய் உணர்த்தியுள்ளது. இயற்கையைச் சார்ந்து நாம் வாழ்ந்த வாழ்க்கை கண்டிப்பாய் நமக்கு ஒரு தன்னிறைவு தந்ததாக இருந்திருக்கும். ஆனால் தொழிற்புரட்சியின் ஆக்கப் பூர்வமான விளைவுகளை நாம் இத்தனை காலம் அனுபவித்து இருந்தாலும் அதன் எதிர்மறை விளைவுகளை உலகமே கொரானாவின் வடிவில் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றது, இயற்கையையும் அதன் வளங்களையும் மனித இனம் ஏற்கனவே சுரண்டி விட்டது நாம் அவற்றைப் பாதுகாத்து பல்கிப் பெருக வழி செய்யாவிட்டால் எத்தனை நாம் தொழில் புரட்சியிலும் தொழில்நுட்பத்திலும் வளர்ந்தாலும் இயங்கு சக்தி என்பது இயற்கையிடமிருந்து நமக்கு வர வேண்டும். அதற்கான தொழில்நுட்பங்களிலும் முனைப்பிலும் ஈடுபட நாம் நம்முடைய இன்றைய வழிமுறைகளிலிருந்து மாற்றி யோசிக்கும் திறனை வளர்ப்பது கணினி நிரல் எழுதும் தன்மையாகும்.

பல பிரச்சனைகளின் தீர்வுகளை ஒரு உயிரில் இல்லாத இயந்திரத்திற்கு 0, 1 என்ற எண்களைக் கொண்டு மட்டுமே சொல்லிக் கொடுக்க முடியும் என்ற நிலையில் மாணவர்களின் சிந்தனைத் திறன் எவ்வளவு மேம்படும்? அதுவும் இல்லாத இயற்கையை மீண்டும் புத்துயிர் கொடுத்து வளர்க்க எப்படிப்பட்ட மாறுபட்ட யோசனைத் தேவை. இதை நம் இளம் மாணவர்களைத் தவிர யாரால் கொடுக்க முடியும்? பெரியவர்கள் நாம் இத்தனை முறை பயன்படுத்திய வழிகளைவிட்டு மாற்றி யோசிக்கத் தேவையே இல்லை என்பது போலப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். ஆனால் நம் மாணவர்களின் தேவையும் பழக்க வழக்கங்களும் நம்மிலிருந்து வேறுபட்டு இருக்கின்ற இந்த இளம்பிராயத்தில் நிரெல்ழுதுவது என்னும் திறமையை நாம் கற்றுக் கொடுக்கும் போது அவர்களின் எதிர்காலத்திற்குத் தேவையான தீர்வுகளை யோசிக்க அவர்களுக்குக் கிடைக்கும் அல்லவா? இன்றைய இளம் மாணவர்களின் எதிர்கால மாற்றங்களை நாம் எவ்வாறு கணித்துக் கூற முடியும்? எதிர்காலத்தைக் கணிக்கும் திறன் நமக்கு இல்லை என்றாலும் நம் தலைமுறை செய்த பிழைகளைச் சரி செய்ய வேண்டிய சுமை எதிர்கால சந்ததியருக்கு நாம் கொடுத்துள்ளோம் என்பதை நாம் மறுக்க முடியாது. அவர்களின் சுமையை எளிதாக்கத் தேவையான திறன்களை நாம் கற்றுக் கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஆழ்ந்து ஆராய்ச்சி செய்யும் திறன்:

மாணவர்களை அவர்களின் எதிர்காலப் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்க்கும் வழி முறைகள் அவர்களுக்கு எளிதாக வர வேண்டும் என்றால் இன்றைய வழிமுறைகளிலும் பாடப் பொருண்மைகளிலும் அவர்களுக்கு அடிப்படை அறிவு தாண்டிய அனுபவம் வேண்டும் ஒருவர் வாழ்நாளில் பெறும் அனுபவத்தை எப்படி நாம் மாணவர்களுக்குக் கொடுக்க முடியும்.? இன்றைய கல்வி முறை மாணவர்களின் அடிப்படை அறிவையும் அவர்களின் நினைவாற்றலையும் மட்டுமே சோதிப்பதாக இருக்கின்றது. இந்த நிலையில் நிரல் எழுதும் தன்மை என்பது அவர்கள் பாடநூலின் அடிப்படைப் பொருண்மைகளைக் கணினிக்குச் சொல்லித் தருவது. ஒரு மாணவன் தான் கற்றதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது அந்தப் பொருண்மையில் உள்ள நெளிவுசுளிவுகளை உணர்ந்து ஆழமாகத் தெரிந்து கொண்டு தான் சொல்லிக் கொடுக்க முடியும் என்பது ஆசிரியர்களுக்குப் புரியும் . ஒவ்வோரு பாடப் பொருண்மை ஆசிரியரும் நம் துறையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டிப்பாக தெரிந்து கொண்டே இருக்கின்றோம். அது தாண்டி அதைப்பற்றிய ஆராய்ச்சியை எந்நாளும் செய்து கொண்டே இருக்கின்றோம். மாணவர்களுக்குக் கணினி எழுதும் திறனைப் பாடப்ப்பொருண்மையின் ஒரு அங்கமாக மாற்றும் போது அவர்களுக்கும் நம் அனுபவத்தில் சிறு பயிற்சியும் கிடைக்கும். மேலும் மாணவர்கள் தாங்கள் சந்திக்காதப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று வரும் போது அவர்களின் ஆராய்ச்சித் திறன் மேம்பட வழி கிடைக்கும்.

எனவே தான் `கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலைகள் உனக்கில்லை ஒத்துக்கொள், எத்தொழில் எதுவும் தெரியாமல், இருப்பது உனக்கே சரியாமோ? என்ற பாடலைப் போலக் கணினி மொழி ஒன்றைக் கற்றுக் கொள் கவலை எவர்க்குமில்லை ஏற்றுக்கொள் எம்மொழி எதுவும் புரியாமல் வளர்வதே சரியாமோ என்ற கருத்தை மாணவர்களிடம் ஆசிரியர்களாகிய நாம் கண்டிப்பாய் பதிய வைக்க வேண்டும். அதற்கு முதலாவதாக நாம் அந்தக் கருத்தை உள்வாங்கிக் கொண்டு மாணவர்களுக்குக் கணினி மொழியையும் நம் பாடப் பொருண்மைகளில் சேர்த்துக் கற்றுக் கொடுக்க கண்டிப்பாய் முனைப்பு எடுக்க வேண்டும்.
பண்பாடு கலாச்சார பாதுகாப்பு ; இன்று நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியிலும் அமெரிக்க நாட்டிலும் உருவானவையாக உள்ளன. நாம் அந்தத் தொழில்நுட்பங்களை மட்டுமே நம்பி இருந்தால் பண்பாடு கலாச்சாரம் பற்றிய அறிவு ஒரு தேக்கநிலையை அடைந்து விடும். பண்பாடு கலாச்சாரம் மொழி வரலாறு ஆகியவற்றை நாம் கற்றுக் கொடுப்பதாலேயே அவை பாதுகாக்கப்படுகின்றன. அதைத் தாண்டி பண்பாடு கலாச்சார மொழி பற்றிய பொருண்மைகளில் நாம் கணினி நிரல் எழுத வைக்கும் போது மாணவர்கள் மொழி பண்பாடு கலாச்சார பதிவுகளை உருவாக்குவதோடு அவற்றைப் பற்றிய ஆழமான அறிவையும் பெருக்கின்றன.



இந்த ஆழமான அறிவு அவர்களுக்கு இல்லாத நிலையில் எதிர்கால பாடங்களிலும் படைப்புக்களிலும் ஒரு கலப்படத் தன்மை உருவாக நாமே வழியை நாமே உருவாக்கிக் கொடுக்கின்றோம். இளம் மாணவர்களுக்கு நிரல் எழுதுதலை அவர்களது மொழி பொருண்மையில் கற்றுக் கொடுக்கும் போது பண்பாடு கலாச்சாரம் பற்றிய ஆழமான அறிவு அவர்களுக்குக் கிடைப்பதோடு அதைப் பயன்படுத்தவும் அவர்களால் முடியும் இன்றைய நிலையில் தமிழ் படைப்புக்களைப் பார்க்கும் போது எத்தனை எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள்,உள்ளன. அதையும் தாண்டி ஒருவர் பேசுவதைப் போலவே எழுதுவது தான் இன்றைய நிலையாக உள்ளது. பேச்சுத் தமிழ் மருவி எழுத்துத் தமிழாக உருமாறுவது மொழி சிதைவின் ஒரு கூறுபாடு தானே? இன்றைய ஊடகங்களினால் தான் இத்தகைய பாதிப்பு மொழிக்கு இருக்கும் போது அதை வேகமாக மாற்றி மொழிப்பயன்பாட்டை சரியான பாதையில் திருப்பி விட மொழிப்பொருண்மைக்கான கணினி நிரல் பயிற்சி உதவி செய்கின்றது.

தேசிய தனி மனித பாதுகாப்பு இன்று தகவல் பரிமாற்றம் என்பது தரவுகளாக மாறி ஒரு முக்கிய செல்வமாக மாறிவருகின்ற நிலையில் தரவுப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அண்மையில் உலகில் நடந்து வரும் பல நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. நாம் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் அமெரிக்க கச்சா நிறுவனம் நச்சுநிரலர்களால் தாக்கப்பட்டு அந்த நிறுவனத்தின் செயல் பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுப் பல கோடி பிணைப்பணம் கொடுக்கப்பட்டவுடனே தான் அந்த சரி செய்யப்பட்டது. இந்த நிகழ்வு இணையப்பாதுகாப்பு தரவுப்பாதுகாப்பு என்பது தற்காப்புக் கலையைப் போல மிக முக்கியமானது என்பதை நமக்கு உணர்த்துகின்றது. அதே போலத் தேசத்தின் ஒவ்வோரு கட்டமைப்புக்குள்ளும் உட்புக ந இந்த நச்சு நிரல்கள் வேலை செய்து கொண்டிருப்பதாகவும் விசாரணையில் தெரிந்தது.

கொடுக்கப்பட்ட $4.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கணினிக் குறியீட்டுப் பணமாகவே அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது. அந்தக் குறியீட்டுப் பணத்தைக் கணினி நிரல் கொண்டு பின் தொடர்ந்து ரஷ்ய நச்சுநிரல்ர்களின் கடவுச் சொல்லைக் கண்டுபிடித்துக் கொடுக்கப்பட்ட கணினிக் குறியீட்டுப் பணத்தினை மீண்டும் கைப்பற்றி உள்ளனர் என்று ஜீன் 7ம் தேதி அமெரிக்க நேரம் மாலை 7 மணிபோல் வந்த செய்தியில் அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதே போல அமெரிக்க அரசும் ஆஸ்திரேலியா அரசும் சேர்ந்து மறைக்குறியீடாக்கம் கொண்ட திறன்பேசிகளைக் கடத்தல் கும்பலுக்கு விற்று ஆஸ்திரேலியா ஆசியா ஐரோப்பா தென் அமெரிக்கா மத்தியக் கிழக்கு நாடுகள் என்று பரவிக்கிடந்த போதைப் பொருள் கடத்தலை நிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து உலகமெங்கும்800 நபர்களைக் கைது செய்துள்ளனர். இந்த மாதிரியான உலக நிகழ்வுகள் நமக்குத் தரவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் , நிரல் எழுதும் திறனின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.

கணினி நிரலெழுதும் தன்மை ஒருவருக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என்றாலும், கணினித் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தியே ஆக வேண்டும் என்ற நடைமுறையைப் பின்பற்றி நாம் கணினிகளைப் பயன் படுத்துதலோ நிரல் எழுதுவதோ அவசியம் இல்லாதது. அப்படிச் செய்தால் அது வணிக ரீதியில் வெற்றி அடைய வாய்ப்புக்கள் குறைவாகவே அமையும்.

அதை விட ஒரு குறிப்பிட்ட பிரச்சனையைத் தீர்க்கும் கணினித் தொழில்நுட்பம் கண்டிப்பாகப் பயன் தரும். யாருக்காக எதற்காக என்ற கேள்விகளுக்கான விடையாகத் தயாரிக்கப்படும் தொழில்நுட்பம் கண்டிப்பாக வணிக ரீதியாக வெற்றி பெறும். இன்று ஆங்கில அமெரிக்கத் தொழில்நுட்பங்களின் நுகர்வோராக இருக்கும் காலம் மாறி நம் தனித்துவத்திற்கும் மொழிக்கும் ஏற்ப தொழில்நுட்பங்கள் வளரும் காலம் அதிக தூரமில்லை. ஆனால் அதை ஒரு அந்நிய நாட்டு நிறுவனங்கள் செய்வதற்குப் பதிலாக நாம் செய்ய வேண்டும். அதற்கான மாணவர் படையை உருவாக்க வேண்டும். எதிர்கால மாற்றங்களையும் தேவைகளையும் சிந்தித்து அதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கும் சூழ்நிலையை நாம் உருவாக்கித் தர வேண்டும்.



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38 – சுகந்தி நாடார்



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 – சுகந்தி நாடார்

Show 3 Comments

3 Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *