இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு

மாணவர்களின் படித்தல் திறனையும்  கேட்டல் திறனையும் நாம் வளப்படுத்தும் போது  இணைய வகுப்பின்  வழி மாணவர்களின்  வாழ்க்கைக் கல்வியைப் பாடத்தின் பொருண்மையோடு சேர்த்து நாம் கொடுக்க முடியும்.

ஒரு பாரம்பரிய  வகுப்பறை  தொண்ணூறு சதவிகிதம் ஆசிரியரால் கட்டுப்படுத்தப் படுகிறது என்றால் இணைய வகுப்பறை நேரம் எண்பது சதவிகிதம் மாணவர்களால்  கட்டுப்படுத்தப் படுகின்றது.  சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில் செய்தி வாசிப்பாளரின் பணியை ஒரு இணைய வகுப்பறை ஆசிரியர் செய்கின்றார். அவரையும் அவரது பாடத்தையும் மாணவர்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் பல உத்திகளைக் கடைப்பிடித்தாலும் இணைய வகுப்பறையில் மாணவர்கள்  ஐம்பது சதவிகிதம் கூட தங்கள் கவனத்தைச் செலுத்த மாட்டார்கள். தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் பற்றிய பயமே அவர்களை இணைய வகுப்பிற்கு வரவழைக்கின்றது.

ஒரு கட்டாயத்தால் இணைய வகுப்பில் மாணவர்கள் பங்கேற்கும் விதம் அவர்களை வாழ்க்கைக் கல்விக்குத் தானாகவே தயார்  படுத்தி விடுகின்றது. ஏன் எனில் அவர்கள்  தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமேயானால் தங்களுடைய சுய முயற்சியால் படிக்க வேண்டியுள்ளது, .பள்ளியிலும் கல்லூரியிலும் பாரம்பரிய வகுப்பு முறையில் ஆசிரியர்கள் பாடத்தை  கற்றுத் தரப்  பல  வழி வகைகளில் தயார் படுத்திக் கொண்டு வர வேண்டியுள்ளது. மாணவர்கள்  தங்கள் பாடத்தை ஒரு முறை வாசித்து   வந்தால் போதும்.  பாரம்பரிய வகுப்பு முறையில் நடத்தப்படும் பாடம் குழந்தைக்குத் தேவையான உணவைச் சரியான பொருட்களைச் சம விகிதத்தில் கலந்து வெக வைத்து மசித்து குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும்  உணவு போன்றது. பாடத்தின் உட்பொருளை  உணர்ந்து கொள்ள மாணவர்கள் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை.ஆனால் இணைய வகுப்பறை என்பது அப்படியல்ல. மாணவனின்  வகுப்பறை வெற்றி முழுக்க முழுக்க மாணவரின் பொறுப்பாகின்றது.. வகுப்பறைக்கு மாணவர்கள் தங்களைத் தயார் படுத்திக்  கொண்டு  வருதல் என்பது நாம் நினைப்பது போல எளிதானது அல்ல.   ஒரு இணைய வகுப்பறைக்கு ஒரு மாணவர்  தயார் செய்யாமல் வருவாரேயானால் நாம் உடனடியாக அவர் பொறுப்பில்லாதவர் என்றோ, அல்லது திறமையற்றவர் என்றோ  எண்ணி விடக் கூடாது. வகுப்பறைக்குப்  பாடத்தை வாசித்து விட்டு வருவதற்கும்  படித்து விட்டு வருவதற்கும் நிறைய  வேறுபாடுகள் உள்ளன.

 இங்கே  நாம் படித்தல் என்ற கலைச்சொல்லிற்கும் வாசித்தல் என்ற கலைச் சொல்லிற்கும்  உள்ள  முக்கியமான   வேறுபாட்டை ஆசிரியர்களாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.  வாசித்தல் என்பது ஒரு கதைபுத்தகத்தை வாசிப்பது போல. நாம்  நம்மை ஈடு படுத்தி  வாசிக்க வேண்டியதில்லை. ஆனால் படித்தல் என்பது பாடத்தின் பொருண்மையை ஆராய்ந்து  விளங்கிக் கொள்வது ஆகும்.

  ஒரு பொருண்மையை ஆராய்ந்து விளங்கிக் கொள்ளும் திறனை நாம் பெற்றுக் கொள்ள  நாம் சில அடிப்படைச் செயல்களைச் செய்ய வேண்டும்

 1. புத்தகத்தை ஆழ்ந்து படிக்கும் முன் அந்தப் புத்தகம் எதைப்பற்றியது என்ற மேலோட்டமான கருத்து பற்றிய தெளிவு இருக்க வேண்டும்

 2.  பொருண்மையைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ஏன் எப்படி எதற்கு யாரால் என்ற கேள்விகளின் பட்டியல்  தயாராக  இருக்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்கு விடைகளைத் தேடும்  முகமாக நாம்  நூல்களையும்  பாடத்தின் பொருண்மையையும் படிக்க வேண்டும்

 3. பொருண்மையைப் படிக்கும் போது நமக்கு விளங்காத சொற்களைக் குறித்து வைக்க  வேண்டும்

 4.   பொருண்மையைப் படிக்கும் போது நமக்குள்  எழும் கேள்விகளை நாம் பட்டியல் இட  வேண்டும்

 5.  நாம் ஏற்கனவே படித்திருந்த பொருண்மைக்கும் புதியதாய் படிக்கும் பொருண்மைக்கும் உள்ள தொடர்பை  அடையாளப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

  ஒரு பொருண்மையைப் படிக்கும் போது இந்த அடிப்படைச் செயல்கள் நிகழுமேயானால் அங்கு   வாசித்தலைத் தாண்டி படித்தல் நிகழ்கின்றது என்று பொருள்.

நமக்கு வரும் அடுத்த கேள்வி  இந்த படித்தல் திறனை எவ்வாறு மாணவர்களிடம் மேம்படுத்துவது?

 ஒரு மாணவரின் படித்தல் திறனை நாம் மேம்படுத்த வேண்டுமேயானால் அவருக்கு ஐந்து முக்கிய கோட்பாடுகளை உணர்த்த வேண்டும்.

 1. ஊக்கம்

 2. கட்டுக்கோப்பு

 3.  தங்களின் வளர்ச்சியைக் கண்காணித்தல்

 4.  பொருண்மைகளின் விதிகளை அல்லது உட்கருத்துக்களையோ  கண்டு பிடித்தல்

 5.   மீள் தரவு


நம் வகுப்பிற்கு வரும் போது மாணவர்கள்  வகுப்பறைக்குத் தயாராக வர வேண்டுமேயானால் அவர்கள் பாடத்தின்  பொருண்மையை  ஆழமாகப்  படித்து வகுப்பில் விவாதிக்கும் அளவிற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் அதற்காக நாம்  அவர்களுக்கு வீட்டுப்பாடங்களைப் பொதுவாகக் கொடுக்கின்றோம்.  அப்படிப்பட்ட  வீட்டுப்பாடமாக தராமல் வேறு மாதிரியாகப் பிரித்துக்  கொடுக்கலாம்.

   பாடப் பொருண்மையின் நோக்கத்தை மாணவர்கள் ஆழமாக  அறிந்து கொள்ள  முதலில் அவர்கள்   வகுப்பறை நேரத்திற்கு வெளியே பாடங்களைப் படிக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும், மதிப்பெண்களைத் தவிர வேறு மாதிரியான விருதுகளை அவர்களுக்கு வழங்கலாம். பாடங்களை அவர்களே நடத்தச் சொல்வது,  பாடங்களைப் புனைவுகளாகப் படைக்கச் சொல்வது,  வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்துவது,  வகுப்பறைத் தேர்வுத் தாள்களை  மாணவர்களையேத் தயாரிக்கச் ச்ப்வது போன்ற சில நடவடிக்கைகளை  நாம்    விருதுகளாக அறிவிக்கலாம்.   பாடப் பொருண்மையை  கலைநிகழ்ச்சிகளாக நடத்திக் காட்டச் சொல்லலாம்.

பாடத்தின்  மையப் பொருண்மையை அதன் ஆதாரங்கள், பொருண்மையின் கலைச் சொற்களை அறிந்து கொள்வதன்  நன்றாகப் புரிந்து கொள்ளலாம். பாடப்பொருண்மையை தாங்களாகவே படிக்கும் போது எழும் சந்தேகங்களைக் குறித்து வைத்து ஆசிரியரிடம் வகுப்பறை நேரத்தில் கேட்கும் வழக்கத்தை நாம் ஊக்குவிக்கலாம். பாடப் பொருண்மையை தங்களின் சொந்தக் கருத்துக்களாகச் சொல்லச் சொல்லி மற்ற மாணவர்களின் கருத்தைக் கேட்கலாம். பாடப்பொருண்மையை ஆழமாக விளங்கிக் கொள்ள மாணவர்கள் அடிப்படைக் கலைச்சொற்களையும் அதற்கான ஆதார வளங்களையும் தேட வேண்டும்,  மாணவர்கள் தங்கள் கருத்துக்களுக்குப் பிற மாணவர்களிடமிருந்து பின்னூட்டம் பெற்று தங்களின் கருத்து பற்றிய  உண்மை நிலையை விளங்கிக் கொள்ள வேண்டும்  இரு வேறு பாடப் பொருண்மைகளை  ஒப்பிட்டுப் பார்க்கச்  சொல்லலாம்.

 இந்த மாதிரியான  வீட்டுப் பாடத்தை  கீழ்க்கண்ட கேள்விகள் கொண்ட கூகுள் படிவத்தை மாணவர்களிடையே வகுப்பறைத் தொடங்குவதற்கு ஒருவாரம் முன்பே அனுப்ப வேண்டும்.

 • பாடத்தின் முக்கிய கலைச்சொற்கள் என்ன?

 • பாடப்பொருண்மைக்கு  நூலகத்தில் உள்ள  ஆதார வளங்கள் இரண்டு

 • பாடப்பொருண்மைக்குப்  புழக்கத்தில் இருக்கும் ஆதார வளங்கள் இரண்டு

 • பாடப்பொருண்மைக்கு இணையத்தில் கிடைக்கும் ஆதார வளங்கள் இரண்டு

 • முந்தையப் பாடத்தின் பொருண்மைக்கும், நடத்தப்படும் பாடத்தின் பொருண்மைக்கும் உள்ள  ஒப்புமைகளும் வேறுபாடுகளும் என்ன?

 •  பாடப் பொருண்மைக்கு  மாணவர்கள் தயாரித்துள்ள  வினாத்தாள் மாதிரிகள்

 •  பாடப்பொருண்மையில் மாணவர்களின் சந்தேகங்கள் என்ன?

 •   மாணவர்கள் பாடப் பொருண்மையைப் பிரித்து  வைத்துள்ள வகைகள் என்ன?

 • மாணவர்கள் பாடப் பொருண்மையைப் படிக்கும் கால அட்டவணை

  இது போன்ற கேள்விகளைக்  கூகுள் படிவம்  தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களின் வீட்டுப் பாடமாக நாம் அனுப்பி விட்டோமேயானால், பாடப் பொருண்மையை ஆழ்ந்து படிக்க உந்துதலாக இந்தப் படிவம் அமையும்.

     ஒரு கூகுள் படிவத்தை நிரப்பும் முன் மாணவர் பாடத்தை  ஆழ்ந்து படித்து இருந்தால் மட்டுமே அவர்களால் படிவத்தில் உள்ள கேள்விகளுக்கு  உண்மையாகப் பதில் சொல்ல முடியும்.

 இப்படிப்பட்ட வித்தியாசமான  வீட்டுப்பாடத்தை முதன் முதலாக நாம் கொடுக்கும் போது மாணவர்கள்  சற்று பயப்படத்தான் செய்வார்கள். ஆனால் இரண்டு  மூன்று முறை  படிவங்களை நிரப்புவது என்பது வகுப்பறையின் நியமனம் என்பது மாணவர்களுக்குப் புரிந்து விட்டால், அவர்கள்   வகுப்புக்களுக்கு ஆர்வமாகத் தயாராகி வந்து  வகுப்பில் கலந்து கொள்வர்.  இந்த மாதிரியான  ஒரு  வீட்டுப்பாடத்தைப் படிக்கக்   குறைந்தது  மூன்று நாட்கள் அதிகப்படியாக ஐந்து நாட்கள் மாணவர்களுக்குக்  கொடுக்கப்பட வேண்டும், அப்போது தான் மாணவர்கள்  தங்கள்  பாடத்தை ஆழமாகப் படிக்க அவர்களுக்கு நேரம் கிடைக்கும்,

  “ உணவினும்  உண்டது அறல்” என்கின்றது குறள்.  இந்த கோட்பாடு  இணைய வகுப்பறைக்கு மிகவும் பொருந்தும். இணைய வகுப்பறையில் பாடங்களைச்சொல்லித் தருவதை விடப் பாடங்களைப் புரிந்து  அதை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தும் போது கற்றலின்  ஆனந்தம் அதிகரிக்கின்றது.  ஒரு நூலை ஆழமாகக் கற்றல் என்பது  ஒரு முக்கியமான வாழ்க்கைக் கல்வி.  மாணவர்களின் வாசிப்புத் திறன், மொழித்திறன் ஆராய்ச்சித் திறன்  இதனால் அதிகரிக்கின்றது.

வகுப்பறைக்குத் தயார் நிலையில் வர மாணவர்கள்  சந்திக்கும்  சிக்கல்கள் என்னென்ன?

உங்கள் வகுப்பறையில் சீராகச் செயல் படும்  மாணவர்களுக்கு என்ன மாதிரியான வகுப்பறை விருதுகளை நீங்கள்  கொடுக்கின்றீர்கள்?

இணைய வகுப்பின் விரிவுரையை மாணவர்களை ஆழ்ந்து கேட்க வைப்பது எப்படி?

பகிர்ந்து  கொள்ளுங்களேன்

தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

 தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *