கற்றல் கற்பித்தலுக்கான நாட்குறிப்பு மேலாண்மை
இணைய வகுப்பின் இன்றியமையாத அடிப்படைகளை நாம் இதுவரைப் பார்த்தோம். இந்த அடிப்படைக் கோட்பாடுகள், ஒரு பாரம்பரிய வகுப்பிற்கும் இணைய வகுப்பிற்கும் உள்ள சிறுசிறு வித்தியாசங்களை அடிக்கோட்டுக் காட்டின. ஆனால் கற்றல் கற்பித்தல் சிறப்பாக இணைய வகுப்பில் நிகழ வேண்டும் என்றால் கற்றல் கற்பித்தலுக்கான தொழில்நுட்பத்தில் நாம் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்,
இணைய வகுப்பறைக்கு முதல் முக்கியமான தொழில்நுட்பம் நாள் காட்டி. நாம் நமது திறன்பேசியில் இருக்கும் நாட்காட்டித் தொழில்நுட்பத்தைத் தினமும் பயன்படுத்தினாலும் அதை கற்றல் கற்பித்தலுக்காகப் பயன்படுத்தி இருக்கின்றோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்று தமிழகத்து ஆசிரியர்களும் மாணவர்களும் திறன்பேசியைப் பயன் படுத்துவதால் முதலில் திறன்பேசியின் நாட்காட்டியை முதலில் பார்ப்போம் அதன் பின் ஜிமெயில், மைரொசாப்ட் ஆப்பிள் நிறுவன நாட்காட்டிகளை கற்றல் கற்பித்தலுக்காகப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
கற்றல் கற்பித்தலுக்கான நாட்காட்டி அமைத்தல்
நாட்காட்டியைத் தவிர நாம் செய்ய வேண்டிய வேலைப்பட்டியலுக்கான ஒரு செயலியும்(to do list or reminders) நினைவூட்டல் செயலி,நம் திறன்பேசியில் இருக்கும். இவை அனைத்தும் நம் திறன்பேசியில் இருக்கும். இவற்றை நாம் அனைவருமே பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் கல்விக்காக எப்படி பயன் படுத்தப் போகின்றோம் என்பதை நாம் இங்கே பார்ப்போம்.
திறன்பேசியின் நாட்காட்டி
மைக்ரோசாப்ட் அவுட்லுக் நாட்காட்டி
மின்னஞ்சல் கணக்குகளும் நாட்காட்டியும்
பழைய நாட்களைத் திறன்பேசியிலிருந்து எடுத்து விடுதல்
கூகுள் நாட்காட்டி
என்று நாம் வரிசையாகப் பார்ப்போம்
மாணவரின் நாட்காட்டி என்று நாட்காட்டித் தொழில்நுட்பத்தை ஆழ்ந்து இங்குப் பார்க்கலாம். திறன் பேசியிலும் கொடுக்கப்பட்டுள்ள நாட்காட்டித் தொழில்நுட்பம் இரண்டையும் நாம் பயன்படுத்த ஆரம்பிக்கும் போது நாம் முதலில் செய்ய வேண்டியது, சொந்த வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கும், பணி சம்பந்தமான நிகழ்வுகளுக்குமான வித்தியாசத்தை நாம் நமக்குள் உணர்ந்து கொள்ள வேண்டும். நம்மில் பலர் ஒரு கணினி அல்லது ஒரு திறன்பேசி என்று வைத்துக் கொண்டு நம் சொந்த வாழ்க்கையையும் பணி சம்பந்தமான வேலைகள், நிகழ்வுகள் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு வருகின்றோம்.
தற்போது இணையம் வழி பல நிகழ்வுகள் நடப்பதால் அவற்றையும் நாம் நமது கணினியிலும் திறன்பேசியிலும் இடுகின்றோம். இந்த நிலையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் நமது திறன்பேசி நாட்காட்டிகளுக்கு அவசியமாகின்றது
திறன் பேசியின் நாட்காட்டி
முன்பே கூறியபடி ஒவ்வோரு திறன் பேசியும்,அதன் இயங்குதளத்திற்கு ஒத்த நாட்காட்டியைக் கொண்டு இருக்கும்.
திறன்பேசியின் நாட்காட்டி எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் திறன்பேசியின் அமைப்புக்களில் சென்று பார்க்கலாம்
ஒவ்வோரு இயங்கு தளத்திற்கும் பொதுவாக இருக்கக்கூடிய மொழி(language) நேரமண்டலம்(time zone) மாற்று நாட்காட்டிகள்(alternative calendars) வாரங்களின் எண்ணிக்கை(Week numbers) ஒத்திசந்து போதல்,(sync) நிகழ்வுகளை நினைவூட்டுதல்(alerts)பிரித்துஅளித்தல்(delegate) இருப்பிடம் காட்டி (location suggestions)பேன்றவற்றை நாம் இயங்குதள அமைப்பு நாட்காட்டி என்று சென்று பார்க்க வேண்டும்.
மொழி(language) நாட்காட்டியின் மொழியையும், நேரமண்டலம்(time zone) என்பது பயனாளியின் நேர மண்டல தெரிவையும் காட்டுகின்றன. மாற்று நாட்காட்டிகள்(alternative calendars) ஆங்கில நாட்காட்டியைப் பயன்படுத்தாத, சீனர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள் ஆகியோரின் நாட்காட்டியாக இயங்குதள நாட்காட்டியை மாற்றி அமைக்கும். தமிழர்கள் தமிழ் மாத நாட்காட்டிகளை அதிகம் பயன்படுத்துவர் என்று புள்ளி விவரங்கள் காட்டும் போது நமக்குத் தமிழ் நாட்காட்டியும் கூட இயங்குதள நாட்காட்டியாக வர வாய்ப்பு உண்டு.
இந்த மேற்கூறிய அமைப்புக்களில் வாரங்களின் எண்ணிக்கை(Week numbers) ஒத்திசந்து போதல்,(sync) நிகழ்வுகளை நினைவூட்டுதல்(alerts) ஆகிய மூன்றும் கற்றல் கற்பித்தலுக்கு முகவும் பயனுள்ளவையாக இருக்கும்.
வாரங்களின் எண்ணிக்கை (Week numbers) கற்றல் கற்பித்தலுக்கு உதவும்படி முதல் வாரம் இரண்டாம் வாரம் என்று சிறு எண்களில் நாட்காட்டியின் வலது பக்க ஓரத்தில் அதாவது திறன்பேசி பயன் படுத்துபவருடைய இடது பக்கம் வரும்.
நம்முடைய திறன்பேசியில் உள்ள நாட்காட்டித் திரையின் கீழே நாட்காட்டிகள் என்று பன்மையிலிருந்தால் நம் திறன்பேசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்காட்டிகள் இருக்கின்றன என்று பொருள். இயங்குதள நாட்காட்டியைத் தவிர நமக்கு மின்னஞ்சல்கள் வழியாக வரும் நாட்காட்டிகளும் தானாகவே இயங்கு தள நாட்காட்டியுடன் சேர்க்கப்படும்
திறன் பேசியில் எத்தனை மின்னஞ்சல்கள் இருந்தாலும், அவை மிகச்சரியாக அடையாளம் காட்டப்படும்
ஒவ்வொரு மின்னஞ்சலுக்குள்ளும் நாம் எத்தனை நாட்காட்டிகளை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். நம்முடைய நாட்காட்டி மட்டுமின்றி பிறரது நாட்காட்டிகளையும் இணைத்துக் கொள்ளலாம். ஒரே மின்னஞ்சலுக்குள் பல நாட்காட்டிகள் அடங்கி இருப்பதைக் கீழே உள்ள படத்தில் காணலாம்
ஒவ்வோரு நாட்காட்டியின் விவரத்தையும் information என்பதைக் குறிக்கும் வட்டமிடப்பட்ட ஆங்கில எழுத்து i குறிக்கும். நாட்காட்டியின் முழு விவரத்தையும் இந்த எழுத்தைத் தட்டினால் கிடைக்கும்.
இவ்வாறாக ஒரே இடத்தில் பல நாட்காட்டிகளை நாம் வைத்துக் கொள்ள முடியும். ஒவ்வோரு பாடத்திற்கும் அல்லது ஒவ்வோரு வகுப்பிற்கும் என்று நாம் நாட்காட்டிகளை உருவாக்கலாம். எனவே நாட்காட்டித் தொழில்நுட்பம் கற்றல் கற்பித்தலுக்கு மிக முக்கியமாக அமைகின்றது.
சிலரது திறன் பேசி தமிழ் மொழியிலிருந்தால் அவர்களுக்கு அனைத்தும் தமிழில் தெரியும் இந்த நாட்காட்டிகள் என்ற சொல்லைத் தட்டினால் நமது திறன் பேசியில் உள்ள அனைத்து நாட்காட்டிகளும் தெரியும்.
நம் திறன்பேசியிலும், கணினியிலும் எத்தனை நாட்காட்டிகள் இருந்தாலும் இயங்குதள நாட்காட்டிகள் தான் பிரதான நாட்காட்டியாக விளங்கும்.
நாட்காட்டிகள் எந்தெந்த மின்னஞ்சலைச் சார்ந்தவை என்பதும் நாட்காட்டியின் பெயருக்கு மேல ஒரு தலைப்பைப் பார்த்தால் தெரியும் ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் கீழே ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட நாட்காட்டிகள் இருக்கும்.
ஒவ்வோரு மின்னஞ்சலுக்குள்ளும் நாம் பல வேறுபட்ட நாட்காட்டிகளைச் சேர்க்கலாம் இந்த நாட்காட்டிகளை நாம் திறன்பேசியிலிருந்து எளிதாக விலக்க முடியாது. ஆனால் நம் மின்னஞ்சல் வழி சென்று அவற்றை விலக்கலாம்.
நாம் கணினியையும் திறன்பேசியையும் நமது நாட்காட்டிகளாகப் பயன்படுத்த ஆரம்பிக்கும் போது நாம் ஒரு நாளை நமது தொடர்புகள், பணிகள், எல்லாவற்றிக்கும் குறிப்புக்கள் கொடுத்து கணினியையும் நமது திறன் பேசியையும் நம்முடைய காரியதரிசியாக பயன்படுத்தலாம்
ஆனால் இதற்கென்று ஒரு ஒரு மணி நேரம் திட்டமிட்டு நேரத்தைக் கணினியில் நாம் செய்துவிட்டோமேயானால் அந்த வருடம் முழுவதற்கும் நமது வேலைகளையும் பணிகளையும் ஒரு சீராகக் கொண்டு செல்வது மிக எளிதாக முடியும் காகித நாட்காட்டிகளைப் பயன்படுத்தி பழக்கமான நமக்கு இந்த ஒரு மணிநேரம் வீணாகச் செலவிடுவது போலத் தோன்றினாலும், கணினி நாட்காட்டியை நிறுவுவது ஒரு இணைய வகுப்பறை சிறப்பாகப் பயன்படுத்த உதவி செய்யும்.
Focus assist. Focus mode, do not disturb என்று பல வகைகளில் நமது கணினியும் திறன் பேசியும் நம் கவனம் சிதறாமல் இருக்க உதவுகின்றன. இவற்றை நாம் திறன் பேசியின் அமைப்புக்களிலும் (Settings), கணினியின் அமைப்புக்களிலும் (Settings) கண்டுபிடித்து நமக்குத் தேவையான வகையில் கவனச் சிதறல்கள் ஏற்படாத வண்ணம் நாம் அமைத்துக் கொள்ளலாம்.
திறன் பேசியின் இன்னுமொரு முக்கியக் கூறு Reminders என்ற குறுஞ்செயலி
இது ஒரு தனிக்குறுஞ்செயலியாக செயல்பட்டாலும் இது திறன்பேசியின் நாட்காட்டியுடன் இணைந்து செயல்படுகின்றது. நமது அன்றாடப் பணிகளை நாம் இங்குத் திட்டமிட்டுவிட்டால், நமது திறன்பேசி நமக்குப் பணி செய்வதற்கு நினைவூட்ட உதவும்.
நமது பணி சம்பந்தமான வேலைகள், சொந்த வேலைகள் என்றும் இவற்றை நாம் பிரித்துச் செய்ய முடியும் to do list,reminders,tasks என்ற பெயரில் இந்தக் குறுஞ்செயலிகள் நமது திறன்பேசியைப் பொறுத்து அமையும். இந்த செயலிகள் நம்முடைய திறன்பேசியின் நாட்காட்டியுடனும் கடிகாரத்துடனும் இணைந்து நம் வேலைகளைச் சுருக்கமாகத் திட்டமிட இவை உதவுகின்றன. இந்த செயலிகள் நம் பணிகளின் பட்டியல்களை உருவாக்கி அந்தப் பட்டியல்களுக்குச் சார்ந்த வேலைகளைச் செய்யவும் உதவி செய்கின்றன/ நாம் செய்ய வேண்டிய வேலைகளை அதிமுக்கியமானதும் முக்கியமானது சாதாரணமானது எனப் பிரிக்கின்றன.
மாணவர்கள் தங்கள் பாடக் குறிப்புக்களை விரைவாகச் சேமித்து வைக்க இந்த செயலிகளைப் பயன் படுத்தலாம். bullet journal note taking (அறிக்கை குறிப்பு) வகையில் குறிப்புக்கள் எடுக்க நாம் இந்த குறுஞ்செயலியைப் பயன்படுத்தலாம்.
திறன்பேசி வழி செய்யும் வேலைகள் பல சமயம் சரியாக அமைந்தாலும் சில சமயங்களில் தவறுதல்கள் ஏற்படுவது உண்டு. அதனால் முடிந்த வரை நாம் கணினிகளைப் பயன்படுத்தி நம் வேலைகளைச் செய்ய வேண்டும்.
எந்த ஒரு வேலையைச்செய்வதற்கும் ஒரு கருவி உண்டு. அதேபோல ஒரே கருவியை வைத்து நாம் பல வேலைகளைச் செய்யலாம் உதாரணத்திற்குப் பேனாக் கத்தி இந்தக்கருவி நம் சட்டைப்பைக்குள் ஒரு அவசரத்திற்கு வைத்திருக்கின்றோம். ஒரு அவசியத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதை வைத்து ஒரு கத்தி செய்யக் கூடிய எல்லா வேலைகளையும் திறன் படச் செய்ய முடியாது.
நம்முடையத் திறன் பேசியும் அது போலத்தான். அலைபேசி ஒருவரோடு ஒருவர் பேசுவதற்காக உருவாக்கப்பட்ட அலைபேசி ஒரு கணினியின் எல்லா செயல்பாடுகளையும் செய்யலாம். ஆனால் ஒரு முழுக் கணினி செய்யும் வேலையைச் செய்ய முடியாது. எனவே திறன்பேசியை கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்தும் போது நாம் சிறப்பான முறையில் செயல் பட முடியாது.
நாம் அடுத்ததாகக் கணினி வழி நாட்காட்டித் தொழில்நுட்பத்தைக் கணினி வழி எவ்வாறு திறம்படச் செய்யலாம் என்று பார்க்கலாம். முக்கியமாக நாம் நாட்காட்டித் தொழில்நுட்பத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் Microsoft outlook ஆழமாகப் பார்ப்போம்.
அதில் நீங்கள் சந்திக்கும் சிரமங்கள் உங்களின் சந்தேகங்களைக் கேளுங்கள்
தொடர் 1:
தொடர் 2:
தொடர் 3:
தொடர் 4
தொடர் 5
தொடர் 6: