கல்வியின் எதிர்காலம் கணினியா?
ஒரு புதியக் கருத்து நமக்குச் சொல்லப்படுகின்றது என்றால், அது நமக்கு ஏற்கெனவே தெரிந்த ஒரு கருத்தாக இருந்தாலோ அல்லது நம் அனுபவத்தில் உணர்ந்து இருந்தாலோ தான் நம்மால் அதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அதே கருத்து நமக்கு ஏதோ ஒரு வகையில் முன்பே அறிமுகமாகி இருக்கவில்லை என்னும் போது, அந்தக் கருத்தை சட்டென்று புரிந்து கொள்வது ஒருவருக்கு இயலாத காரியம்.
அது போலத் நம்மால் புரிந்து கொள்ள முடியாதபடி, நம் எதிர்காலம் மாறிக் கொண்டு வருகிறது மரம் என்று சொல்லும்போது நம்மால் உடனே புரிந்து கொள்ளும் அளவு, நம் எதிர்காலக் கல்வியின் நிலை கணினிகளால் நிர்னயிக்கப்படும் வரையறை செய்யும் போது அது ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றது. ஒரு ஆசிரியரின் அனுபவத்தை ஒரு கணினியால் எப்படிப் பிரதிபலிக்க முடியும்? நம் முன் இருக்கும் மாணவர்களின் உணர்வுகளையும் முக மாற்றங்களையும் எவ்வாறு ஒரு கணினி கண்டு கொள்ளும்? மாற்றுத் திறனாளிகளுக்கு கணினி எவ்வாறு கற்பிக்கும்? சிறு குழந்தைகள் கணினி மூலம் கற்றால் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்? என்று பல பதில் தெரியாத கேள்விகள் ஒவ்வோரு ஆசிரியருக்குள்ளும் எழும்பி நம்மைக் குழப்பமைடையச் செய்கிறது.நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒரு கருத்தை நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்துடன் இணைத்துப் பார்க்கும் போது ஓரளவு சொல்லப்படும் கருத்தின் பொருண்மையைப் பற்றிய ஒரு தெளிவு நமக்குக் கிடைக்கின்றது. எதிர்காலம் கணினிகளால் ஆளப்படும் என்று சொல்லும் போது, அது ஒரு புரியாதக் கருத்தாக இருந்தாலும் எதிர்காலத்தில் முக்கியமான ஒரு தொழில்நுட்பங்களாக செயற்கை அறிவுத் திறன், தானியங்கி வாகனங்கள், புதிப்பிக்கப்படகூடிய எரிசக்திகள், பாளச்சங்கிலித் தொழில்நுட்பம், சாமர்த்திய ஆடை அணிகலன்கள் என்று தொழில்நுட்பங்களை நம் வாழ்வாதரத்தின் அடிப்படையில் சொல்லும் போது ஓரளவு தெளிவான பொருண்மையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. ஏன் என்றால் இவற்றில் ஏறக்குறைய எல்லா வழிகளிலும் நாம் தொழில்நுட்பத்தை அனுபவித்துப் பார்த்து இருக்கின்றோம்.மேற்ச்சொன்ன தொழில்நுட்பங்கள் அனைத்திற்கும் அடிப்படை தரவுகளும் இத்தரவுகளை தந்திரமாகவும் திறமையாகவும் கையாளக் கூடிய கணித கணக்கீட்டு முறைகள் நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதும் ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் நிச்சயமாக இப்படித்தான் இருக்கும் என்று யாராலும் உறுதி இட்டுக் கூற முடியாது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இன்று முன்னணியில் இருக்கும் சமூக வலைதளங்கள் மூலமாக நமக்கு எந்த நேரமும் ஒவ்வோரு வினாடியும் விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்ற காரணத்தால் நமக்கு அப்படித் தோன்றுகின்றதா?
இல்லை உண்மையிலேயே கணினி தான் நம் எதிர்காலம்? நமது வாழ்வாதாரம் வேலை உடல் மனநலம் பொருளாதாரம் பாதுகாப்பு இயற்கை வளங்கள் பேராபத்துகள் அனைத்துமே கணினியை சார்ந்தோ அல்லது கணினியின் கட்டளையாலோ தான் நடக்குமா? முக்கியமாகக் கல்வி என்று எடுத்துக் கொண்டால் எத்தனையோ கேள்விகள் குழப்பங்கள்.
இன்று நாம் பலவித பாடப்பொருண்மைகளாகப் பிரித்துப்படிக்கும் அனைத்துமே தரவுகளால் நிர்ணையிக்கப்பட்ட பாடங்களாக அமைந்து விடுமா? எந்த ஒருப் பாடப்பொருண்மையிலும் தொழில்துறை விற்பனர்கள் என்வரை அடையாளம் காணவே முடியாதா? நாம் கண்டு பேசி இருக்காத ஒருவரின் சமூக வலைதளங்களின் பதிவுகள் அவரை விற்பனராகக் காட்டினால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமா?
நமது கருத்துக்கள் மிக எளிதாகப் பரவ சமூக வலைதளங்கள் நிச்சயமாக உதவுகின்றன இன்றைய சமூக வலைதளங்களின் முக்கிய வேலை அவர்களது சேவையை நாம் 24 மணிநேரமும் பயன்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் அதனால் நம்மைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையிலும் நம் கவனத்தை எந்நேரமும் அவர்கள் கொடுக்கும் விஷயங்களிலுமே நம்மை வைத்து இருக்க உதவுகின்றனர். நாம் இவர்களது சேவையை எப்படிப் பயன்படுத்துகின்றோம் என்பதை வைத்து, அவர்களின் கணினிக் கணக்கீடுகள் நம் தேவையை ஊகித்து அதற்குத் தகுந்த செய்திகளை நமக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டே இருக்கின்றன. தமிழ் பற்றியத் தகவலை நாம் விரும்பினாலது போன்ற விஷயங்களைத் தான் முகநூல் நிறுவனம் காட்டும். அதே நேரத்தில் எனது பெயர் பற்றி பலநேரங்களில் சமூக வலைதளத்தில் விவாதம் நடக்குமேயானால், அது போன்ற, மக்களைப் பிரித்தாளக்கூடிய விஷயங்களையே முகநூல் காட்டும்.
மக்களிடையே வெறுப்பைத் தூண்டும் செய்திகளில் முகநூல் முன்ணனி வகிக்கிறது என்றும், துவேஷதத்தைத் தூண்டும் செய்திகளால் இந்நிறுவனம் இலாபம் அடைந்து வருகிறது என்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவர் பல ஆவணங்களின் சாட்சிகளுடன் அந்நிறுவனத்தின் மேல் குற்றம் சுமத்தி இருக்கின்றார். மக்கள் உணச்சி வயப்படக்கூடிய செய்திகளின் மூலம் மக்களை தங்கள் தளத்திற்குச் சுண்டி இழுத்துக் கொண்டுகிறது இச்சமூக வலைதளம். இவ் வலைதளத்தின் இன்னோரு பகுதியான Instagram வழி பெண் குழந்தைகள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் என்ற விவரம் தெரிந்த போதும் இந்நிறுவனம் அதைப்பற்றி ஒரு சமூக அக்கறையின்றி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்றும் அமெரிக்கப் பத்திரிக்கையான Wall street Journal அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பயனாளிகள் தங்கள் குழுக்கள் மூலமாக பொருள் ஈட்டும் வகைக்கான வழிகளைச் செய்து வருகின்றது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய செய்தி.
நவம்பர் மாதம் 9ம் தேதி இந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில் ஒருவர் தங்கள் தளத்தை 10000 முறை பார்வையிட்டால் அதில் குறைந்தது 15 முறையாவது அடாவடித்தனமான செய்திகளும், ஒருவரைத் துன்புறுத்தும் செய்திகளும் வெளியாகி உள்ளது என்று கூறியுள்ளது. Instagramல் குறைந்தது 5 முறையாவது இப்படிப்பட்டச் செய்திகள் வந்துள்ளன என்று இந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்து உள்ளது. ஏற்கெனவே புலனத்தில் நம்மைப் பந்தாடும் பொய்ச்செய்திகளைபற்றிய அனுபவமும் நமக்கு இருக்கின்றது.
நம் தேடுபொறிகளோ நமது உலாவிவழி நமது இருப்பிடத்தை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளம்பரங்களை நாம் தேடும் இணையப்பக்கத்தின் முகப்பில் போடுகின்றன. நமது இருப்பிடத் தகவலை நாம் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் நமது கணினியின் இணைய நெறிமுறை முகவரி கொன்டு அதற்குத் தகுந்த விவரங்களைக் கொடுக்கின்றது. இதனால் இப்பக்கங்கள் ஒரு விளம்பரப் பலகையைப் போலத் தோன்றுகின்றன. நாம் தேடுபொறிகள் கொடுக்கும் விஷயத்தை கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்வதால் விளம்பரத்திற்கும் உண்மையான விஷயத்திற்கும் வேறுபாடு தெரிவதில்லை. சென்ற வாரம் எங்களது பயணம் பற்றி சந்தேகங்கள் கேட்க ஒரு விமான நிறுவனத்தின் நுகர்வோர் உதவி எண்ணை தேடுபொறியில் தேடினோம். கிடைத்த எண்ணை அழைத்து அரை மணிநேரம் பேசிய பின், அவர் பணம் வசூலிக்க முற்படும் போதுதான் இது சரியான எண் தானா என்ற சந்தேகமே தோன்றியது.
அந்த அளவிற்கு நம்பகமான வகையில் செய்திகளும் மற்ற விவரங்களும் நம்மைத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. நம்மைத் தாக்கவரும் செய்திகள் உண்மையானவையா? அல்லது பொய்யானவையா? அல்லது கற்பனையில் ஜோடிக்கப்பட்டதா என்று நாம் புரிந்து கொள்ளவே ஒரு பட்டப்படிப்புப் படிக்க வேண்டும் போல.
நம்மை நோக்கி வரும் தகவல்கள் அனைத்தும் பயன்படுத்தக் கூடிய விஷயத்தைத் தருகின்றதோ இல்லையோ நம் வாழ்க்கை முறையில் சிறிது விஷத்தை விட்டுசெல்கிறது என்பதே உண்மை. நம் வாழ்வில் மட்டுமல்ல நம் வாழ்வாதாரத்திலும் பொய்ச்செய்திகளாளும் புரளிகளாலும் விஷம் சேர்க்கப்படுகின்றது என்று அறியாவண்ணம் கவனக்குறைவையும் கவனச்சிதறல்களையும் நம்முடைய அன்றாட செயலின் அங்கமாகி உள்ளது, கவனக்குறைவும் கவனச் சிதறல்களும் நம்மை இந்த நிறுவனங்களுக்கு அடிமையாக்கி வைத்து இருக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது.
இந்த சமூக வலைதளங்கள் மக்களுக்கு அதிகமான தகவல்களைக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை முன்னேற்ற வழிவகுப்பது போன்று இருந்தாலும் , முழுக்க முழுக்க இவை பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்டவை. அதைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் நாம் மூளை மழுங்கடிக்கப்பட்டு இருக்கின்றோம்.ஒரு தொலைக் காட்ச்சியிலோ அல்லது வானோலியிலோ ஏன் திரைப்படத்திலோ நாம் நமது நேரத்தைச் செலவிட்டாலும் நம்முடைய வாழ்க்கை நடைமுறைக்கும் பொழுதுபோக்கு அம்சத்திற்கும் வேறுபடுத்திப் பார்க்க நம்மால் முடிந்தது. ஆனால் இந்தக் கணினியுகத்தில் அப்படி யோசிக்க விடாமல் சமூக வலைதளங்கள் விளம்பரங்களைத் தகவல்களாக நம் முன்னே காட்டிக்கொண்டே இருக்கின்றன. காதுக்குள் சொய் சொய்ங் என்று சுற்றி வரும் தேனீக் கூட்டத்தைப் போல் தகவல் தொழில்நுட்பம் நம்மை விரட்டிக் கொண்டே இருக்கின்றது.
வரலாறு என்பது கூட கணினித் தரவுகளின் அடிப்படையில் கொடுத்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடிய காலம் வரும். இன்று இலக்கியங்களும் காலம் காலம் தொட்டு வரும் பழக்கங்களும் பல நாடுகளில் உலகமயமாகுதல் உலக வர்த்தகம் காரணமாக சற்றே உருமாறி மேற்கத்தியக் கலாச்சாரமும் , கிழக்குக் கலாச்சாரமும் கலந்த ஒரு வாழ்க்கை முறை உலகெங்கிலும் இயற்கையாகிவிட்டது. ஒவ்வோரு நாட்டின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்து இன்று நம்முடைய வாழ்வில் இரண்டாம்பட்ச அல்லது மூன்றாம்பட்ச இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டன.
இதே நிலையில் போனால் கணினிவழி வரும் செய்திகளை நம்பியே பாடங்களும் அதன் வழிமுறைகளும் உருவாக்கப்படும் நிலை கூட வரலாம். முழுக்க முழுக்க கணினி வழிபடிப்பித்தல் மட்டுமே நடக்கக் கூடும். Moodle canvas போன்ற கல்வி மேலாண்மைத் தளங்கள் இணையவழித் தொழில்நுட்பங்களைக் கொண்டு பலவிதமானத் தேர்வுகளை நடத்த வழி வகை செய்துள்ளன. வீத்தேர்வுகளால் ஆசிரியரும் மாணவரும் நேரில் சந்திக்க வேண்டியத் தேவையே இல்லாமல் போகின்றது.
இன்று இணையப்பக்கங்களில் நுகர்வோருக்கு உதவியாக பல கணினிகளே அடிப்படைக் கேள்விகள் பலவற்றிக்கு பதில் சொல்லும்படி அமைக்கப்படுள்ளன. அச்சுக்காகிதங்களால் உருவாக்கப்பட்ட பாடநூல்கள் முதல் பலவகைக் கலைகள் இன்று கணினி மயமாக்கபப்ட்டுவிட்டன. பள்ளியில் பாடங்கள் மட்டுமன்றி ஒருவர் தன் வாழ்க்கையில் எதைக் கற்றுக் கொள்ள விழைந்தாலும் ஆதை இணையம் வழி செய்கின்றோம்.
ஆக இயந்திர மனிதர்களே ஆசிரியர்களாகக் கூட இருக்கலாம். மனிதர்களோடு இணைந்து இன்று இயந்திர மனிதர்கள் வேலை செய்வது போய் அவர்களே ஒரு குடும்பமாக ஒரு சமுதாயமாக உருவாகலாம். இவை எல்லாம் ஒரு கற்பனையின் வடிவங்களாக இருந்தாலும் கணினியையே நம்பி இருக்கக்கூடிய தலைமுறைகள் வளர வளர இயந்திரங்கள் ஆக்கிரமித்த ஒரு உலகம் அமையலாம். உயிரற்ற கணினியின் நிழலில் மனிதர்கள் வாழ வேண்டிய காலமும் வருமோ?
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்காவில் தொழிலாளர் பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் பலநாடுகளிலிருந்து மக்கள் குடியேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டது. ஆனால் இந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்காவைச் சார்ந்துள்ள பல நாடுகள் தங்களுடைய பிரஜைகளை தங்கள் நாட்டிலேயே வேலை பார்த்துக் கொள்ள பல வசதிகள் செய்துள்ளன. தொழிலாளர்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு பதிலாக அமெரிக்கத் தொழிற்சாலைகளை தங்கள் நாட்டிலேயே அமைத்துக் கொடுக்கவும் அரசுகள் ஆயத்தமாய் உள்ளன. இந்த நிலையில் அமெரிக்க நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் விலை உயர்வு அதிகமாகி உள்ளது. பேரிடர் காலத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்கள் முதற்கொன்டு அனைத்துக் நுகர்வோர் பொருட்களும் மின்சார, வாயு ஆகியவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் பொருட்களின் அலிப்பை அதிகரிக்கும் பொருட்டு தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இயந்திர மனிதர்களை நாட வேண்டிய அவசியத்தில் உள்ளன.
இந்த பேரிடர் காலத்திற்குப் பிறகு அமெரிக்க நிறுவனங்கள் பல தொழிலாளர்கள் கிடைக்காமல் இயந்திரங்களை தங்கள் தொழிற்சாலையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே பல வாகனத் தொழிற்சாலைகளில் இராட்சத இயந்திரங்கள் வாகனங்களை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாகனத் தயாரிப்பில் தொழிலாளர்களின் உடல்நலத்திற்கு ஊறுவிளைவிக்கும் பல வேலைகளை இன்று கணினிகள் தான் செய்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள Acieta என்ற நிறுவனம் பலதரப்பட்ட இயந்திரங்களை மனித வேலை செய்யும் படிக்கு உருவாக்கியும் பல நிறுவனங்களுக்கு விற்றும் வருகின்றனர். எந்த ஒரு தொழில்நிறுவனத்தின் பல்வேறு வேலைகளைச் செய்யத் தகுந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இயந்திரங்கள் விற்பனையாகியுள்ளது என்று இந்நிறுவனம் கூறுகின்றது.
தென் கொரிய நாட்டில் விண்ணில் பறக்கும் வாடகைக் கார்கள் UAM (urban air mobility service) கொண்ட ஒரு தொழில்நுட்பத்தை தென் கொரிய போக்குவரத்து வல்லுனர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்நாட்டின் சியோல் நகரத்திலிருந்து நாட்டின் பல்வேறு விமான நிலையங்களுக்கு விரைந்து செல்ல இந்த விண் வாடகைக்கார்கள் பயன்படுத்தப்படும் என்றும் 2025குள் இவை பயன்பாட்டில் வர செய்யவேண்டிய அனைத்து வேலைகளும் முடிந்து இருக்கும் என்றும் தெரிகிறது. இவை இன்றைய நகரப் போக்குவரத்து நெரிசலைப் போக்குவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இது ஒரு தானியங்கி வாகனமாகவோ அல்லது, ஓட்டுனர் வைத்தோ இயங்க முடியும் என்றுத் தெரிகிறது. இன்று நம் பயன்பாட்டில் இருக்கும் உலங்கூர்தியைப் போல இயங்கும் இந்த வாகனம் பொதுமக்களின் வசதியை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகின்றது. பிரபல வானூரிதி தயாரிப்பு நிறுவனமான airbuனைது குறித்து பல ஆராய்ச்சிகளையுன் செயல்பாடுகளையும் செய்து வருகின்றது.
இதையெல்லாம் பார்க்கும் போது கணினிமயமான எதிர்காலம் கண்ணுக்குத் தெரியத்தான் செய்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல என்றுமே தொழில்நுட்பத்திலும் நவீன கண்டுபிடிப்புக்களிலும் தங்களை முன்னோடியாகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்க நிறுவனங்களால் உலகின் மற்ற பாகங்களை அதே வேகத்தோடும் சீராகவும் அடைய முடிந்ததா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடிப்படையில் கணினித் தொழில்நுட்பம் முழுவதும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது என்பதைத் தாண்டி பல நாடுகள் விதவிதமாக பிரச்சனைகளை இந்தக் கணினியுகத்தில் சந்தித்து வருகின்றது.
பொருளாதார ஏற்றத்தாழ்வைப் போல தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு உலகில் மலிந்து இருக்கின்றது என்கிறது ஐக்கியநாடுகள் சபையின் அதிகாரபூர்வமான அறிக்கை. 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ம் தேதி வெளிவந்த அறிக்கை கூறுவதாவது, ஆசியா, பசுபிக் பகுதியில் உள்ள நாடுகளில் 52% மக்களுக்கு இணைய வசதியே இல்லை என்பது தான். அதாவாது தங்கள் பணி சம்பந்தமாக நகரங்களில் வேலை செய்து வந்த போது அவர்களுக்குக் கிடைத்த இணையவசதி பேரிடர் காரணமாகத் தங்கள் பணியிடத்தை விட்டு தங்களின் கிராமங்களூக்குச் செல்லும்போது அவர்களுக்கு கிடைக்க வழியில்லாமல் போனது பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறது அந்த அறிக்கை, இதை விட UNICEF தரும் அதிர்ச்சி தரும் புள்ளி விவரம் என்னவென்றால் மூன்றில் ஒரு குழந்தைக்கு இணைய வழி கல்விக் கிடைக்காமல் போய்விட்டது என்பது தான். அதுவும் கிராமப்புறக் குழந்தைகளுக்கு கல்விக் கற்கத் தேவையான தொழில்நுட்பப் பற்றாக்குறை என்றால் இன்னோரு பக்கம் குடும்பச் சூழ்நிலை.
நம் ஆசிரியர்களில் பலருக்கு இது அனுபவமாகக் கூட இருக்கலாம். வீட்டில் படிக்கக்கூடிய சூழ்நிலை இல்லை, வறுமை காரணமாக வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை இவை குழந்தைகளை அவர்களின் ஆரம்ப நடுநிலைக்கல்வி மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. தனி மனிதனுக்கு உணவு இல்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி ஆனால் கல்வி என்பது ஒரு குழந்தைக்கு இல்லையேல் ?
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் (அதிகாரம்:கல்வி குறள் எண்:393)
பொருளாதாரத் தட்டுப்பாட்டால் கல்வி கிடைக்காத து ஒரு நிலை என்றால் தொழில்நுட்ப பற்றாக்குறைகள் ஒரு பக்கம் கல்வியை காணாமல் போகச்செய்கின்றன, கல்வி இல்லாத எதிர்கால சந்ததி எப்படி இருக்கும்.? நம் குழந்தைகளின் எதிர்காலமே கல்வியின் அடிப்படையில் தான் என்று எண்னிய பெற்றோர்களின் தியாகத்தில் வளர்ந்த பிள்ளைகள் நாம். நாமும் அப்படித்தான் நம் குழந்தைகளின் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.
உலகின் ஒரு பக்கத்தில் சாமர்த்திய நகரங்கள் மொதுமக்கள் பயன்படுத்த வான்வழி வாகனங்கள், இணைய விளையாட்டுத்தளங்கள் தனியார் விண்கலங்கள் என்று இருக்க மற்றோரு புறம் பசி பட்டினியோடு சேர்ந்து பண்பாட்டை கலாச்சாரத்தைத் தொலைத்த சந்ததியினரும் இருந்தால் எப்படி இருக்கும். தொழில்நுட்பத்திலேயே உருண்டு பிரண்டு வாழ்பவர்கள் நாகரீகமானவர்களாகவும், தொழில்நுட்பப் பற்றாக்குறையினால் வாய்ப்பிழந்து இருப்பவர்கள் நாகரிகம் அற்ற பழங்குடிகளாகவும் கருதப்படுவார்களா?
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 61 (எண்ணியல் செலவாணிகளை அகழ்தல்)– சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 62 (இன்றைய கொளவு எண்ணியியல் – ஒரு பார்வை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 63 (இராட்சத கொளவு எண்ணியியல் அகழ்தல் ஏன்?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 64 (கொளவுக்கனிமை வழி எண்ணியியல் அகழ்தல் )– சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 67(எண்ணியியல் செலவாணியின் எதிர்காலம்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.