தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்
தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகள் உலகம் முழுவதும் கல்வியைக் கண்டிப்பாகப் பாதிக்கின்றது. கணினி கல்வியின் துணைக்கருவியாக செயல்பட வேண்டியக் கட்டாயம் நமது வாழ்க்கை முறையினால் ஏற்பட்டு உள்ளது. கரும்பலகைகளாக நழுவல் காட்சிகளும் மின்னூல்களாகப் பாடப்புத்தகங்களும், செய்முறை விளக்கங்களாக வலையொளிகளும் இன்று பயன்பாட்டில் உள்ளன என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நூலகங்கள்கூட தங்கள் வளங்களை மின் வழி வழங்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டே இருக்கின்றன.
இப்படிக் கல்விக்கான வளங்கள் மின் எண்ணியியலாக மாறும் போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இரு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது கணினிக் கருவிகளின் தட்டுப்பாடு, இரண்டாவது, கற்றல் கற்பித்தலுக்கான வளங்கள் பற்றிய முழுமையான விழிப்புணர்வு.
இந்த இரு காரணிகளால் கல்வியில் தொழில்நுட்பத்தால் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. அது போதாது என்று கணினி computer chip உலகையே பற்றாக்குறை தலைமேல் தொங்கும் கத்தியாய் அச்சுறுத்திக் கொண்டே உள்ளது. சாம்சங் நிசான் போன்ற நிறுவனங்கள் செய்வதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளன.
புதுப்புது கணினிகள் தாயரிக்க நிறுவனங்கள் முன்வரும் இந்த நிலையில் இணைய வசதியே இல்லாத அமெரிக்க கிராமப்புறங்களும் இருக்கத்தான் செய்கின்றன. பேரிடர் காலத்தில் இந்த ஏற்றத் தாழ்வுகள் கிராமப்புற மக்களின் சுகாதாரத்திற்கும் அன்றாடக் கல்விக்கும் பெரிய இடையூறாக இருந்து வந்தது. கொரானா நோய் தாக்காதவர்கள் நேரடியாக மருத்துவமனைக்குக் செல்லாமல் இணையம் வழி மருத்துவர்களைச் சந்தித்துப் பேச இயலாமல் போனது. மாணவர்கள் கல்வி கற்க கணினி சாதனங்கள் இருந்தும் வேகமான இணைய வசதி கிடைக்காமல் தவித்தனர். பொதுவாக அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மாகாணங்களில் இணைய வசதி வேகமாக உள்ளது. இங்கு உள்ள பல மாநாகரங்களில் ஏறத்தாழ 110 mpbs வேகத்திற்கு இணைய வசதிக் கிடைக்கின்றது. பசுபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மாகாணங்களில் சராசரியாக 50 mpbs வேகத்திற்கு இணைய வசதி கிடைக்கின்றது.
இந்த வித்தியாசத்திற்குக் காரணம் கிழக்குக் கடற்கரையிலுள்ள மாகாணங்கள் வர்த்தகச் சூழலுக்கு ஏற்றபடி உள்ளதால் இங்கு மக்கள்தொகையும் வாழ்க்கை வசதிகளும் மேற்குக் கடற்கரையில் உள்ளவர்களை விட அதிகமாக உள்ளது. பொதுவாக விவசாயத்தை நம்பி இருக்கும் மேற்குக் கடற்கரை மாகாணங்கள் தற்போது தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆளுகைக்குள் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் இங்கு இணைய வசதி ஒரு பற்றாக்குறையாகவேக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மேரிலாந்து மாகாணத்தில் இணைய வேகம் ஏறத்தாழ 190 mpbs என்றால் அலாஸ்கா மாகாணத்தின் இணைய வசதி 17 mpbsல் இருக்கின்றது. இணைய வசதி எந்த வேகத்தில் இருந்தாலும் அதன் விலை நாடு முழுக்க ஓரளவு ஓரே மாதிரியாக உள்ளது. மாதத்திற்குக் குறைந்தது $70.00 இணைய வசதிக்காக ஒரு குடும்பம் செலவழிக்க வேண்டியுள்ளது. இதில் சில குடும்பங்களில் ஒவ்வோருவருக்கும் மூன்று கணினி சாதனங்கள் இருக்கும் போது பல குடும்பங்களில் ஒருவருக்கு ஒரு கணினி சாதனம் இருப்பதே சிரமமாக உள்ளது.
அமெரிக்காவின் NPR9 தேசிய அரசு வானோலியின் இணையதளத்தில் இந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி இது பற்றி வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்க மேற்குக் கடற்கரை மாகாணமான நவடாவில் அமெரிக்க இந்தியர்களுக்கான நிலப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இணையவசதி இல்லாமல் மிகவும் சிரமபட்டதாகத் தெரிகிறது ஏறத்தாழ 450 சதுரடியில் உள்ள இந்த பாதுகாக்கப்பட்டக் குடியிருப்பிற்கு ஒரே ஒரு இணையவசதிக் வழிதான் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை அதிகமாக உள்ள நகரங்களிலிருந்து ஒதுக்குப்புறமாக உள்ளதால் இந்த இடத்தில் சரியான, வேகமான, இன்று அதிக அளவு புழக்கத்தில் உள்ள இணைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அக்கறைக் காட்டுவதில்லை என்று தெரிகின்றது. அமெரிக்க நாட்டில் மட்டும் இவ்வாறு ஒதுக்குப்புறமாக வாழும் 42 மில்லியன் மக்கள் சரியான தொலைத்தொடர்போ அல்லது இணைய வசதியோ இல்லாமல் தவிக்கின்றனர் என்று இத்தளம் கூறுகின்றது. இத்தளத்தின் கருத்துப்படி, அமெரிக்காவின் (FCC) ஒன்றிணைந்த அரசின் தகவல் ஆணையம் கூறுவதாவது 14.5 மில்லியன் மக்கள் இவ்வாறு ஒதுக்குப்புறமான இடங்களில் வசிக்கின்றனர். இப்பகுதியில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் இணைய வசதியும் அடிப்படையாக மின்னஞ்சல் செய்யவும் அடிப்படை இணைய உலா வர மட்டுமே வசதி படைத்துள்ளது. கற்றல் கற்பித்தலுக்கான எந்த தொழில்நுட்பமும் சிக்கல் இல்லாமல் இந்த இணைய வசதியில் வேலை செய்யாது. மேலும் ஒரு வீட்டில் ஒருவர் இணையத்தில் இருந்தால் அவ்வீட்டிலுள்ள மற்றவர்களால் இணையத்தில் இணைய முடியாது.
டெக்ஸாஸ் மாநிலத்தில் ஹூஸ்டன் நகரைச்சுற்றி வாழும் மக்களிலொன்பது சதவித மக்களிடம் எந்த ஒரு கணினிக் கருவியும் இல்லை என்றும் 18 சதவித மக்களிடம் சரியான இணைய வசதி இல்லை என்றும் Broadband Breakfastமெனும் இணையதளம் கூறுகின்றது. எங்கள் மாகாணமான பென்சில்வேனியாவிலுமே இந்தப் பிரச்சனை இருக்கத்தான் செய்கின்றது. வருடத்திற்கு $25,000ஆயிரத்திற்குக் குறைவாக ஊதியம் வாங்கும் குடும்பத்தினர் கல்விக்குத் தேவையான இணைய வசதி இல்லாமல் தவிக்கின்றனர். இது இம்மாகாண மக்கள் தொகையில் ஏறத்தாழ 14% மக்கள் தொகையாகும்.
2021ம்ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி வெளியிட்டுள்ள செய்தியில் யுனெஸ்கோ கூறுவதாவது, இப்போது உலகில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளால், கல்வியால் ஒரு அமைதியான நீதி நிறைந்த குறைவு இல்லாமல் தொடர்ச்சியாக இயங்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவது மிகவும் கடினம். இவ்வறிக்கை மேலும் கூறூவதாவது இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் புதுப்புது கண்டுபிடிப்புக்களும் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றிக்கொன்டு இருந்தாலும் இவை ஒரு ஜனநாயக முறைப்படி அனைவரும் பங்கேற்கவும். வேறுபாடில்லாமல் அனைவரையும் தன்னுள் ஏற்றுக்கொண்ட சரியான தகைமை முறையில் வளர்ச்சி காணவில்லை என்று கூறுகின்றது. இந்தப் பாதிப்பு கல்வியில் பெரிய பாதிப்பை உருவாக்கி வருவதால் கல்விப் பற்றி நாம் மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று கல்வி என்பது என்ன என்பதைப் பற்றிய மாற்றுச் சிந்தனையின் அவசியம் அதிரடியாக நடக்க வேண்டும் என்று இவ்வறிக்கை வலியுறுத்துகின்றது.
கல்வி என்பது ஒருவரின் பொருளாதாரத் தரத்தை உயர்த்த வழி செய்யும் ஒரு முறையாகத் தொழில்புரட்சி அடையாளம் காட்டியது. அதையே நாம் இன்று வரைப் பின்பற்றி வருகின்றோம். ஆனால் உண்மையில் கல்வி என்பது, நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தை, நாம் ஏற்கனவே அறிந்து இருக்கும் ஒரு விவரத்தின் துணைகொன்டு ஆழமாக அறிந்து அனுபவித்துக் கொள்ளுவதும், அப்படி நாம் பெற்ற அறிவை செயலாக்கம் செய்யும் போது ஒரு மேம்பட்ட பயனை, எதிர்கால சிக்கல்களை யோசித்து அதற்கான தீர்வுகளை கொடுக்கக் கூடிய ஒரு பயிற்சியே இன்றையக் கல்வியின் தேவையாக உள்ளது. ஒருவர் வகுப்பில் படிக்கும் பாடங்கள் தேர்வுகளைத் தாண்டி , ஒருவர் வாழ்க்கை முழுவதும் தங்கள் அனுபவத்திற்கு ஏற்ப புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தெரிந்து கொண்ட விஷயங்களை சுயதேவைக்காகவும் சமுதாயத்தின் தேவைக்காகவும் பயன்படுத்த முனைவது தான் கல்வியாகும். இதனாலேயே கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்று சொல்லும் ஔவைப் பாட்டி அப்பாடலிலேயே, கல்விக் கடவுளான சரஸ்வதி கூட படித்துக் கொண்டே இருக்கிறாள் என்று கூறுகின்றார்.
கல்வி என்பது எந்த ஒரு பிரச்சனைக்கும் நடைமுறையிலிருந்து மாறுபட்டு நீண்ட காலத் தீர்வை கண்டுபிடிக்கக் கூடிய ஒரு சக்தியை மனிதர்களுக்குக் கொடுக்கின்றது.
ஏறத்தாழ பதினான்கு நாடுகளில் 200 மில்லியன் குழந்தைகள் இணைய வழி இல்லாமல் கல்வி கற்க வழி இல்லாமல் இருக்கின்றனர். மழலைக் கல்விக்கூடங்கள் இணைய வசதி இல்லாமல் இயங்காமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இணைய வசதியும் கணினி சாதனங்களும் இருந்தால் மட்டும் இங்கே கல்வித் தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகள் சீரடைந்து விடுவதில்லை.
இணையவசதியும் கணினி சாதனங்களும் இல்லாதது மட்டுமல்ல, இந்த கணினித் தொழில்நுட்பங்களை வைத்து பாடம் நடத்துவதும் பொருளாதார ரீதியில் சிக்கலை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமல்ல, பள்ளி நிறுவனங்கள் ஆசிரியர்கள் ஆகியோருக்கும் இது கணினி வழிப் பாடங்கள் பொருளாதார ரீதியாகப் பல சிக்கல்களைக் கொடுக்கிறது.
மாணவர்கள் தங்கள் வீட்டுப்பாடங்களை செய்யாமல் வருவது, இரண்டாவது. கணினிக் கருவிகளையோ அல்லது கல்விக்கான மற்றத் தொழில்நுட்பங்களையோ பயன்படுத்தத் தேவையான அடிப்படை, கணினிக்கான பொது அறிவு இன்மை, பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பங்கள் கிடைக்காமல் அனைத்துத் தொழில்நுட்பங்களும் கணினி சாதன இடைமுகங்களும் பெரும்பாலும் ஆங்கில மொழியில் இருப்பதும் பலச் சிக்கலகளை பொருளாதார ரீதியாக உருவாக்குகின்றது. ஆசிரியரிடம் நேரடியாகத் தங்கள் சந்தேகங்களைக் கேட்க இயலாமல் மாணவர்கள் தங்கள் வகுப்பிலிருந்து தேர்ச்சி அடைவதும் கடினமாகின்றது. கணினி சார்ந்த பாடத்திட்டங்களும் பாடநூல் வளங்களும் மிகவும் குறைவாகவே உள்ளது.
ஒவ்வோரு தொழில்நுட்பமும் ஒவ்வோரு ஆண்டும் தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக தங்கள் சாதனங்களையும் மென்பொருட்களையும் மாற்றி, தரத்தை உயர்த்தி சேவைகளை அதிகரித்துத் தருவதாக கூறி (update) புதிப்பித்துக் கொண்டே உள்ளனர். எனவே பழைய சாதனங்கள் விரைவில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விரைவில் பயனில்லாமல் போகின்றன. கருவிகளின் பற்றாக்குறையும் கல்வி வளங்களில் உள்ள பற்றாக்குறையும் எளிதில் தீர்க்க க் கூடிய பிரச்சனைகளா?
முந்தைய தொடரை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 67(எண்ணியியல் செலவாணியின் எதிர்காலம்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 69(கல்வியின் எதிர்காலம் கணினியா?) – சுகந்தி நாடார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.