என்ன மாதிரியான விழிப்புணர்வு?
சிறந்த கல்வியின் அடிப்படை உன்னதமான கல்வி வளங்களும் மனிதநேயம் வளர்க்கும் ஆசிரியர்களும். இவை இரண்டும் உருவாக தகவல்தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு தேவை.
விழிப்புணர்வின் அடுத்தப்பக்கம் நமது சமூக வலைதளங்களில் வரும் செய்திகள். இணையதளம் என்பதை virtual என்று கூடக் கேள்விப்பட்டு இருக்கின்றோம். அப்படி என்றால்
carried out, accessed, or stored by means of a computer, especially over a network என்று Oxford ஆங்கில அகராதி கூறுகின்றது. இதையே தமிழில் நடைமுறையில் மெய்யான , செயலளவில் மெய்யாகக் கொள்ளத்தக்க என்று அகராதி கூறுகின்றது. அதே virtual என்ற சொல்லை கணினிக் கலைச்சொல்லாக பார்க்கும் போது மெய்நிகர் என்ற சொல்லை நாம் பயன்படுத்துகின்றோம். மெய்நிகர் என்றுதான் கூறுகின்றோமேத் தவிர மெய் என்று சொல்வதில்லை. மெய்க்கு நிகரான ஒன்று மெய்யாகி விட முடியுமா? இதையே தான் Oxford ஆங்கில அகராதியும் not physically existing as such but made by software to appear to do so என்று இன்னோரு விளக்கமும் அளிக்கின்றது. தமிழில் மாயம், மறைமுகம் கற்பனை என்று கூட இச்சொல்லுக்கு பொருள் இருக்கின்றது. இந்த அடிப்படையைக்கூட உணராமல் நாம் இணையத்தில் வரும் தகவல்களை நம்பிச் செயலாற்றிக் கொன்டு இருக்கின்றோம்.
2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 தேதி நார்வே நாட்டில் நோபல் பரிசு பெற்ற இரஷ்ய பிலிப்பைன்ஸ் செய்தித் தொடர்பாளர்கள் தங்களுடைய ஏற்புறையில் இன்றைய செய்திகள் குறித்த கவலையைத் தெரிவித்து உள்ளனர். அதிலும் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் ராப்ளர் என்ற செய்தி தளத்தின் முதன்மை மேலாண்மை அலுவலர் மரியா ரேசா சமூக வலைதளங்களில் வரும் செய்திகளைக் குறித்த தன் கவலையைத் தெரிவித்தார். இன்றைய சமூக வலைதள நிறுவனங்களை நேரடியாக குறித்துப் பேசிய அவர் “ செய்தியாளர்களின் இன்னோரு பக்கமாக இருக்கும் தொழில்நுட்பத் தளங்கள், பொய் என்ற கிருமிகள் மூலம் நமது சிந்தனையை ஆக்கிரமித்து, நம்மை ஒருவரை ஒருவரோடு மோத வைத்து மக்களின் மனதில் பயன் கோபம் ஆத்திரம் என்ற விஷ உணர்சிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார். இந்த விஷமச் செய்திகள் நம் உலகத்தை ஒரு அலங்கோலமாக மாற்றி வருகின்றது. தங்களுடைய இலாபத்திற்காக இப்படிப்பட்ட வேலைகளைச் செய்யும் அமெரிக்க தொழில்நுட்பங்களுக்கு எதிராக உண்மையான செய்திகளைப் பரப்ப செய்தியாளர்கள் மிகவும் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்று அவர் கூறுகின்றார். சமூக வலைதளங்களில் நடக்கும் வன்முறை இன்று உலகில் நாம் அனைவரும் அனுபவிக்கும் உண்மையான வன்முறை என்று அவர் சொல்கிறார்.
இன்று உலகில் வலம்வரும் செய்திகளில் பெரும்பான்மையான பங்கு முகநூல் வழியாகத் தான் பகிரப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதில் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் உண்மையான மனிதர்களா அல்லது வர்த்தகங்களா என்ற விவரம் முகநூல் நிறுவனத்திற்கு அன்றி வேறு யாருக்கும் தெரியாது. இந்தப் பயனாளர்கள் இடும் செய்திகள் எந்த வகையைச் சார்ந்தவை என்பதும் முகநூலுக்குத் தான் தெரியும். 2021ம் ஆண்டு டிசம்பர் பதினாறாம் தேதி வெளிவந்த அறிக்கையில் முகநூல் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான மெட்டா (meta) கொடுத்துள்ள அறிக்கையில் பல தனியார் அவதானிப்பு (surveillance) நிறுவனங்கள் ஏறத்தாழ 50000 பயனர்களை தாக்கி அவர்களிடமிருந்து விவரங்களை எடுத்து அதை வைத்து உளவு நடத்தி இருப்பதாக அறிவிக்கைத் தெரிவித்து உள்ளது.
டிசம்பர் 3ம் தேதி வந்த Reuters செய்தித்தளத்தில் வந்த செய்தியில் அமெரிக்காவில் இருக்கும் ஒரு அரசியல் செய்தித் தளம் 2020ம் அமெரிக்கத் தேர்தல் பற்றிய பொய்யான செய்திகள், புரளிகளை உண்மை செய்தியாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாகத் தெரியவருகிறது. இது முகநூல் நிறுவனத்திற்குத் தெரிந்திருந்த போதிலும் அவர்கள் செய்திதளத்தைக் கண்டித்த போதும் இந்தத் தளத்திலிருந்துவரும் பொய்யான செய்திகளை முகநூல் நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தெரிகிறது.
நவம்பர் ஒன்பதாம் தேதி முகநூல் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் வெளிவரும் ஒவ்வொரு 10,000 பதிவுகளில் பயனாளர்களை அச்சுறுத்தியும் கோபப்படுத்தியும் மன உளைச்சல் கொடுத்தும் தொந்தரவு கூட பதிவுகள் 14 அல்லது 15 முறை வருகின்றன என்று கூறுகின்றது. இவ்வாறு தவறு இழைக்கும் பயனர்களின் கணக்கை முடக்கியும், அல்லது அவர்கள் மீது வழக்குத் தொடுத்தும் வருகிறது முகநூல்.
முகநூல் கொடுக்கும் தண்டனைகளில் முக்கியமானது இம்மாதிரி பதிவுகளைப் பற்றி எச்சரிக்கையை மற்றப் பயனர்களுக்குக் கொடுப்பதும். அப்பதிவுகளை பயனர்கள் பார்க்காதவாறு கீழே தள்ளுவதுமே தவிர இந்தச் செய்திகளை முழுமையாக அவர்களின் தளத்திலிருந்து எடுப்பதில்லை. அப்படியானால் நாம் மின்னியியல் வழி நுகரும் செய்திகளில் எது உண்மையானது? எது பொய்யானது? எது நிகழ்வுகளைத் தெரிவிக்கப் பயன்படுத்தபடுகிறது? எது நம் உணர்வுகளைத் தூண்டி செயல்பட வைக்கிறது.
ஒருவரின் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய செய்திகளில் எந்த அளவு உண்மை இருக்கும்?
முகநூலில் வரும் எதிர்மறை செய்திகள் இன்று இணையத்தில் வரும் செய்திகளில் ஒரு எடுத்துக்காட்டுத்தான். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இணையத்தில் வரும் செய்திகள் எப்படிப்பட்டவை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூக வலைதளங்களை நம்பி இருக்கும் செய்தியாளர்களை நாம் குறை சொல்லமுடியாது. ஒரு செய்தியை எப்படி எவ்வாறு சேகரிப்பது என்ற அடிப்படையில் அல்லவா மாற்றம் கொண்டு வரவேண்டும்? அந்த மாற்றம் கல்வியாலும் கல்வியாளர்களாலும் தான் வரும்.
நோபல்பரிசு பெற்ற மரியா ரேசா அவர்களின் கருத்து சரிதானே? இன்றைய முன்ணனி இணைய நிறுவனங்கள் ஒரு பதிப்பகத்தைப் போலத்தானே செயல்படுகின்றன?
சில நாட்களுக்கு முன்னால் வலையோளியாளர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பதிவில் சொன்ன கருத்துக்களுக்காக கொடுக்கப்பட்ட புகாரை இரத்து செய்யும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உயர்திரு நீதியரசர் ஜீ.ஆர் ஸ்வாமிநாதன் அவர்கள் தன் தீர்ப்புரையில்கூட “எந்த ஒரு வலையோளியாளரோ அல்லது பொதுநல செய்திகளைப் பற்றி கருத்துரைக்கும் சமூகவலைதள பிரபலங்களோ இந்திய அரசு சாசனம் Article 19 (1) (a) படி ஊடகங்களும் செய்தியாளர்களும் அனுபவிக்கும் பேச்சு சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என்று கூறுகிறார்.
இவ்வாறு மக்கள் நுகரும் அனைத்து செய்திகளிலும் கலப்படம் இருந்தால் என்ன செய்வது? கலப்பட செய்திகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளவும், உண்மையானச் செய்திகளை எவ்வாறு கொடுப்பது? கொடுக்கும் செய்திகள் மனிதஉரிமைகள் மீறா வண்ணம் எப்படி அமையவேண்டும் என்று சொல்வதும் கற்றுக் கொடுப்பதும் கல்வி தானே? இன்றையக் கல்வி அப்படிப்பட்ட ஒரு கருவியாக மாணவர்களுக்குப் பயன்படுகின்றதா? இல்லைதானே?
பசி எவ்வாறு ஒரு காலத்தில் போக்ககூடிய ஒரு பிணியாகப் படுத்தபட்டதோ? எப்படி மின்சாரப் பற்றாக்குறை முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டியத் தேவையாக முதன்மைப் படுத்தப்பட்டதோ அது போல கல்வி முறையில் மாற்றம் இன்றைய இன்றியமையாதத் தேவையாக உள்ளது. கல்விப் புரட்சியில் நம் பொருளாதாரத்தில் மட்டுமல்ல மற்ற எல்லா நிலைகளிலும் தன்னிறைவு அடையலாம்.
செய்தித்தாள், வானோலி தொலைக்காட்சி மூலம் வரும் செய்திகளை நாம் வடிகட்டி எடுத்துப் புரிந்துகொள்ள சற்றேனும் கால அவகாசம் நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் கணினி வழி தகவல் தொழில்நுட்பத்தின் அகோர வடிவமாக, நம்மை வந்து அடையும் இந்த செய்தித் துணுக்குகளின் தாக்கத்தை எவ்வாறு நேர்மறையாக மாற்ற முடியும்? என்ன செய்யலாம்?
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 69(கல்வியின் எதிர்காலம் கணினியா?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 (தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 73(கல்வி ஏழ்மை) – சுகந்தி நாடார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.