அது என்ன மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?
இன்றைய உலகில் ஒருவர் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள கல்வி நிலையம் செல்வது அவசியம் என்றக் கொள்கையில் நாம் வாழ்ந்து வருகின்றோம். கல்வி நிலையங்களும் மாணவர்களின் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை மாணவர்களுக்கு பல விதங்களில் கொடுத்து அந்த விவரங்களிலும் செய்திகளிலும் வல்லவராக இருப்பவரை வல்லுனர் என்று அழைக்கின்றது. அப்படி கல்விநிலையங்களுக்கு சென்று கல்வி கற்காதவர்கள் அதிக அளவுப் பொருள் ஈட்டினால் அவர்களை நாம் வெற்றியாளர் என்று போற்றுகின்றோம்.
பலபலப் பட்டங்கள் பெற்றவர்களும் நிலையான வருமானமும் மட்டுமே வெற்றியை அடையாளப்படுத்தும் என்பது உண்மையானால் இன்று உலகத்தில் பசியும் பிணியும் ஏழ்மையும் இருக்கவே கூடாதே அதுவும் முக்கியமாக நம்நாட்டில்.
கல்வியால் வெற்றி என்று நம்பி நாம் அனவருமே நம் மாணவச்செல்வங்களின் கல்விக்காக எவ்வளவு மூலதனத்தை வாரி இறைக்கின்றோம். இத்தனை மூலதனத்தின் விளைவாக ஒருவர் பெறும் கல்வி, அவரது வாழ்க்கை முழுவதும் உழைத்தால் மட்டுமே அவருக்கு ஒரு வளமான எதிர்காலத்தைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது.
இந்த நிலை நம் நாட்டில் மட்டுமல்ல உலகின் பலநாடுகளில் இப்படித்தான் இருகின்றது. அமெரிக்காவில் ஆசிரியர்களாக பணிபுரியப் பெறும் கல்விக்கடனை ஒருவர் தீர்க்க அவரின் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும். ஆசிரியர் கல்வி என்று இல்லை. பள்ளி வகுப்பு முடிந்து கல்லூரி என்று காலடி எடுத்துவைக்கும் போதே கடனோடுதான் கல்லூரிக்குள் நுழைகின்றனர். தமிழ்நாட்டில் மாணவர்களின் பெற்றோர் கல்விக்காக கடனாளிகளாகின்றாரகள் என்றால் அமெரிக்காவில் ஒவ்வோரு மாணவரும் கடன் வாங்கியே கல்லூரிக்குள் நுழைகின்றனர். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாகும் கல்லூரிக்கல்வி அவர்களின் பட்டத்தோடு கடன் சுமையும் கொடுத்தே கல்லூரிகள் மாணவர்களை வெளியே அனுப்புகின்றது.
கடந்த பத்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 91 பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவில் மாணவர்களின் கல்விக்கடன் உள்ளது என்றும் ஒரு சராசரி அமெரிக்கரின் வாழ்வில் வீட்டு அடைமானத்திற்கு அடுத்ததாக ஒருவரின் கல்விக்கடனே ஒரு பொருளாதாரச் சுமையாக இருக்கின்றது என்று Education data என்ற தளம் புள்ளி விவரம் கொடுக்கின்றது. இன்றையக் கல்விக் கொள்கைகள் நிச்சயமாகப் பொருளாதாரத்தேவையை பூர்த்தி செய்யவில்லை என்பதற்கு இந்தப் புள்ளிவிவரம் ஒரு அறிவியல் சான்றாக விளங்குகின்றது.
அப்படியானால் யதார்த்தத்தில் கல்விநிலையம் என்பது எப்படி இருக்க வேண்டும் ஒரு கல்விநிலையம் என்பது குழந்தைகள் தங்களைப் பற்றிய ஒரு ஆனந்த அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பது ஏடுகளிலேயே இருக்குமா? அல்லது கல்வியும் கல்விநிலையங்களும் மாணவர்களின் அன்றாட அனுபவங்களின் நீட்சியாக இருக்குமா?
தமிழ் நாட்டில் பத்தாம் பன்னிரெண்டாம் மாணவர்களில் 90% மாணவர்களின் அன்றாட வாழ்க்கையே அதிகாலை 5 மணியிலிருந்து இரவு எட்டு ஒன்பது மணிவரை ஏதாவது ஒரு தேர்விற்குத் தயார் செய்வதுதான். வல்லமை இணைய நிறுவனர், ஆசிரியர் அண்ணாக் கண்ணன் அவர்களிடம் கல்வி பற்றி பேசிக் கொண்டு இருக்கும்போது, அவர் கூறியது மாணவர்களுக்கு போட்டி உலகம் இருக்கிறது அப்போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பைக் கொண்டுவருவது முக்கியம் என்று கூறினார். இன்னும் சில ஆசிரியப்பெருமக்கள் கணினிப் பயன்பாட்டில் தங்களுக்கு இருக்கும் குறையையும் வேலைவாய்ப்பிற்கு உகந்த கல்வியே உன்னதமானக் கல்வி என்றும் கருத்துத் தெரிவித்தனர். ஒரு விதத்தில் இவர்கள் கூறியது சரியே என்றாலும், கல்வி என்பதில் போட்டியில் வெற்றிபெற்று வாழ்க்கை நடத்துவதா? அல்லது ஒவ்வோருவரரும் தங்களை முன்னேற்றிக் கொள்ளும்போது தங்கள் சார்ந்த சமூகத்தையும் வளர்த்துக் கொள்வதா?
நான் இங்கு சித்தரிப்பது ஏதோ ஒரு கற்பனைபோல இருந்தாலும் இன்று நமக்கு இது தானே தேவையாய் இருக்கிறது இங்கே நாம் கனவு காணும் நல்லுலகம் கல்விக் கொள்கைகளை விட தத்துவங்களின் அடிப்படையில் இருப்பதுபோலத் தோன்றலாம். வாழ்க்கைக்கும் கல்விக்கும் இடையில் தத்துவங்களுக்கு இடமில்லை என்ற மனநிலையில்தான் இன்று பெரும்பாலோர் இருக்கின்றோம்.
Philippa Ruth Foot என்ற ஆங்கிலேய பெண் தத்துவஞானியும் Judith Jarvis Thomson என்ற அமெரிக்கத் தத்துவஞானியும் ஒரு மாணவருக்கு எப்படிப்பட்ட சிந்தனை இருக்கவேண்டும் என்பதை ஒரு மின் இரயில் புதிர்களின் (trolly problem) மூலம் விளக்குகின்றனர்.
தறிகெட்டு ஓடும் ஒரு மின் ரெயில் ஒன்றின் பாதையில் 5 பேர் வேலை செய்துகொண்டு இருக்கின்றனர். தறிக்கெட்டு ஓடும் பாதையில் இருக்கும் அவர்களுக்கு மரணம் நிச்சயம். ஆனால் அவர்களை நெருங்க கிளையாய் பிரிந்த இருப்புப்பாதையில் ஒரே ஒரு மனிதன் வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்.
இரயிலின் ஓட்டுனர் எந்தப் பாதையில் தன் இரயிலை விட வேண்டும்? என்பது Philippa Ruth Foot அவர்களின் கேள்வி ஐந்து பேரை மரணிப்பதா? இல்லை ஐந்து பேருக்காக ஒருவரின் உயிரை பலி கொடுப்பதா?
மேற்கொண்ட பிரச்சனையை சிறிது மாற்றிக் கொடுக்கின்றார் Judith Jarvis Thomson தறிகெட்டு ஓடும் மின் ரெயிலின் பாதையில் உள்ள தண்டவாளத்தில் வேலை செய்யும் ஐந்து பேரின் உயிரையும் மின்ரெயிலில் பயணிப்பவர்களின் உயிரையும் காப்பாற்ற ஒரே வழி, ஒரு மிக பளுவானபொருளைத் தூக்கி இரயில் பாதையில் போடுவதுதான். மின்ரெயிலின் பாதையில் உள்ள பாலத்தின்மேல் ஒருவர் நின்று கொண்டு இருக்கின்றார்.
அவர், தன் அருகில் இருக்கும் ஒரு குண்டோதரனை எடுத்து இரயிலின் பாதையில்போட்டு, மற்ற ஐந்து பேரையும் காப்பாற்றலாமா? இந்த இரண்டு புதிர்களுக்கும் விடை என்ன
மற்றவர்களைப் பாதிக்காத செயல்களைச் செய்யாமல் இருப்பதா? அல்லது மற்றவர்களுக்கு உதவி செய்யும்படியான செயலைச்செய்வதா? என்ற இரு கேள்விகளுக்கும் இடையில் எந்த மாதிரியானத் தீர்வை இரயில் ஓட்டுனராய் நாம் எடுக்க வேண்டும்?
எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதன் நன்மையும் தீமையும் முடிவுகளின் விளைவுகளால்தானே முடிவு செய்யப்படுகின்றது? ஐந்து பேரைக் காப்பதற்காக ஒருவரைக் காவுக் கொடுப்பதில் தவறு இல்லை என்று சொல்லலாம். அப்படியானால் அந்த ஒருவர் ஒரு நாட்டின் தலைவராக இருக்கும் பட்சத்தில் நாம் யாரைக் காப்பாற்ற வேண்டும்? அல்லது நாம் காவு கொடுக்கத் தயாராக இருக்கும் ஒரு உயிர் ஒரு குழந்தையாக இருந்தால்? அதுவும் இரெயில் ஓட்டுனரின் குழந்தையாக இருந்தால்?
அதே நேரம் உயிருக்கு ஆபத்து வந்த ஐந்து நபர்களும் தீவிரவாதிகளாக இருக்கும் பட்சத்தில் இரயில் ஓட்டுனரின் முடிவு எப்படி இருக்க வேண்டும்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒவ்வோருவரின் நிலையையும் சூழ்நிலையையும் பொறுத்து முடிவு எடுக்க முடியுமா? பொது நலத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டுமா?
ஜனவர் 7ம் தேதி வெளியிட்ட செய்தியில், ஆப்பிள் நிறுவனத் தலைவர் Tim cook-ன் 2021ம் ஆண்டிற்கான வருமானம் அமெரிக்க $500 மில்லியன் என்று தெரிகிறது. அதே சமயம் 2021ல் அந்த நிறுவனத்தில் வேலை செய்பவரின் வருமானம் அமெரிக்க $68 254 ஆகும். ஒரு முதலாளியின் சம்பளம் அவரிடம் வேலை செய்பவரின் வருமானத்தை விட ஏறத்தாழ 250 மடங்கு அதிகம். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆப்பிள் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களை அடிமாட்டு கூலிக்கு வேலை வாங்கியதும், இந்தியத் தொழிலாளர்ச் சட்டங்களை அந்நிறுவனம் மீறி இருப்பதும் நமக்குத் தெரியும்.
தமிழ்நாட்டில் உள்ளத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் பெண்களுக்கு உணவு ஒத்துக்கொள்ளாமல் பெரிய பிரச்சனையாகியதும் நமக்குத் தெரியும். ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களால் இயற்கை சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அளவிட்டுக் கூறமுடியாது. ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் செல்வம் சார்ந்த பொருளாதரத்தின் ஒரு சிறு உதாரணம் தான். ஒரு கணினித் தொழில்நுட்ப நிறுவனத்தின் தன்னலமான செயலின் விளைவுகளே இப்படி இருக்கும் போது நம் வாழ்க்கையே கணினிகளை சார்ந்து இருக்கும் எதிர்காலத்தில் நாம் எப்படிப்பட்ட விளைவுகளை சந்திப்போம்.
இதே போல செல்வத்தையும் லாபத்தையும் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களும் சமுதாய அறம் பற்றிய சிந்தனை இன்றி வேலை செய்கின்றன என்பது நமக்குத் தெரியும். ஐந்து நபர்களைக் காப்பதற்காக, ஒருவரைக் கொல்வது சரி என்ற கொள்கையின் அடிப்படையில் நிறுவனத்தின் வியாபாரக் கொள்கைகளும் நடவடிக்கைகளும் இருக்கின்ற காரணத்தாலேயே இன்று தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வு உலகில் அசுரத்தனமாகி நிற்கிறது. மூன்றாம் தொழில்புரட்சியின் ஆரம்பக் கட்டத்தில் இருந்த பலரின் வாழ்க்கைத் தரம் இன்று குறைந்துதானே போய் இருக்கிறது? நம் வாழ்க்கை வசதியை உயர்த்த பல புதியதொழில்நுட்பங்கள் வந்த போதிலும் சராசரி மனிதனின் செல்வநிலை எப்படி இருக்கின்றது? சமுதாயப் பிரச்சனைகள் அதிகமாகியுள்ளது தானே?
இன்றைய இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் எழாதவாறு செயல்படத் தேவையான அறிவையும் அனுபவத்தையும் கொடுக்கக் கூடிய கல்வி அல்லவா நமக்குத் தேவைப்படுகின்றது.
மேலே சொன்ன மின்ரெயில் புதிரை விடுவிக்க ஒரு மாணவனுக்கு அறிவும் செய்திகளும் தேவையில்லை. ஆனால் இப்படி ஒரு அறம் சார்ந்த பிரச்சனையை ஒருவர் சந்திக்க நேரும் என்ற எதிர்பார்ப்போடு அப்படிப்பட்ட பிரச்சனைகள் எழாமல் இருக்கக் கூடிய சூழ்நிலையைக் கொண்ட தொழில்களையும் வேலைவாய்ப்புக்களையும் கொடுப்பதே மக்களைச் சார்ந்த பொருளாதாரம் ஆகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் உதாரணத்தை எடுத்துக்கொண்டால், நிறுவன அதிபரின் வருமானம் பங்குச்சந்தையில் நிறுவனத்தின் மதிப்பு என்ற மேல்மட்ட பிரச்சனைகளுக்கு மட்டும் தீர்வு காண்பது செல்வம் சார்ந்த பொருளாதாரம் என்றால் அதிபரின் வருமானம், பங்குச்சந்தையின் மதிப்பு ஆகியவற்றிகு சமமான முக்கியத்துவம் இயற்கை சூழலுக்கும் அடிமட்டத் தொழிலாளர்களின் நலனிற்கும் கொடுக்க உதவும் பொருளாதாரத்திற்கு மக்களைச் சார்ந்த பொருளாதாரம் என்று கொள்ளலாம். மக்களைச் சார்ந்த பொருளாதாரம் வலுப்பட கல்வியாளர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76(2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77(டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்) – சுகந்தி நாடார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.