மாணவர்களின் வல்லமை
மாணவர்களுக்கு நாம் எந்தப் பாடம் நடத்தினாலும், பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஒவ்வோரு தனி மாணவரும் சர்வ வல்லமை உடையவராக மாறக் கூடிய ஒரு அனுபவத்தையோ, அல்லது அப்படிப்பட்ட ஒரு தேடலுக்கான வழியையும் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் என்ன மாதிரியான ஒரு மாணவர் சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று யோசித்துப் பார்ப்போம். இங்கே நான் சர்வ வல்லமை என்றச் சொல்லை, சமயம் சார்ந்த இறைமையைக் குறிப்பிடவில்லை. (கோவிலுக்கு போக வேண்டுமா? தேவலாயத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டுமா? தொழுகை செய்வதற்கு பழக்க வேண்டுமா என்று மதங்கள் சார்ந்து யோசித்து விட வேண்டாம். இங்கு சர்வ வல்லமை என்பது வாழ்க்கைக் கல்வி என்று சொல்லுக்கு ஒரு மறுபெயர் தான் என்று வைத்துக் கொள்ளுவோமே).
நம் பாடத்திட்டத்தின் அங்கம் நம் மாணவர் ஒருவரை சர்வத்திலும் வல்லுனராக ஆக்கக் கூடிய தகுதி பெற்றுள்ளதா என்பதை எப்படி சோதித்துப் பார்ப்பது? சோதித்துப் பார்த்தால் தானே நம் பாடத்திட்டம் வேலைசெய்கின்றதா இல்லையா என்று தெரியும்?
மாணவருக்கு மனிதாபிமான உணர்வு, அது சார்ந்த செயல்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும் முறையில் இருக்கின்றதா? அவர் வயதுக்கும் சூழ்நிலைக்கும் தேவையான திறமையையும் செயல்திறனையும் வளர்க்கும் விதத்தில் உள்ளதா?
மாணவரது செயல்திறனையும் திறமையையும் ஊக்குவித்து, வளர்க்கும் வகையில் பாடப் பொருண்மையை வகுப்பில் அளிக்கக்கூடிய வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளதா? ஒரே சூழ்நிலையிலும் வயதிலும் உள்ள மாணவர்களில் ஒரு மாணவர் முதல் எட்டு இடங்களில் வரக்கூடியவரா? ஒரு மாணவர் தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் வகைகளை தன்முனைப்பில் தேடிசென்று, தன்னை வளர்த்துக் கொள்ளும் திறன் படைத்தவரா? என்ற வகையில் ஒரு பாடத்திட்டத்தின் ஒரு அங்கத்தையாவது நாம் சோதித்துப் பார்த்தால்தான் நம் மாணவர் ஒரு சர்வ வல்லமை படைத்தவராகக் வர முடியும்.
சரி வாழ்க்கைக் கல்வியை, ஏன் சர்வ வல்லுனர் என்று குறிப்பிட்டுச் சொல்கின்றேன் என்று முதலில் பார்ப்போம். பொதுவாக வாழ்க்கைக் கல்வி என்று சொன்னால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு எண்ணத்தையும் தங்கள் செயல்முறைகளையும் மாற்றிக் கொள்ளும் பண்பு செய்யும் தொழிலின் அறம் காத்தல் கூட்டணியில் வேலை செய்தல் தகவல் தொடர்பு வல்லமை என்று பலர் சொல்லுவர். இன்னும் சிலர் தொழில்நுட்ப அறிவு, கோட்பாடுகளை சார்ந்த கருத்துக்களை புரிந்து கொள்ளுதல் எதையும் ஆராய்ந்து பார்க்கும் தன்மை தருக்கவியல் கருத்துக்களை உருவாக்குவதில் வல்லமை சிக்கலான தெளிவில்லாத விஷயங்களைப் புரிந்து கொன்டு அதை கோர்வைப்படுத்தப்பட்ட கருத்தாகக் கூறுதல் புத்தாக்க சிந்தனை மாற்றங்களை எதிர்பார்த்தல் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து எதிர்காலத்தைக் கணித்தல் என்று பட்டியலிடுவார்கள்.
மேற்கூறிய பட்டியலில் ஒரு மாணவரை வல்லவராக்கும் எந்த ஒரு அடையாளமும் இல்லை அதனால் தான் வாழ்க்கைக் கல்வி என்ற பதத்திற்கு பதிலாக சர்வ வல்லமை என்ற சொல்லை இங்கு பயன்படுத்துகின்றேன். நாம் கல்வி 4,0 பற்றி பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். இடையில் கட்டுரை நின்று போயிருந்த காலக் கட்டத்தில் உக்ரேன் மேல் ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பது, துக்கமான செய்தியாக இருந்தாலும். ஒரு மாணவன் சர்வத்திலும் வல்லவராக இருக்க வேண்டிய அவசியத்தை உக்ரேன் மக்கள் உலகிற்கு உணர்த்தி வருகின்றனர். இராணுவப் பயிற்சி இல்லாத அனைவரும் நாட்டைக் காக்கும் வீரர்களாய் மாற வேண்டிய கட்டாயம். வீட்டுக்கு அரசியாக இருந்த பெண்கள் முதல் பல்வேறு தொழில் புரியும் அனைத்துப் பெண்களும் ஒரு நாளில் அடிப்படையே இல்லாத ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியக் கட்டாயம். சர்வ வல்லமையுடைய மாணவர் என்று சொல்லும் போது, all-rounder என்ற சொல்லைப் பொருத்திப் பார்க்கலாம். all – rounder என்றால் சகலத்துறையர் என்று பொருள். இங்கே சர்வவல்லமயம் என்பது சகலத் துறை அறிவு அனுபவம் பெற்றதோடு மட்டுமல்லாமால், அனைத்துத் துறையிலும் வல்லமை பெற்று இருப்பது.
ஒரு மாணவர் வல்லமை பெற்று இருக்கின்றார் என்பதை எந்த ஒரு அளவுகோலாலும் மதிப்பிட இயலாது. ஏன் எனில் ஒவ்வோரு மாணவரும் ஒரு விதம், மனிதனுக்கு முகம் எப்படி வேறுபடுகின்றதோ அப்படித்தான் மூளையும் வேறுபடும். அதனால் நம் திறமையும் சிந்தனைத் திறனும் செயல்திறனும் கண்டிப்பாக வேறுபடும். நம்முடைய முகம் நமது மூதாதையர் போல் இருந்தால் நமது முகம் மூதாதையரின் முகமாகிவிடாது. அது போலத்தான் ஒருவர் வல்லமைப் பெறுவதும். முகம் ஒன்று போல இருந்தாலும் மூளை (தலைமிதழ், தேகசாரம், பூமலி, மிதடு ஆகியவை மூளை என்ற சொல்லிற்கு இருக்கும் சிலச் சொற்கள் சின்னக் கொசுறுத் தகவல் – கூகுள் ஆண்டவருக்காக) என்பதன் திறன் கண்டிப்பாக வேறுபட்டுத்தான் இருக்கும். ஒரே முகம் கொண்ட இரட்டையரிடமும் சில வித்தியாச குணநலன்களைத் திறமைகளை நாம் காணலாம். எனவே சர்வ வல்லமை என்பதற்கு எந்த விதத்திலும் ஒரு அளவு கோலை வைக்க முடியாது. சர்வ வல்லமைத் திறனைத்தான் ஒரு மாணவனிடமிருந்து கல்வி 4.0 எதிர் பார்க்கின்றது.
All-rounder என்ற சொல்லுக்கு துடுப்பாட்டத்தை (cricket) ஒரு நல்ல உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இவ்விளையாட்டில் ஒரு வீரர்,பந்தை அடிப்பது, பந்தை வீசுவது. மைதானத்தில் பந்தைக் கையாளுவது ஆகிய அனைத்துத் திறமைகளையும் காட்டினால் அவரை All-rounder அல்லது பன்முக வித்தகர் என்கின்றோம். அதே விளையாட்டுக்காரர், துடுப்பாட்டத்தை மட்டும் விளையாடாது அனைத்து விளையாட்டிலும் எந்த ஒரு பொறுப்பையும் எடுத்துச் செய்யக் கூடியவராக இருந்து, விளையாட்டைச் சார்ந்த பொருட்கள் பயன்படுத்தும் விதம், அவற்றை தயாரிக்கும் விதம், விளையாட்டின் வரலாறு என்று விளையாட்டுத் தொடர்புடைய அத்தனைத் தகவல்களையும் தெரிந்தவராகவும் இருந்தால் அவரை நாம் சர்வ வல்லமை படைத்தவர் என்று கூற முடியுமா? இல்லை. தான் விளையாடும் விளையாட்டைச் சார்ந்த அனைத்து செயல்களின் நல்விளைவையும், தீய விளைவுகளையும் ஆராய்ந்து பார்த்து நல்விளைவுகளைப் பெருக்கும் வகையையும் , தீய வளைவுகளைக் குறைக்கும் வகையையும் தெரிந்து அவற்றைச் செயலாற்ற கூடிய ஒருவரை நாம் சர்வ வல்லுநராக நாம் அடையாளம் காட்ட முடியும். இத்தகைய சர்வ வல்லுனர்களைக் கொண்ட சமுதாயம் நாளைய உலகிற்கு இப்போது தேவை. அப்படிப்பட்ட ஒருவர் உலகத்திலேயே இல்லை, இதில் எங்கிருந்து ஒரு சமுதாயத்தை உருவாக்க? இயலாத காரியம்.
இல்லாத ஒன்றை நாம் எவ்வாறு உருவாக்குவது என்ற கேள்வி இருக்க அப்படி ஒருவரை மாற்றக் கூடிய இடம் கல்வி நிலையங்கள் தான். கல்வி நிலையங்களைச் சார்ந்தே, குடும்பம் பணிகள் பொருளாதாரம் உடல் நலம் அனைத்தும் இருக்கின்றன. கல்வி என்ற கட்டமைப்பை மேம் படுத்தி வலு பெறச்செய்வதே கல்வி 4.0. சர்வ வல்லுநராக ஒரு மாணவனை ஏன் தயார் படுத்த வேண்டும்?
ஏன் எனில் அம்மாணவன் தனது செயல் முறைகளை நன்னெறிப் படுத்த முடியும். இன்றைய உலகிற்கும் நாளைய உலகிற்கும் இது அத்தியாவசிய, அவசரத் தேவை. அப்படி என்றால் கல்வி என்று நாம் அடையாளம் காட்டும் ஒன்றை முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். ஏன்?
நன்னெறி என்றால் நீதிக்கதைகளா?
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76(2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77(டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.