தங்களுக்கு ரொட்டி இல்லை என்று விவசாயிகள் புகார் கூறுவதாக 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சு இளவரசி  ஒருவரிடம் கூறப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அந்த இளவரசி ’அப்படியானால், அவர்கள் கேக் சாப்பிடட்டும்!’ என்ற புகழ்பெற்ற சொற்றொடரை உச்சரித்ததாகக் கூறப்படுவதுண்டு. அப்போதைய பிரெஞ்சு பிரபுத்துவம் விவசாயிகளைப் புறக்கணித்ததையும், விவசாயிகளின் நிலை பற்றிய புரிதல் எதுவும் இல்லாமல் இருந்ததையும் எடுத்துக்காட்டுவதற்காக அந்த சொற்றொடர் பயன்பாட்டிற்கு வந்தது.

அதேபோன்ற கொடூரமான, மனிதாபிமானமற்ற அணுகுமுறையை, சானிடைசர்கள் (சுத்திகரிப்பு திரவம்) உற்பத்திக்காகப் பயன்படுத்துவதற்கும், பெட்ரோலில் உயிரி-எரிபொருளாகச் சேர்க்கப்படுவதற்கும் என்று  கணிசமான அளவு சேமிப்பில் உள்ள அரிசி கையிருப்பை எத்தனால் ஆக மாற்றுவது என்று இந்திய அரசாங்கம் சமீபத்தில் எடுத்திருக்கும் முடிவு  இப்போது  காட்டுகின்றது.

போதுமான தங்குமிடம், அடிப்படைத் தேவைகளுக்கான பணம், கோவிட்-19 நோயிலிருந்து பாதுகாப்பு போன்ற அனைத்தையும் இழந்து நிற்கின்ற, லட்சக்கணக்கில் புலம்பெயர்ந்து, அன்றாட ஊதியம் பெறுகின்ற அமைப்புசாராத் தொழிலாளர்கள், சுயதொழில் புரியும் தொழிலாளர்கள், தங்களுடைய குறைந்தபட்ச வாழ்வாதாரத்திற்குத் தேவையான உணவில்கூட பற்றாக்குறையை தினமும் எதிர்கொள்கின்ற ஏழைகள் ஆகியோரின் முகத்தில் முரட்டுத்தனமாக ஓங்கி அறைகின்ற வகையில் அரசாங்கம் இந்த  முடிவிற்கு வந்துள்ளது.

தங்களுடைய உயிரைப் பிடித்து வைத்துக் கொள்வதற்காக, வழங்கப்படும் உணவிற்காக கையேந்தி, ஆங்காங்கே உள்ளூர் தன்னார்வ நிறுவனங்களால் எடுக்கப்படுகின்ற முயற்சிகளை மட்டுமே நம்பி உதவியற்ற ஏழைகள் நாதியற்று, தெருக்களில் நிற்பதாக ஊடகங்களில்  ஒவ்வொரு நாளும் வருகின்ற செய்திகளால்,  உணவு தானியங்களை இந்த பிரிவினருக்கு விநியோகித்து வருவதாக மத்திய அரசு வெளியிட்டு வருகின்ற அறிக்கைகளை பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. பல மாநில அரசாங்கங்களும் ஒழுங்கமைக்கப்பட்ட உணவு விநியோகம் மற்றும் ஆதரவு அமைப்புகளை நிறுவுவதில் தோல்வியையே கண்டிருக்கின்றன. மத்திய அரசின் நிதி உதவி இல்லாததாலும், ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பின் காரணமாகவும் அனைத்து மாநிலங்களும் போராடிக் கொண்டிருக்கின்றன.

மக்கள் பட்டினி கிடக்கும் போது

அரசாங்கம் சுமார் 6 கோடி டன் உணவு தானியங்களைக் கையிருப்பில் வைத்திருக்கிறது. அந்த  இருப்பில் சுமார் 3.1 கோடி டன்  அரிசியாகவும், 2.75 கோடி டன் கோதுமையாகவும் உள்ளது. கையிருப்பில் வைத்திருக்கும் உணவு தானியங்களை கணிசமான அளவில், ரேஷன் கார்டு அல்லது வேறு எந்தவொரு ஆவணமும் இல்லாமல், நேரடியாக பொது விநியோக முறை மூலமோ  அல்லது மாநில அரசுகள் மூலமாகவோ விநியோகிக்க வேண்டும் என்று பல வல்லுநர்களும், சிவில் சமூக அமைப்புகளும், தொழிலாளர் சங்கங்களும் மத்திய அரசிடம் பலமுறை கெஞ்சி கேட்டுக் கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற ஏழைகளுக்கான தங்குமிடங்களில் இந்த தானியங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.

பட்டினியால் வாடுபவர்களில் ...
Photo Courtesy: Malaimalar

அனைவருக்கும் இவ்வாறு தானியங்கள் வழங்கப்பட்ட பிறகும், குறைந்தபட்சம் இருப்பு வைத்திருக்க வேண்டிய அளவைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவிற்கு, 2.1 கோடி டன்  உணவு தானியங்கள் அரசாங்கத்திடம் மீதம் இருக்கும் அளவிலேயே இந்த கையிருப்பு இருக்கிறது. ஆனாலும் மத்திய அரசிடம் வைக்கப்பட்டிருக்கும் இந்த வேண்டுகோள் செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கு போன்றாகி விட்டது. அந்த வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டால், அது அவசர காலங்களுக்கென்று சேகரித்து வைக்கப்பட்டுள்ள கையிருப்பு அளவைக் குறைத்து விடும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கூறியுள்ளார். இதைவிடப் பெரிய அவசரநிலை என்று ஏதாவது இருக்க முடியுமா?

2018ஆம் ஆண்டு தேசிய உயிரி-எரிபொருள் கொள்கையில் பொருத்தமான விதிகளைச் சேர்த்து, ஏழைகளுக்கான வெளிப்படையான தேவைகளைப் புறக்கணித்து விட்டு, எத்தனாலைத் தயாரித்து அதனை உயிரி-எரிபொருளாக மாற்றுவது மற்றும் சானிடைசர்களைத் தயாரிப்பது போன்ற செயல்பாடுகளுக்காக, சேகரித்து வைக்கப்பட்டுள்ள கையிருப்பைப் பயன்படுத்துவதற்கான அவசரத் தேவை எழுந்திருக்கிறது என்ற முடிவிற்கு அரசாங்கம் இப்போது வந்திருக்கிறது, உண்மையிலேயே அவ்வாறான தேவை எதுவும் இருக்கிறதா?

உயிரி-எரிபொருள்களுக்கான தேவை இப்போது இருக்கவில்லை

உயிரி-எரிபொருள் கொள்கை  மற்றும் அதன் பல்வேறு புதுப்பிக்கப்பட்ட பதிப்புகள், எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தல் மற்றும் பல்வேறு புதுப்பிக்கத்தக்க உயிர்த்திரளைப் பயன்படுத்தி  பெட்ரோலில் கலப்பதற்கான எத்தனால் தயாரிப்பது அல்லது டீசல் எரிபொருளுடன் கலப்பதற்காக உயிரி-டீசல் தயாரிப்பது ஆகிய செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. பயன்படுத்தப்படுகின்ற உயிர்த்திரளின் அடிப்படையில், 20% பெட்ரோல் மற்றும் 5% டீசல் சேமிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

crude oil Why the price drop? || கச்சா எண்ணெய் ...
Photo Courtesy: DailyThanthi

வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், சர்வதேச எண்ணெய் விலை 1999க்குப் பிறகு மிக அதிகமாகக் குறைந்துள்ளது. ஈரானிய கப்பல்களைத் தாக்குவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரக்கப் பேசியதால் மட்டுமே,  விலை சற்றே உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் தேவைக்கு அதிகமான அளவிலே எண்ணெய் இருக்கிறது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, தனது எண்ணெய் இருப்புக்களை  உயர்த்த சில நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

அமல்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஊரடங்கு, எரிபொருள் பயன்பாட்டை நன்கு குறைத்திருக்கிறது. குறிப்பாக பயணிகள் வாகனங்கள் நாட்டில் எங்குமே பயன்படுத்தப்படுவதில்லை என்பதால், அந்த வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், மற்றும் பொது பேருந்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டதாலும், மத்திய அரசு விலக்கு அளித்திருந்தாலும் பெரும்பாலான லாரிகள் சாலைகளில் ஓடாதிருப்பதாலும் டீசல் போன்றவற்றின் பயன்பாடுகள் குறைந்துள்ளன. குறைந்த விலையில் அதிக அளவில் கிடைக்கிற பெட்ரோலுக்கு மிகக் குறைந்த தேவையே இருக்கின்ற இந்த சூழலில், உயிரி-எத்தனாலைக் கொண்டு வருவதற்கான தேவை அல்லது அவசரம் எங்கே இருந்து வருகிறது?

சானிடைசர்களுக்கும் போதுமான  எத்தனால்

உயிரி-எத்தனால் தயாரிப்பதில் வரலாற்று ரீதியாக இந்தியா பெரும் சிக்கல்களை இதுவரையிலும்  சந்தித்துள்ளது என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலும் கரும்பின் அடிப்படையில் இயங்கி வருகின்ற சர்க்கரைத் தொழிலில் துணை உற்பத்திப் பொருளாகப் பெறப்படுகின்ற வெல்லப்பாகுகளிலிருந்து. இந்தியா ஆண்டுதோறும் சுமார் 250-300 கோடி லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்து வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படுகின்ற எத்தனால், பொதுவாக மதுபானத் தொழில் மற்றும் ரசாயனத் தொழில்களில் ஏறக்குறைய சம விகிதத்தில்  பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

నెల్లూరులో విషాదం.. పెట్రోల్‌లో ...
Photo Courtesy: News18 Telugu

பெரும்பாலும் உபரி எத்தனால் கிடைக்காத காரணத்தால், முதன்முதலாக நிர்ணயிக்கப்பட்டிருந்த 5% எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) என்ற இலக்கைகூட இந்தியாவால் அடைய முடியவில்லை எனும் போது, பெட்ரோல் அளவில் 20% என்ற அளவிற்கு அருகில் சென்று எப்படி இலக்கை அடைவது? எத்தனாலை பெரும்பாலும் பிரேசிலிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.  உண்மையாகவே எத்தனால் இப்போது தேவைப்படுகின்றது என்றால், எப்போதும் போல் அதை இறக்குமதி செய்து கொள்ளலாம்.

ஊரடங்கின் கீழ், அனைத்து மதுபான வடிசாலைகளும், சில்லறை விற்பனை நிலையங்களும் முற்றிலும் மூடப்பட்டிருப்பதால், மதுபானத் தொழிலிலும் எத்தனால் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை. அரசாங்கம் சில வடிசாலைகளை சானிடைசர்களைத் தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஊரடங்கு விதிகளின் கீழ் கிட்டத்தட்ட அனைத்து ரசாயனத் தொழில்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. இதன் விளைவாக, அருந்தக் கூடிய மறும் அருந்தவியலாத ஆல்கஹால்  தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அதிக அளவில் எத்தனால் இருப்பில் உள்ளது இந்த தொழிற்சாலைகள் தங்களுடைய முழு அளவிலான செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இன்னும் பல மாதங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இன்றைய நிலையில் சானிடைசர்களை உற்பத்தி செய்வதற்கு, சுமார் 50 கோடி லிட்டர் எத்தனால் கிடைக்கும், மேலும் 2020 அக்டோபர் முதல் தொடங்கவிருக்கும் அடுத்த  கரும்பு  பிழியும் பருவத்திலிருந்து புதிய எத்தனாலும் கிடைக்கும் என்று மிகச் சாதாரண மதிப்பீடுகளே தெரிவிக்கின்றன. இந்த இருப்பைப் பயன்படுத்தி வேண்டும் அளவிற்கு சானிடைசர்களைத் தயாரித்துக் கொள்ள முடியும்! அப்படியிருக்கின்ற நிலையில், எத்தனால் தயாரிக்கும் நோக்கத்திற்காக விலைமதிப்பற்ற அரிசியைப்  பயன்படுத்த வேண்டிய அவசியம் உண்மையிலேயே  இருக்கிறதா?

நிலம் உணவுக்காகவே தவிரஎரிபொருளுக்காக அல்ல

இந்த விவகாரத்தில் தங்களைத் தற்காத்துக் கொள்கின்ற வகையில், தங்களிடம் இருக்கின்ற  உரிமைகளுக்கு உட்பட்டே தாங்கள் செயல்படுவதாக அரசாங்க வட்டாரங்கள் கூறி வருகின்றன. 2018ஆம் ஆண்டு தேசிய உயிரி-எரிபொருள் கொள்கையின் கீழ் இத்தகைய ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது என்பதால், அரிசி  கையிருப்பைப் பயன்படுத்தி உயிரி-எத்தனால் தயாரிக்க  முடிவு செய்வதில் சட்டவிரோதமாக எதுவும் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

எரிபொருளா – உணவா? எது தேவை? | Dinamalar

அவ்வாறு செய்வதற்கான முடிவு, தேசிய உயிரிஎரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவால் (NBCC)  எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் ஒட்டுமொத்த நெறிமுறையற்ற  தன்மைதான் இப்போது முக்கிய பிரச்சினையாக இருக்கின்றதே தவிர, இந்த நடவடிக்கையின் சட்டபூர்வமான தன்மை அல்ல. நடைமுறை வரம்பு குறித்தும், உயிரி-எரிபொருள் கொள்கையின் நோக்கத்தையும், விதிகளையும் விளக்குவதன் மூலம் அரசாங்கம் தனது அறிவாற்றல் குறித்து பெருமைப்படுவதிலும் சில சிக்கல்கள்  இருக்கின்றன.

உயிரி-எரிபொருள் கொள்கை முதலில், உணவு அல்லாத உயிர்த்திரளைப் பயன்படுத்துவதை வலியுறுத்துகின்ற வகையில்தான் இருந்தது. சிறப்பு சூழ்நிலைகளில் உபரி உணவு தானியங்களைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடு பின்னர் எழுந்த சிந்தனையாகவே அந்தக் கொள்கைக்குள் செருகப்பட்டது. ’நிலம் உணவுக்கானது; எரிபொருளுக்கானது அல்ல’ என்ற முழக்கத்தை முன்வைத்து,  உணவு தானியங்களிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுவதை நீண்டகாலமாக எதிர்த்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) இந்த நிலைப்பாடு குறித்து தனது கடுமையான வாதங்களை முன்வைத்தது.

உயிரி-எரிபொருள் கொள்கை

புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்பவை விவசாயம், வனம், மரம் சார்ந்த எண்ணெய் மற்றும் பிற சமையலுக்குப் பயன்படாத எண்ணெய் பொருட்கள், கழிவுகள் மற்றும் எச்சங்களின் மக்கும் பகுதி மற்றும் அவற்றோடு தொடர்புடைய தொழில்கள், தொழில்துறை சார்ந்த மற்றும் நகராட்சி கழிவுகளின் மக்கும் பொருட்கள் ஆகியவை என்று பத்தி 3.1.ii வரையறுக்கிறது.

கரும்புபீட்ரூட்இனிப்புசோளம் மற்றும் சோளம், மரவள்ளி போன்றவற்றிலிருந்து கிடைக்கின்ற பொருட்கள் மற்றும் அழுகிய உருளைக்கிழங்கு, ஆல்காக்கள் போன்ற மாவுச்சத்து அதிகம் கொண்ட பொருட்களை சாத்தியமான  வளங்கள் என்று பத்தி 3.2 வரையறுக்கிறது(இங்கே அரிசி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை).

மேம்பட்ட அல்லது இரண்டாம் தலைமுறை உயிரி எரிபொருள்கள்  உணவு அல்லாத பயிர்கள்’ மற்றும் ’நிலத்தின் பயன்பாட்டிற்காக உணவுப் பயிர்களுடன் போட்டியிடாத’ லிக்னோசெல்லுலோசிக் தீவனங்கள் என்று (பத்தி 3.2.iii) வரையறுக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் ‘உயிரி-எரிபொருட்களுக்கான புதிய பொருட்களை உருவாக்க’ அனுமதிக்கின்ற  2018ஆம் ஆண்டு கொள்கையின் பத்தி 2.2(C), உயிரி-எத்தனால் தயாரிக்க சில உணவு தானியங்களைப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கத்திற்கு அனுமதி அளிக்கிறது.

Brasil é o segundo maior produtor de biodiesel do planeta | CEISE Br
Photo Courtesy: CEISE Br

உயிரி-எரிபொருள் கொள்கை ’உணவு அல்லாத பொருட்களை’ மட்டுமே பயன்படுத்த முன்னதாக அனுமதி அளித்திருந்தாலும், அந்தக் கொள்கையில், 2018ஆம் ஆண்டு புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. உணவு தானியங்கள் ’உபரியாக இருக்கும் கட்டத்தில்’ (பத்தி 5.2) அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அந்த புதிய விதிமுறை அனுமதி அளிக்கிறது. வேளாண் பயிர் ஆண்டில் வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் எதிர்பார்ப்பை விட உணவு தானியங்கள் கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்படும் போது, தேசிய உயிரி-எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒப்புதலின் அடிப்படையில், அந்த உபரி அளவு உணவு தானியங்களை எத்தனாலாக மாற்றிக் கொள்ள கொள்கை அனுமதிக்கும்’ என்று பத்தி 5.3 கூறுகிறது.

இன்று எழுகின்ற கேள்வி என்னவென்றால், வேளாண் அமைச்சகம் 2020ஆம் ஆண்டை ’உணவு தானியங்கள் கூடுதலாக இருக்கும் என்று கணித்த’ ஆண்டாக அறிவித்துள்ளதா? அறுவடை, தொடர்புடைய போக்குவரத்து மற்றும் பிற ஏற்பாடுகள் என்று அனைத்தும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயிர் உற்பத்தி அல்லது சாகுபடிக்கு உட்பட்ட பகுதி எவ்வளவு குறைந்து இருந்தாலும் உணவு தானியங்கள் உற்பத்தி மட்டும் அதிகரிக்குமா? நிச்சயமாக, உயிரி-எத்தனால் தயாரிக்க அரிசி கையிருப்பைப் பயன்படுத்துவது போன்ற முக்கியமான முடிவு எடுக்கப்பட்டிருப்பது, இதுவே முதல் தடவையாகும்.

எப்படியாவது, எந்த விலை கொடுத்தாவது எத்தனாலை உற்பத்தி செய்வதில் மட்டுமே ஆர்வம் கொண்டுள்ள உயிரி-எரிபொருள் குழுவை மட்டும் கருத்தில் கொண்டிராமல், அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு முடிவு எடுத்திட வேண்டிய மத்திய அமைச்சரவை, மோசமான தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு மத்தியில் கோடிக்கணக்கானவர்கள் ஆபத்தான நிலையில் இருக்கிற நிலையில், இத்தகைய முடிவை எடுத்திருக்கிறது. நாட்டின் வரலாற்றிலே முக்கியமான இந்த நேரத்தில், இந்தப் பிரச்சினை சட்டப்பூர்வமானது என்பதாக இல்லாமல், நெறிமுறை சார்ந்ததாக இருக்கிறது. நாட்டு மக்களுக்கு உணவு தேவைப்படுகின்றது.

பசியுடன் மக்கள் அதிகம் இருக்கின்ற நிலையில், அவர்களுக்குத் தேவையான உணவை எத்தனாலாக மாற்றுவது கடுமையான, மோசமான முற்றிலும்  மனச்சாட்சியற்ற முடிவாகும். ஒருவேளை இந்திய மக்களுக்கு அரிசி தேவையில்லை என்று அரசாங்கம் நினைத்தால், குறைந்தபட்சம் அரிசி தேவைப்படுகின்ற பகுதிகளுக்கு, இந்தியாவின் அருகே இருக்கின்ற நாடுகள் உட்பட உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான அகதிகளுக்கு அதை ஏற்றுமதி செய்யட்டும். இந்தியாவுக்கு தற்போது தேவைப்படாத அரிசி கையிருப்பை உயிரி-எரிபொருளாக மாற்றுவது அல்லது தயாரிப்பதற்கான வேறு மாற்றுப் பொருட்கள் இருக்கின்ற  சானிடைசர்களாக  மாற்றுவது என்பது உண்மையில் நெறிமுறையற்ற குற்றமாகும்.

நியூஸ் கிளிக் இணைய இதழ், 2020 ஏப்ரல் 24

https://www.newsclick.in/Ethanol-from-Rice-Let-Them-Eat-cake

தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *