அரிசியிலிருந்து எத்தனால்: உழைப்பாளி மக்களின் உணவும் சுற்றுச்சூழலும் யாருக்காக?
•••••••••••••••••
பேராசிரியர் நா.மணி
•••••••••••••••••
ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பையும், அதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் தனித்தனியாகப் பார்க்க முடியாது. குறிப்பாக இந்தியா போன்ற வேளாண்மை சார்ந்த நாட்டில், வயலில் விளையும் ஒவ்வொரு தானியத்திற்குப் பின்னாலும் ஒரு விவசாயியின் உழைப்பும், ஒரு விவசாயத் தொழிலாளியின் வியர்வையும், நிலத்தடி நீரும், மண்ணின் வளமும் இருக்கின்றன.
இந்தப் பின்னணியில், இந்திய உணவுக் கழகம் (FCI) அரிசியை எத்தனால் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு சந்தை விலையைவிடக் குறைவாக வழங்கியிருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் தீவிரமான விவாதத்தைத் தேவைப்படுத்துகிறது.
2025 ஜூன் முதல் 2026 ஜூன் வரையிலான ஓராண்டில், 63 லட்சம் டன் அரிசி எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது . இதன் மதிப்பு ரூ.14,596 கோடி. ஒரு குவிண்டால் அரிசி ரூ.2,250 முதல் ரூ.2,320 வரை விற்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே அரிசியை அரசு கொள்முதல் செய்த சராசரி செலவு 2024-25-ல் ரூ.3,720 ஆகவும், 2025-26-ல் ரூ.3,889 ஆகவும் இருந்துள்ளது.
மக்களின் வரிப்பணத்தில் கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியம், அதை வாங்கிய அரசின் செலவைவிடக் கணிசமாகக் குறைந்த விலையில் தொழில்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
உணவு தானியமா? எரிபொருளா?:
இங்குதான் ஓர் அடிப்படையான கேள்வி எழுகிறது. அரிசி என்பது வெறும் ஒரு பொருள் அல்ல. இந்தியாவின் ஏழை மற்றும் உழைக்கும் மக்களின் பிரதான உணவு. ஒரு விவசாயி நிலத்தில் உற்பத்தி செய்யும் அரிசி, இறுதியில் ஒரு தொழிற்சாலையின் எரிபொருளாக மாறும்போது, அந்த மாற்றத்தின் சமூகப் பயன் யாருக்குச் செல்கிறது என்பதை கேட்க வேண்டியிருக்கிறது.எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் புதைபடிவ எரிபொருளின் பயன்பாட்டைக் குறைப்பது சுற்றுச்சூழல் நோக்கில் வரவேற்கத்தக்கதாக இருக்கலாம். ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் உணவுப் பொருட்களை எரிபொருளாக மாற்றுவது எந்த அளவுக்கு சரி ? என்பதே முக்கியமான கேள்வி.
ஒருபுறம், ஏழை மக்கள் உணவுப் பொருட்களின் விலை உயர்வை எதிர்கொள்கிறார்கள். மறுபுறம், அதே உணவு தானியங்கள் தொழில்துறைக்கு குறைந்த விலையில் செல்கின்றன. இந்த முரண்பாட்டை வெறும் ‘எத்தனால் கொள்கை’ என்று கடந்து செல்ல முடியாது.
சுற்றுச்சூழல் கணக்கு எங்கே?:
எத்தனால் பெட்ரோலுடன் கலக்கப்படுவதால் கார்பன் வெளியேற்றம் குறையும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு லிட்டர் எத்தனால் உருவாகும் வரை நிகழும் முழு உற்பத்திச் சங்கிலியையும் கணக்கில் எடுத்தால்தான் அதன் உண்மையான சுற்றுச்சூழல் பயனை மதிப்பிட முடியும்.
நெல் சாகுபடிக்கு அதிக அளவு நீர் தேவைப்படுகிறது. நெல் வயல்களில் இருந்து மீத்தேன் போன்ற பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேறுகின்றன. உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பாசன மின்சாரம், அறுவடை, போக்குவரத்து, அரிசி பதப்படுத்துதல் என ஒவ்வொரு கட்டத்திலும் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. அந்த அரிசியை மீண்டும் தொழிற்சாலைக்கு எடுத்துச் சென்று எத்தனால் தயாரித்து, பின்னர் வாகன எரிபொருளாகப் பயன்படுத்துவது உண்மையில் எவ்வளவு கார்பன் சேமிப்பை உருவாக்குகிறது என்பதற்கான முழுமையான வாழ்க்கைச் சுழற்சி மதிப்பீடு அவசியம்.
சுற்றுச்சூழல் கொள்கை என்பது ஒரு தொழிலின் புகை வெளியேற்றத்தை மட்டும் அளப்பதல்ல. மண், நீர், விதை, விவசாயம், உணவு, போக்குவரத்து, தொழிலாளர்களின் உழைப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து கணக்கிட வேண்டும்.
உழைப்பாளியின் பார்வை எங்கே?:
இந்த விவாதத்தில் பொதுவாக இரண்டு தரப்பினர் மட்டுமே தெரிகிறார்கள். அரசு மற்றும் தொழில். ஆனால் மூன்றாவது தரப்பு மிக முக்கியமானது உழைப்பாளி மக்கள். விவசாயி என்ன உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை சந்தை தீர்மானிக்கிறது. தொழில்துறை எதை வாங்க வேண்டும் என்பதை அதன் லாபம் தீர்மானிக்கிறது. ஆனால் மக்களுக்கு என்ன உணவு கிடைக்கும் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? ஒரு விவசாயி தண்ணீரைச் செலவழித்து நெல் விளைவிக்கிறார். விவசாயத் தொழிலாளி தனது உழைப்பை செலுத்துகிறார். அரசு அந்த நெல்லை கொள்முதல் செய்கிறது. பின்னர் அதே தானியம் குறைந்த விலையில் எத்தனால் ஆலைக்குச் செல்கிறது என்றால், அந்தச் சங்கிலியில் உருவாகும் மதிப்பின் பெரும்பகுதி யாரிடம் சேருகிறது என்பதை ஆராய வேண்டும்உணவுப் பாதுகாப்பு, விவசாயியின் வருமானம், தொழிலாளியின் கூலி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவை அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை.
உணவுக்குப் பதிலாக எரிபொருளா?:
உபரி தானியங்கள், சேதமடைந்த அல்லது மனித நுகர்வுக்குப் பொருந்தாத தானியங்கள் போன்றவற்றை அறிவியல் அடிப்படையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் நாட்டின் உணவுப் பாதுகாப்புடன் தொடர்புடைய தானியங்களை பெருமளவில் எரிபொருளாக மாற்றும்போது, தெளிவான முன்னுரிமை வரிசை தேவை.
முதலில் மனிதர்களின் உணவு; அதன் பிறகு கால்நடைகளின் உணவு; அதன் பின்னரே எரிபொருள் மற்றும் தொழில்துறை பயன்பாடு என்ற கொள்கை விவாதிக்கப்பட வேண்டும். மேலும், எத்தனால் உற்பத்தியின் சுற்றுச்சூழல் செலவு, நீர் பயன்பாடு, உணவுப் பாதுகாப்பின் மீதான தாக்கம், அரசின் கொள்முதல் செலவு மற்றும் தொழில்துறைக்கு வழங்கப்படும் விலை ஆகிய அனைத்தும் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும்.
பசுமைப் பொருளாதாரம் யாருடையது?:
எரிபொருள் மாற்றம் அவசியம். புதைபடிவ எரிபொருளிலிருந்து விலகுவதும் அவசியம். ஆனால் ‘பசுமை’ என்ற சொல் மட்டுமே ஒரு கொள்கையை சமூகநீதியானதாக மாற்றிவிடாது. ஒரு கொள்கை கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தாலும், அது உணவு விலையை உயர்த்தினால், நீர்வளத்தைச் சுரண்டினால், சிறு விவசாயிகளை பாதித்தால் அல்லது பொதுச் சொத்துகளை தனியார் லாபத்திற்குக் குறைந்த விலையில் மாற்றினால், அதன் பசுமைத் தன்மையை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும்.
சுற்றுச்சூழல் நீதி என்பது கார்பனை மட்டும் அளப்பதல்ல. சமூகத்தில் யார் செலவு செய்கிறார்கள், யார் பயன் பெறுகிறார்கள் என்பதையும் அளப்பது. எத்தனால் கொள்கையின் வெற்றியை எத்தனை சதவீதம் பெட்ரோலில் கலந்தோம் என்பதைக் கொண்டு மட்டும் அளவிடக் கூடாது. ஒரு டன் அரிசியை எத்தனால் ஆக்குவதற்கு எவ்வளவு நீர் பயன்படுத்தப்பட்டது? எவ்வளவு ஆற்றல் செலவானது? எவ்வளவு கார்பன் வெளியேற்றப்பட்டது? விவசாயிக்கு கிடைத்த வருமானம் என்ன? தொழிலாளிக்கு கிடைத்த கூலி என்ன? பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பில் ஏற்பட என்ன? என்பதையும் அளவிட வேண்டும்.உழைப்பாளி மக்களின் உணவைப் பறித்து உருவாக்கப்படும் பசுமை வளர்ச்சி உண்மையான பசுமை வளர்ச்சி அல்ல.
இந்தியாவின் எரிசக்திக்கு மாற்றம் தேவை. ஆனால் அது உணவுப் பாதுகாப்பையும், விவசாயியின் உரிமையையும், தொழிலாளியின் வாழ்வாதாரத்தையும், நீரையும், மண்ணையும் பாதுகாக்கும் சமூகநீதிப் பாதையில் அமைய வேண்டும்.இல்லையெனில், எண்ணெயிலிருந்து விடுபடும் பயணத்தில் நாம் அரிசியையே எரிபொருளாக்கிவிட்டோம் என்ற முரண்பாடான வரலாற்றை உருவாக்கிவிடக்கூடும்.
📚 எழுதியவர் :
✍🏻 – பேராசிரியர் நா.மணி
மேனாள் தலைவர்
தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

