சி.சு. செல்லப்பா எனக்கு அறிமுகமானது நான் கல்லூரியில் படிக்கையில் ‘வாடிவாசல் ‘ என்னும் சிறப்பான படைப்பின் மூலமே. வாடிவாசலைப் பற்றி ஆரம்பித்தால் அது போகும் பல வார்த்தைகளை இழுத்துக் கொண்டு, நானிந்த தொகுப்பிற்கு வருகிறேன்.
இவரது சிறுகதைகளை அவ்வப்போது படித்து வருகிறேன், கூடவே இவரைப் பற்றியான கட்டுரைகளையும், பல வாசகர்கள், எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதியவற்றை படிக்கையில் சி.சு. செல்லப்பாவின் மீது மரியாதை கூடியதை உணர முடிந்தது.
குறிப்பாக, ஜெயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் இவரை கடைசி காலத்தில் சந்தித்த அனுபவங்களை பற்றி நீண்ட அளவில் எழுதியிருக்கிறார் மற்றும் தமிழில் முக்கியமான இதழ்களைப் பற்றியும் எழுதியிருந்தார்.

அப்படிப் படிக்கையில் தான், செல்லப்பாவின் ‘ எழுத்து இதழ் ‘ பற்றி சில தகவல்கள் கிடைத்தது(கூடுதல் தகவல்: எழுத்து இதழ்களில் வெளியானவையை தொகுத்து சந்தியா பதிப்பகம் ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளது). தமிழ் எழுத்தாளர்களுக்கு அன்றிலிருந்து இன்றுவரை வறுமை அதீத காதல் தொல்லை கொடுத்துவாறு தானிருக்கிறது. செல்லப்பாவும் அப்படித் தான், தொந்தமாக ஒரு இதழை ஆரம்பிக்க வேண்டும் என்கிற முனைப்பில் ‘ எழுத்து இதழை ‘ ஆரம்பித்தார். இதில், இவரது நண்பரும் பின் வெறுத்தவருமான க.நா.சு வும் விமர்சனங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக. இந்த இதழ் அன்றைய தமிழ்ச் சுழலுக்கு பெரும் பங்காய் இருத்திருப்பதாக தோன்றுகிறது.

இந்த எதற்காக எழுதுகிறேன்? என்ற கொகுப்பு சில எழுத்தாளர்களிடம் தலைப்பையே கேள்வியாக கேட்டு வெளியிடப்பட்டவை. இதில், குறிப்பிட்ட ஒரு பதினோரு இலக்கியாசிரியர்களிடம் கேட்டு பெற்ற பதில்கள் அடங்கியுள்ளது.

சி. சு. செல்லப்பா

எனக்கு பிடித்த சில உரைகள்:

* எழுத்தாளன் சோம்பேறியோ, பொறுப்புக்களற்றவனோ அல்ல. அவன் உலகத்து இன்பங்களை, அல்லது குறைந்தபட்ச வசதிகளை அநுபவித்துக் கொண்டு தனக்குத்தானே, தன் மன அரிப்புக்காக வாழும் மன மைத்துனக்காரனல்ல.
– ஜெயகாந்தன்

* இன்றைய மனிதனின் மூதாதையரின் நற்குண துர்குணங்கள், இவற்றை எல்லாம் எழுதி சரித்திரக் கொள்கைகளையோ சித்தாந்தங் களையோ வகுத்து நிலைநாட்ட வேண்டும் என்று எழுதும் பொழுது திட்டம் போட்டுக் கொள்கிறேனா? எனக்கே எனக்காக எழுதும் போது இந்தப் பிடுங்கல்கள் ஏதும் என்னைத் தொந்தரவு செய்வதில்லை. நான் இத்தனை பேரைப்பற்றியும் எழுதினாலும் எழுதுவேன். எழுதாமலும் இருப்பேன். யாரைத் தெரியுமா அவர்களைப் பற்றி எழுதுவேன்… அதாவது அவர்கள் அல்லது அதுகள் என் மனதில் புகுந்து, தங்கி, அமர்ந்து என்னைத் தொந்தரவு பண்ணினால் எழுதுவேன். தொந்தரவு தாங்க முடியாமல் போனாலும் எழுதுவேன். நானாகத தேடிக்கொண்டு போய் ” உன்னைப் பற்றி எழுதுவதாக உத்தேசம் ” என்று பேட்டிக் காணமாட்டேன் – அப்ஸர்வ் பண்ணமாட்டேன். அவர்களாக, அதுகளாக வந்து என்னைத் தாக்கினால் தான் உண்டு. அதனால் தான் எனக்கு எழுதுவதற்காக யாத்திரை பயணங்கள் செய்வதில் உற்சாகம் கிடையாது. அதைவிட காதல் செய்து பொழுதைப் போக்கலாம்.
– தி. ஜானகிராமன்

* மனிதன் என்றாலே உலகத்து ஜீவராசிகளில் மேல் நிலை எய்தி இருக்கும் ஒரு பிராணியைக் குறிக்கிறது. அடுத்தபடியாக சுதந்திரமாக இருப்பவனையே ‘ மனிதன் ‘ என்ற வார்த்தை குறிக்கிறது. நான் மனிதனாக, சுதந்திர புருஷனாக இருப்பதற்கு வழி என்ன? நான் எழுதுவது ஒன்றே வழி. புற உலகில நான் முழுச் சுதந்திரத்தோடு இருக்கச் சந்தர்ப்பங்கள் இல்லை. ஆனால், மன உலகில் சுதந்திரத்தை இழக்க நான் தயராக இல்லை. ஆங்கே, நான் விரும்பும் நல்ல காரியங்கள், நல்ல கருத்துகள், நல்ல கற்பனைகள் உருவாக வேண்டும். ஆகவே, நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும் மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன்.
– கு. அழகிரிசாமி

* ஆன்மீகமானது என்று சொல்வது பற்றிச் சற்றுத் தீர விசாரித்துப் பார்த்தால் புரியவரும் – கலைத் தொழில் எல்லாமே சுதந்திரமானது – எவ்விதமான கட்டுப்பாட்டுக்கும் உட்படாதது – தானே தனது ராஜ்யத்தை அதில் செயல்படுவது என்பது. இந்த ஆன்மீக நிலையிலே எல்லாக் காரியங்களுமே ஆனந்தமயமானவை. இந்த ஆனந்தமயமான விளையாட்டை எனக்குள் நானே அனுபவித்துக் கொள்ளவே நான் எழுதுகிறேன் என்று ஒவ்வொரு இலக்கிய ஆசிரியனும் சொல்லக் கூடும், இலக்கியத் தொழிலை ஆன்மீகமயமானதாக உணர்ந்துவிட்டால்.
– க.நா. சுப்ரமணியம்

*தனிமனிதன், குடும்பம் இவற்றின் மீது பணத்திற்குள்ள ஆதிக்கம் குறைந்தால் – ஆட்டி வைக்கும் சக்தியைப் பணம் இழுத்துவிடுகிற நிலை ஏற்பட்டால் – அப்போது – ‘ எதற்காக எழுதுகிறேன்? ‘ என்கின்ற கேள்விக்கு நான் அளிக்கும் பதில் ஒரு தனிக் காவியமாக இருக்கும்.
– ஆர். ஷண்முகசுந்தரம்

* நான் கதை எழுதுகிறபோது இந்த குறிப்பிட்ட தத்துவ ரீதியான ஒரு அடிப்படை முதல் நோக்கம் அல்ல எனக்கு. நான் அக்கறை கொண்டிருப்பதெல்லாம், ‘ Human Predicament ‘ என்று சொல்லுகிறோமே அந்த ‘ மனித தொல்லை நிலை ‘ தான்.
இந்த மனித தொல்லை நிலை தான் என் எழுத்துக்கு உயிர்நாடி என்று நினைக்கிறேன்.
– சி.சு. செல்லப்பா

* வரம்புகள் கடந்த விஷயங்களை எழுத்தில் பிடிக்க முயல்கையில் அவை நழுவுகின்றன. ஊடலாடுகின்றன. பாஷையே பரிபாஷையாக மாறுகின்றன.
சொல்லும் பொருளும் நெஞ்சில் கண்ணாமூச்சி ஆடுகின்றன. சொல் பொருளை தேடுகிறது. பொருள் எட்டியும் என்பது சொல்லை நழுவுகிறது. இரண்டினுக்கும் இடையில் நான் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். சொல்லும் நானே. பொருளும் நானே.
நான் என்னைத் தேடிக. கொண்டிருக்கிறேன்.
இதற்கு, எழுத்து எனக்கு வழித் துணை.
– லா.ச. ராமாமிருதம்

இப்படி பதினோரு பேர்(நான் சிலரை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்) கேள்விக்கான பதிலை தன் பாணியில், தன் வாழ்வை முன்னிறுத்தி கூறியிருக்கிறார்கள். இவர்களின் இந்த வார்த்தைகளை வைத்து பார்க்கையில் ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப எழுத்து அவர்களை எழுத உந்துதல் கொடுத்துள்ளது என தோன்றுகிறது. எனக்கு அம்மாமிகளைத் தான் எனக்கு தெரியும். ஆத்தாள்களைப் பற்றி ஏதோ சிறிதளவு தான் தெரியும். இப்படி இருக்கையில் நாம் ஏன்? இவர்களைப் பற்றியே உங்கள் எழுத்துக்கள் இருக்கிறது என்று கேட்டால் நாம் தான் மூடர்களின் தலைவர்கள் ஆவோம். ஜெயகாந்தன் என்றால் எனக்கு ஞாபகம் வருவது, ‘ வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து ஞாயங்களே ‘ என்ற இவர் கூறிய வரிகள் தான். இவரிடம் போய் ஏன் அடிக்கடி கொள்கைகளை, சித்தாந்தங்களை மாற்றி மாற்றி கடைபிடிக்கிறீர்கள் என கேட்கும் நாம் மறுபடியும் மூடர்களின் தலைவர்களே.

ஒரு தத்துவவாதிக்கும், எழுத்தாளனுக்கும் இருக்கும் ஓரே ஒற்றுமை, காலப்போக்கில், காலத்திற்கு ஏற்ப மனதளவில் பரிணாம வளர்ச்சி அடைந்து அவர்கள் உருவாக்கியதை அவர்களே சற்று தள்ளி நின்றவாறு பார்ப்பார்கள் அல்லது ஒரு வித சலிப்பு தன்மை உணரப்பட்டு விடும் என நான். நினைக்கிறேன். சில எழுத்தாளர்களுக்கு எந்த வித கொள்கையும், சித்தாந்தகளும் உறுதுணையாக துளியும் தேவைப்படுவதில்லை. அவர்கள், செல்லப்பா கூறியதைப் போல மனிதர்களின் அக, உளவியல் சார்ந்த விஷயங்களில் ஏற்படும் நெருக்கடிகளை பேச நினைப்பவர்கள் என கருதுகிறேன்.

பல சிந்தனைகள் இதனை வாசிக்கும் உங்களுக்கும் அரும்பலாம். உலாவும் பேயாய் மனதில் குடியேறியிருக்கும் சிந்தனைகள் உடையலாம். இதனோடு, நான் மேலே குறிப்பிட்ட சந்தியா பதிப்பகம் வெளியிட்ட ‘ எழுத்து இதழ் ‘ தொகுப்பையும் வாங்கி படியுங்கள்.

எதற்காக எழுதுகிறேன்?
சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு
சந்தியா பதிப்பகம்

சிவசங்கரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *