Ethartha Rajan and the History of Tamil Film Movements by R.R.Seenivasan யதார்த்தா ராஜனும் தமிழ்த் திரைப்பட இயக்கங்களின் வரலாறும்



மரணங்கள் வழக்கம்போல தொடர்கிறதா அல்லது கொரோனாவால் மிகவும் துல்லியமாகவும் கவனக்குவிப்புடனும் நமக்குத் தெரிகிறதா? என்று தெரியவில்லை. கொரோனாவால் பல நண்பர்களின் மரணங்கள் நிகழ்ந்ததால், நண்பர் யதார்த்தா ராஜனின் மரணமும் அப்படியே நிகழ்ந்திருக்கும் என்று நினைத்தேன். அப்படி நடக்கவில்லை என்று நண்பர்கள் கூறினர். யாருமே எதிர்பாராதது ராஜன் அவர்களின் மரணம். அவரைப்பற்றி பல கூட்டங்களில் பேசிவிட்டேன். ஆனாலும் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது.

Ethartha Rajan and the History of Tamil Film Movements by R.R.Seenivasan யதார்த்தா ராஜனும் தமிழ்த் திரைப்பட இயக்கங்களின் வரலாறும்

 

என்னுடைய இருபதாவது வயதிலிருந்தே அவரை அறிவேன். அவரைப்பற்றி சொல்லும்போது நிச்சயமாக என்னைப்பற்றியும், நான் சார்ந்திருக்கும் காஞ்சனை திரைப்பட இயக்கம்பற்றியும், தமிழக, இந்தியத் திரைப்பட இயக்கங்கள்பற்றியும் சொல்லாமல் அவருடைய இரங்கல் கட்டுரையை எழுதமுடியாது. சற்று நீண்ட சினிமா வரலாற்றுப் பின்னணியோடு சொல்ல முயற்சிக்கிறேன்.

1990இல், கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு, இனி படிக்க வேண்டாம் என்று முடிவுசெய்தேன். எந்த ஒரு கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் கல்வி பயில்வதற்காக சேர்வதில்லை என்று முடிவெடுத்தேன். அந்த முடிவு இன்றுவரை சரியா, தவறா என்று தெரியவில்லை. ஒரு மாபெரும் அழுத்தத்தை கல்வி நிலையங்களும், கல்வியாளர்களும் எனக்குக் கொடுத்திருந்தார்கள். இதிலிருந்து முற்றிலும் விலகவேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது, எனவே விலகிவிட்டேன். அடுத்து ஒரு கட்டற்ற, மனம்போன போக்கில் வாழவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. 17 வயதிலிருந்து 22 வயதிற்குள் பெரும் அனுபவங்களைப் பெற்றிருந்தேன். அந்த அனுபவங்களே என்னை, இந்தப் பயணம் நோக்கித் தள்ளின. அது, கலை இலக்கியம் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்பதேயாகும்.

அந்தக் காலகட்டத்தில், திரைப்படமும் புகைப்படமும் என்னை ஆக்டோபஸ் கரங்களால் மூடியிருந்தன. குறிப்பாக, ரித்விக் கட்டக்கின் திரைப்படங்களும் தார்க்கோவ்ஸ்கியின் படங்களும் தூர்தர்ஷனில் வந்தன. இரவு முழுவதும் பார்த்த அந்தப் படங்கள், என்னுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. எனவே, 1991இல் RECTANGLE என்ற பெயரில், ஒரு திரைப்பட இயக்கத்தை ஆரம்பித்தோம். அப்படி ஒரு திரைப்பட இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு, கேரளாவோடு ஒரு நீண்டநெடிய தொடர்பை வைத்திருந்தேன். ஒரே ஒரு திரைப்படம் பார்ப்பதற்காக, திருவனந்தபுரம் சென்று விட்டு இரவு திரும்பிவிடுவேன்.

கேரளாவின் கலை இலக்கியச் செயல்பாடுகளில் முழுமையாகப் பங்குபெற்றேன். குறிப்பாக, ஜான் ஆபிரகாமின் ஒடெசா இயக்கத்தோடு முழுமையாகப் பயணித்தேன். கேரளாவில் அவர்கள் நடத்திய திரைப்பட, ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டேன். அந்த அனுபவத்திலும் பழக்கத்திலும் அவர்களைக் கூட்டிவந்து திருநெல்வேலியில், 1991இல் முதல் திரைப்பட இயக்கச் செயல்பாடு தொடங்கப்பட்டது.

ஆனந்த் பட்வர்தன் ஆவணப்படங்கள், ஜான் ஆபிரகாம் திரைப்படங்கள் என அதிரடியாக திருநெல்வேலியில் திரையிடல்கள் தொடங்கின. அதற்குப்பிறகு தமிழகத்தில் திரைப்படச் சங்கங்களின் செயல்பாடுகள் எனக்குச் சொல்லப்பட்டன. ஏற்கனவே திருநெல்வேலியில் ‘மேலும்’ சிவசுப்பிரமணியம், திரைப்பட இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாங்கள் வேலைசெய்தோம்.
அப்போதுதான் எனக்கு மதுரையில் இயங்கிவந்த யதார்த்தா திரைப்பட இயக்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது. அந்தத் தொடர்பின்மூலம் ராஜன் அறிமுகமானார். ராஜன் என்றதும் தொடர்ச்சியாக எல்லோரோடும் முரண்பட்டு, விவாதித்து, சண்டையிட்டு பின்பு நண்பர்களாக மாறி கொஞ்சிக்குலாவி திரும்பவும் முரண்பட்டு, சண்டையிட்டு, நட்பு பேணுபவராக இருந்தார். அவர், ஏன் என்னுடன் பல விஷயங்களில் முரண்படுகிறார் என்று எனக்கு முதலில் விளங்கவில்லை.

குறிப்பாக, அவரிடம் திரைப்பட ஒலிப்பேழைகள் எக்கச்சக்கமாக இருந்தன, அதை அவர் யாரிடமும் கொடுக்கமாட்டார். ஒரு பூதத்தைப் போல அவற்றை காத்துவந்தார். ஆனால் ஏதாவது ஒரு முக்கியமான நூல் அல்லது டிவிடியோ இல்லையென்றால் என்னிடம் கேட்பார், நாம் கொடுப்பதை வாங்கிக்கொள்வார் ஆனால் அவர் எதையும் எளிதாகக் கொடுக்கமாட்டார். பிறகு அவருடைய வழிகாட்டலின்பேரில் எங்களுடைய இயக்கம், காஞ்சனை திரைப்பட இயக்கம் என்று பெயர்மாறி அகில இந்திய திரைப்படச் சங்கங்களில் உறுப்பினர் ஆனது.

பின்பு தொடர்ந்து பத்து வருடங்களுக்குமேலாக மிகச் சிறப்பாக காஞ்சனை இயங்கியது. இன்னும் சொல்லப்போனால் கேரளா, கர்நாடகா, வங்காளம் ஆகியவற்றில் இயங்கிய திரைப்பட இயக்கங்களைவிட மிகச் சிறப்பாக எங்களுடைய காஞ்சனை திரைப்பட இயக்கம் இயங்கி, இரு தடவை இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்படச் சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. திரைப்படச் சங்க கூட்டங்கள், திரைப்படச் சங்க செயல்பாடுகள், திரைப்படப் பெட்டி பரிவர்த்தனைகள் என்று தொடர்ச்சியாக மதுரையோடு இணைந்து இயங்கினோம்.

இப்போது, எப்படி இயங்கினோம் என்பதை உங்களுக்கு விரிவாக விளக்க விரும்புகிறேன். ஏனெனில் ஒரு திரைப்படச் சங்கம் என்பது, இப்போது இருப்பதுபோல் அல்ல. அது, மிகவும் கடினமான ஒரு பணி. பத்து வருடங்களுக்குமேலாக தொடர்ச்சியாக இந்தப் பணியில் நான் ஈடுபட்டவன். முதலில் டிவிடி கிடையாது. 35எம்.எம். பிரிண்ட், 16எம்.எம். பிரிண்ட் ஆகியவற்றைக் கொண்டுதான் திரைப்படத்தை திரையிடமுடியும். அதற்கு இரண்டுவித முறை இருந்தது. ஒன்று, அகில இந்திய அளவில் திரைப்படங்களுக்குப் பதிவு செய்யவேண்டும். ஒரு திரைப்படம் கிடைத்தவுடன் அதற்கு ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரிப்பார்கள். தமிழ்நாடு முழுக்க திரைப்படப் பெட்டி, எந்தெந்த ஊர்களுக்குப் பயணிக்க வேண்டும் என்று விரிவான பட்டியல் அனுப்பப்படும். நாம் திரையிடுவதை முதலிலேயே தெரிவிக்க வேண்டும். பின், அந்தப் பெட்டி ரயிலில் பயணிக்கும்.
திருநெல்வேலியில் படம் போடுவதென்றால், மதுரையில் திரையிட்டபிறகு திருநெல்வேலிக்கு வரும். ஒரு திரையரங்கை நடத்துபவர் எப்படி வேலை செய்வாரோ அப்படி வேலை செய்யவேண்டும். 35எம்.எம். பிரிண்ட் ரயிலில் மதுரைக்கு வந்துசேரும். அந்தப் பெட்டியை ரயில்வே ஸ்டேஷனில் போய் முதலில் எடுத்துக்கொண்டு வரவேண்டும், அதற்குப் பிறகு ஏதாவது ஒரு தியேட்டரில் போய் அந்தப் பிரிண்ட்டை ஆய்வு செய்யவேண்டும்.

மறுநாள் திரையிடும்போது எந்தப் பிரச்சினையும் வராமல் இருக்க. அதற்குப்பிறகு 35எம்.எம். புரொஜெக்ட் செய்வதற்கு உள்ள புரொஜெக்டரை தேடவேண்டும். அந்த 35எம்.எம். புரொஜெக்டர் எளிமையாக இருக்கவேண்டும். அது, மதுரையில் மட்டும்தான் இருந்தது. அதை ஒரு நண்பரிடம் ராஜன் வாங்கிவைத்திருந்தார். அவர், அந்தப் படத்தை அங்கு போட்டபிறகு ஒருவர் அந்த புரொஜக்டரையும் எடுத்துக்கொண்டு திருநெல்வேலிக்கு வருவார் அல்லது இரண்டும் ரயிலில் வரும். இந்த இரண்டையும் ஆட்டோவில் சென்று எடுக்கவேண்டும். பின்பு அதற்கு ஒரு திரையரங்கத்தைப் பதிவு செய்யவேண்டும். அதற்குப்பிறகு நோட்டீஸ் அடித்து எல்லா இடங்களிலும் விநியோகித்து, ஒரு 300 பேர்களுக்கு போஸ்ட் கார்டு எழுதி, அதற்குப்பிறகு திரையரங்கிலோ, ஹோட்டலிலோ, கல்யாண மண்டபங்களிலோ அல்லது பள்ளி, கல்லூரிகளிலோ படத்தை திரையிடுவோம்.
ஒரு படம் திரையிடுவதற்கு குறைந்தது மூன்று நாட்கள் வேலை செய்யவேண்டியிருக்கும். இப்படியே ஆயிரக்கணக்கான திரையிடல்களை ராஜன் உட்பட தமிழ்நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படச் சங்கச் செயல்பாட்டாளர்கள் மின்னல்போலச் செயல்பட்டார்கள்.

இதைத்தாண்டி, எங்களுடைய சங்கத்துக்கென்று தனியே படம் திரையிடவேண்டுமென்றால், பெங்களூரிலிருந்து அல்லது பூனாவிலிருந்து வாங்கவேண்டும். பூனாவின் ஆவணக் காப்பகத்திலும் பெங்களூரிலிருக்கும் அதன் கிளையிலும் இருக்கிற பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்து, பணம் செலுத்தி, அந்தப் படத்தை பதிவு செய்யவேண்டும். சிலசமயங்களில் தொடர்ந்து பெங்களூருக்குச் சென்று அந்தப் படத்தை புக் செய்து, அந்தப் படத்தை பேருந்தில் எடுத்துக்கொண்டு வருவேன். பிறகு திரையிடல் முடிந்ததும் ரயிலில் அதைப் பதிவுசெய்து, சீல்வைத்து அனுப்பிவைக்க வேண்டும். இதுதான் திரைப்படச் சங்கச் செயல்பாடுகள் என்று குறிப்பிடுகிறேன்.

இதைத்தவிர, திரைப்படச் சங்க செயல்பாடுகளாக பல திரைப்பட ரசனை வகுப்புகள் திருநெல்வேலியில் நடத்தப்பட்டன. இலக்கிய, புகைப்பட, தொல்லியல் மற்றும் பல வரலாற்றுப் பணிகளும் காஞ்சனை திரைப்பட இயக்கத்தின் சார்பாக நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட, ஒரு அரசாங்கத்தின் நிறுவனம்போல காஞ்சனை திரைப்பட இயக்கம் இயங்கியது. அதேபோல, தமிழகத்தில் எல்லா திரைப்படச் சங்கங்களும் இயங்கின. நமது நூறு வருட திரைப்பட வரலாற்றில், இன்று சமூகத்தில் ஏதாவது ஒரு சிறிய மாற்றம் நடந்திருக்குமென்றால் அதற்கு, இந்த திரைப்படச் சங்க செயல்பாடுகளே காரணம். பணம், புகழ், சுயவிளம்பரம் போன்ற எதுவுமின்றி, எந்த எதிர்பார்ப்புமின்றி இந்தச் செயல்பாட்டை, தான் இறக்கும் வரை செய்தார், ராஜன்.

Ethartha Rajan and the History of Tamil Film Movements by R.R.Seenivasan யதார்த்தா ராஜனும் தமிழ்த் திரைப்பட இயக்கங்களின் வரலாறும்

இப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தியா முழுமைக்கும் திரைப்படச் சங்க செயல்பாட்டாளர்கள் இயங்கினார்கள். சத்யஜித் ரே, முதலில் அவர் ஒரு திரைப்படச் சங்க செயல்பாட்டாளர். இந்தியாவில் முதன்முதலாக, ஃபிலிம் சொசைட்டி மூவ்மென்ட் கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்டது. ரே, சித்தானந்த குப்தாவுடன் இணைந்து கல்கத்தாவில் பல உலகப் படங்களைத் திரையிட்டார்.
1957ஆம் ஆண்டு சென்னையில், தென்னிந்தியாவின் முதல் ஃபிலிம் சொசைட்டி, ’மெட்ராஸ் ஃபிலிம் சொசைட்டி’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது நடந்த விழாவில், அப்போதைய தமிழக முதல்வர் திரு.காமராஜ் அவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த விழவில், மெட்ராஸ் ஃபிலிம் சொசைட்டியின் நிர்வாகிகளான அம்மு சுவாமிநாதன், கே.எஸ்.கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து, மெட்ராஸ் ஃபிலிம் சொசைட்டியிலிருந்து பிரிந்துவந்த சிலர், வேறு ஃபிலிம் சொசைட்டிகளை ஆரம்பித்தனர். அவை:

ஐ.சி.ஏ. ஃபாரம்
மெட்ராஸ் புரொகரசிவ் ஃபிலிம் சொசைட்டி
சித்ரதர்ஷன் ஃபிலிம் சொசைட்டி
மூவி அப்ரிசியேஷன் ஃபிலிம் சொசைட்டி

தொடக்க காலத்தில், உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களை மெட்ராஸ் ஃபிலிம் சொசைட்டியின் திரையிடல்கள்மூலமே, சென்னையிலுள்ள சினிமா ரசிகர்கள் கண்டுகளித்தனர்.
அப்போதெல்லாம் அரசிடமிருந்து கேளிக்கை வரி விலக்குப் பெற்று, சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளான சபையர், பைலட், அபிராமி போன்ற திரையரங்குகளில் தொடர்ந்து திரையிட்டார்கள். இப்போது அந்தத் தியேட்டர்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, சென்னையில் உள்ள சபாக்களிலும், பள்ளி ஆடிட்டோரியங்களிலும் திரையிடல்கள் நடைபெற்றன. அவற்றில் சில:

சுவாமி சங்கரதாஸ் ஆடிட்டோரியம்
மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபா
ஆசான் மெமோரியல் ஆடிட்டோரியம்

இதுபோன்ற பெரிய ஆடிட்டோரியங்களில் ஃபிலிம் சொசைட்டி திரையிடல்கள் நடக்கும்போது, சுமார் ஆயிரம்பேர் வரை அமர்ந்து உலகப் படங்களைக் கண்டுகளித்தனர்.

இதற்குப்பிறகு, சென்னையில் திரைப்படக் கல்லூரி மாணவர்களான சிவக்குமார், தங்கர்பச்சான், ராஜிவ் மேனன், நாசர், சுந்தர் போன்றோர் ஒன்றிணைந்து, சென்னை ஃபிலிம் சொசைட்டி என்ற ஒரு அமைப்பை 1981இல் உருவாக்கினார்கள். சென்னையில் 1978 மற்றும் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் (IFFI), ஃபிலிம் சொசைட்டிகளின் கூட்டமைப்பும் (FFSI) சேர்ந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஃபிலிம் சொசைட்டி 1987 மற்றும் 1993 ஆகிய இரு ஆண்டுகளில், ஃபிலிம் அப்ரிசியேஷன் முகாம்களை சென்னையில் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த முகாம்களில் புனே திரைப்படக் கல்லூரி பேராசிரியர்கள் திரு. பி.கே.நாயர், சதீஷ் பகதூர் போன்றோர் கலந்துகொண்டு, சினிமா ரசனை பயிற்சி வகுப்புகள் நடத்தினர். 1987ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டையிலும், 1993ஆம் ஆண்டு ரஷ்ய கலாச்சார மையத்திலும் இந்தத் திரைப்பட ரசனை பயிற்சி வகுப்புகளை நடத்தினர். இந்த முகாம்களில் சினிமா ரசிகர்களோடு, திரைப்பட உலகினர் பலரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஃபிலிம் சொசைட்டியின் திரைப்பட விழாக்கள் பிரசித்திபெற்றவை. அரசியல் நிலைப்பாட்டுடனும், கலைச்செயல்பாடாகவும் நடந்தன. பல கருத்துகளின் அடிப்படையில் படத்தேர்வு, இயக்குனர்களின் படைப்புகள் என, என் வாழ்வில் பல திரைப்பட விழாக்கள் இன்றும் என்னால் மறக்க இயலாதவை. திரைப்படச் சங்க செயல்பாட்டின்மூலம்தான் பல திரைப்பட நூல்களும் வெளிவந்தன.

தமிழ்த் திரைப்பட இயக்க வரலாற்றில் திரைப்படச் சங்கங்கள் தாண்டி, அரசியல் இயக்கங்களின் திரைப்படப் பணிகளில் முதன்மையானது ‘பாதை தெரியுது பார்’ திரைப்படம்.
கூட்டு முதலீடு crowd funding முதலில் தொடங்கியது தமிழ் சினிமாவில்தான்.

1960இல் நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாசன் ஆகியோர் ’பாதை தெரியுது பார்’ என்ற தமிழ்ப் படத்திற்காக இந்தியாவின் முதல் கூட்டு முதலீடு இயக்கத்தைத் தொடங்கினார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 45 உறுப்பினர்களால் பணம் போடப்பட்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டது. தோழர் ஜீவா இந்தப் படத்தை தொடங்கிவைத்தார். இதற்கு ’சிறந்த தமிழ்ப் படம்’ என்ற தேசிய விருது கிடைத்தது.

பின்பு ஷியாம் பெனகலின் ’மந்தன்’ 1976இல் 5 இலட்சம் விவசாயிகளால் ரூ. 2 முதலீடு செய்யப்பட்டு, பத்து இலட்ச ரூபாயில் உருவாக்கப்பட்டது. பல தேசிய விருதுகளை வென்ற படம் இது.

ஜான் ஆபிரகாமின் ’அம்ம அறியான்’ 1986இல் ஒடேஸ்ஸா இயக்கத்தால் மக்களிடம் படங்களைத் திரையிட்டு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று வசூலிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. தியேட்டர் விநியோக முறையையும் எதிர்த்து, வணிக விநியோகத்திற்கு எதிராக தியேட்டரில் திரையிட மறுக்கப்பட்டது, ஒடெஸ்ஸா இயக்கமே மக்களிடம் திரையிட்டுக் காண்பிக்கிறது இன்று வரை. இதற்குப் பிறகுதான் மற்ற கூட்டு முதலீடு படங்கள் எல்லாம் வெளியாகின.
அஜித் ஹரி என்னும் மாணவர், கேம்பஸ் ஃபிலிம் சொசைட்டி என்று ஒரு அமைப்பைத் தொடங்கி, சென்னையில் உள்ள கல்லூரி வளாகங்களில் சிலகாலம் தொடர்ந்து திரையிடல்களை நடத்தினார்.

1994ஆம் வருடம், டிசம்பர் மாதம் 11ஆம் நாள் சென்னையில் உள்ள மனோரமா திரையரங்கத்தில் இயக்குநர் கிருஷ்ணன் (கிருஷ்ணன்-பஞ்சு) அவர்கள் தலைமையில் ‘தமிழ்நாடு திரைப்பட இயக்கம்’ என்ற ஒரு ஃபிலிம் சொசைட்டி தொடங்கப்பட்டது. இந்த சொசைட்டி, தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே 1995ஆம் ஆண்டு, மார்ச் 31 முதல் ஏப்ரல் 10 வரை சென்னையில் உள்ள ஃபிலிம் சேம்பர் திரையரங்கத்தில் ‘உலக சினிமா நூற்றாண்டு விழா’வை மிகச்சிறப்பாக நடத்தியது. சுமார் ஐம்பது படங்களுக்குமேல் திரையிடப்பட்ட இந்நிகழ்வில், சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஐ.சி.ஏ.ஃபாரம் என்ற ஃபிலிம் சொசைட்டி, ஐசிஏ ஃபவுண்டேஷன் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, 2003ஆம் ஆண்டு முதல், ‘சென்னை இண்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்’ என்ற பெயரில் சர்வதேச திரைப்பட விழாவை, தமிழக அரசு உதவியுடன் மிகவும் வெற்றிகரமாக இன்று வரை நடத்திவருகிறது. திரு.தங்கராஜ் சார் அதன் நங்கூரமாக இருப்பவர்.

Ethartha Rajan and the History of Tamil Film Movements by R.R.Seenivasan யதார்த்தா ராஜனும் தமிழ்த் திரைப்பட இயக்கங்களின் வரலாறும்
Image Credit: Film chatting

இதைத்தவிர பேராசிரியர் ஆல்பர்ட், அம்ஷன்குமார், ராஜன்குறை நடத்திய திருச்சி சினி போரம், கோவை கோணங்கள் ஆனந்த், மதுரை யதார்த்தா ராஜன், திருப்பூர் நியூலுக் சுப்ரமணியன், திருநெல்வேலியில் காஞ்சனை மணி, ஆர்.ஆர்.சீனிவாசன் நடத்திய காஞ்சனை, தென்காசி கதைப்பித்தன் என, தமிழகம் முழுதும் இருபதுக்கும் மேற்பட்ட திரைப்பட இயக்கங்கள் இயங்கின. இந்தப் பட்டியல் மிகவும் விரிவானது. திரைப்படச் சங்க செயல்பாட்டாளர்களின் பணிகளும் அளப்பரியது. ஒவ்வொரு திரைப்படச் சங்கம் குறித்தும் விரிவான கட்டுரைகள் எழுதப்படவேண்டும். திரைப்படச் சங்க செயல்பாடுகள் என்பது இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. டிவிடி-க்கள் வந்ததற்குப் பின்பு அதனுடைய செயல்பாடுகள் திசை திரும்பிவிட்டன. இவை யாவும் 2000த்திற்குள் நடந்துமுடிந்தன.

இந்த திரைப்படச் சங்க செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானதும் மறக்கமுடியாததும் திரைப்பட விழாக்கள் ஆகும். உண்மையில், ராஜன் ஒரு திரைப்பட விழா வெறியர் என்று சொல்லலாம். என்னுடைய பத்தொன்பது வயதிலிருந்து, இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய திரைப்பட விழாக்களுக்கு அவரோடு பயணித்திருக்கிறேன். டெல்லி, பாம்பே, கல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், கோவா என அவரோடு பயணம்செய்த நாட்கள் மறக்க இயலாதவை. என்னுடைய இளம்வயதிலேயே, திரைப்படச் சங்க செயல்பாட்டில் ஈடுபட்டபோது, அதில் ஏற்கனவே இருந்த பெரியவர்கள் என்னைச் சிறுவனாகவே பார்த்தார்கள். ராஜன், கடைசிவரைக்கும் என்னை சிறு பையனாகவே பார்த்தார். ஒவ்வொரு திரைப்பட விழாவுமே மிகவும் மறக்கமுடியாத அனுபவம். என்ன படங்கள் பார்க்க வேண்டுமென்று அவர் சொல்லுவார். படங்கள் நடந்துகொண்டு இருக்கும்போதே கடும் பனியில், வெளியே வந்து புல்வெளியில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். என்றும் மறக்கமுடியாத அனுபவங்கள்.

பல திரைப்படச் சங்க செயல்பாட்டாளர்களையும், இயக்குனர்களையும் தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்பை அவருடன் பெற்ற ஒரு காலத்திற்குப் பிறகு, காஞ்சனை திரைப்படச் சங்கம் மிகவும் பிரபலமாக வளர்ந்ததற்குப் பிறகு, அவர் என்னை மிகவும் மதித்தார். அதேவேளையில், பல விவாதங்கள் சண்டையிலேயே முடிந்தன. அதற்குக் காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஏன், பல விஷயங்களில் இவர் முரண்பட்டு மாற்றி மாற்றிப் பேசுகிறார் என்று அடிக்கடி தோன்றும்.

நான் சென்னைக்கு வந்தபிறகும்கூட திரைப்பட விழாக்களுக்குத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்த காலகட்டத்தில் அவரைப் புரிந்துகொள்ளாத, முரண்பட்டு நிற்கிற நபராகவே நானிருந்தேன். அவர் இறந்தபிறகுதான் எனக்கு அவர் பார்ப்பனர் என்று தெரிந்தது. அதற்குப்பிறகுதான் அவரோடு ஏன், பல இடங்களில் முரண்பட்டேன் என இப்போது புரிகிறது.

திரைப்பட விழாக்களில் பலவிதமான வாழ்க்கை முறை, பலவிதமான உணவு என எல்லாவற்றிற்கும் ஈடுகொடுத்து எங்களோடு பயணிப்பார். ஒவ்வொரு தியேட்டருக்கும் பல கிலோமீட்டர்கள் பயணம் செய்யவேண்டிய திரைப்பட விழாக்களும் உண்டு. கல்கத்தா போன்ற நகரங்களில், காலை ஆறு மணிக்கு மெட்ரோ டிரெயினில் இருபது கிலோமீட்டர்கள் பயணம், பின்பு பலமணி நேரம் வரிசையில் நின்று திரைப்படங்களைப் பார்ப்போம். இவற்றை இவ்வளவு விரிவாகவும், இவ்வளவு தெளிவாகவும் நான் எழுதுவதற்குக் காரணம், ராஜன் ஒரு நாடோடிபோல. வயது வித்தியாசம் இல்லாமல் எங்களோடு அவர் இருந்தார். அவருடைய நண்பர்கள் எல்லோருக்கும் ஒரே மரியாதை, எல்லோருக்கும் ஒரே உபசரிப்பு, எல்லோருக்கும் ஒரே புன்னகை, எல்லோருடனும் சண்டை.

பலகாலம், கையில் எந்தப் பணமும் இல்லாமல் திரைப்பட விழாக்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன், கிட்டத்தட்ட எல்லோருமே அப்படித்தான் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். என்னைப்போல பலர், கையில் எந்தக் காசும் இல்லாமலும் சினிமா வெறிபிடித்து அலைந்த காலங்கள் அவை. திடீரென ராஜன், லெனின் சார் போன்றவர்கள் எங்களுடைய பக்கத்தில் வந்து, சட்டை பாக்கெட்டிலே 300, 500 ரூபாயை திணித்துவிட்டுப் போவார்கள். எல்லோருக்கும் தெரியும், யாரிடமும் காசு இல்லை என்று. இந்த நிமிடம்கூட அதை நினைத்துப் பார்க்கிறேன்.

திரைப்பட விழாக்கள் என்றாலே ராஜன், ராஜேந்திரன், சிவக்குமார், ஸ்ரீதர், விச்சு விசுவாமித்திரன் என்று இந்தியாவைச் சுற்றிய பெரும் தமிழர் கூட்டம் அப்போது இருந்தது. இப்போதும் சுற்றிக்கொண்டிருக்கிறோம். திரைப்படம், திரைப்பட விழா என்பது ஒரு போதை. அது, ஒருபோதும் விலகாது. ராஜனும் அதிலிருந்து விலகவில்லை.

யதார்த்தா ராஜன், மதுரையின் அடையாளம். திரைப்பட விழாக்கள், குழந்தைகள் திரைப்பட விழா, மூட்டா அரங்கம், ரீகல் தியேட்டர், எட்வர்டு ஹால், மார்க்சியம், நாடகம் எனப் பிரிக்கமுடியாதவை, அவருடைய செயல்பாடுகள். ஒவ்வொருமுறை மதுரைக்குச் செல்லும்போதும், பல்கலைக்கழகத்துக்குச் சென்று அவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவர், எம்.ஆர்.சி.யில் வேலைசெய்தார். பல ஆவணப்படங்களை தொடர்ந்து இயக்கினார். ஆவணப்படங்கள் எடுக்கவேண்டும், கேமராவைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல்தான் காரணமாக இருந்தது. அவர், பல புதிய கேமிராக்களைக் காட்டுவார், பல ஆவணப்படங்களைக் காட்டுவார். நூற்றுக்கணக்கான குறும்படங்களை, ஆவணப்படங்களை எடுத்திருந்தார். அந்தப் படங்களெல்லாம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. என்னுடைய மிக முக்கியமான வேண்டுகோள், அந்தப் படங்களையெல்லாம் நாம் திரும்ப இணையதளத்தில் ஏற்றவேண்டும் என்பதுதான். அதற்கு, அவருடைய நண்பர் ஸ்ரீரசா உதவவேண்டும். அதுவே, அவருக்கு நாம் செய்யும் மாபெரும் அஞ்சலியாகும்.

அவருடைய திரைப்பட இயக்கச் செயல்பாடுகள் வித்தியாசமானவை. எழுபதுகளிலேயே திரைப்படப் பயிற்சி முகாமை மதுரையில் நடத்தினார். மிகவும் கட்டுப்பாட்டுடன் அந்த திரைப்படங்களைத் திரையிடுவார். திரைப்படச் சங்க உறுப்பினராக இல்லாதவர்களை உள்ளே விடமாட்டார். இது, பலருக்குக் கோபத்தை ஏற்படுத்தும். ஆனாலும் அவர் விடமாட்டார். ஆனால் பல கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களோடு உரையாடி படங்களைத் திரையிடுவார்.

திரைப்படச் சங்கத்தில் ஈடுபட்ட அதேவேளையில், நாடகத்திலும் ஈடுபட்டது எல்லோருக்கும் தெரியும். மு.இராமசுவாமி நடத்திய நிஜநாடக இயக்கத்தில் தொடர்ந்து வேலைசெய்தார், நிஜநாடக இயக்கம் நடத்திய நாடக விழாவில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டார். அந்த நாடக விழாவில் முழுமையாகக் கலந்துகொண்டேன். அது, மறக்கமுடியாத ஒரு அனுபவம். பல விஷயங்களில் ஈடுபட்டாலும் சினிமாவே அவருடைய மூச்சாக இருந்தது. குறிப்பாக, திரைப்படங்களைச் சேகரிப்பதிலும் புத்தகங்களைச் சேகரிப்பதிலும் வெறியராக இருந்தார். உண்மையிலேயே அது, எல்லோருக்கும் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம்.

ஆனாலும் VHS காலகட்டத்திலும், டிவிடி காலகட்டத்திலும் அதற்குப்பிறகு டவுன்லோடு செய்து ஹார்டு டிஸ்க்கில் வைப்பதாக இருக்கட்டும் – அதை தொடர்ந்து செய்துகொண்டேயிருந்தார். நானும் அப்படித்தான் இருந்தேன், இருக்கிறேன். எதையும் யாராலும் விளக்கமுடியாது. இன்னும் ஏன் இவ்வளவு சேகரிப்புகள் அவசியம் என்பது மிகவும் ஆழமான ஒரு வாழ்க்கைத் தேவையாக உள்ளது. அந்தப் படங்களைச் சேகரிப்பதை மட்டுமே ஒரு பெரும் கனவாக வைத்திருந்தார்.

Ethartha Rajan and the History of Tamil Film Movements by R.R.Seenivasan யதார்த்தா ராஜனும் தமிழ்த் திரைப்பட இயக்கங்களின் வரலாறும்

அவர் இறந்தபின் பலர், இப்போது பல செய்திகளைப் பதிவிட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் படிக்கும்போது, நான் பழகிய ராஜனிலிருந்து அவர் முற்றிலும் எளிமையான மனிதராக மாறியிருக்கிறார் என்று தோன்றுகிறது. அது காலத்தின் கட்டாயம். பல விஷயங்களை அவர் எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அதுவும் காலத்தின் கட்டாயம்தான். சென்னைக்கு வந்தபிறகு அவரோடு எனக்குத் தொடர்பு குறைந்துவிட்டது. அதற்குப்பிறகு திரைப்பட விழாக்களுக்குச் செல்வதும் குறைந்துவிட்டது. எனவே, அவரைச் சந்திக்கும் வாய்ப்பு மிகவும் அரிதாகியிருந்தது. மதுரைக்குச் செல்லும்போது இலக்கியக் கூட்டத்திலோ அல்லது சுந்தர்காளியுடன் பாரில் மட்டும்தான் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும். அப்போதும் அவர், நாடோடிபோல எளிமையாகவே இருந்தார்.

அவருடைய கதாபாத்திரத்தை விளக்குவது என்றால், முதலில் அவர் ஒரு சினிமா வெறியர், தன் இறப்பு வரை தொடர்ச்சியாக சினிமா, நாடகம் என்று வேலை செய்தவர். அதுவே அவருடைய செய்தி. வயது வித்தியாசமின்றி எல்லோருடன் பழகுபவர். அது, அவருடைய தனித்த அடையாளம். குழந்தைகளுக்காக அவர் நடத்திய திரைப்படச் சங்க செயல்பாடுகள்தான் அவரின் உண்மையான அடையாளம். இன்று வரை அப்படி ஒரு தனித்த செயல்பாட்டை யாரும் செய்யவில்லை. இனி, குழந்தைகளுக்காக திரைப்பட விழாக்கள் நடத்தப்படுமா என்பது கேள்விக்குறிதான்.

பூனாவில் திரைப்பட வகுப்பு எடுக்கும் சதீஷ் பகதூர் அவருக்கு ஆதர்சமாக இருந்தார். எந்தளவுக்கு என்றால், தன்னுடைய மகனுக்கு சதீஷ் என்று பெயர் வைக்கும் அளவுக்கு. இதிலிருந்து அவருடைய திரைப்படச் சங்க, திரைப்பட ரசனை செயல்பாடுகளை நாம் புரிந்துகொள்ளலாம். திரைப்படச் சங்கத்தில் படங்களைத் திரையிடும்போது ஒருநாள் 200 பேர் வருவார்கள், மற்றொருநாள் இரண்டுபேர்தான் வருவார்கள். ஆனால் அந்த இரண்டு பேருக்காக படம் முடியும்வரை இருந்து, அதை விவாதித்து, அதற்குப் பிறகுதான் அவர் திரையிடலை முடிப்பார். இவர் மட்டுமல்ல; இந்தியா முழுக்க இருக்கும் பல திரைப்படச் சங்க செயல்பாட்டாளர்கள் இப்படித்தான் இன்றும் ஈடுபட்டு வருகிறார்கள்.
சுயவிளம்பரம் முற்றிலும் இல்லாத ஒரு நபர் ராஜன். பல நாடுகளுக்கும் பல திரைப்பட விழாக்களுக்கும் அவர் சென்றுவந்துள்ளார். எங்குமே அவர், தன்னைப் பற்றியும் தன்னுடைய சாதனைகளைப் பற்றியும் எழுதியதுமில்லை, குறிப்பிட்டதும் இல்லை. இது பலருக்கும் தெரியாத செய்தி.

இன்னுமொரு முக்கியமான செய்தி என்னவென்றால் அவர், பெரியாரை ஆவணப்படம் எடுப்பதற்கு விரிவான ஆய்வுசெய்து, அதனைத் தொகுத்து ஒரு படத்தை எடுத்தார். அந்த அனுபவமே, பின்னால் நிஜநாடக இயக்கம் நாடகமாகச் செய்வதற்குக் காரணமாக இருந்தது. இது, அவருடைய சாதிக்கு அவர் விடுக்கும் முக்கியமான செய்தி.

1970களில், திரைப்படப் பெட்டியை சைக்கிளிலும், தோளிலும் சுமக்க ஆரம்பித்து 2020 வரை ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் சலிப்பின்றி, மிக உற்சாகமாக திரைப்படங்களை மக்களுக்குக் காண்பித்திருக்கிறார். உண்மையிலேயே இது, மூவாயிரம் வருட மதுரையின் சங்க இலக்கியங்களுக்கு ஈடான, தமிழ்ச் சங்க செயல்பாடுகளுக்கு இணையான நவீனச் செயல்பாடு ஆகும். இதுபோதும் ராஜன் – உங்களை மறவோம், உங்களைத் தொடர்வோம்.
***
நன்றி: எம்.ராஜேந்திரன், தமிழ்நாடு திரைப்பட இயக்கம்
“கடற்காகம் வெளியீடு” ஸ்ரீசங்கர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *