இன்று பெற்றோர்கள் ஆகிய பலரும் ஒரு நல்ல ஸ்மார்ட் போன் வாங்கும்போதோ அல்லது வீட்டிற்கு தேவையான இதர பொருட்களை வாங்கும் போதோ மிகுந்த மெனக்கெடுதலுடன் அதன் தரம், வாழ்நாள், நீடித்த உழைப்பு, அப்பொருளின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் போன்ற அனைத்தையும் துருவித் துருவி ஆராய்ந்து தங்களது வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.
இது ஒரு வருடமோ இரண்டு வருடமோ அல்லது சில வருடங்களோ நாம் பயன்படுத்தும் ஒரு கருவிக்கு மேற்கொள்ளும் முன் யோசனை ஆகும். ஆனால் எதிர்கால தலைமுறைகளான நமது குழந்தைகளுக்கு ஒரு கல்வியை பயிற்றுவிக்க தகுந்த பள்ளியை தேர்ந்தெடுப்பது என்பது மெனக்கெடுதலே இல்லாமல் பெற்றோர்களுக்கு ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட சில விஷயங்களை உள்ளடக்கியே தீர்மானிக்கப்படுகிறது.
இன்று கல்வி வியாபாரமாகி விட்டது எங்கும் பள்ளிகள் தோன்றிய வண்ணம் உள்ளன. குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்க வேண்டும் என்ற விருப்பம் பெற்றோர்களுக்கு பள்ளியை தேர்ந்தெடுப்பது எளிதாக இல்லை அவர்கள் அதிக கட்டணம் வாங்கும் பள்ளியையோ, பெரிய கட்டடங்கள் உள்ள பள்ளியையோ தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் நியாயமாக பள்ளியை குறித்து அவற்றை தேர்ந்தெடுக்கும் போது நமக்கு சில கேள்விகள் பிறக்க வேண்டும்.
எது நல்ல பள்ளி?
எது தரமான பள்ளி?
தேர்ச்சி விழுக்காடு மட்டும் போதுமா?
இசை, ஓவியம், விளையாட்டு வேண்டாமா?
ஆய்வுக்கூடம் நூலகம் பயன்படுத்த வேண்டாமா?
ஆங்கிலத்தில் மட்டும் பேசினால் போதுமா?
பாடதிட்டம் மட்டும் போதுமா? இந்தக் கேள்விகள் தான் ஒரு நல்ல பள்ளியை நோக்கி நம்மை அடி எடுத்து வைக்க உதவும்.
இந்த எது நல்ல பள்ளி என்ற புத்தகத்தின் ஆசிரியர் பரசுராமன் அவர்கள் சில வழிமுறைகளை கூறியுள்ளார் இதன் மூலம் எது நல்ல பள்ளி என்றும் ஒரு நல்ல பள்ளி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது.
ஒரு நல்ல பள்ளி பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். தாய்மொழி வழிக்கல்வி நடைபெறவேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதம் குறைவாக இருக்க வேண்டும். ஒரு பள்ளி எவ்வாறு மாணவர்களை தேர்வு செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பள்ளி இருக்கிற பகுதியில் வாழும் குழந்தைகளுக்கு முன்னுரிமை தரவேண்டும்.
கல்விக்கூடம் சிறைக்கூடம் போல தண்டனைகளை வழங்க கூடாது.
கல்வியை போலவே விளையாட்டு, ஓவியம், இசை, கைத்தொழில் முதலியவற்றிற்கும் முன்னுரிமை அளித்து கற்றுத்தர வேண்டும்.
நூலகமும் ஆய்வுக் கூடமும் செயல்படும் வகையில் இருக்க வேண்டும்.
ஆங்கிலம் தேவை ஆனால் ஆங்கிலம் மட்டும் என திணிக்கக்கூடாது .
மாணவர்களின் அறிவைப் பொருத்து அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும் வகையில் அவர்களை பிரிக்க கூடாது மாணவர்கள் தேர்வில் தாமாகவே வினாக்களுக்கு பதில் எழுதும் வகையில் ஆசிரியர்கள் பயிற்சி, ஊக்குவிக்கவும் வேண்டும்.
மாணவர்களுக்கு வாழ்வில் பயன் தரும் திறன்களை வளர்க்க வேண்டும்
கற்றலை விட கேட்டலே சிறந்தது, கேட்டலைவிட பார்த்தாலே சிறந்தது பார்த்தலைவிட செய்து கற்றல் மிக நல்லது. மாணவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கற்றல் சிறந்தது பாடத்திட்டத்தை தாண்டி ஆசிரியர்கள் நிகழ்கால செய்திகளையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மாணவர்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்குள் விவாதமும் கலந்தாய்வும் இருத்தல் வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பறையில் கற்பிக்க செல்லும் முன்பு அதற்கான முன் தயாரிப்பு செய்து கொள்வது நல்லது. மாணவர்களுக்கு உள்ளூர் அல்லது சொந்த மாவட்டத்தின் நிலை வரலாறு புவியியல் ஆகியவற்றை சொல்லி வளர்க்க வேண்டும். மாணவர்களுக்கு வாழ்வில் பயன் தரப்போவது திறன்களே அல்லாமல் வெறும் தகவல்கள் அல்ல.
மேற்கண்ட கூறுகளும் திறன்களும் ஒரு நல்ல பள்ளியில் நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒரு மாணவன் படித்து முன்னேறி உயர்வதற்கு அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.
பெற்றோர் மாணவனுக்கு ஒரு நல்ல பள்ளியை மேற்கண்ட கூறுகளை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து படிக்க வைப்பதும் அதற்கான சாத்தியக்கூறுகளை அமைத்து தருவதும் பெற்றோரின் பங்கு, அதுபோல ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகமும் இந்த மாணவர்களுக்கு போதிய அறிவினை வழங்க அவர்களும் முழுமனதோடு மாணவர்களின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை திறம்பட செய்து கொடுத்து அவர்களை முன்னேற்ற வழி வகை செய்ய வேண்டும்.
கல்வி மட்டுமே வறுமையை ஒழிக்கும் ஆயுதம் என்ற அறிஞர்களின் கூற்று மிக உண்மையானது. அப்படியானால் ஒரு சமூகத்தை கட்டமைக்க கல்வி என்பது மிகவும் முக்கியம். ஒரு சமூகத்தை முன்னேற்றினால் தான் ஒரு நாடு முன்னேறும்.
இதற்கெல்லாம் அடிப்படை அஸ்திவாரம் என்ன என்று பார்க்கும்போது அது பள்ளியில் தான் சென்று முடிகிறது. ஆகவே எது நல்ல பள்ளி என்ற இந்த மிகச்சிறிய புத்தகம் பல பெரிய கருத்துக்களை தன்னோடு கொண்டுள்ளது. ஆசிரியர் பரசுராமன் அவர்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு ஒரு நல்ல பள்ளிக்கான வரையறை என்ன என்பதை வெகு எளிமையாக நமக்கு விவரித்துள்ளார். 16 பக்கங்களே இருந்தாலும் பல நூறு பக்கங்களில் உள்ள ஆழ் கருத்துக்களை சுருக்கி அமைத்துக் கொண்டுள்ளது இந்த புத்தகம்.
எது நல்ல பள்ளி?
கல்விக்கான களம்
-சேதுராமன்
புத்தகத்தின் பெயர் : எது நல்ல பள்ளி ?
ஆசிரியர் பெயர் : த. பரசுராமன்
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ரன்
பக்கங்கள் : 16
விலை : ₹10