அரசியலில் இருக்கின்ற அனைவரும் உலகளாவிய தொற்றுநோயை விரும்புகிறார்கள்
‘பேரழிவு மேலாண்மை’ என்பது மக்களின் அடிப்படை உரிமைகளை இடைநிறுத்துவதற்கான புதிய ஏற்பாடாக மாறியுள்ளதுடன், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தணிந்த பின்னரும் அது இயல்பானதாக மாறும் அபாயம் கொண்டதாகவும் இருக்கிறது.
சத்ய மொஹந்தி, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் முன்னாள் செயலாளர்.
2020 ஏப்ரல் 16
கடந்த வாரம் ஊரடங்கை எவ்வளவு விரைவாக நீக்க முடியும் என்பது பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்த வேளையில், கூடுதல் எண்ணிக்கையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும், இறப்பையும் கொண்டிருக்கின்ற தெலுங்கானாவின் கே.சி.ஆர் உட்பட பல முதலமைச்சர்கள், ஊரடங்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். ஊரடங்கு தொடரருமா என்ற கேள்விக்கு பதிலளித்த தகவல்துறை அமைச்சர், சில நாட்களுக்கு முன்புவரை உள்நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை சமாளிக்கக் கூடியதாகவே இருப்பதாகத் தோன்றினாலும், உலக அளவிலான நிகழ்வுகளை அரசாங்கம் கவனித்து வருவதாகக் கூறினார். ’அராஜகத்தையும், சர்வாதிகாரத்தையும் தூய்மைப்படுத்துகின்ற’ நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டுள்ளது என்று மார்ச் 31 அன்று சஞ்சய் ரெட்டி அளித்திருந்த விளக்கம் அதீத மிகைப்படுத்தல் என்று தோன்றினாலும், இப்போது அது ஓரளவிற்கு மதிக்கத்தக்கதாகவே தோன்றுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிவேக உயர்வு இல்லாத போதிலும், ஊரடங்கை நீட்டிப்பதற்கான முதலமைச்சர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு மே 3 வரை தொடரும் என்று அறிவித்திருக்கிறார். நெருக்கடிகாலத்தை முறையாக அறிவிக்காமல், அதைவிட மிகவும் கடுமையான நெருக்கடிநிலையானது மறைமுகமாகக் கொண்டு வரப்பட்டு, விபரீத விளைவுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற சாத்தியமோ அல்லது நிதி நெருக்கடி என்று எதுவுமே இல்லாமல் இருக்கின்ற நிலைமையில், ஊதிய மற்றும் ஓய்வூதிய வெட்டுகளை அரசாங்கங்கள் ஏற்படுத்தியுள்ளன. தானாக முன்வந்து 30% ஊதியத்தை இழப்பது என்ற விசித்திரமான நடைமுறையை அவசர சட்டத்தின் உதவியுடன் அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம் மத்திய அரசும் களத்தில் சேர்ந்துள்ளது. இத்தகைய நடவடிக்கை நிதி நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான ஒத்திகையாககூட இருக்கலாம். நீதிபதிகள் உள்ளிட்டவர்களின் ஊதியத்தைக் குறைக்க மத்திய அரசுக்குத் தேவையான அளவிற்கு அதிகாரங்களை இந்த அவசரச் சட்டம் அளித்திருக்கிறது.
அதே நேரத்தில் குடியரசுத் தலைவர் மாநிலங்களில் உள்ள அனைத்து பணம் மற்றும் நிதி மசோதாக்களின் இறுதி நடுவராக மாறியிருக்கிறார். பீதிக்கான மேடையை அமைத்துக் கொடுத்து விட்டு, பேரழிவிற்கு எதிராக எழுந்து நிற்பதைப் போன்ற தோற்றத்தை அரசியல்வாதிகள் கட்டியெழுப்புகிறார்களா என்ற கேள்வி இப்போது எழுகிறது. கோவிட்-19 குறித்த புத்திசாலித்தனமான எண்ணங்கள் சில சரியானவையாகவே இருக்கின்றன.
‘தொற்றுநோய்’ என்ற சொல் விரைவான பரவலையே குறிக்கிறது என்றாலும், அது தீவிரம் அல்லது மரணம் குறித்ததாக இருக்கவில்லை. வயதானவர்களை மிகவும் பாதிப்பிற்குள்ளானவர்களாகவும், இளைஞர்களை நோயைச் சுமந்து திரிபவர்களாகவும் இந்த புதிய கொரோனா வைரஸ் ஆக்கி வைத்திருக்கிறது. தடுப்பூசி இல்லா விட்டாலும், பெரும்பாலான நோயாளிகள் மருத்துவ தலையீடு எதுவும் இல்லாமலும், மேலும் பலர் மருத்துவ உதவியுடனும் நோயிலிருந்து தப்பியிருக்கின்றனர்.
கொள்ளையடிக்கும் திறனை தங்களுக்கு இந்த தொற்றுநோய் உருவாக்கித் தந்திருக்கிறது என்பதை அரசியல்வாதிகள் உணர்ந்துள்ளனர். நோயைத் தடுப்பது குறித்த தேர்வுகள் மீதான அறிவார்ந்த மதிப்பீடுகள், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேர்வுகளை நியாயப்படுத்துதல் என்று இதுவரையிலும் எந்தவொரு பயனுள்ள ஆய்வுகளோ, விவாதங்களோ, தகவலறிந்த கலந்துரையாடல்களோ, நேர்மையான ஆலோசனைகளோ, குடிமக்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ நடக்கவில்லை. வீட்டிற்குள் மக்களை அடைத்து வைப்பது மிகவும் எளிதானது. அதன் மூலம் சுதந்திரமான பேச்சைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது மோசமான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய தேவைகள் இருக்காது. தொலைக்காட்சியில் ஆதாரமற்ற விவாதங்கள் மற்றும் காவல்துறை உதவி கொண்டு நாடு முழுவதையும் இயக்குவது மிக எளிது.
அவசரகால கொள்முதல்கள் அதிக செலவை ஏற்படுத்தும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனாலும், பணத்தைக் கொள்ளையடித்து, தேர்தல் நிதிக்காக அதனை அடுக்கி வைத்துக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பை இந்த நிலைமை அவர்களுக்கு வழங்குகிறது. போருக்கு நிகராக இந்த நிலைமையை ஒப்பிடுவது என்பது எந்தச் செலவும் இல்லாமல் ஒருமித்த கருத்தை விலைக்கு வாங்குவதற்குச் சமமாக இருக்கிறது. வாடகைக்குத் தங்கியிருப்பவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைப் பற்றி எந்தவொரு அரசியல்வாதியும் இதுவரையிலும் எதிர்த்துப் பேசவில்லை. அநேகமாக உரிமையாளர்களுக்கு எதிரான எந்தவொரு வகையிலும் பேசிவிடக் கூடாது என்ற காரணம் அதில் இருக்கலாம்.
அரசியலமைப்பு சார்ந்த பிரச்சினைகள் எழுப்பப்படாமல், அவை குறித்து தீர்ப்புகள் வழங்கப்படாமல், வீடியோ மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை மட்டும் நடத்தி வருகின்ற நீதிமன்றங்கள் ஒருவிதத்தில் கொரோனா வைரஸ் விடுமுறையில் இருக்கின்றன. உலகளாவிய தொற்றுநோய் பேரிடரினால், இடம்பெயர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குமாறு அரசாங்கத்திற்கு வழிகாட்டுதல்களை அளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும்பாலானோரால் அறிந்திருக்கப்படவில்லை.
இவ்வாறான இடப் பெயர்வு தேவையற்றது என்றும், அப்போது வெளியான ’போலி செய்திகளால்’ உருவாக்கப்பட்ட பீதி காரணமாகவே தொழிலாளர்களின் வெளியேற்றம் நிகழ்ந்தது என்றும் கூறி மத்திய அரசு சமர்ப்பித்த அறிக்கையை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டது. அரசின் தோல்விகளைக் கண்டு கொள்ளாத நீதிமன்றம், தினசரி அறிக்கையை வெளியிடுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தியதோடு, அரசின் அந்த அறிக்கையைக் குறிப்பிட்டு அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே ஊடகங்கள் வெளியிட வேண்டுமென்று அந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியது. அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது, அரசுகளின் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்துவது என்று செயல்பட வேண்டிய நீதிமன்றங்கள், அதற்கு மாறாக அரசுகளிடம் இருக்கின்ற அதிகாரத்தை அதிகரித்துக் கொடுக்கின்றன.
அரசியலமைப்புச் சட்டத்தின் 352ஆவது பிரிவில் மேற்கொள்ளப்பட்ட 44ஆவது திருத்தத்தின் மூலமாக, உள்நாட்டு குழப்பத்தைப் பயன்படுத்தி நெருக்கடி நிலையை அறிவிக்கின்ற அதிகாரத்தை ஜனதா அரசாங்கம் நீக்கி விட்டது. எனவே தொற்றுநோயைக் காரணம் காட்டி நெருக்கடி நிலையை அறிவிக்க இப்போது நமது அரசியலமைப்பில் இடம் இருக்கவில்லை. தொற்றுநோயைக் காரணம் காட்டி நெருக்கடி நிலையை அறிவிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லாததாலேயே, 2005ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் விரிவான விளக்கத்தை அளித்து ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அவசியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ஒருவேளை இது மன்னிக்கப்படலாம். தொடர்புடைய கட்சிகள் எதுவும் இதை எதிர்க்கவுமில்லை.
நெருக்கடிநிலை காலத்தில் வாழ்வதற்கான உரிமையை இடைநிறுத்த முடியாது என்றாலும், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் ஏழைகளுக்கு வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாக இருக்கிற வாழ்வாதாரத்திற்கான உரிமை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பேரழிவு மேலாண்மைச் சட்டத்தின் (டி.எம்.ஏ) அடிப்படையில், இத்தகைய அரசியலமைப்பு நுணுக்கங்கள் அனைத்தும் அர்த்தமற்றவையாக ஆக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது கேள்விக்குரியது என்றிருக்கின்ற நிலையில், ஊரடங்கைத் தொடர்வது என்பது அரசின் அதிகாரத்தை காலவரையின்றி நீட்டிக்கின்ற முயற்சியே ஆகும்.
பெரும்பான்மை ஆதரவைக் கொண்டு எளிதில் மீறக்கூடிய ’காகிதத்தில் உள்ள தடைகள்’ என்று அரசியலமைப்பு உரிமைகளை ஜேம்ஸ் மேடிசன் வர்ணித்திருக்கிறார். கோவிட்-19 என்ற பெயரில், உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆதரவு இருப்பதை இப்போது நாம் காண்கிறோம். பொதுவாக அரசியல் என்பது ஆளப்படுகின்ற மக்களுக்கு ஆதரவளிப்பதாக இருக்க வேண்டும். ஆனால் அது இப்போது ஆட்சி செய்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான ஏற்பாடாக மாறி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தணிந்த பிறகு, இந்த நிலைமை இயல்பானதாக மாறுகின்ற ஆபத்து இருக்கின்றது.
அரசியலமைப்பு தருகின்ற பாதுகாப்பின் சீரழிவிற்கு நாம் தயாராகி விட்டோமா? மக்களுடன் இணக்கமாக இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதை விட, காவல்துறை மூலம் மக்களை ஆள்வது அரசியல்வாதிகளுக்கு மிகவும் எளிதாக இருக்கிறது என்பதால், காவல்துறையால் ஆளப்படுகின்ற அரசுகள் இப்போது செழித்து வளர்கின்றன.
https://thewire.in/politics/coronavirus-pandemic-lockdown-rights-disaster-management
தமிழில்
முனைவர் தா.சந்திரகுரு