எவிடென்ஸ் கதிர் எழுதிய "கறுப்பு ரட்சகன்" புத்தகம் | Evidence Kathir's Karuppu Ratchagan (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

எவிடென்ஸ் கதிர் எழுதிய “கறுப்பு ரட்சகன்” – நூல் அறிமுகம்

மனிதநேயமே மானுடத்தை ரட்சிக்கும் என்ற உறுதியுடன் பயணிக்கும் ஓர் இளைஞனின் வாழ்வைச் சித்தரிக்கும் எவிடென்ஸ் கதிரின் நாவல் ‘கறுப்பு ரட்சகன்’

–பெ.விஜயகுமார். 

நாவல் இலக்கியம் நவீன உலகின் காவியம் எனக் கருதப்படுகிறது. ஆம்; ‘கறுப்பு ரட்சகன்’ ஒரு நவீன காவியமே. இக்காவியத்தின் நாயகன் மரியா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் மரியநாதன். ஒரு காவிய நாயகனுக்குரிய பண்புகளான அன்பு, அறம், அறிவு, வீரம், திறமை என அனைத்தும் கொண்டவன். மரியாவின் பிறப்பில் தொடங்கும் நாவல் அவன் மனிதநேயமிக்க மருத்துவனாக, மனித உரிமைப் போராளியாக, தான் வாழும் சமூகத்தை நடத்திச் செல்லும் தலைவனாகக் கம்பீரமாக வலம்வரும்வரை விரிந்து செல்கிறது.

எவிடென்ஸ் கதிர் என்கிற வின்செண்ட்ராஜ் தமிழ்நாட்டின் நேர்மையான மனித உரிமைப் போராளி என்பதை அறிவோம். அநீதிக்கு எதிராக முழங்கும் நீதியின் குரல் என்பதறிவோம். சாதிவெறி தலைவிரித்தாடும் தமிழ்நாட்டில் சாதி ஆதிக்கத்தைத் தட்டிக் கேட்கும் சமூகச்செயற்பாட்டாளர் என்றறிவோம். ’கறுப்பு ரட்சகன்’ எனும் இந்நாவல் மூலம் தன்னை ஒரு சிறந்த எழுத்தாளராக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். உலகின் ஐந்து சிறந்த சமூக ஆர்வலர்களைச் சித்தரிக்கும் ‘Faces of Change’ என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள பெருமைக்குரியவர். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் மக்களை மீட்டெடுத்ததற்காக ஐரோப்பிய கவுன்சில் இவருக்கு ‘Raoul Wallenberg’ விருதினை வழங்கியுள்ளது. ‘’சாதி தேசத்தின் சாம்பல் பறவை’’ என்ற இவரின் நூல் 2016இல் வெளிவந்தது.

டால்ஸ்டாய் எழுதிய ’போரும் அமைதியும்’ நாவலில் ஐநூறுக்கும் அதிகமாக கதைமாந்தர்கள் உண்டு.  அதேபோல் எவிடென்ஸ் கதிரின் ’கறுப்பு ரட்சகன்’ நாவலிலும் ஏராளமான கதைமாந்தர்கள் நடமாடுகின்றனர். 1932இல் பிறக்கும் நாவலின் நாயகன் மரியாவின் கிட்டதட்ட ஐம்பதாண்டு கால வாழ்வைச் சித்தரிக்கிறது. செவ்வியல் படைப்புக்கு உரிய இலக்கணமான தொடக்கம், மையம், முடிவு என்ற ஓர்மையுடன் நாவல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பின்னோக்கிப் பார்த்து இருபதாம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகளைக் காட்சிப்படுத்தும் இந்நாவல் ‘Period Novel’ என்ற இலக்கிய வகைமைக்குள் அடங்கும்.

இத்தகு நாவல் எழுதுவது மிகவும் சிரமமானதாகும். குறிப்பிட்ட காலத்துக்குரிய இடம், பொருள், ஏவல் மட்டுமே இருந்திட வேண்டும். வரலாற்றுப் பிழை ஏதுமிருக்கக் கூடாது. நாவலாசிரியர் இதில் முழு வெற்றி பெற்றுள்ளார். நாவலில் இருபதாம் நூற்றாண்டு நிகழ்வுகளான காலனிய ஆட்சி, இந்திய விடுதலைப் போராட்டம், இரண்டாம் உலகப் போர் ஆகியன இடம் பெறுகின்றன. ஆந்த்ரே போன்ற ஐரோப்பிய நாட்டு கிறித்துவ பாதிரியார்களைச் சந்திக்கிறோம். வேலூர் நகரில் கிறித்துவ மிஷன் மருத்துவக் கல்லூரியை நிறுவிய இடா சோபியா ஸ்கடர் நாவலில் தோன்றுகிறார். புதுச்சேரி ‘பாண்டிச்சேரி’ என்றழைக்கப்படுகிறது. பாதர் ஆந்த்ரே பெங்களூர் நகரில் அலிசன் என்ற குதிரையில் பயணிக்கிறார். நாவலின் நாயகன் மரியா ஃபியட் காரில் பயணிக்கிறான். மாணவர்கள் கல்லூரிகளில் ’பியூசி’ வகுப்புகளில் படிக்கிறார்கள். கதையின் நாயகன் பிறந்த பகுதி ஆற்காடு என்றழைக்கப்படுகிறது. இவ்வாறு வரலாற்றுப் பிழைகளின்றி கவனத்துடன் எழுதிச் செல்கிறார் நாவலாசிரியர் கதிர்.

சென்ற நூற்றாண்டில் பிள்ளைப்பேறின்போது பெண்கள் உயிரிழப்பது மிகச் சாதாரணமானதாகும். மரியாவின் தாய் சாராள் அவனை ஈன்றெடுத்ததும் மரிக்கிறார். அவன் தந்தை கைக்குழந்தையுடன் செய்வதறியாது தவிக்கிறார். அவருடன் பிறந்தவர்கள், சாராளுடன் பிறந்தவர்கள் என்று நிறைய சொந்தங்கள் இருக்கிறார்கள். இருந்தும் தாய்க்கு ஈடாகுமா. ஆற்காடில் இருக்கும் உடையாள்புரம் கிராமத்துச் சர்ச்சின் பாதிரியார் சவரிநாதன் ஒரு நல்ல மேய்ப்பர். மனைவியை இழந்த பெரிய நாயகத்துக்கு ஆறுதலாக இருக்கிறார்.

அவர் கொடுக்கும் சிபாரிசுக் கடிதத்ததுடன் குழந்தை மரியாவைத் தூக்கிக் கொண்டு பெரியநாயகம் பெங்களூரில் இருக்கும் செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியர் கத்தீடரல் சர்ச் பாதர் ஆந்த்ரேவுக்கு சமையர்காரராகப் பணியாற்றிட 1932 டிசம்பர் ஒன்றாம் நாள் செல்கிறார். பெரியநாயகத்தின் சமையல் ஆந்த்ரேவுக்கு பிடிக்கிறது. பெரியநாயகத்தின் தம்பி பவுல்நாதன் இறந்ததும் அவரின் மனைவி பாத்திமாமேரி தன் குழந்தைகள் ஜெயப்பிரகாஷ், ஜூலி இருவருடன் பெங்களூர் வருகிறார். பாத்திமா சமையல் வேலையில் பெரியநாயகத்துக்கு உதவி செய்கிறார். எல்லோருக்கும் ஆந்த்ரே அடைக்கலம் கொடுக்கிறார். குழந்தை மரியா அந்த்ரேவின் செல்லப் பிள்ளையாகிறான்.

பெங்களூரில் நிறைய சோதனைகளை பாதர் ஆந்த்ரே சந்திக்கிறார். ஒரு பாலியல் தொழிலாளி இறந்தபோது அவளை சர்ச்சுக்குள் புதைக்கக் கூடாது என்கின்றனர் உள்ளூர் ஆதிக்க சாதியினர். ஆந்த்ரே அவர்களின் எதிர்ப்பை மீறி அவளின் உடலை சர்ச்சில் அடக்கம் செய்கிறார்.

அன்று இந்தியாவில் வாழ்ந்த சில ஐரோப்பிய அதிகாரிகளும், பாதிரியார்களும் ஆந்த்ரேவைப் போலவே அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தனர். எலிசா என்ற அருட்சகோதரி ஐந்து குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தார். அதில் இருவர் மருத்துவராகிறார்கள். இருவர் சொந்தத் தொழில் செய்கிறார்கள், ஒருவர் அரசு அதிகாரி ஆகிறார். அனைவரும் தங்கள் பெயருடன் எலிசா பெயரைச் சேர்த்துக் கொள்கின்றனர். பெரும்பான்மை ஆங்கில அதிகாரிகள் ஆதிக்க வெறியுடன் கொடூரமாக இருந்தனர் என்பது வரலாற்று உண்மை. ஆனால் அவர்களில் சிலர் அன்பும், அறமும் நிறைந்தவர்களாக இருந்து பாசத்தைப் பொழிந்தவர்களும் உண்டு. ஆந்த்ரே இத்தகு அன்பே உருவான அருட் தந்தை ஆவார்.

மரியா அந்த சர்ச் வளாகத்தில் அனைவரின் அன்பையும் பெற்று நல்லதொரு பிள்ளையாக வளர்ந்தான். ஆந்த்ரேவும் அவனும் நண்பர்கள் போல் பழகினர். மரியா அவரை ஆந்த்ரே என்றே அழைத்தான். பெரியநாயகமும், பாத்திமா குடும்பமும் வாழ்வதற்கு தனியிடம் இருந்தது. ஆனால் மரியா மட்டும் ஆந்த்ரேவுடனேயே தங்கினான். மரியா சிறுவயதிலேயே ஆழ்ந்த அறிவுடனும், அன்பின் உருவமாகவும் இருந்தான். ஆந்த்ரேவும், அவனும் கால்பந்து விளையாடினார்கள். அரசியல், ஆன்மீகம், சமூகம் குறித்த உரையாடல்களில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபையில் ஆணாதிக்கமும், சாதிய உணர்வும் இருந்தது கண்டு மனம் வருந்தினார்கள்.

பெரியநாயகம் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். அவர் மனைவி சாராள் கல்லறைக்கு அருகில் அவர் உடலைப் புதைக்க நினைக்கிறான் மரியா. ஆதிக்க சாதியினர் அவர் பிணத்தை ஊருக்குள் எடுத்துச் செல்ல  மறுக்கிறார்கள். கடும் போராட்டத்துக்குப் பின்னரே அவர் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. பெரியநாயகத்தின் அடக்கத்தின்போது அவர் பையிலிருந்த பவள மாலையை எடுத்து பாத்திமாவிடம் கொடுக்கிறான் மரியா. பெரியநாயகம் தன் உடம்பில் சாராள் பெயரை பச்சை குத்திக்கொண்டிருந்ததையும் பார்க்கிறான். தன் தந்தையை அடக்கம் செய்துவிட்டு தன் சொந்தங்களிடமிருந்து விடைபெற்று பெங்களூர் திரும்புகிறான். பள்ளி இறுதி வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெறுகிறான். சென்னை, பாண்டிச்சேரி, கல்கத்தா ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் அவனுக்கு இடம் கிடைக்கிறது. ஆந்த்ரே அவனை கல்கத்தாவுக்கு அனுப்பி மருத்துவம் படிக்க வைக்கிறார்.

மருத்துவப் படிப்பு முடிந்ததும் மெட்ராசில் டாக்டர் சிவராமன் என்ற சிறந்த மருத்துவரிடம் பயிற்சி பெறுகிறான். அந்த மருத்துவமனைக்குப் பெருமை சேர்க்கிறான். பெண் டாக்டர்கள் அதிகம் இல்லாத காலமது. மரியா மிகச் சிறந்த மகப்பேறு மருத்துவராகப் பாராட்டப்படுகிறான். மெட்ராஸ் நகரின் தொழிலதிபர் நடராஜ முதலியார் மகள் சாருலதா பிரசவத்திற்காக சிவராமன் மருத்துவமனையில் சேருகிறார். சிவராமன் ஊரில் இல்லாத நேரம். சாருலதாவின் உடல்நிலை மிக மோசமாக இருந்தது. இருப்பினும் மரியா திறமையுடன் பணியாற்றி வெற்றி பெறுகிறான். மெட்ராசில் அன்று பிரபலமான மகப்பேறு மருத்துவர் சகுந்தலா மேடத்தின் பாராட்டுதலையும் பெறுகிறான். நடராஜ முதலியார் மரியாவின் திறமையைப் பாராட்டி அவனுக்கு திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டைப் பரிசாகக் கொடுக்கிறார்.

நடராஜ முதலியாரின் மகள் அசலாம்பாள் மரியாவின் அழகு, ஆற்றல் கண்டு அவன் மீது அன்பைப் பொழிகிறாள். அவள் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மாணவி. ஒரு நாள் இருவரும் நகரில் இருக்கும் அழகான, ஆடம்பரமான ஹோட்டலுக்குச் செல்கிறார்கள். மரியாவிடம் தன் காதலைச் சொல்ல வரும் அசலாம்பாள் அவன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்றதும் பின்வாங்குகிறாள். மரியா சிறிதும் சலனமடையவில்லை. சாதியத்தின் முன் காதல் தோற்றுப் போகும் என்பதை அறிந்தவன். அசலாம்பாவின் செயலைச் சிறிதும் கவலையின்றி கடந்து போகிறான் மரியா.

மரியா அன்றிருந்த மருத்துவ இதழ்களில் தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவந்தான். அதில் வெளிவந்தக் கட்டுரையின் மேன்மையைப் பாராட்ட மெட்ராஸ் நகரின் பிரபல ஆங்கிலேய மருத்துவர் வில்லியம்ஸ் வருகிறார். டாக்டர் சிவராமன் முன் மரியாவை வானளாவப் புகழ்கிறார். மரியாவின் புகழ் நிழலில் தான் நிற்பதாக சிவராமன் சஞ்சலப்படுகிறார்.

ஒரு முறை ஓர் எழைப் பெண் விபத்தில் அடிபட்ட தன் கணவனைக் காப்பாற்றச் சொல்லி கதறி அழுது சிவராமன் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனை நிர்வாகி அப்பெண்ணைப் பணம் கட்டச் சொல்லி வற்புறுத்தினார். நோயாளியின் நிலைமை மோசமாகி வருவதைப் பார்த்த மரியா தன் கையிலிருந்த பணத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்துக் கட்டச் சொன்னான். அறுவைச் சிகிச்சை உடனே தொடங்கி அவர் உயிர் காப்பாற்றப்பட்டது. டாக்டர் சிவராமனுக்கு இச்செய்தி கிடைத்ததும் அவர் அசூயை அடைந்தார்.  மரியாவின் புகழ் வளர்ந்து வருவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இனியும் சிவராமன் மருத்துவமனையில் தொடர முடியாது என்பதனால் மரியா பாண்டிச்சேரியில் மருத்துவமனை கட்டுவது என்று முடிவெடுக்கிறான்.

ஆந்த்ரேயின் உதவியுடன் பாண்டிச்சேரியில் ‘சாராள்-பெரியநாயகம்’ மருத்துவமனை உருவாகிறது. சிவராமன் மருத்துவமனையில்  பணியாற்றிய வின்சியும், மோகனரங்கனும் அவனுடன் வருகிறார்கள். மருத்துவமனை திறப்புவிழாவிற்கு தன் சொந்தங்களை எல்லாம் அழைத்துச் சிறப்பாகக் கொண்டாடுகிறான் மரியாவின் தம்பி ஜெயப்பிரகாஷ் பீஃப் விற்பனைத் தொழிலை முன்ஷி என்பவரிடம் பழகுகிறான். அவர் உதவியுடன் சொந்தமாகவும் தொழில் செய்ய நினைக்கிறான். மரியா அவனுக்குத் தேவைப்படும் நிதியுதவியை அளிக்கிறான்.

தங்கை ஜூலி படிப்பில் கெட்டிக்காரி. பொருளாதாரம் அவளுக்குப் பிடித்த படிப்பு. அதில் நிறைய ஆய்வுகள் மேற்கொண்டு அத்துறையின் சிறந்த வல்லுனர் எனப் பெயரெடுக்கிறாள். அவள் மத்திய அரசின் நிதிக் குழுவில் அதிகாரியாகச் சேருகிறாள். மரியாவின் தாக்கம் வின்சியிடமும், மோகனரங்கத்திடனும் அதிகம் இருந்தது. அவனைப்போல் சிறந்த மருத்துவனாகவும், சமூகச் சேவகனாகவும் வளர்ந்திட விரும்பினர். மரியாவை அவர்கள்தான் முதன் முதலில் ரட்சகன் என்று பட்டம் சூட்டினர். ஆம்; அவன் ஒரு கறுப்பு ரட்சகன். ரட்சகன் என்றால் மீட்பவர் எனறு அர்த்தம். மரியா மக்களை வறுமையிலிருந்து, நோயிலிருந்து, அறியாமையிலிருந்து மீட்பவன் எனவே அவனுக்கு இப்பட்டம் மிகப் பொருத்தமானது என்று நம்பினர்.

கறுப்பு ரட்சகன் / Karuppu Ratchagan
எவிடென்ஸ் கதிர் எழுதிய “கறுப்பு ரட்சகன்” புத்தகம் | Evidence Kathir’s Karuppu Ratchagan (In Tamil) Book Review | www.bookday.in

அன்று திருவனந்தபுரத்தில் ஆபிரகாம் என்ற பிரபல மருத்துவர் இருந்தார். வயநாட்டில் தொற்றுநோய் பாதிப்பில் மக்கள் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டனர். நிலைமையைச் சமாளிக்க பெரிய மருத்துவர் குழு தேவைப்பட்டது. டாக்டர் மரியாவின் சேவையைப் பற்றிக் கேள்விப்பட்ட டாக்டர் ஆபிரகாம் அவனை கேரளாவுக்கு மருத்துவ முகாமில் பணியாற்ற அழைக்கிறார். தன்னுடைய மருத்துவர்கள் குழாமுடன் மரியா வயநாடு செல்கிறான். நிலைமை படு மோசமாக இருக்கிறது. உயிரைப் பணயம் வைத்து உழைக்கிறான். நோயாளிகளிடம் அவன் காட்டும் பரிவு, மற்றவர்களுக்குப் பாடமாக இருந்தது. தன் நிலையிலிருந்து மருத்துவம் பார்க்காமல் பாதிக்கப்பட்டோரின் மனநிலையிலிருந்து மருத்துவம் பார்ப்பது மரியாவின் தனிச் சிறப்பு.

முகாமில் ஏஞ்சலின் என்ற மருத்துவரைச் சந்திக்கிறான். மரியாவின் அர்ப்பணிப்பை உற்று நோக்கி கவனிக்கும் ஏஞ்சலின் வியப்பின் விளிம்புக்கே செல்கிறாள். முகாமில் நிகழும் பிரச்சனைகளை எல்லாம் மரியா எதிர்கொள்ளும் விதம் அவளைப் பிரமிக்கச் செய்கிறது. முகாமில் இருக்கும் நோயாளிகள் நிதானம் இழக்கிறார்கள். இதனால் மருத்துவர்களைக் கோபத்தில் திட்டுகிறார்கள். முகாமில் இருக்கும் மருத்துவர்கள் ‘’இனி எங்களால் இங்கிருக்க முடியாது’’ என்று சொல்கிறார்கள். ‘’இது போன்ற நேரங்களில் மக்கள் கோபப்படுவது இயல்பு. நாமதான் அவங்கள புரியவைக்கணும். தயவுசெய்து வேலையைப் பாருங்கள்,’’ என்று மரியா அவர்களைக் கெஞ்சிக் கேட்கிறான். அவன் வார்த்தைக்கு அவர்கள் மதிப்பளிக்கிறார்கள்.

ஒரு எட்டு வயது சிறுவன் நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடுகிறான். அவனை பெரிய மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். அதற்குமுன் அவனின் காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டும். அன்றிரவு முழுவதும் மரியா கண்விழி மூடாது சிகிச்சை அளிக்கிறான். காலையில் அந்தச் சிறுவன் கண்விழித்துப் பார்த்ததும் நிம்மதி அடைகிறான். மரியா கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. ’’நீ எப்பவும் என் கூடவே இரும்மா’’ என்று தனக்குள் கூறிக்கொண்டு தன் அன்னை சாராளை நினைக்கிறான்.

அவன் களைத்துப்போய் அங்கிருந்த ஓடையில் முகத்தைக் கழுவி ஓய்வெடுக்கிறான். இக்காட்சியைக் கண்ட மருத்துவர் ஏஞ்சலின் அவன் அருகில் வந்து வாஞ்சையுடன் தொட்டு அமர்கிறார். ‘’உங்களைப்போல அர்ப்பணிப்புள்ள மருத்துவரை நான் பார்த்ததில்லை. ஓவ்வொருத்தோரட வலியையும் தன் வலியா பாக்கறது மட்டுமல்லாம, அதை அறிவியல் பூர்வமா நீங்க அணுகுகிறவிதம் என்னை வியக்கவைக்கிறது’’ என்று சொல்லி அவனை வியந்து போற்றுகிறாள். ‘’உங்க கண்ணீர் ரொம்ப அழகா இருந்தது. நான் சொல்வது உண்மை. மற்றவங்களுக்காக வர்ற கண்ணீர்தான் சேவையின் வலுவான அடையாளம்’’ என்று அவள் சொன்னதும் தன் கண்ணீரைத் துடைக்கத் தொடங்கினான் மரியா. ‘’பரவாயில்லை, உங்க கண்ணீர் அப்படியே இருக்கட்டும். இந்தக் கண்ணீர் மிகுந்த டாக்டர் மரியாவின் நினைவு எனக்கு எப்போதும் இருக்கும்’’, என்றாள்.

மரியா ஒரு மாதம் அந்த முகாமில் சேவை செய்தபோது ஏஞ்சலின் குடும்பத்தினர் அனைவரின் அன்புக்கும் பாத்திரமாகிவிட்டான். ஏஞ்சலின் தந்தை மாத்யூ, தாய் நான்சி, அண்ணன் ஜார்ஜ், தங்கை சிஜி எல்லோரும் அவனிடம் அன்பு பாராட்டினார்கள். மன நிறைவான முகாம் முடிந்து மரியா வீடு திரும்பினான். அவன் நெஞ்சம் முழுவதிலும் ஏஞ்சலின் நிறைந்திருந்தாள்.

ஆற்காடு பகுதி முழுவதும் ‘கிராமிய மருத்துவ சங்கம்’ அமைத்து மரியா மருத்துவத் தொண்டு செய்தான். அவனுடன் வின்சி, மோகனரங்கன், செல்வநாயகி என்ற அரசு மருத்துவர் எனப் பலரும் இணைந்தனர். ஆற்காடு முழுவதும் சாதிவெறி தலைவிரித்தாடியது. இந்தியாவில் எந்த பகுதியில் சாதிவெறி இல்லாதிருக்கிறது? சேத்தியாதோப்பில் மருத்துவ உதவி செய்யப்போன டாக்டர் செல்வநாயகியை சாதிவெறியர்கள் தாக்கினர். ’’என்னை எல்லோரும் பறச்சியாதான் பாக்குறாங்க’’ என்று கண்ணீர் மல்கக் கூறினார். அப்பகுதி முழுவதும் ‘உழைக்கும் மக்கள் சங்கம்’ என்ற பெயரில் ஒரு சாதிச் சங்கம் வலுவாக இருந்தது. சாதிச் சங்கத்துக்கு இப்படியொரு பெயரைவைத்துக் கொண்டு தலித் மக்களை அடக்கி ஒடுக்கி அராஜகம் செய்தனர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நாகப்பன் என்ற பெரியவர் அங்கு  ’குடியுரிமை இயக்கம்’ என்ற ஒன்றைக் கட்டியிருந்தார். அவர் மகள் செம்மலர் தன் தந்தையுடன் சேர்ந்து களப்பணி ஆற்றினார். செம்மலர் சிறந்த வழக்கறிஞர். மரியா இவர்களுடன் சேர்ந்து சமூகப் பணியில் ஈடுபட்டான். மருத்துவப் பணியும், சமூகப் பணியும் இணைந்து சென்றன.

மரியா-ஏஞ்சலின் திருமணம் இனிதே முடிந்தது. ஏஞ்சலின் அவன் வாழ்க்கையில் முழுவதும் துணை நின்றாள். ‘’இந்த சமூகம் பாகுபாட்டோடுதான் இருக்கு மரியா; அதை மாத்த கடுமையாகப் போராடணும். அம்பேத்கர் மாதிரிப் போராடணும். நமக்கு ஆதங்கமும். உணர்ச்சியும் தேவைதான். ஆனா அதெல்லாம் நடவடிக்கைகளா மாறினாதான் ஓரளவு மாற்றம் நடக்கும்’’என்றாள் ஏஞ்சலின்.

மரியா-ஏஞ்சலின் இணையர்கள் தங்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளுடன் தத்தெடுத்த ஆலிசாவையும் கண்ணும் கருத்துமாக வளர்த்தனர். மரியா ஏசுவின் நீதியால் நிறைந்திருந்தான். சாதி என்ற அநீதி வேர்விட்டுக் கடுமையாகப் பரவியிருக்கிறது. அந்த நச்சு வேர்களை வெட்டி எறிந்து சாம்பலாக்க வேண்டும். தீண்டப்படாத மக்கள் பிறப்பே இழிவு நிலை கொண்டது என்ற கட்டுக்கதைகளை உருவாக்கி அதை நிஜம் என்று நம்புகிற கூட்டத்தை என்னென்பது? அந்த மக்களை மற்றவர்களைத் தொட்டால் தீட்டு என்றும், அந்த மக்கள் மற்றவர்களைத் தொட்டால் பாவம் என்றும் சொல்வது மோசடியின் உச்சம். அதாவது தீட்டுக்குப் பரிகாரம் உண்டு. பாவத்துக்குப் பரிகாரம் இல்லை. மரியா ஏசுவையும், அம்பேத்கரையும், நாகப்பனையும் ஒரே நிலையில் வைத்துப் போற்றினான்.

ஒரு நாள் ஆந்த்ரே இறந்த செய்தி கேட்டு பெங்களூர் விரைகிறான் மரியா. ஆந்த்ரேயரின் இறப்பு திருப்பலி நடந்தது. ஆயரும், இரண்டு பாதிரியார்களும், மரியாவும் இறுதியாக அவர் நினைவைப் போற்றி உரையாற்றினார்கள். புதைக்கப்படுவதற்குமுன் ஆந்த்ரேயின் நெற்றியில் மரியா முத்தமிட்டான். சவப்பெட்டியை ஜெயப்பிரகாஷ் அதிக விலையில் செய்திருந்தான். ஆந்த்ரே எளிமையானவர். அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், ‘’எதற்கு இப்படித் தேவையில்லாமல் செலவு செய்கிறீர்கள்’’ என்று கேட்டிருப்பார். இது ஆடம்பரம் அல்ல. ஆந்த்ரேவுக்காக ஜெயப்பிரகாஷ் செய்யும் காணிக்கை. கறுப்பு ரட்சகனை விட்டுவிட்டு வெள்ளைக் குதிரையில் விண்ணுலகம் சென்ற ஆந்த்ரேவின் நினைவில் மரியா மூழ்கியிருந்தான். இனி இந்த ஆலயத்துக்கும் தனக்குமான உறவு ஆந்த்ரேவின் கல்லறை மட்டுமே என்று நினைத்து உருகினான்.

நாகப்பனின் குடியுரிமை இயக்கப் போராளிகளுக்கும், கோவிந்தனின் சாதிவெறி அமைப்புக்கும் பகைமை முற்றியது. நாகப்பனுக்கும் அவர் மகள் செம்மலருக்கும் பக்கபலமாக இருக்கும் மரியாவைப் பழிதீர்க்க வேண்டும் என்று கோவிந்தன் திட்டமிட்டான். ஒரு நாள் மரியா வீட்டுக்கு வந்த நாகப்பனின் கார் ரிப்பேர் ஆனதால் நாகப்பன் மரியாவின் காரில் வீடு திரும்பினார். காரை நாகப்பனின் டிரைவர் கொளஞ்சிநாதன் ஓட்டினான். மரியாவைக் கொல்வதற்காக கோவிந்தன் அனுப்பிய கொலைகாரர்கள் மரியாவின் கார் மீது லாரிகளை மோதவிட்டனர். சம்பவ இடத்திலேயே நாகப்பனும், டிரைவர் கொளஞ்சிநாதனும் இறந்தனர்.

நாகப்பனின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். செம்மலர் ஒலிபெருக்கி முன் நின்றாள். ‘’தோழர்களே! நான் இப்போது பேசும் மனநிலையில் இல்லை. இனி நம்முடைய இயக்கத்தை வழிநடத்த வேண்டிய அண்ணன் மரியா இரங்கலுரை ஆற்றுவார்’’ என்றார். மரியா நீண்டதொரு உரையாற்றினான். மக்கள் அமைதியுடன் அவன் உரையைக் கேட்டனர்.

‘’நம்முடைய கோபம் தனி மனிதர்கள் மீதல்ல. இந்த சாதிய, ஆணாதிக்க, மதவாத கட்டமைப்புகள்தான் நம் எதிரிகள். எனவே இவற்றுக்கு எதிராகவே நம்முடைய போராட்டங்கள் இருக்க வேண்டும். நாம் பெரும் லட்சியத்துக்குச் சொந்தக்காரர்கள். நாகப்பன் எப்போதும் இதைத்தான் வலியுறுத்தி வந்தார். மற்ற சமூகத்தினரிடமும் மாற்றம் வரவேண்டும். சாதியக் கட்டமைப்பை நாம் மட்டும் தனியாக எதிர்த்து வெல்ல முடியாது. அனைவரும் இணைந்துதான் சாதியை வெல்ல வேண்டும்.

நாகப்பனுக்கு ஈடாக இந்த இயக்கத்தை வளர்த்து எடுத்தவர் நம்முடைய செம்மலர். அறிவும், ஆற்றலும் கொண்டவர். நிதானமும் பக்குவமும் கொண்டவர். செம்மலரைப் போன்ற துணிச்சலானப் பெண்ணைப் பார்ப்பது அரிது. செம்மலரிடமிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன். ஆகவே இனிமேல் செம்மலர் நம் இயக்கத்தை தலைமை ஏற்று நடத்திச் செல்வார். நாம் எல்லோரும் அவருக்கு உறுதுணையாக இருப்போம்’’ என்று மரியா உரையை முடித்ததுடன், ’செம்மலர் வாழ்க!’ என்று அறைகூவல் விட்டதும் கூட்டத்தினர் அனைவரும் ’செம்மலர் வாழ்க’! என்று முழக்கமிட்டனர்.

இரங்கல் கூட்டத்தின் முடிவில் பெரிய ஆச்சரியம் நடக்கிறது. கோவிந்தனின் மகள் பொன்னி அங்குவந்து அவர்களுடன் இணைகிறாள். ‘’உங்ககிட்ட மன்னிப்புக் கேட்கத்தான் வந்தேன். ஆனால் மரியாவின் உரையைக் கேட்டதும் நானும் உங்கள் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற முடிவெடுத்துவிட்டேன்’’ என்றாள். அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்துதான் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்ற நாகப்பன் மற்றும் மரியாவின் கனவு நனவாகும் நம்பிக்கை ஒளியின் கீற்று தென்பட்டது என்று நாவல் முடிவடைகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு மனு(அ)தர்மத்தின் அடிப்படையில் ஆட்சியை நடத்திட நினைக்கும் பாஜகவின் வலதுசாரி அரசியல் கோலோச்சும் இச்சூழலில் இந்நாவல் வெளிவந்துள்ளது பொருத்தமானதே. இந்தியாவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நீடித்துவரும் சாதியத்தை ஒழிக்க கறுப்பு, சிகப்பு, நீலம் மூன்றும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை நாவல் உணர்த்துகிறது.

                                 ————————————–

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: கறுப்பு ரட்சகன்
ஆசிரியர்: எவிடென்ஸ் கதிர்
வெளியீடு:
கிழக்குப் பதிப்பகம், சென்னை -14
விலை: ₹.600
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 பெ.விஜயகுமார், மதுரை -18

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *