மூளையின் பரிணாமம்
அறிவியலாற்றுப்படை பாகம் 5
முனைவர் என்.மாதவன்
பூ பூ என்ற சிறுவன் மிகவும் குறும்புக்காரன். அவனும் அவனது தந்தை ஹோடி என்பவரும் குடிசை ஒன்றில் வசித்துவருகின்றனர். அந்த சிறுவன் ஒரு குறும்புக்காரன். அவ்வப்போது குடிசைகளை எரித்துவிடுவான். ஒருமுறை இவனது குறும்பால் அவர்களது குடிசை ஒன்று எரிந்துவிடுகிறது. வெளியே சென்றிருக்கும் தந்தை வந்தால் என்ன சொல்வது என்று கையைப் பிசைந்துகொண்டே குடிசையினுள் செல்கிறான். அப்போது அந்த குடிசையிலிருந்த ஒன்பது பன்றிக்குட்டிகளில் ஒன்றின் காலானது அவனுக்கு தட்டுப்படுகிறது. வாசம் வெகுவாக வீசுகிறது. ஆவலோடுஅந்த காலைத் தொட அது சுடுகிறது. சுட்டவேகத்தில் அதனைத் தணிக்க விரலை வாயில் வைக்கிறான். அது படுசுவையாக இருக்கிறது. மேலும் மேலும் சுவைக்கிறான்.
இதனிடையே வீட்டை அடையும் அவனது தந்தை இவனை கண்டபடி ஏசுகிறார். அடிக்க வருகிறார். என்னை அடிப்பது இருக்கட்டும். இதனைச் சுவைத்துப்பாருங்கள் என்கிறான். அவரும் சுவைத்துப் பார்க்கிறார். ஆஹா இது என்ன இவ்வளவு அருமையாக இருக்கிறது. இருவரும் ராசியாகிறார்கள். பின்னர் அடிக்கடி இவ்வாறு குடிசையை எரித்து பன்றிக்கறியினை சுவைக்கின்றனர். ஊரில் சந்தேகம் வலுக்க நீதிமன்றத்துக்கு வழக்கு செல்கிறது. நீதிபதிக்கும் வேகவைக்கப்பட்ட பன்றிக்கறி கொடுக்கப்படுகிறது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. பின்னர் ஊர்மக்கள் அனைவருமே இப்படி குடிசையைக் கொளுத்தத் துவங்கி பின்னர் அடுப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 40,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு இது கதை நடந்ததாம். இந்த தகவலை சீனாவில் நடைபெற்ற ஒன்றாக கன்பூசியஸ் அவரது எழுத்துக்களில் காணப்படுகிறதாம். புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் லேம்ப் என்பவர் இந்த தகவலை தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
கதை நீண்டுவிட்டது. அறிவியலுக்கு வருவோம். உடல் வளர்ச்சிக்கு புரதம், மாவுச்சத்து, உயிர்ச்சத்துக்கள் போன்றவைகள் தேவை என்பதை அறிவியல் என்றோ நிருபித்துவிட்டது. இன்றைக்கு இருக்கும் சிறுவர்கள் கூட இன்னும் உள்ளீடாகச் சென்று டோபமைன், செரடேனின், இன்சுலின் என பலவற்றைப் பகிர்கின்றனர். சிறார்கள் அபரிமிதமான வளர்ச்சியைப் பார்த்து பெற்றோர்களுக்கு அடிக்கடி அட்ரீனல் சுரப்பிதான் அடிக்கடி சுரக்கிறது. எது எப்படியோ மனிதர்கள் மூளையும் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகிறது.
”மாடு இழுத்துக்கிட்டு போவுது, பாம்பு ஊறுது, இந்த பிளாடரை வேற அமுக்கி கங்கையில் தண்ணீர் வரவழைக்கணும் ஒண்டி ஆளு எவ்வளவு வேலை செய்யறது “ என்று பம்மல் கே சம்பந்தம் திரைப்படத்தில் கமலஹாசன் புலம்புவது போல நமது மூளையும் தான் செய்யும் செயல்பாடுகள் குறித்து புலம்பலாம். இதனால்தான் மனித ஆற்றலில் சுமார் 20 சதவிகிதத்தினை மூளை எடுத்துக்கொள்கிறது.
ஆனால் மனித குலவரலாற்றில் நமது மூளை படிப்படியாக பரிணாமம் அடைந்துள்ளது என்பது ஒரு சுவையான வரலாறு. நாம் ஏற்கனவே பார்த்த நமது மூதாதையர்களில் ஒவ்வொரு வகையினருக்கும் மூளை இருந்த அளவினை அறிவியலாளர்கள்/மானுடவியலாளர்கள் கணித்துள்ளனர். இன்றைக்கு இருக்கும் மூளையை அடைய பல லட்சக்கணக்கான வருடங்கள் கடந்துள்ளன. ஆனால் அதே நேரம் மூளையின் வளர்ச்சியையொட்டியே நமது மூதாதையர்களின் திறன்களும் வளர்ந்துள்ளன. கற்களைப் பயன்படுத்தி நெருப்பை உருவாக்குதல், ஆயுதங்களை செய்தல், ஆயுதங்களை பயன்படுத்துதல், சமூக வாழ்க்கைக்குத் தயாராகுதல் போன்ற பல வாழ்வியல் அம்சங்கள் அதில் படிப்படியாக பரிணமித்துள்ளன. வழக்கம் போல் தகவல்களுக்கான அட்டவணை பின்னிணைப்பில் பார்ப்போம்
இன்றைக்கு நமது மூளையின் எடை சுமார் 1500 கிராம். மரமண்டைனு நாம் திட்டும் ஆட்களுக்கும் இதுதான். இந்த மண்டையோட்டில் மூளையிருந்த இடம் தற்போதுள்ள அளவு ஒரளவுக்கு சமச்சீராக்கப்பட்ட வடிவு. நாளைக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயத்துடன் கிடைத்ததை எல்லாம் ஒரேயடியாக தின்ற மூதாதையர்களுக்கு கிடைத்த சத்துக்களால் அவர்கள் ஏகத்துக்கு வளர்ந்தார்கள். அதுபோலவே மூளையில் பெரிதாகவே இருந்தது. காலப்போக்கில் மனிதர்கள் பரிணாமம் அடைய அடைய உடல் எடையினை சமன் செய்யும் வகையில் மூளையும் தற்போதுள்ள 1500 கிராமை அடைந்துள்ளது. உயிரினங்களிலேயே உடலின் எடையை ஒப்பிடுகையில் மூளையின் எடை மனிதர்களுக்கே பெரியது. சுமார் 50ல் ஒரு பங்காக அது உள்ளதாம். அதாவது செங்கல் போன்ற செல்போனை வைத்துக்கொண்டிருந்த நாம் ஸ்லிம்மான செல்போனுக்கு மாறியுள்ளது போல மூளை பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறான பரிணாம வளர்ச்சிக்கு மனித உழைப்பின் பாத்திரம் உதவியதை மாமேதை பிரெடரிக் எங்கெல்ஸ் அற்புதமாக விளக்கியுள்ளார். அடுத்த பகுதியில் அதனை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
மனிதகுலவரலாற்றில் வாழ்க்கைக்குப் பிறகு எஞ்சியிருக்க வாய்ப்புள்ள எலும்புத்துண்டுகள்,மண்டையோடு,பற்கள் போன்றவைகள்தான் அறிவியல் பூர்வமான பார்வையைப் பெற உதவுகின்றன. பழங்களைக் கடித்த பற்களுக்கும், இறைச்சியை சுவைத்த பற்களுக்குமிடையே வித்தியாசம் இருக்கவே செய்கிறது அல்லவா. மேலும் இந்த பற்களின் அளவுக்கேற்றவாறே தாடைகளும் அமைவது இயற்கைதானே.
இந்த மூளை மற்றும் பற்கள் குறித்த பஞ்சாயத்தில் நம்ம அரிஸ்டாட்டில் அவர்களும் மாட்டிக்கொண்டு வசவு வாங்கிக்கொண்டார். அவர் மனிதர்களில் ஆண்களைவிட பெண்களுக்கு பற்கள் குறைவென்றார். அதற்கு அவர் ஒரு விளக்கத்தையும் கொடுத்தார். ஆண்கள்தான் சமூக மாற்றத்திற்காக நிறைய சிந்திக்கிறார்கள். நிறைய சிந்திக்க மூளை அதிகமாக வளரவேண்டும். மூளை அதிகமாக வளர அதிகமாக சாப்பிடவேண்டும். அதிகமாக சாப்பிட வாயால் நிறைய அரைக்கவேண்டும். அவ்வாறு நிறைய அரைப்பதற்கு நிறைய பற்கள் வேண்டும். அன்றைய சமூகம் அரிஸ்டாட்டில் மீது நிரம்ப மரியாதை வைத்திருந்தது. அவர் சொல்லிவிட்டால் அது சரியாகத்தான் இருக்கும் என பல்லாண்டுகள் அமைதிகாத்தனர். பின்னர் கலிலியோ போன்றவர்கள் வந்துதான் இதனை தவறென்று நிருபித்தனர். ஆனால் அன்றைக்கே அரிஸ்டாட்டிலின் அறிவார்ந்த மாணவர்களில் யாரேனும் அவர்களது அம்மாவின் வாயைத் திறந்து ஆராய்ந்திருந்தால் அன்றே அந்த பஞ்சாயத்து முடிந்திருக்கும்.
படை எடுப்போம்…..
வ எண் | இனவகை | மூளையின் அளவு | சிறப்புத் திறமை |
1. | ஆஸ்ட்ரோலோபிதிகஸ் அஃபேரன்சிஸ் | 400-550 மிலிலிட்டர் | மரம் ஏறுதல், தாவுதல் |
2 | ஹோமோ எபிலிஸ் | 600 மிலி லிட்டர் | கற்கருவிகள் உருவாக்கம் |
3 | ஹோமோ எரக்டஸ் | 1000 மில்லி லிட்டர் | நெருப்பின் பயனபாடு |
4 | ஹோமோ சேபியன்ஸ் | 1200 மிலி லிட்டர் | சக்காம் உள்ளிட்ட கண்டுபிடிப்புன் |
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்
முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 4: மனிதனின் கதை – முனைவர் என்.மாதவன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.