குழந்தைகளைப் பற்றி யோசிக்கும் போது எல்லாம் எடுத்து வாசிக்கும் ஒரு புத்தகம் ‘எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?’
‘குழந்தைகளை நாம் அச்சுறுத்தும் போது அவர்களது, கற்றலை குழிதோண்டிப் புதைத்து விடுகிறோம்’ என்ற கருத்தை வலியுறுத்தி, குழந்தைகளும் சின்னஞ்சிறு மனிதர்கள் என்பதை பேசும் ஒரு நூல்.
———————————————————————–
நூல் : எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்? (Evvaru Kulanthaigal Karkindranar)
ஆசிரியர் : ஜான் ஹோல்ட் (John Holt)
தமிழில் : அப்பணசாமி (Appanasamy)
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
பக்கங்கள் : 272
விலை : ₹220.00
“குழந்தைகளை நம்புங்கள் அதைவிட மேலானது எதுவுமில்லை” என்பதுதான் இந்த நூலின் அடிப்படைச் சிந்தனை. இந்த நூலை எழுதிய ஜான் ஹோல்ட் (John Holt) அமெரிக்க கல்வியாளர். சுதந்திரமான பள்ளி இயக்கத்தை நடைமுறைப்படுத்தியவர். பள்ளிகளில் இயங்கு முறைகள் கற்பித்தல் மற்றும் கற்றல் தொடர்பான இவருடைய ஆய்வுகள் மிக மிக முக்கியமானவை.
குழந்தைகள் மூன்று வயதிற்கு முன்பே கற்கத் தொடங்குகின்றன என்பதை ஏராளமான அனுபவங்கள் வழியாக, நாட்குறிப்பு போன்று இவர் இந்தப் புத்தகத்திலும், ‘இவ்வாறு குழந்தைகள் தோற்கிறார்கள்?’ என்ற புத்தகத்திலும் மிக அழகாக எழுதியுள்ளார்.
3 வயது முதல் 5 வயது வரை உள்ள, குழந்தைப் பருவத்தில்தான் சிறப்பான கற்றல் நிகழ்கிறது. வளரும் குழந்தைகளை விட இந்த இளம் குழந்தைகளால் சிறப்பாக கற்க முடியும். ஏனென்றால் அவர்கள் தமது மூளையை தனிச் சிறப்பான முறையில் பயன்படுத்துகின்றனர் என்ற ஒரு மிகப் பெரிய உண்மையை நிறைய குழந்தைகளை கூர்ந்து கவனித்து, அவர்களுடைய கற்றல் முயற்சிகள், விளையாட்டுக்கள் எல்லாவற்றையும் கவனித்து பதிவு செய்திருக்கிறார் ஜான் ஹோல்ட் (John Holt).
பொதுவாக குழந்தைகள் ஐம்புலன்கள் வாயிலாக கற்கிறார்கள்; பார்த்து கேட்டு செய்து கற்றுக் கொள்கிறார்கள்; தனக்கு தெரிந்த ஒன்றிலிருந்து மற்றொன்றை கற்றுக் கொள்கிறார்கள்; மேலும் சூழ்நிலையோடு தொடர்புபடுத்தி கற்றுக் கொள்கிறார்கள். குழுவாகவும் இணைந்து ஒரு பொருளை ஆராய்ந்து கற்றுக் கொள்கிறார்கள். இப்படித்தான் பொதுவாக குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள்.
இந்த நூலில் 1) குழந்தைகள் குறித்து கற்றல், 2) விளையாட்டுகளும் சோதனை முயற்சிகளும், 3) பேச்சு, 4) வாசித்தல், 5) விளையாட்டுகள், 6) ஓவியம் கணிதம் மற்றும் பிற, 7) அதீத புனைவுகள், 😎 மூளையும் அதன் செயல்பாடுகளும், 9) கற்றலும் அன்பும் என்று 9 தலைப்புகளில், தன் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, கண்டறிந்த தகவல்களை பதிவு செய்திருக்கிறார்.
குழந்தைகள் குறித்த பெரும்பாலான ஆய்வுகள், குழந்தைப் பருவத்தின் பிந்தைய பருவம் பற்றியே, அதாவது அவர்களுடைய பள்ளி வாழ்க்கை பற்றி மேற்கொள்ளப்படுவதால் பெரும்பகுதி புள்ளிவிவர கணக்குகள் வழியிலேயே அமைந்துள்ளது. ஜான் ஹோல்ட் (John Holt) மழலைப் பருவ வயதில் உள்ள குழந்தைகளை கவனித்து, அவர்களின் அன்றாட செயல்களை பதிவு செய்யும் முறையை கையாண்டு இருக்கிறார்.
ஒரு பிறந்த பச்சைக் குழந்தை குப்புற விழுந்து, நீந்தி, உட்காரவும் எழுந்து நிற்கவும், மேற்கொள்ளும் முயற்சிகளில் வெளிப்படும் ஆச்சரியமான மனித ஆற்றலும், அந்த குழந்தைகள் மேற்கொள்ளும் முயற்சியும் மிகமிக அற்புதமானது. எந்த ஒரு செயல் செய்தாலும், சலிக்காமல் தொடர்ந்து தொடர்ந்து முயற்சி செய்யும் குணம், இந்த வயதில் குழந்தைகளுக்கு இருக்கிறது. அப்போது அந்த செயலில் வெற்றி பெறுகிறோமோ தோல்வி பெறுகிறோமோ அந்த எண்ணமெல்லாம் குழந்தையிடம் இல்லை. திருப்பி திருப்பி செய்வதில் ஒரு ஆர்வம். ஆனால் பள்ளி என்ற ஒன்று கட்டமைப்புக்குள் செல்லும் பொழுதும், நம் சமூகமும் அந்தக் குழந்தைகளின் மேலே வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தை திணிப்பதால், அச்சுறுத்துவதால், மிக சிறப்பாக தானே கற்றுக்கொண்டு இருந்த குழந்தை மெல்ல மெல்ல தன்னுடைய கற்றல் திறனை இழந்து விடுகிறது.

இதைத்தான் ஜான் ஹோல்ட் (John Holt) குழந்தைகளை நாம் அச்சுறுத்தும் போது அவர்களது, கற்றலை குழிதோண்டிப் புதைத்து விடுகிறோம் என்பதை கற்றுக் கொள்ளுங்கள் என்பதை வலியுறுத்துகிறார்.
பொதுவாக சிறு வயது குழந்தைகளை கவனித்தீர்களானால் ஒரு விஷயம் தெளிவாகப் புலப்படும். அவர்களாக எந்த ஒரு உதவியும் கேட்காமல், நாமாக செய்வதை குழந்தைகள் விரும்புவதில்லை. தங்களுடைய சிந்தனைகள் வழியாகவும் தொடர்ந்து தொடர்ந்து செய்வதன் மூலமாகவும் அவர்கள் கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள்.
இல்லை என்றால் நாம் செய்வதை பார்த்து கற்றுக் கொள்ள விரும்புவார்கள் என்று இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.
அவர்கள் ஏதாவது ஒரு செயல் செய்யும் பொழுது வலிய சென்று உதவி உதவி செய்யட்டுமா என்று கேட்டால், வேண்டாம் … நாங்களே செய்து கொள்கிறோம் . விடுங்க என்று கோபப்படுவார்கள். உண்மையிலேயே அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் நம்மை அழைப்பார்கள். அதுவும் அவர்கள் கேட்கும் போது நாம் உதவும் வரை மட்டும்தான். முழு உதவியும் நம் ஆர்வக் கோளாறினால் செய்து கொடுத்தால், தனக்கு தானே கற்றுக் கொள்ளும் அவர்களின் ஆற்றலை விரைவிலேயே நாம் அழித்து விடுகிறோம்.
குழந்தைகள் எவ்வாறு பேசத் தொடங்குகிறார்கள்? சிறு குழந்தை உள்ள வீடுகளில் நாம் கவனித்து பார்த்திருக்கிறோம். தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் பேசுவதைக் கேட்பதில் இருந்தும் கேட்கின்ற ஒலிகளில் இருந்தும் தான் பேசுவது குறித்த சிந்தனை குழந்தைகளுக்கு எழுகிறது. ஆனால் குழந்தை தமது முதல் குரலை எழுப்பும் போது சுற்றி கேட்ட ஒலிகளை பிரதிபலிக்க விரும்புவதில்லை. தானாகவே பல்வேறு ஒலிகளை பயன்படுத்தி, நமது விருப்பம் உணர்வு எல்லாவற்றையும் சொல்ல முயற்சிக்கிறது. தனது சொந்தக் குரலில் இருந்து வெளிவரும் ஒலிகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், தமது பேச்சை மற்றவர்கள் பேச்சுக்கு நெருக்கமாக கொண்டு வருவதன் மூலம், எல்லாவற்றிற்கும் மேலாக சரியாக செய்வது தான் நோக்கம் என்றாலும் அதனை முன்னிட்டு, தவறாகவும் செய்து பார்க்கும் சோதனை முயற்சிகள் மூலம், குழந்தைகள் பேசத் தொடங்குகிறார்கள் என்பதை பல்வேறு அனுபவங்கள் வாயிலாக குறிப்பிடுகிறார்.
விஷயங்களை ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்ப்பது அர்த்தப்படுத்திக் கொள்வது, தனது சொந்த தவறுகளை இனம் கண்டு திருத்திக் கொள்வது, ஆகியவற்றில் தனது தனித் தன்மையை ஒரு குழந்தை எந்த அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகிறதோ, அக்குழந்தை அந்த அளவுக்கு தமது மூளையை பயன்படுத்துவது மூலமே சிறப்பான விளைவுகளை உருவாக்க முடிகிறது.
“குழந்தைகளுக்கு நகர்வுகள் இருக்க வேண்டும். இவ்வாறு தம்மை மேம்படுத்தவும் பயன்படுத்தவும், நாம் அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை கவனமாக ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று மரியா மாண்டிசோரி அவர்களின் கருத்தை வலியுறுத்திக் கூறுகிறார்.
ஜான் ஹோல்ட் (John Holt) எனது கிராம பள்ளி நாட்குறிப்பு என்ற ஜூலியா வேஃபர் என்ற ஒரு கிராமப்புற ஆசிரியை, எழுதிய நூலைப் பற்றி கூறியுள்ளார். கற்பித்தல் ஆசிரியராக இருப்பது எப்படி என்பது குறித்தான மிக முக்கியமான புத்தகம்.
இங்கு ஒன்று முதல் எட்டாம் நிலை வரையான மாணவர்கள் இப்பள்ளியில் இருந்தனர். பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் சுதந்திரமாக செயல்படும் சூழ்நிலை, மற்ற நேரங்களில் அனைவரும் ஒரே தொகுப்பாக அமர்ந்து, பல விஷயங்கள் குறித்து விவாதிப்பார்கள். அப்போது எழுப்பப்படும் விடை தெரியாத பல்வேறு கேள்விகளையும், ஒரு பெரிய தாளில் எழுதி அனைவரும் பார்க்கும்படி ஒரு சுவரில் ஒட்டி விடுவாராம். எல்லா மாணவர்களும் ஆர்வத்தோடு அந்த கேள்விகளுக்கு பதில் தேடி கண்டறிவார்களாம்.
அப்படி ஒரு வசந்த காலத்தில், குழந்தைகள் தங்களது பனிக்கால உடைகளை மடித்து உள்ளே வைக்க வேண்டியிருந்தது. வைக்கும் பொழுது சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். ஏன் தண்ணீரில் துவைக்கக் கூடாது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள் என்று குழந்தைகள் சிந்தித்தனர். தண்ணீரில் நனைத்தால் கம்பளி உடைகள் சுருங்கி விடும் என்று பல குழந்தைகளுக்கு தெரியும்தான். கம்பளி உடை ஏன் சுருங்குகிறது? அப்படி சுருங்கினால் என்ன ஆகும்? என்ற கேள்விகளுக்கு விடை வேண்டுமானால் ஒரு நுண்ணோக்கி இருந்தால் அதன் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று மாணவர்களுக்கு தோன்றுகிறது. மாநில பல்கலைக் கழகத்திற்கு நுண்ணோக்கியை இரவலாக தரமுடியுமா என்று கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நுண்ணோக்கி வந்ததும் அதைப் பயன்படுத்தும் விதிமுறைகளை கவனமாக வாசித்து , அதை கையாள பழகினார்கள். கம்பளி நனைப்பதற்கு முன்பும் இதற்குப் பிறகும் நுண்ணோக்கியில் வைத்து, பார்த்தார்கள். கம்பளி இலைகள் இடைவெளியுடன் பின்னப்பட்டு இருப்பதையும் தண்ணீரில் நனைத்து பிறகு இடைவெள குறைந்து விடுவதையும் கண்டுபிடித்தனர். அதற்குப் பிறகு அதற்கான கேள்வி, தானே சிறிய கம்பளித் துணி நெய்து பார்த்தல், அதை உருவாக்க தேவைப்படும் கால அளவு மனித உழைப்பு இவற்றின் மூலம் நல்ல கணித அறிவு பெற்றவர்கள். இந்த ஒரு செயல் மூலமாகவே உயிரியல் கற்றார்கள் பொருளாதாரம் கற்றார்கள்.
உயிரியல் விளக்க புத்தகங்கள் உலக வரைபடங்கள், ஆகியவற்றை பயன்படுத்துவது பற்றி அறிந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட அந்தப் பள்ளி ஒரு வருடத்தில் 700 புத்தகங்களை இரவல் பெற்று, இந்த விவரங்களை எல்லாம் கற்றிருக்கிறார்கள். இதைப் படிக்கும் பொழுது ஆஹா இதுவல்லவா கற்றல் என்று தோன்றுகிறது. கற்றல் என்பது ஒன்றிலிருந்து ஒன்றைத் தேடித் தேடி பயணிக்க வைக்க வேண்டிய ஒன்று என்பதை இந்த நூல் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. இன்னும் ஏராளமான தகவல்கள் இந்த நூலில் இருக்கிறது. வாசித்து, என் சுய அனுபவங்களை ஒப்பிட்டு வாசித்த ஒரு அருமையான புத்தகம்.
இந்தப்புத்தகம் குழந்தை உளவியல் பற்றி எதுவும் அதிகம் பேசவில்லை. குழந்தைகள் பற்றி அதிகமாக கவலைப்படுகிறது. குழந்தைகள் மிகவும் ஆர்வமானவர்கள். அவர்கள் மிகவும் கவனிக்கத்தக்க சின்னஞ்சிறு மனிதர்கள் என்ற எண்ணத்தை, அனைவருக்கும் விதைக்க வேண்டும் என்பதுதான் இந்த நூலின் நோக்கம் என்று உளமாற நம்புகிறேன். மிகச் சிறப்பான மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்ட நூல். நல்ல வாசிப்பு அனுபவம் தரும்.
குழந்தைகளை நம்புங்கள் அதைவிட மேலானது எதுவுமில்லை குழந்தைகளை நாம் நம்ப வேண்டுமானால் முதலில் நம்மை நாம் நம்ப வேண்டும்.
எழுதியவர்:
பூங்கொடி பாலமுருகன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

