நம் மரபணுக்களில் மிகச் சரியாக எந்த இடத்தில் வெறுப்பு அரசியல் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது | ஜெனிஃபர் டௌட்னாவுடன் சித்தார்த் முகர்ஜி உரையாடல் | மருதன்வேதியியல் பிரிவில் இந்த ஆண்டுக்கான நோபல் விருது பெற்றுள்ள ஜெனிஃபர் டௌட்னாவுடன் சித்தார்த் முகர்ஜி இரண்டாண்டுகளுக்கு முன்பு மேற்கொண்ட உரையாடலை நேற்றிரவு பார்த்தேன்.  கண்களை இன்னமும் பிரிக்காத குழந்தைதான் என்றாலும் நம் உள்ளத்தை மரபணுவியல் ஏற்கெனவே கவர்ந்திழுத்துவிட்டது. எதிர்காலத்தில் இது எப்படியெல்லாம் வளர்ந்து நிற்கும் என்பதை ஹாலிவுட் தொடங்கி அறிவியல் உலகம் வரை போட்டிப்போட்டுக்கொண்டு விதவிதமாகக் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தக் கற்பனைகள் முக்கியமானவை, அவற்றிலிருந்து நாம் நிறைய பெற்றுக்கொள்ளமுடியும் என்கிறார்கள் இரு அறிவியலாளர்களும்.
ஒரு பிழை திருத்துநர் தன் பிரதியைத் தேவைக்கேற்ப வெட்டியும் ஒட்டியும் திருத்தமுடிவதைப் போல் மரபணுக்களை வாசித்து, திருத்தங்கள் செய்யமுடிந்துவிட்டால் என்னென்னவெல்லாமோ செய்யமுடியும். பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்தலாம். கொசுக்களை ஒழிக்கலாம். பிறப்போடு ஒட்டிவரும் குறைபாடுகளை, நோய்களை ஒழிக்கலாம். புற்றுநோயை அழிக்கலாம். ஏன், நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் குடியேறுவதற்குத் தோதாக நம் உடலமைப்பை மறுகட்டுமானம்கூடச் செய்யமுடியும். ஏற்கெனவே துரிதமாகச் செழித்துவரும் செயற்கை நுண்ணறிவோடு மரபணுவியலை இணைக்கும்போது சாத்தியங்களும் கற்பனைகளும் இன்னமும் விரிவடைகின்றன.
The Gene: An Intimate History (Audio Download): Amazon.in: Siddhartha Mukherjee, Dennis Boutsikaris, Random House AudioBooks
எல்லை என்றொன்றை வகுக்கவே முடியாமல் போவதுதான் இதிலுள்ள பெரும் அபாயம். நாம்தான் கற்பனை  செய்கிறோம், நாம்தான் உருவாக்குகிறோம் என்றாலும் மரபணு மாற்றம் என்னும் தொழில்நுட்பம் ஃபிராங்கன்ஸ்டைன் போல் நமக்கு அடங்க மறுக்கிறது. நம் கரங்களிலிருந்து நழுவிச்செல்லும்போது எப்படிப்பட்ட அழிவுகளை அது ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள வரலாறு (யூஜெனிக்ஸ்) உதவும். வேறெங்கும் இல்லாதபடி வட இந்தியாவில் பாலின விகிதம் அசாதாரணமான முறையில் குறைந்திருப்பதை சித்தார்த் முகர்ஜி கவனப்படுத்தி எச்சரிக்கிறார்.
அறிவியல் என்பது தனித்து இயங்கும் துறையல்ல. அறத்தோடும் அரசியலோடும் தத்துவத்தோடும் இணைத்துதான் அதை நாம் அணுகவேண்டும். இந்த உறவை அழுத்தமாகப் புரிந்துகொள்ள சமந்த் சுப்ரமணியன் எழுதிய ஜே.பி.எஸ். ஹால்லேடனின் அற்புதமான வாழ்க்கை வரலாறு உதவும்.
The Emperor of All Maladies. A good biography puts you in the shoes… | by we can't govern | Medium
புற்றுநோயின் வரலாற்றை நேர்த்தியாகவும் நெஞ்சை உலுக்கியெடுக்கும் வகையிலும் விவரிக்கும் சித்தார்த் முகர்ஜியின் The Emperor of All Maladies முக்கியமானது. மரபணுவியல் குறித்த அவருடைய இரண்டாவது நூலை இனிதான் வாசிக்கவேண்டும்.
அறிவியல் நம்பிக்கைற்றவர்களோடு (டிரம்ப் ஆதரவாளர்கள் என்றும் படிக்கலாம்) ட்விட்டரில் தொடர்ச்சியாக சித்தார்த் மேற்கொள்ளும் மல்யுத்தத்தைப் பார்க்கும்போது ஒரேயொரு ஏக்கம்தான் பிறக்கிறது. நம் மரபணுக்களில் மிகச் சரியாக எந்த இடத்தில் வெறுப்பு அரசியல் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை நிரந்தரமாகக் களைந்தெடுக்கமுடிந்தால் நன்றாக இருக்கும்.
உரையாடல் இணைப்பில்.