கரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அனைவரிடமும் குழப்பமும் பதட்டமும் நிலவுகின்றது. பொதுமுடக்கம் குறித்த அரசின் அறிவிப்புகளே கடைசிநேரத்தில் தீர்மானிக்கப்பட்டு மக்களிடம் கூறப்படும் சூழலில் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்புகளும் அவ்வாறே இருக்கின்றன.  கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் இவ்வேளையில், மாணவர்களின் பாதுகாப்பைவிட பொதுத் தேர்வுகள் இன்றியமையாத ஒன்றா என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின்னான காலகட்டங்களில் கல்வி பெறுவோர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததால் மெட்ரிகுலேஷன் சான்றிதழ் என்பது அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவும் வயதிற்கான ஆவணமாகவும் பயன்பட்டது. பின்னர் அதுவே இடைநிலைப் பள்ளி இறுதிச் சான்றிதழாக (SSLC) மாறியது. இது ஒருவர் அடிப்படை பள்ளிக் கல்வியைப் பெற்றதை உறுதிசெய்யும் சான்று (completion certificate) மட்டுமே, தகுதி அளவீட்டிற்கான (competency certificate) ஒன்றாக இதைப் பார்க்க முடியாது. எனவே ஆண்டிறுதி பொதுத்தேர்வு நடத்தாமலேயே அனைவருக்கும் தேர்ச்சியளித்து பத்தாம் வகுப்புச் சான்றிதழ் வழங்க முடியும்.

தேர்வுகள் உண்மையில் கற்றலை மேம்படுத்துகின்றனவா?

PSEB 10th Results 2017 Will be Announced Today, Check Your Grades ...

”தேர்வில் தேர்ச்சி வழங்கப்படாத மாணவர்களின் கற்றல் மேம்படுகிறது என்று எந்த ஆய்வோ, ஆராய்ச்சியோ இல்லை. பல வேளைகளில் படிப்பை நிறுத்திக்கொள்வதற்கு தூண்டுதலாகவும் அது அமைந்துவிடும்” என  கல்வியுரிமைச் சட்டம் (2009) கூறுகிறது.  இரண்டரை அல்லது மூன்று மணிநேரத் தேர்வின் மூலம் மட்டுமே மாணவர்களை  மதிப்பிடுதல் என்பது நமது கல்விமுறையின் மிகப்பெரிய குறைபாடு. எழுத்தாற்றல் மற்றும் மனனம் தவிர்த்து, குழந்தைகளின் பிற திறமைகளை இது புறக்கணிக்கிறது.  மனப்பாடத்தை ஊக்குவிக்கும் தேர்வுமுறையில் குழந்தைகளின் அறிவு மற்றும் சிந்தனை வளர்ச்சிக்கு இடமளிக்கப்படுவதில்லை. புதுமையும் படைப்பாற்றலும் அங்கீகரிக்கப்படாமல் மாதிரி விடைகளுடன் பொருந்தும் விடைகள் மட்டுமே பேப்பரில் மதிப்பெண் பெற்றுத்தருகின்றன. இத்தகைய வறட்டுத்தனமான தேர்வுமுறைக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டியிருப்பதால், கற்றலை ஒரு தொடர் செயல்பாடாக நெறிபடுத்தும் வாய்ப்பை தவறவிட்டு, தேர்விற்கான பயிற்சிக்கூடங்களாக வகுப்பறை சுருங்கிவிடுகிறது.

தேர்வு குறித்த பயங்களின் காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 2500 பேர் தற்கொலை செய்து கொள்வதாக மனநல ஆலோசனை மற்றும் தற்கொலை தடுப்பில் ஈடுபட்டுள்ள சினேகா அமைப்பின் நிறுவனர் டாக்டர்.லக்‌ஷ்மி விஜயகுமார் கூறுகிறார்.  போட்டி மனப்பான்மை மிகுந்த இச்சமூகத்தில், தேர்வுகள் கற்றலுக்கான வாய்ப்பாக அமையாமல் மாணவர்களிடம் மனவழுத்ததையும், நம்பிக்கையை சிதைப்பதாகவுமே உள்ளது என்பதை இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

சமமற்ற சமூகத்தில் பொதுத்தேர்வுகள் மட்டும் சமமானவையா?

Students of Gujarat schools to be promoted sans exams due to ...

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் பலர் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருக்கும் நாட்டில் மீதமிருக்கும் பெரும்பகுதி மக்களுக்கு உயர்கல்வி சென்றடைய வேண்டுமென்பதே நமது கல்விமுறையின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் இடைநிற்றல் மற்றும் தேர்வில் தோல்வியுறுதலின் காரணமாக பெரும்பகுதி மாணவர்கள் இக்கல்வி அமைப்பிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

இடைநிற்றலுக்கான முக்கிய காரணங்கள்சதவீதம்
ஆண்பெண்
படிப்பில் ஆர்வமின்மை23.8015.6
பணப் பிரச்சனைகள்23.715.2
வேலைகளில் ஈடுபடுத்தப்படுதல்35.8034.6
திருமணம்13.9
பள்ளி தொலைவாக உள்ளது0.53.40
பிற16.217.3

(ஆதாரம்: DSEL-MHRD ஆண்டறிக்கை 2018)

நாம் வாழும் சமூகத்தின் சமமற்ற தன்மையே இடைநிற்றலுக்கான பெரும் காரணங்களாக அமைகின்றன. கிராம – நகர்ப்புற, பாலின, சமூக பொருளாதார பாகுபாடுகள் போன்ற அமைப்பு ரீதியான ஏற்றத்தாழ்வுகளை மறைத்து எல்லாம் சமமாக இருப்பதாக ஒரு தோற்றத்தை பொதுத்தேர்வு உருவாக்குகின்றது.  மேலும் தேர்வை மையமாக கொண்ட நமது கல்விமுறை மாற்றுத்திறனாளிகள் மற்றும் கற்றல்குறைபாடுள்ள மாணவர்களின் தேவைகளை கணக்கில்கொள்வதில்லை.

இக்கரோனா பேரிடர் காலத்தில் பெரிய அளவில் வேலையிழப்புகள் நிகழ்ந்துள்ளது,  இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு போதிய உணவும் ஊட்டச்சத்தும் கிடைத்திருக்காது என்கின்றனர் மருத்துவர்கள். பல பள்ளிகளில் வகுப்புகள் ஆன்லைனில் நடைபெற்றுள்ளன. அவற்றில் பங்கேற்க போதிய இணைய வசதி, இடர்ப்பாடுகளற்ற அறை, ஸ்மார்ட்போன் போன்றவை இல்லாத மாணவர்களுக்கு கற்றலில் ஒரு பின்னடைவும் ஏற்பட்டிருக்கிறது. இச்சூழலில்  அனைவரும் ஒரு தேர்வை ஒரே நேரத்தில் எழுதுவதால் மட்டுமே அது சமமானதாக ஆகிவிடுவதில்லை.

கல்வி அமைப்பில் மாற்றங்களை இனியும் தாமதப்படுத்த முடியாது:

COVID-19: HRD assessing situation in countries with CBSE schools ...

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் இல்லாமல் எப்படி பதினோறாம் வகுப்பு மற்றும் டிப்ளமோ போன்ற படிப்புகளுக்கான பிரிவுகளை வழங்குவது என்று அனைவருக்கும் சந்தேகம் உள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில்,  முதல் பத்து வருட பள்ளிக் கல்வி என்பது அடிப்படைக் கல்வி மட்டுமே. அதன் பின்னர்,  தான் எதிர்பார்க்கும் வேலைக்கேற்ப அல்லது ஆழமாக படிக்க விரும்பும்  துறையை ஒரு மாணவர் தேர்ந்தெடுக்க வேண்டும். இது அவரது விருப்பத்தின் அடிப்படையில் இல்லாமல் மதிப்பெண்களின் அடிப்படையில் இருப்பதே அக்குழந்தையின் உரிமையை பறிக்கும் செயல் தான்.

பொதுத்தேர்வின் மதிப்பெண்களே அடுத்த கட்ட கல்வி நிலையை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதை மாற்ற, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு(Continuous and Comprehensive Evaluation), செய்முறை வகுப்புகள் போன்ற கற்றல்,கற்பித்தல் செயல்பாடுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். மாணவரின் விருப்பம் மற்றும் கல்வியாண்டில் நடைபெற்ற தொடர் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட கலந்தாலோசனையின் மூலம் பாடப்பிரிவுகளை வழங்கலாம்.

இவற்றை சாத்தியமாக்க பல அமைப்புரீதியான மாற்றங்கள் செய்யப்படவேண்டி இருக்கும். பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை சீர்திருத்தம், கல்வி அமைப்பு, பாடத் தேர்வுகள் என இதுவரை அமைக்கப்பெற்ற ஒவ்வொரு கல்விக்குழுவும் ஒன்றன்பின் ஒன்றாக பரிந்துரைத்தும் நிகழாத அம்மாற்றங்களை இனியும் தாமதப்படுத்தக்கூடாது. இக்கரோனா காலக்கட்டத்தை கல்வித்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்களை நிகழ்த்த ஒரு துவக்கப்புள்ளியாக கொள்ளவேண்டும் . கல்வி காலத்திற்கேற்ப முன்னேறியதாகவும் அனைவருக்குமானதாகவும் இருந்திட உடனே செயல்படுதல் அவசியம்.

நிவேதா சுந்தர் – முதுகலை மாணவர், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *