விண்வெளியில் இருந்து கதைகளை பதிவிறக்கம் செய்த நாடு..!
(ரஷ்ய அறிவியல் புனைகதை உலகம்)
– ஆயிஷா இரா.நடராசன்
அறிவியல் புனை கதைகள் என்கிற வானத்தின் முதல் நட்சத்திரம்.. ஒளிர் விட்டது சோவியத் யூனியன் எனும் உலகத்திற்குள் இருந்துதான்.. அதில் மாற்றுக் கருத்திற்கு இடம் இல்லை. – ஐசக் அசிமாவ்.
அறிவியல் புனைகதை என்பது மனிதர்களைப் பற்றியதா அறிவியலைப் பற்றியதா என்பதை முடிவு செய்தது தொழில்நுட்பத்தை விட சமூகத்தின் மீதான வாய்ச்சலாக உருவெடுத்தது என்றால் அது ரஷ்யக் கதைகளின் மூலம்தான். – ரே பிராட்பரி.
அறிவியல் புனைகதை என்பது பற்றி தனியாக இப்போது பட்டப்படிப்பு வந்துவிட்டது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அடிப்படைகளை முதலாண்டில் சொல்லிக் கொடுக்கிறார்கள் இரண்டாம் ஆண்டு என்கிற இரண்டு செமஸ்டர்கள் முழுக்க முழுக்க ரஷ்ய அறிவியல் புனைகதை உலகம் சார்ந்ததாக எட்டு பேப்பர்கள் ஒருவர் எழுத வேண்டும்.. நான் சொல்வது இப்போது நடப்பது ரஷ்யாவில் அல்ல.. அமெரிக்காவில்.. அதுவும் அதிபர் டிரம்ப் அவர்களுக்கு உறங்கா இரவுகளை பரிசாக கொடுத்துக் கொண்டிருக்கும் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில்தான்.

அறிவியல் புனைகதை உலகம் விசித்திரமானது.. அதற்கென்று பல்வேறு வரலாறுகள் உள்ளன. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாறை இந்தத் துறையில் தன் கையில் வைத்திருப்பது ரஷ்ய அறிவியல் கற்பனை உலகின் வரலாற்றுப் பயணம். அமெரிக்க அறிவியல் புனைகதை உலகம் எட்கர் ஆலன் போ போன்றவர்களின் வழியாக ராக்கெட்டுகள் ரோபோக்கள் தொழில்நுட்ப எல்லைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டது பிரிட்டிஷ் அறிவியல் புனைகதை உலகம் ஹெச் ஜீ வெல்ஸ் தொடங்கி எதிர்காலத்தில் உருவாகக்கூடிய காலனித்துவ மனிதனை கற்பனை செய்கிறது பிரெஞ்சு மரபு ஜூல்ஸ் வேன் போன்றவர்களின் வழியாக அறிவியல் சாகசத்தை கற்பனை செய்து வளர்த்தது. ஆனால் ரஷ்யப் சோவியத் அறிவியல் புனைகதை ஒரு தனித்துவமான கேள்வியை எழுப்பிக் கொண்டது:
அறிவியல் நூற்றாண்டு என்று ஒன்று உருவாகும்பொழுது புதிய மனிதன் எப்படிப்பட்ட மனிதனாக பரிணாமம் அடைவான்?
எனவே ரஷ்ய மற்றும் சோவியத் அறிவியல் புனைகதை என்பது இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத இயந்திரங்கள் மற்றும் காலப்பயணம் என்பதை கற்பனை செய்யும் இலக்கியம் அல்ல
அது இன்னும் உருவாகாத சமூகங்களை கற்பனை செய்கிறது மனிதகுலம் எப்படி எதிர்கால நாகரீகமாக மாறக்கூடும் என்பதை ஆய்வுக்கு உட்படுத்தியது தொழில்நுட்ப முன்னேற்றம் உருவாகக் கூடிய ஒழுக்க நெருக்கடிகளை முன்கூட்டியே சிந்தித்தது ரஷ்ய அறிவியல் புனைக்கதை உலகம்.
இந்த மரபின் சோவியத் எழுத்தாளர்கள் வெறும் எதிர்காலத்தைக் கணித்தவர்கள் அல்ல. அவர்கள் அறிவியலாளர்களைப் போலவே சிந்தித்த இலக்கியவாதிகள். தத்துவ ஞானிகளைப் போலவே கேள்வி எழுப்பிய கதாசிரியர்கள். சமூக சிந்தனையாளர்களைப் போலவே செயல்பட்ட உள்ளூர் எழுத்தாளர்கள்.. அறிவியல் மற்றும் மனித வாழ்வின் உறவை ஆய்வு செய்த அற்புதம் ரஷ்ய அறிவியல் புனைகதைகளுக்குள் புதைந்து கிடக்கிறது.
சோவியத் யூனியன் என்கிற ஒரு நாடு ரஷ்யப் புரட்சி.. ஆஹா என்றெழுந்தது பார் யுக புரட்சி.. என்று பாரதி முழங்கிய மாபெரும் புரட்சியின் மூலம் உருவான சமத்துவ சமூகம்.. நேரில் சென்று பார்வையிட்டு விட்டு வந்து தந்தை பெரியாரவர்கள் அறிவியல் மனிதனை சந்தித்தேன் என்றும் இப்படியான ஒரு சமூகமாக தமிழ் சமூகத்தை மாற்ற வேண்டும் என்றும் முழங்கிய தேசம். ஆனால் சோவியத் யூனியனுக்கு முன்பே ரஷ்ய எதிர்காலக் கற்பனை அல்லது அறிவியல் புனைகதைத் தொடங்கிவிட்டது.. உண்மைதான் ரஷ்ய அறிவியல் புனை கதையின் வேர்கள் சோவியத் அரசுக்கு முந்தியவை என்பதை நான் இங்கே பதிவு செய்துதான் ஆக வேண்டும்.. ஏனென்றால் புரட்சியை தூண்டும் அளவிற்கு அந்த அறிவியல் புனைகதை உலகத்திற்குள் ஆழ்ந்த சோஷலிச விதைகள் தூவப்பட்டிருந்தன.
எனவே பலரும் எழுதுவது போல ரஷ்ய அறிவியல் புனைகதை என்பது புரட்சியுடன் திடீரென்று தோன்றவில்லை.. மாறாக புரட்சியை நோக்கி ரஷ்யாவை வழிநடத்தியதில் ரஷ்ய அறிவியல் புனைக்கதை உலகிற்கு என்று ஒரு இடம் இருக்கிறது.. என்பதுதான் உண்மை!
பத்தொம்போதாம் நூற்றாண்டின் ரஷ்ய இலக்கியத்திலேயே அறிவியல் கற்பனை எதிர்கால சமூகம் அற்புதப் பயணங்கள் தொழில்நுட்ப மாற்றங்கள் சமத்துவ சமுதாயம் என்று மனித குலத்தின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் விதைக்கப்பட்டன..

THE YEAR 4338 என்கிற ஒரு பிரம்மாண்ட நாவலை 1837 லேயே எழுதினார் ரஷ்ய எழுத்தாளர் விளாடிமிர் ஓடையோவிஸ்கி. இந்த கதையை வாசிப்பவர்களுக்கு புரியும், எப்படியான எதிர்காலத்தை ரஷ்ய எழுத்தாளர்கள் கற்பனை செய்தார்கள்.. உலகின் முதல் எதிர்காலவியல் நாவல் என்று நான் இதை அழைப்பேன்.. இப்போதும் இணையத்தில் கிடைக்கிறது. எடுத்து வாசிக்கலாம். திசையட்டும் இதழுக்காக திரும்ப இந்த நாவலை வாசித்தபோது நான் அசந்து போனேன்.. எறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஒருவர் இப்படி சிந்தித்திருக்க முடியுமா என்பதே ஆச்சரியமாக இருக்கிறது
THE YEAR 4338 செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வசிக்கும் ஹிப்போலிட்டஸ் சுங்கி எனும் சீன மாணவர் பெய்ஜிங்கில் உள்ள தன் நண்பர்களுக்கு அனுப்பிய கடிதங்கள் வாயிலாக இந்த கதை சொல்லப்படுகிறது.. ரஷ்யாவும் சீனாவும் உலக வல்லரசுகளாக 4338 இல் உள்ளன.. எதிர்கால உலகில் அந்தக் கதை கட்டமைக்கப்பட்டுள்ளது.. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்கிற அந்த ஊர் மாஸ்கோ வரை நீண்டு செல்லும் ஒரு பிரம்மாண்ட உலகளாவிய பெருநகரமாக விரிவடைந்து விட்டது பியலா எனும் வால்நட்சத்திரம் பூமியுடன் மோத இருப்பதால் ஏற்படப்போகும் பேரழிவு இந்த நாவல் முழுவதும் அச்சுறுத்தல் கொள்ள வைக்கிறது..
ஆரம்பகால இணையம் நவீன வலைப்பதிவுகள் என விரிவடையும் கற்பனை இன்றைய உலகோடு பெரிதும் ஒத்திருக்கும்.. உடல்நலத் தகவல்கள் உணவுப் பட்டியல் முதற்கொண்டு ஆச்சரியத்தை தருகிறது மின்காந்த தந்தி அமைப்புகளை ஓடைவஸ்கி கற்பனை செய்கிறார்.. கடிதமே மின்காந்த அலைகளின் மூலம்தான் அனுப்பப்படுகிறது மேம்பட்ட தொழில்நுட்பங்கள் காலநிலை மற்றும் வானிலை கட்டுப்பாடு அமைப்புகளை இந்த நாவல் விவரிக்கிறது. இதற்கிடையே மிகப் பெரிய ஒரு தத்துவப்போர் இந்த உலகில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.. மனிதன் நிரந்தரமாக வாழ்வதற்கான மருத்துவ சாதனைகளை இந்த நாவல் அடுக்குகிறது.. அறிவு அறிவியல் புனைகதை வரலாற்றில் ஓடைவஸ்கி ஒரு ஆரம்பகால முன்னோடியாக முன்மொழியப்பட்டிருக்க வேண்டும்.
WHAT IS TO BE DONE? என்கிற தலைப்பில் தலைவர் லெனின் எழுதிய புத்தகம் மிகப் பிரபலமானது.. ஆனால் லெனின் இந்த புத்தகத்திற்கான தலைப்பைத் தேர்வு செய்தது நிக்கோலாய் செர்னிவெஸ்கி எனும் அற்புத அறிவியல் படைப்பாளி எழுதிய WHAT IS TO BE DONE என்கிற அதே தலைப்பு கொண்ட ஒரு அறிவியல் நாவலில் இருந்து தான்.. இது வழக்கமான அறிவியல் புனைகதை அல்ல. 1863 ஆண்டு வெளிவந்த அறிவியல் அரசியல் புனைவு புகழ்பெற்ற ரஷ்ய அறிவியல் புனைகதை வரலாற்றில் வேரா பாவ்லோனாவின் நான்காவது கனவு.. என்கிற உப தலைப்போடு தொழில்நுட்ப ரீதியாகவும் சமூக ரீதியாகவும் செம்மைப்படுத்தப்பட்ட ஒரு எதிர்காலம் குறித்த செல்வாக்குமிக்க ரஷ்யாவின் சோவியத் புரட்சியை முன்னறிவிக்கும் ஒரு புனைவாக இதை நாம் பார்க்கலாம்..
இந்த நாவலின் கனவுக் காட்சியானது ரஷ்ய லட்சியப் புரட்சிகர சிந்தனையை பெரிதும் வடிவமைத்த .. சொல்லாக்கங்களைக் கொண்டது வளம், கூட்டு உழைப்பு மற்றும் மனித விடுதலை ஆகியவற்றைக் கொண்ட ஒரு எதிர்காலத்தின் தெளிவான சமூகத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது.. இந்த நாவலில் இருப்பதை நாடாக மாற்றுவது என்பதை லெனின் தன் கடமையாக தோளில் சுமந்து கொண்டார் என்றால் இது எப்பேர்பட்ட அறிவியல் புனைவாக இருந்திருக்க வேண்டும்.. என்ன செய்ய வேண்டும் என்கிற தலைப்பில் 1902 ஆம் ஆண்டு தலைவர் லெனின் இதைப் பின்பற்றி ஒரு அரசியல் பிரசுரம் எழுத வேண்டிய நிலை வரும் அளவிற்கு இது ரஷ்ய இளைஞர்களிடையே மிகப் பிரபலமான நாவலாக இருந்தது என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.. அப்போதைய ரஷ்யாவின் தாஸ்தாவாஸ்கி உட்பட பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட எழுத்து நிக்கோலாய் செர்னிவாஸ்க்கீ உடையது.. பகுத்தறிவு சார்ந்த அறிவியல் கற்பனாவாதத்தை ஜீரணிக்க முடியாமல் ரஷ்யாவே இந்த நாவலை விவாதித்தது என்று விமர்சகர்கள் எழுதுகிறார்கள்.

ஆனால் ரஷ்யாவின் எதிர்கால சமுதாயத்தை ரஷ்யப் புரட்சிகர சிந்தனையை விதைத்த பெருமை இந்த நாவலுக்கு உண்டு.. ரஷ்யாவின் எதிர்காலம் என்பது வெறும் தொழில்நுட்ப எதிர்காலம் அல்ல. அது சமூகத்தின் எதிர்காலம் என்பதை சுட்டிக்காட்டியது இந்த நாவல்.. ஒரு அறிவியல் புனைவு என்ன செய்யும் என்பதை வரலாற்றிற்கு உணர்த்திய பெருமை WHAT IS TO BE DONE நாவலுக்கு உண்டு.. நமக்கெல்லாம் தெரியும் தாஸ்தாவாஸ்கி ஒரு அறிவியல் புனைகதை எழுத்தாளர் அல்ல ஆனால் தத்துவக் கேள்விகளின் பின்னணியில் அவரது அறிவியல் புனைக்கதையின் மையக் கேள்விகள் எழுப்பப்பட்டன மனிதர்களை முழுமையாக பவுத்தறிவின் அடிப்படையில் வடிவமைக்க முடியுமா.. சமூகம் ஒரு இயந்திரம் அல்ல அதை கட்டமைப்பதற்கு.. சமூகத்தை ஒரு இயந்திரத்தைப்போல் திட்டமிட முடியுமா மனிதனை அறிவியல் மூலம் மறு வடிவமைத்தால் அவன் மனிதனாகவே இருப்பானா.. போன்ற கேள்விகளை விதைத்ததன் மூலம் ரஷ்ய அறிவியல் புனைகதை உலகத்தை சமூகம் சார்ந்த உலகமாக இழுத்துக் கொண்டு வந்ததில் தாஸ்தாவஸ்கிக்கு ஒரு மிகப் பெரிய பங்கு இருக்கிறது.. என்பதே என்னுடைய நிலைப்பாடு.
அந்த விஷயத்தில் லியோ டால்ஸ்டாய் உட்பட அனைவருமே அறிவியலை சிந்தித்தார்கள்.. நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும் டால்ஸ்டாய் ஒரு அறிவியல் எழுத்தாளர் அல்ல. ஆனால் தொழில்நுட்பமயமாக்கல் வன்முறை தொழில்மயம் என்று வருகிறபொழுது மனித ஒழுக்கம் பொதுநலம் பற்றிய டால்ஸ்டாயின் விமர்சனங்கள் மிக முக்கியமானவை.. அவற்றையும் ரஷ்ய அறிவியல் புனைகதை உலகம் உள்வாங்கிக் கொண்டது என்பதை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. தொழில்நுட்பம் முன்னேற்றம் தானாகவே மனித முன்னேற்றமாக மாறிவிட முடியுமா என்கிற இடத்தை நோக்கி அது ரஷ்ய அறிவியல் புனைகதை உலகத்தை எடுத்துச்சென்றது. இந்த ஒரு கேள்வி பின்னாட்களில் சோவியத் அறிவியல் புனை கதையின் முக்கிய கேள்விகளில் ஒன்றாக மையமிட்டது.
இந்த இடத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய ஒரு மாமனிதரை நாம் சந்திக்க வேண்டும்.. அவர் தான் சியால்கோவஸ்கி.. கான்ஸ்டன்டீன் சியால்கவஸ்கி என்றும் உச்சரிக்கலாம்.. ரஷ்ய அறிவியலையும் அறிவியல் புனை கதையையும் இணைக்கின்ற முக்கிய ஆளுமைகளில் ஒருவர். ஒரு ஆசிரியர் கணிதவியலாளர் தத்துவ ஞானி விண்வெளி ஆய்வின் முன்னொடி ராக்கெட் தொழில்நுட்பம் பல அடுக்கு ராக்கெட்டுகள் மற்றும் திரவ எரிபொருள் இயக்கம் குறித்த அவர் முன்வைத்த கோட்பாடுகள், நவீன விண்வெளிப் பயணத்தின் அறிவியல் அடித்தளங்கள் என்று வரலாறு சொல்கிறது. சியால்கோவஸ்கி விண்வெளியை மனித குலத்தின் எதிர்காலமாக மாற்றியவர்.. அவரைப் பொறுத்தவரையில் விண்வெளி என்பது வெறும் கற்பனை உலகம் அல்ல மனிதன் பூமியைத் தாண்டி விண்வெளிக்குச் செல்ல தூண்டுதலாக அமைந்தது அவருடைய சமன்பாடுகள்.. ஜார் மன்னனால் சிறைபிடிக்கப் பட்டபொழுது அவருடைய ஒவ்வொரு சொல்லும் மந்திரமாக மாறிப்போனது. மனித நாகரிகம் ஒரு நாள் பூமியின் எல்லையை கடக்கும் என்று பகிரங்கமாக அறிவித்தவர். ஒரு கற்பனை பொருளிலிருந்து அறிவியலின் திடமான உண்மையாக விண்வெளிப் பயணம் மாறுவதற்கான பாலம் அவரால் போடப்பட்டது தான்.

அவருக்குப் பிறகு அறிவியல் புனைகதை உலகம் முற்றிலும் மாறிப் போனது.. அவர் அறிவியல் புனைகதை எழுதவில்லை ஆனால் அவர் எழுதியிருந்த ஆய்வு கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் நட்சத்திரக் கூட்டங்கள் மிளிருந்தன அந்த ஆய்வு கட்டுரைகளின் உள்ளே இருந்த நட்சத்திர கூட்டங்களில் இருந்து அறிவியல் புனைகதைகளை பதிவிறக்கம் செய்தது அடுத்த நூற்றாண்டின் ரஷ்ய புனைகதை உலகின் கதை!
இப்படித்தான் சோவியத் ஒன்றியத்தில் அறிவியல் புனைகதைக்கும் விண்வெளி அறிவியலுக்கும் இடையே ஒரு அபூர்வமான தொடர்பு உருவானது.. எழுத்தாளர்கள் எதிர்காலத்தை கற்பனை செய்யத் தொடங்கினார்கள்.. அறிவியலாளர்களோ எழுத்தாளர்கள் கற்பனை செய்த எதிர்காலத்தை உருவாக்க முயன்றார்கள்.. வென்றார்கள். அந்த அறிவியல் சாதனைகள் மீண்டும் புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தன அந்த புதிய எழுத்தாளர்கள் புதிய உலகங்களை கற்பனை செய்யத் தொடங்கினார்கள்.. இவர்கள் கற்பனை செய்த புதிய உலகத்தை அறிவியலாளர்கள் ஆய்வகங்கள் மற்றும் தங்களுடைய தொழில்நுட்ப அறிவின் வழியாக உருவாக்கிக் காட்டினார்கள். இவ்வாறு அற்புதமான ஒரு சுற்றுச் சுழற்சி அங்கே உருவானது. அந்த வரிசையை நாம் இப்போது பார்க்க வேண்டும்.
வரிசையில் முதலில் வருபவர் அலெக்சாண்டர் பொக்டானோவ் (ALEXANDER BOGDANOV). ரஷ்ய இலக்கிய மரபில் அறிவியலாளர் தத்துவவாதி புரட்சியாளர் மற்றும் எழுத்தாளர் என்கிற அனைத்து வடிவங்களில் இருந்தும் நாம் இவரை விவரிக்க முடியும்.. பொக்டானாவ் அவர்களின் வாழ்க்கையே அறிவியல் புனைகதை போன்றது.. அவர் மனிதர்களுக்கு ரத்த மாற்றம் செய்வது பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த ஒரு விஞ்ஞானி.. அவரது அறிவியல் ஆர்வமும் சமூக கற்பனையும் ஒன்றோடு ஒன்று இணைந்து அற்புதமான பல கதைகளை படைத்தன. மூன்று அறிவியல் நாவல்கள் அவர் எழுதியபொழுது அவரை இத்தனை லட்சம் பேர் வாசிக்கிறார்கள் என்பது அவருக்கே தெரியவில்லை.. அதற்குள் புரட்சி வந்துவிட்டிருந்தது புரட்சி அமைப்பில் ஒருவராக களம் இறங்கிய இந்த மாமனிதன் ரஷ்யாவின் எதிர்காலத்தை பற்றிய அறிவியல் சமூக அம்சங்களை கற்பனை செய்ய முடிந்த முதல் மனிதனாக மாறியதில் ஆச்சரியம் இல்லை.
1917 புரட்சிக்குப் பிறகு அந்த நாட்டின் எதிர்காலம் பற்றிய பொருள் மாறியது அது எதிர்காலம் என்கின்ற இலக்கியக் கற்பனை மட்டுமல்ல ஒரு அரசியல் திட்டமாக மாற்ற வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்தது தொழில் சமூகத்தை மாற்றும் அறிவியல் இயற்கையை மாற்றும் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை மாற்றும் புதிய சமூகம் வரலாற்றையே மாற்றும் என்று முன்னறிவித்த அறிவியல் எழுத்தாளர்களை தான் அங்கே நாம் அதிகம் பார்க்கிறோம் இப்படிப்பட்ட நான்கு கற்பனைகளின் சந்திப்பில்தான் சோவியத் அறிவியல் புனைகதை உலகம் வளர்ந்தது.
வளர்ந்த ரஷ்ய அறிவியல் புனைகதை உலகத்தின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக நாம் எவ்கனை சாம்யாட்டின் (YEVGENY ZAMYATIN) என்கிற ஜாம்பவானை சந்திக்கிறோம்..WE- நாம் என்கிற டிஸ்டோபியன் இலக்கிய வகையின் அடித்தளப் படைப்பு உலகத்தையே அதிர வைத்தது.. கணிதத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு மனித சமூகத்தைப் பற்றி அது பேசியது.. இன்றைக்கு வாசித்தாலும் ரத்தத்தை உறைய வைக்கும் அம்சங்கள் நம்மை உறங்க விடாது.WE நாவலில் தனி மனித சுதந்திரத்தின் அழிவை அதீதமான அறிவியல் தொழில்நுட்ப ஈடுபாடு கொடுக்கும் என்பதை சாம்யாட்டின் நிரூபித்தார். அரசின் முழுமையான அதிகாரம் மனித அடையாளத்தின் ஒடுக்கமாக மாறும் என்பதை இன்றைக்கு வாசித்தாலும் பல அதிகார நாடுகளின் அழிவு நம் கண் முன்னே நிற்கிறது பின் நாட்களில் ஆல்டுலஸ் ஆக்சலே எழுதிய ப்ரேவ் நியூ வேர்ல்ட் மற்றும் ஜார்ஜ் ஆர்வல் வழங்கிய 1984 போன்ற நாவல்களின் தோற்றுவாய் இந்த புத்தாம்தான்.. சாம்யாட்டின் எழுப்பிய மாபெரும் கேள்வி எல்லாவற்றையும் அறிந்திருக்கும் அறிவியலும் அனைத்தையுமே கணக்கிடுகின்ற கணிக்கின்ற ஒவ்வொரு மனிதனையும் கண்காணிக்கின்ற அறிவியல் என்கிற ஒன்று உருவானால் மனித சுதந்திரம் என்ன ஆகும் மனிதன் முழுமையான பகுத்தறிவு கொண்ட இயந்திரமாக மாறிவிட்டால் அவன் இன்னும் மனிதன்தானா.. இன்றைய செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் கேள்வி இது.
விளாடிமிர் அப்ரூசெவ் VLADIMIR OBRUCHEV புகழ் பெற்ற புவியியலாளர் மற்றும் அறிவியல் புனைகதை எழுத்தாளர் இவரது PLUTONIA ப்ளூடோனியா நான் வாசித்திருக்கிறேன்.. உமியின் ஆழத்தில் மறைந்திருக்கும் ஒரு பண்டைய உலகத்தை அவர் கற்பனை செய்தார் புவியியல் தொல்லுயிரியல் அண்டை உயிரினங்கள் ஆய்வு சாகசம் அனைத்தையும் ஒன்றிணைக்கும் அற்புதமான ஒரு அறிவியல் கதை.
/https://tf-cmsv2-smithsonianmag-media.s3.amazonaws.com/filer/d2/93/d2937dd7-5024-419a-9a2f-094091c9705d/head.jpg)
அலெக்சாண்டர் பெல்யாஏவ் ALEXANDER BELYAEV ரஷ்யாவின் ஜூல்ஸ் வான் என்று அழைக்கப்படுகிறார் சோவியத் அறிவியல் புனைக்கதையின் மிகப்பெரிய பெயர்களில் ஒன்று இது.. பேராசிரியர் டூவெல்லின் தலை நீங்கள் வாசிக்க வேண்டும் அசந்துபோவீர்கள் உயிரி தொழில்நுட்பத்தின் ஒழுக்கவியலைப் பற்றி அன்றைக்கு 1920 களில் இந்த நாவல் விவரிக்கிறது ஒரு மனிதனின் கலையை உடலில் இருந்து பிரித்த பின்னரும் உயிருடன் வைத்திருப்பதை நூலாசிரியர் கற்பனை செய்தார் இன்றைய இந்தக் கற்பனை உறுப்பு மாற்று மருத்துவம் உயிர்காக்கும் தொழில்நுட்பம் நரம்பியல் உயிரிப் பொறியியல் மனித உடல் பாதுகாப்பு ட்ரான்ஸ்யூமனிசம் என்று பல்வேறு துறைகளை நினைவூட்டுகிற ஒரு விஷயமாக இருக்கிறது.
ஆனால் பெல்யாயேவ்வின் உண்மையான கேள்வி தொழில்நுட்பம் பற்றியது மட்டுமல்ல அறிவியல் உயிரை காப்பாற்ற முடியும் ஆனால் மனித சிந்தனை மரபை மனிதனுக்கென்று உருவாக்கி நாம் வைத்திருக்கும் சுயமரியாதையை காப்பாற்ற முடியுமா.. அவரது அம்பீபியன் மேன் என்கிற நாவல் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அற்புதம் ஒரு மனிதன் நீருக்கடியில் வாழக்கூடிய வகையில் அவனுடைய உடல் உறுப்புகளை மாற்றி அமைக்கிறது விஞ்ஞானம்.. அதற்காக நீங்கள் உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் உங்களுக்கு கைகளை எடுத்து விட்டு மீன்களின் துடுப்புகளைக் கொடுக்கிறார்கள்.. கடல் குதிரைகளைப் போல தன் உடலை மாற்றிக் கொள்வதற்கு மனிதர்கள் போய் பெரிய வரிசையில் நிற்கிறார்கள்.. இந்தக் கற்பனை இன்றைய மரபணு பொறியியல் மனித மேம்பாட்டுத் தொழில்நுட்பம் போன்றவைகளை நினைவுபடுத்துகிறது. பெல்யாயேவ் தொழில்நுட்ப சாத்தியங்களை மனித உணர்வுகளுடன் இணைத்தார் இதனால் அறிவியல் புனைகதை அறிவியல் தகவல்களின் தொகுப்பு என்பதிலிருந்து உருமாறி மனிதர்களைப் பற்றிய சுவாரஸ்யமான இலக்கியம் என்கிற நிலைக்கு உயர்த்தப்பட்டது.
அலெக்ஸி டால்ஸ்டாய் அறிவியல் புனைவுகள் எழுதியதை இன்றைக்கு சொன்னால் நம்ப மாட்டார்கள் ஆனால் அன்று அப்படி ஒரு போக்கு சோவியத் இலக்கியத்தில் உருவான பொழுது அது யாரையும் விட்டு வைக்கவில்லை.. அலிடாAELITA என்கிற முக்கியமான அறிவியல் புனைகதை நாவலை அவர் எழுதினார்.. செவ்வாய் கிரகம் காதல் புரட்சி வேற்றுகிரக நாகரீகம் அரசியல் என்று இந்த ஒரு புத்தகம் அனைத்தையும் பற்றி பேசுகிறது.. நான் AELITA வை ஒரு திரைப்படமாகத்தான் பார்த்தேன்.. சோவியத் அறிவியல் புனைகதை சினிமாவின் முக்கியப் படைப்பாக அது உருவெடுத்தது.. நாவல் வெளிவந்த ஆண்டு 1924. அதே வருடத்தில் அது படமாக வந்தது பெரிய செய்தி ஆகும்.
சோவியத் அறிவியல் புனைகதைகளின் அடிப்படை முரண்பாடுகளில் ஒன்று அறிவியல் மனிதனை விடுதலை செய்யலாம் ஆனால் அதே அறிவியல் மனிதனை அழிக்கும் ஆயுதமாகவும் மாறலாம் என்பதை மீண்டும் மீண்டும் அவர்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்கள்.. தொழில்துறை அறிவியல் புனைகதையின் வித்தகர் என்று போற்றப்படும் கிரிகரி அடாமாவு (GREGORY ADAMOV) தொழில்துறை வளர்ச்சியையும் தொழில்நுட்பத்தையும் மையமாகக் கொண்ட அறிவியல் கதைகள் 100 க்கு மேல் எழுதியிருக்கிறார்.. த கன்கரர்ஸ் ஆஃப் த அண்டர்கிரௌண்ட்.. த மிஸ்டரி ஆஃப் டூ ஓஷன்ஸ்.. இவை இரண்டும் மிக மிக முக்கியமானவை.. குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவை.
த மிஸ்டரி ஆஃப் டூ ஓஷன்ஸ் நீர்மூழ்கிக் கப்பல்கள் கடலியல் பொறியியல் மற்றும் உலகளாவிய சாகசத்தை இணைக்கும் படைப்பு இங்க அறிவியல் என்பது தனி மனித மேதையின் சாதனை அல்ல அது கூட்டு மனித முயற்சியின் முக்கியமான விளைவாக முன்வைக்கப்படுகிறது.. பொதுவான எதிரிகள் அல்லது வேற்றுகிரக சிக்கல்கள் அல்லது கடலடியிலிருந்து வெளிவருகின்ற வெப்பம் அல்லது மனித இனத்தையே அழிப்பதற்கு துடிக்கின்ற இயற்கையின் சீற்றம் போன்ற வழிகளின் பொழுது தனி மனித மேதையின் சாதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை மனிதன் சமூகமாக கூட்டு மனித முயற்சியின் மூலமே பூமியை வெற்றிக் கொள்ள முடியும் பிரபஞ்சத்தை வெற்றிக் கொள்ள முடியும் என்பதை மீண்டும் மீண்டும் இவரது கதைகள் முன்வைத்தன.
தொழில்துறையின் எதிர்காலம் குறித்து பல புனைகதைகள் பேசுகின்றன பொறியாளர்கள் தொழிலாளர்கள் ஆய்வகங்கள் தொழிற்சாலைகள் மின்சாரம் போக்குவரத்து அறிவியல் கல்வி என்று அவர்கள் எதையும் விட்டு வைக்கவில்லை ..
1950-60 கலில் சோவியத் அறிவியல் புனைகதை என்பது ஸ்டாலினுக்கு பிந்தைய மாற்றமாக பார்க்கப்படுகிறது..1953 ஆம் ஆண்டு ஜோசப் ஸ்டாலின் இறந்த பிறகு சோவியத் கலாச்சாரத்தில் ஏற்பட்டTHAW எனும் தளர்வு. அறிவியல் புனைகதைகளுக்கு புதிய வாய்ப்புகளை திறந்துவிட்டது.. அறிவியல் புனைகதை வெறும் தொழில்நுட்பக் காட்சி என்பதிலிருந்து மாறி தத்துவ பிரச்சனைகளை நோக்கி செல்லத் தொடங்கியது..
அப்போதைய மாபெரும் எழுச்சியின் முக்கிய எழுத்தாளராக நான் பார்ப்பது இவன் எஃப்ரமாவ் ( IVAN YEFREMOV). பன்முகம் கொண்டவர் எப்ரமாவு தொல்லுயிரியல் அறிஞர் எழுத்தாளர் அறிவியலாளர் தத்துவ சிந்தனையாளர்.. இவர் டெஃபானமி என்கிற துல்லுரியல் அறிவியல் துறையில் முக்கிய பங்கு வகித்த விஞ்ஞானி.. இவரது கதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது ஆன்ட்ரிமொடா எனும் நாவல்.1957 வெளிவந்தது என்றாலும் இன்றைக்கு வாசித்தாலும் தற்போதைய சூழலில் பொருத்திப் பார்க்க மிக மிக அற்புதமான எழுத்து என்று அதனை முன்மொழிவேன்..
ஆண்ட்ரிமொடா சோவியத் அறிவியல் புனைக்கதையின் மிக முக்கிய படைப்புகளில் ஒன்று அது தொழில்நுட்ப சாகசத்தை கடந்து ஒரு மேம்பட்ட மனிதனாக அரீகம் எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பிக் கொண்டது இந்த எதிர்கால உலகில் அறிவியல் கல்வி ஒத்துழைப்பு மனித விடுதலை விண்வெளி ஆய்வு சமூக முன்னேற்றம் ஆகியவற்றை எளிமையாக எழுதிச் செல்கிறார் எப்ரமாவு. மண்டைய பூமி எப்படி இன்றைய மனிதனாக மாறுகிறது எதிர்கால விண்வெளி நாகரீகம் எப்படி இருக்கும் போன்றவைகளை ஒரு தொல்லியல் அறிஞராக மனித வரலாறு என்பது பூமியின் கோடிக்கணக்கான ஆண்டுகள் பின்னணியில் மிக சிறிய தருணம் என்பதை கோடிட்டுக் காட்டுகின்ற நாவல் இது. ஆண்ட்ரிமொடா நட்சத்திர கூட்டங்களுக்கு சென்று அப்படிப்பட்ட ஒரு நாகரீகத்தை கட்டமைப்பவர்கள் ஆண்கள் அல்ல பெண்கள்.
ஃபென்யடிகா என்று ரஷ்யா அழைக்கும் அறிவியல் துணைக்கதைகளை வடிவமைத்து விண்வெளி யுகத்தின் நம்பிக்கை தத்துவ விசாரணை உளவியல் ஆழத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய பெண் ஆளுமைகளையும் நாம் விட்டுவிடக் கூடாது.. வேலன்ட்டினா ஜீரவ் லியோவா. அவர்களில் குறிப்பிடப்பக்கவும் இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் சோவியத் அறிவியல் புனைகதை உலகின் பரவலான அங்கீகாரத்தைப் பெற்ற ஆளும் இவர்.. நான் இவரது கதைகளில் த அஸ்ட்ரோநாட் படித்திருக்கிறேன் இன்னொரு படைப்பு சியேமா
2023 ஆம் ஆண்டு காலமான ஓல்கா லாரியோநோவா பற்றி ஏற்கனவே நான் தனியாக எழுதியிருக்கிறேன் கிளிமஞ்சாரோ சிகரத்திலிருந்து ஒரு சிறுகதை என்கிற ஒரு கதையும் பயனற்ற கிரகம் என்கிற ஒரு சிறுகதையும் இவரை கவித்துவமான ஆழ்ந்த தத்துவார்த்த அறிவியல் புனைகதை எழுத்தாளராக உலக அளவில் உயர்த்தியது.
ஹரியத்னா க்ரோமாவா ஒரு முக்கிய விமர்சகராகவும் இருந்தார் வைரஸ் கருப்பொருளைக் கொண்ட விஆர் ஃப்ரம் த சோலார் சிஸ்டம் போன்ற படைப்புகள் மிக மிக முக்கியமானவை ஒரே ஒரு வைரஸ் தாக்குதல் மூலம் தனி மனிதர்கள் ஒரு சமூகமாக உணரப்படுவதை அறிவியல் புனைகதைகளில் முதலில் விதைத்தவர்.. மேக்ஸ் ஃப்ரை என்ற புனைப்பெயரில் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் ஸ்வெட்லானா இந்த பெண்ணிய அறிவியல் புனைகதை என்கிற விஷயத்தை தொடர்ந்து இப்போது எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
இந்த இடத்தில்தான் ஸ்ட்ரகாட்ஸ்கி இரட்டை எழுத்தாளர்கள் அறிமுகமாகிறார்கள்.. அற்கடி மற்றும் போரிஸ் என்கிற இந்த சகோதரர்கள் இருவரும் இணைந்து இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சோவியத் அறிவியல் புனைகதை எழுத்தாளர்களாக அறியப்பட்டார்கள்.. ரெண்டு புத்தகங்கள் குறித்து கண்டிப்பாக நாம் இங்கே குறிப்பிட வேண்டும் ஒன்று சனிக்கிழமை அன்று தொடங்கும் திங்கள்.. இந்த நாவல் அறிவியல் மாந்திரீகம் அலுவலக அதிகாரம் நிறுவனப் பண்பாடு ஆகியவற்றை ஒன்றாக இணைத்து சோவியத் நிர்வாக அமைப்பை நையாண்டி செய்கிறது.. மிக சிறந்த நகைச்சுவை நாவல்.. இன்னொரு பிரபலமான படைப்பு சாலை ஓரத்து பிக்னிக்.. ஒரு மர்மமான வேற்றுகிரக நிகழ்வுக்குப் பிறகு பூமியில் சில இடங்கள் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத பகுதிகளாக மாறுகின்றன.. நாம் இதுவரை பார்த்திராத பொருட்கள் அங்கே கிடைக்கின்றன அவற்றை உருவாக்கியது யார் எதற்காக அவற்றின் நோக்கம் என்ன மனிதர்களுக்கு புரியவில்லை வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு பிக்னிக் வருவதாக கற்பனை செய்யப்பட்டிருக்கும் இந்த சாகசக் கதையில் அவர்கள் மனிதர்களை சந்திக்கவே வேண்டிய அவசியம் இல்லை அவர்கள் மனிதர்களை கவனித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை மனிதன் ஒன்றும் ஒரு மிகப்பெரிய உயிரியல்ல சர்வ சாதாரணமாக அவர்கள் சுற்றுலா முடிந்த பிறகு விட்டுச் சென்ற குப்பைகளை ஓடிப் போய் மனிதர்கள் எடுத்து பயன்படுத்திக் கொள்கிறார்கள்.. என்கிற வகை நையாண்டி இந்த கதையின் ஊடாக இருப்பதை பார்க்கலாம் இந்த பிக்னிக் எல்லைகள் மனித அறிவின் எல்லைகளாக உருவகம் பெறுகின்றன மனிதன் தன்னால் புரிந்து கொள்ள முடியாத தொழில்நுட்பத்தை எதிர்கொள்கிறான் இது இயற்கை நிகழ்வா இல்லையா என்பது குறித்த மிகப் பெரிய விவாதத்தை அறிவியலும் தத்துவமும் மேற்கொள்வது பல பக்கங்களுக்கு விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் அறிவியல் புனைகதை உலகத்தை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்த கிர் பெலிச்சவ், அலெக்சாண்டர் கஸண்ட் சேவ் கிரிகரி மார்டினாவ் போன்ற எழுத்தாளர்களை குறிப்பிட வேண்டும் அறிவியல் சோதனைகள் இயந்திரங்கள் செயற்கை நுண்ணறிவு மனிதன் இயந்திரம் உறவு ஆகியவற்றை பெரியவர்களை கடந்து குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்கிறார்கள்.. இன்றைக்கு கூட ஒரு கைபேசியை பெரியவர்களை விட குழந்தைகள் லாவகமாக கையாள்வதை நம்மால் பார்க்க முடியும் நகைச்சுவை நையாண்டி கலந்த அறிவியல் புனைவுகளுக்குப் பெயர்பெற்ற இல்யா வொர்க்ஷாப்ஸ்கி.. அதிகாரம் மற்றும் அரசினுடைய அமைப்புகளில் அறிவியல் தொழில்நுட்பம் ஏற்படுத்துகின்ற அபத்தங்களை வெளிப்படுத்தினார்.
அறிவியல் கண்டுபிடிப்புகளின் உச்சம் மனித ஒழுக்கவியல் விளைவுகளை எப்படி ஏற்படுத்தும் என்பதை செவர் கேன்சர்ஸ்கீ.. மிட்ரி பிலாங்கின்.. போன்ற எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கினார்கள் மனிதன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை மேம்பட்ட நுண்ணறிவு என்று அறிவித்து விட முடியாது உளவியல் அறிவுசார் தளங்கள் போன்றவை அறிவியல் மயமாகும்பொழுது அப்படி செய்வது ஒழுக்க ரீதியில் சரியா என்பதை போன்ற பல கேள்விகள்.. உதாரணமாக ஒரு ஆணின் மரபணு மாற்றத்தை கட்டாயமாக வரவழைத்து ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஒரு உலகத்தை கற்பனை செய்யும் சில கதைகள் நம்மை அதிர வைக்கின்றன..
இப்படித்தான் அறிவியல் புனைகதை உலகம் ஒரு தத்துவ ஆய்வுக்கூடமாக மாறியது இது சோவியத் அறிவியல் புனைகதை உலகிற்கே உரிய தனித்துவமாகும்.. தொழில்நுட்பத்தால் என்ன செய்ய முடியும் என்பதை ஏனைய அறிவியல் புனைகதை உலகம் கேட்டுக் கொண்டிருந்த பொழுது தொழில்நுட்பத்தை மனிதன் எதற்காக பயன்படுத்த வேண்டும் என்கிற கேள்வியை சோவியத் அறிவியல் கேட்டது ஒரு பொறியியலாளர் ஒழுக்கவியல் கதாபாத்திரமாக மாறியதை நாம் சோவியத்தினுடைய அறிவியல் புனைகதைகளில் பார்க்கலாம் ஒரு பொறியியலாளர் சர்வாதிகார அரசுக்காக வேலை செய்வாரா ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு ஆயுதமாக மாறினால் என்ன ஆகும் அது சரிதானா தொழில்நுட்ப அமைப்புகள் மனிதர்களை விட சக்தி வாய்ந்தவையாக மாறுவதை ஒரு பொறியியலாளர் மனிதனாக இருந்து பார்க்கும்பொழுது அனுமதிப்பாரா.. போன்ற கேள்விகளை உலகின் வேறு எங்குமே அறிவியல் புனைகதை உலகம் எழுப்பிக் கொண்டதாக நீங்கள் பார்க்க முடியாது
இரண்டாவது முக்கிய விஷயம் சோவியத் அறிவியல் புனை கதையின் மிக முக்கியமான முரண்பாடு.. தனி மனிதன் VS சமூகம். சம்யாட்டின் முதல் ஸ்ட்ரகாட்ஸ்கி வரை இந்த கேள்விகள் அவர்களுடைய மனதில் தொடர்ந்து எழுந்து கொண்டிருந்ததை நீங்கள் உணர முடியும் மேம்பட்ட சமூகம் UTOPIA மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சமூகம் DYSTOPIA இரண்டுக்கும் இடையே சோவியத் அறிவியல் கதை உலகம் ஊசலாடிக் கொண்டிருந்தது என்று பிற்காலத்தினுடைய இலக்கிய விமர்சகர்கள் எழுதுகிறார்கள் எதிர்காலம் நிகழ்காலத்தின் கண்ணாடியாக மாற்றப்படுகிறது ரஷ்ய அறிவியல் புனை கதையின் மிகச்சிறந்த இலக்கிய உத்திகளில் ஒன்று நிகழ்காலத்தையே எதிர்காலமாக எழுதுவது வேறு கிரகம் வேறு நூற்றாண்டு வேறு நாகரீகம் ஆனால் உண்மையில் எழுத்தாளர் பேசுவது தன் சொந்த சமூகம் பற்றித்தான்.. வேற்றுகிரக வாசிகள் பற்றிய முதல் 15 நாவல்களும் சோவியத் யூனியனிலிருந்து வெளிவந்தவைதான்.
சோவியத் அறிவியல் புனைகதை உலகம் இந்த உலகிற்கு கொடுத்தது ஒன்றிரண்டல்ல..1957 ஆம் ஆண்டு ஸ்புட்னிக் என்கிற செயற்கைக்கோள் விண்ணை நோக்கி சென்றது ஆனால் அதுகுறித்து சோவியத் எழுத்துலகம் 1912 அம்மாண்டே பதிவு செய்துவிட்டது..

யூரிகேகரின் 1961 ஆம் ஆண்டு இந்த புவியிலிருந்து முதலில் விண்வெளிக்குப் பறந்த மனிதனாக மாறினார்.. ஆனால் சோவியத் அறிவியல் புனைகதை உலகம்.. இந்த நிகழ்வை ஒரு கதையாக1936 ஆண்டே பதிவு செய்துவிட்டது எழுத்தாளர்கள் விண்வெளியைக் கற்பனை செய்தனர் என்று சொல்வதை விட விண்வெளியிலிருந்து கதைகளை பதிவிறக்கம் செய்து சமூகத்தில் விதைத்தனர் இன்று தான் சொல்ல வேண்டும் விண்கலன்களை உருவாக்கியது ராக்கெட்களை அனுப்பியதும் மட்டுமல்ல மேம்பட்ட சமூகமாக இது மாற வேண்டும் என்பதை மனதில் வைத்து சோவியத் இலக்கியம் படைக்கப்பட்டது
மேம்பட்ட தொழில்நுட்பம் மட்டுமே நல்ல சமூகத்தை உருவாக்கி விடாது இதனால் உருவாகக் கூடியவை புதிய அதிகார வர்க்கம் புதிய கட்டுப்பாடுகள் புதிய சுரண்டல்கள் புதிய ஒழுக்க நெருக்கடிகள் இவற்றைக் கடந்து வர வேண்டும் என்றால் மனிதர்கள் உருவாக்கும் அல்லது பயன்படுத்தும் தொழில்நுட்பங்களின் விளைவுகளை பற்றி இலக்கியம் பேச வேண்டும் இன்றைக்கு செயற்கை நுண்ணறிவும் அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது இந்த சுயற்கை நுண்ணறிவு என்கிற தொழில்நுட்பத்தை எந்த நாடு தன் கையில் வைத்திருக்கிறதோ அதுதான் மனித சமூகத்தை ஆளப்போகிறது என்பதை முன்பு உணர்ந்து சீனாவும் அமெரிக்காவும் நடத்துகின்ற வியாபாரப் போட்டியை வேடிக்கை பார்ப்பவர்களாகத்தான் நாம் இருக்கிறோம்.
அனைத்து வகையான உலக அறிவியல் முன்னேற்றங்களையும் விதைக்க நாடு சோவியத் யூனியன்.. பிற்காலத்தின் வானியலாளரான கார்ல் சேகன்.. அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்.. இவர்கள் எல்லாம் சோவியத் காலத்தில் அங்கு சென்று வந்த பிறகு தங்கள் அறிவியல் கருத்துக்களை தத்துவங்களை கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர்கள்.. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான எழுத்தாளர்கள் விக்டர் பெலவின் போன்றவர்கள் சைபர் கலாச்சாரம் நுகர்வு வாதம் முதலாளித்துவம் பௌத்த தத்துவம் மெய்நிகர் உண்மை மனித அடையாளம் போன்றவற்றை எழுதினார்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களே டிமிட்ரி குல்ஷாவ்ஸ்கி, செர்ஜி லுக்அன்என்கோ, போன்றவர்கள் சோவியத் யூனியன் விட்டுச் சென்ற அறிவியல் புனைகதை உலகின் தத்துவார்த்த எதிர்காலத்தை இன்றைக்கும் சமைத்துக் கொண்டிருப்பது நம்பிக்கை தரும் சூழலாகும்.
மனித குலம் தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி தன்னைத் தானே கற்பனை செய்து பார்த்த வரலாற்றின் முக்கிய அத்தியாயம் சோவியத் அறிவியல் புனைக்கதை சரித்திரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சோஷலிச புரட்சியின் மூலம் இந்த உலகிற்கு சமத்துவ நாடு எப்படி இருக்கும் என்பதை போதித்த சோவியத் யூனியன் அறிவியல் புனைகதை என்பதன் தொடக்கப் புள்ளியாக மட்டும் இருந்து விடாமல் விண்வெளியை நோக்கி கனவுகளை பிரம்மாண்டமாக உருப்பெருக்கிக் கொள்ள மனிதனுக்கு உதவிய தளமாக அமைந்தது ஒரு புறம் ஒட்டுமொத்த மனித சமூகம் ஒரு குடும்பமாகி எதிர் நோக்கி இருக்கின்ற.. ஒன்றாக வரலாற்றின் தொடர்ச்சியை உருமாற்றிய அறிவியல் சாதனை மறுபுறம்.. உலகம் முழுவதும் இன்றைக்கு அறிவியல் புனைகதை உலகம் அதன் தொடர்ச்சியாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது மனிதனே இன்றைக்கு அறிவியல் புனைகதை ஒன்றுக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது இந்த முப்பரிமாணத்தின் மூன்றாம் பக்கம்.
கட்டுரையாளர்:
ஆயிஷா இரா.நடராசன்
நன்றி: திசை எட்டும் காலாண்டு இதழ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

