மிகக் கடுமையான வெப்பநிலை குறையப் போவதில்லை
உலக வெப்பநிலை பதிவு செய்யப்படத் துவங்கிய 1850ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் கடுமையான வெப்பம் மிகுந்த ஆண்டாக 2023ஆம் ஆண்டு இருந்துள்ளது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 2023ஆம் ஆண்டு வெப்பநிலை 2016ஆம் ஆண்டில் காணப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையை முறியடித்துள்ளது. அது ஒன்றும் அசாதாரணமான நிகழ்வாக இருக்கவில்லை. இதுவரையிலும் இல்லாத அளவிற்கு வெப்பம் கூடுதலாக மிகக் கடுமையாக இருந்த பத்து ஆண்டுகளை தன்னகத்தே கொண்டதாக 2014-23 காலகட்டம் இருந்திருக்கிறது. 2023ஆம் ஆண்டிற்கான சராசரி உலக வெப்பநிலை இருபதாம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையைக் காட்டிலும் 1.18 டிகிரி செல்சியஸ் அதிகமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கான சராசரி வெப்பநிலையைக் காட்டிலும் சுமார் 1.4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்துள்ளது. இதுபோன்ற வெப்பநிலை அதிகரிப்பு ‘குறிப்பிட்ட வரம்பிற்கு அப்பால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் மாற்ற முடியாதவையாக மாறி விடலாம்’ எனக் குறிப்பிட்டு பாரிஸ் ஒப்பந்தம் நிர்ணயித்த மிக மோசமான 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வரம்பிற்கு அருகே சென்றிருக்கிறது. கடந்த ஆண்டு காணப்பட்ட வரலாறு காணாத வெப்பம் – தற்போது உணரப்படும் வகையில் – 2024ஆம் ஆண்டு வரை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு மார்ச் முதல் மே, இப்போது ஜூன் வரை மேற்கு ஆப்பிரிக்கா, சஹேல், தென்னாப்பிரிக்கா, தெற்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு அமெரிக்கா, தெற்கு ஐரோப்பாவில் குறிப்பாக கிரீஸ், இத்தாலி என்று உலகின் பல்வேறு பகுதிகளில் வற ட்சி மற்றும் காட்டுத்தீயுடன் சேர்ந்து கடுமையான, நீடித்த அதீத வெப்ப நிலை பெரும்பாலும் காணப்பட்டது. ஐம்பது டிகிரி செல்சியஸ்க்கு அதிகமான வெப்பநிலையால் மேற்கு ஆசியாவில் சவூதி அரேபியா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது, வருடாந்திர ஹஜ் யாத்திரையின் போது இந்த ஆண்டு மெக்காவில் ஐநூறுக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் உயிர் இழந்தார்கள் என்று
கூறப்படுகிறது. பாகிஸ்தானிலும் ஐம்பது டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலை சில நாட்களுக்கு இருந்தது.
மிகக் கடுமையான வெப்ப நிலையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான, நீடித்த வெப்ப அலைகளால் வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியா மூன்று வாரங்களுக்கு மேல் பாதிப்படைந்தது. அங்கே சில பகுதிகளில் ஐம்பது டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலை இருந்தது. கோவிட் தொற்றுநோய்களின் போது உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டு மோசமான நிலைமை நிலவியதைப் போன்று, 2024 மார்ச் மாத தொடக்கத்திலிருந்து நாற்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சுமார் நூற்றுப் பத்து பேர் மரணமடைந்துள்ளார்கள் என்று சுகாதார அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களுக்கு வெளியில் உருவான வெப்பம் தொடர்பான நோய் மற்றும் இறப்பு போன்ற கூடுதல் பாதிப்புகளை ஒருவரால் அனுமானிக்க மட்டுமே முடியும்.
கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலவி வரும் கடுமையான வெப்பநிலை இந்த ஆண்டு மிக மோசமான அளவிற்கு அதிகரித்துள்ளது சந்தேகத்திற்கு இடமின்றி காலநிலை நெருக்கடி நன்கு நடைமுறைக்கு வந்திருப்பதையே சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. உலக வெப்பநிலை, மோசமான வானிலை ஆகிய இரண்டும் எதிர்காலத்தில் மிக மோசமான நிலைக்குச் செல்லும் என்றே அறிவியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் அவர்கள் வரலாற்றில் தொடர்ந்து அதிகரித்திருக்கும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் கட்டமைத்திருக்கும் வேகத்தின் காரணமாக – தேவையான அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் தற்போதைய வெப்ப உமிழ்வுகள் கொண்டு வரப்பட்டாலும்கூட – வெப்ப அலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மோசமான நிகழ்வுகள் அடுத்த இருபதாண்டுகளுக்குத் தொடரும் என்றே எதிர்பார்க்கின்றனர்.
காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் வெப்ப உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச அளவிலான முயற்சிகளுக்கு அப்பால் இந்தியாவும் பிற நாடுகளும் மிகப் பரவலான வெப்பம் தொடர்பான நோயுறும் தன்மை, மரணம், உற்பத்தித் திறன் இழப்பு, எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதான உடல்நலப் பாதிப்புகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையிலேயே தற்போது இருந்து வருகின்றன.
எல் நினோ
கடல் வெப்பநிலை-வளிமண்டல அழுத்தம் இணைந்து உலகளாவிய காலநிலையை இயக்கும் எல் நினோ (ஸ்பானிஷ் மொழியில் குழந்தை இயேசுவுக்கு வழங்கப்பட்ட பெயர் அல்லது பொதுவாக ஆண் சிசுவைக் குறிக்கும்) தெற்கு அலைவால் அதீத வெப்பம் தீவிரமடைவதாக அறியப்படுகிறது. எல் நினோ வெதுவெதுப்பான நிலைமை மற்றும் எல் நினா குளிர்ந்த நிலைமை ஆகியவற்றுக்கு இடையே மாறி மாறி வருவதாக அது உள்ளது.
உலகளாவிய அதிக வெப்பநிலை அல்லது தற்போதைய வெப்ப அலைகளுக்கு இந்த தெற்கு அலைவு நிகழ்வு காரணமாக இல்லை என்றாலும், அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கூடுதல் காரணியாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டாக அதிக வெப்பத்துடன் இருந்துள்ள கடந்த பத்தாண்டுகளும் தெற்கு அலைவுகளின் வெதுவெதுப்பான, நடுநிலை மற்றும் குளிர்ந்த கட்டங்களின் கலவையாகவே இருந்துள்ளன.
இந்த ஆண்டின் நடுப்பகுதி வரையிலும் எல் நினோ நிலைகளின் நீடிப்பு தீபகற்ப இந்தியாவின் இதுவரையிலான நீண்ட காலச் சராசரியைக் காட்டிலும் குறைவான பருவமழைக்கே பங்களித்துள்ளது. சுமார் இருபது சதவிகிதம் குறைவான மழைப்பொழிவே ஜூன் மாதத்தில் கிடைத்துள்ளது. இதுவரையிலும் கிடைத்திருக்கும் குறைவான மழைப்பொழிவு, குறைவான பருவமழை போன்றவை கடுமையான வெப்ப நிலைகளை அதிகப்படுத்தி கோடை விதைப்பு, கோடைகாலப் பயிர்களுக்கு அச்சுறுத்தலை விடுத்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வரும் தற்போதைய எல் நினோ வெதுவெதுப்பான நிலைமை, இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நடுநிலைக்கு மாறலாம் என்றும், அதற்குப் பின்னர் குறைவான வெப்பநிலை மற்றும் அதிகமான மழைப்பொழிவுடன் தொடர்புடைய குளிர் நிலைமைக்கு அது மாறும் என்றும் காலநிலை அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.
கடுமையான வெப்பத்தைப் புரிந்து கொள்வது
அரசின் நடவடிக்கைகளைத் தூண்டும் வெப்ப அலை நிகழ்வுகளைப் பொறுத்தவரை இந்தியாவிடம் மிகவும் கடினமான, அதிகம் உதவிடாத வரையறையே இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலையானது நாற்பது டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையைத் தாண்டி இயல்பைக் காட்டிலும் 4.5 – 6.4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் போது அல்லது அதிகபட்ச வெப்பநிலையாஅந்து நாற்பத்தைந்து டிகிரி செல்சியஸ் என்ற அளவைத் தாண்டி குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் போது வெப்ப அலை வீசுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. வெப்ப அலைக்கான நாற்பது டிகிரி செல்சியஸ் எனும் இந்த வரம்பு மலைப்பகுதிகளில் முப்பது டிகிரி செல்சியஸ், கடலோரப் பகுதிகளில் இயல்பிலிருந்து 4.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக – முப்பத்தியேழு டிகிரி செல்சியஸ் என்று குறைத்தே மதிப்பிடப்படுகிறது.
இதுபோன்ற வரையறை பல காரணங்களால் திருப்திகரமாக இருப்பதில்லை. அதீத வெப்பம் என்பது வெறுமனே வானிலை தொடர்பான நிகழ்வாக மட்டுமே இருப்பதில்லை. அது தாங்கள் வசிக்கின்ற பகுதிகளில் தங்களுக்குள்ள வழக்கமான அனுபவத்துடன் ஒப்பிடும்போது மனிதர்களால் (மற்றும் விலங்குகள், பறவைகள் போன்றவை) உணரப்படுகின்ற வெப்ப நிலையாகவும் இருக்கிறது. அந்தந்தப் பகுதிக்கென்று இருக்கும் வரையறைகளே – பயன்படுத்துவதில் சிரமங்கள் இருக்கும் என்றாலும் – சிறப்பானவையாக இருக்கும்.
இந்த அதிகாரப்பூர்வ வரையறை, மனித உடலில் அதிக வெப்பநிலையின் விளைவுகளை அதிகரிக்கச் செய்கின்ற காற்றில் உள்ள ஈரப்பதத்தைக் கணக்கிலே எடுத்துக் கொள்ளாது. உலர் வெப்பம் உடலிலிருந்து நீரிழப்பு ஏற்படுவதைத் தூண்டுகிறது. உடலிலிருந்து வெளியேறும் வியர்வை ஆவியாகி அதன் விளைவாக உடலைக் குளிர்வித்து அதிக வெப்பநிலையைச் சமாளிக்கும் உடல் திறனை காற்றில் அதிக அளவிலே இருக்கும் ஈரப்பதம் குறைத்து விடும். அதன் காரணமாக உடல் குளிர்ச்சியடைய முடியாது என்பதால் உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாது இதய-ரத்த ஓட்ட அமைப்பு மற்றும் முக்கிய உறுப்புகளின் மீது அழுத்தமும் ஏற்படுகிறது. மரணம்கூட அதன் விளைவாக நேரிடக்கூடும்.
இந்த ஆண்டு இந்தியாவில் காற்றில் உள்ள ஈரப்பதமானது, தட்பவெப்பம் மற்றும் வளிமண்டல நிலைகளின் கலவையால் மிக அதிகமாகவே இருக்கிறது. கோடையின் தொடக்கத்தில் அரபிக்கடலில் நிலவிய நிலைமை அதிக ஈரப்பதம் நிறைந்த காற்றை இந்தியத் தீபகற்பத்திற்குக் கொண்டு வந்து வெப்பநிலையைத் தணித்தது. ஆனாலும் அது காற்றில் உள்ள ஈரப்பதத்தை அதிகப்படுத்தும் காரியத்தையே செய்தது. வங்க விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளி மேற்கு வங்கம், ஒடிசாவிற்கு கூடுதல் ஈரப்பதத்தை கொண்டு வந்ததால், அங்கே வெப்ப அலைகள் வலுவிழந்தன. மத்தியதரைக் கடலில் இருந்து மேற்குத் திசையில் ஏற்பட்ட சலனங்கள் வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியப் பிராந்தியத்தில் நிலவிய அதிக வெப்பத்துடன் ஈரப்பதத்தைக் மிண்டு வந்து சேர்த்தன.
பல நாடுகளும் இதன் காரணமாகவே வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை ஒற்றை எண்ணுடன் இணைக்கும் வெப்பக் குறியீட்டைப் பயன்படுத்தி வருகின்றன. வெவ்வேறு ஈரப்பதத்தில் குறிப்பிட்ட வெப்பநிலையை நாம் எவ்வாறு உணர்வோம் என்பதை இந்த வெப்பக் குறியீடு அட்டவணை காட்டுகிறது. எடுத்துக்காட்டாக இந்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் அதிக ஈரப்பதத்துடன் இருந்த கடலோரச் சென்னையில் வெப்பக் குறியீடு அதிக அளவில் இருந்தது. அதாவது தொடர்ந்து அதிக வெப்பநிலையுடன் இருந்த தில்லியைக் காட்டிலும் சென்னையில் கூடுதல் வெப்பம் இருந்ததாக உணரப்பட்டது. எனவே கடுமையாக வரையறுக்கப்பட்டிருக்கும் வெப்பநிலை அளவுருவைக் காட்டிலும் இந்த வெப்பக் குறியீடே அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கான மிகச் சிறப்பான, உள்ளூர்மயமாக்கப்பட்ட நடவடிக்கைகளை வழங்குவதாக இருக்கும்.
தற்போதைய வெப்ப அலைகளின் போது குறைந்தபட்ச வெப்பநிலையானது இயல்பைக் காட்டிலும் கூடுதலாக குறிப்பாக நகர்ப்புறங்களில் இருக்கும் என்று காலநிலை அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். அவர்கள் அது குறித்ததொரு சிறப்பு நிகழ்வை விவாதித்துள்ளனர். எடுத்துக்காட்டாக நாற்பது டிகிரி செல்சியஸ்களின் குறைவான பகுதி மற்றும் நடுப்பகுதிக்கு இடையில் வட இந்தியாவின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இருந்த போது, குறைந்தபட்ச வெப்பநிலை அங்கே முப்பது டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக இருந்துள்ளது. இவ்வாறு அதிகமாக இருக்கும் குறைந்தபட்ச வெப்பநிலையானது, பகல் நேர வெப்பநிலையின் தாக்கத்திலிருந்து உடல் தன்னை மீட்டெடுத்துக் கொள்வதை அனுமதிப்பதில்லை. அது உடல் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
நகர்ப்புற வெப்பத் தீவுகள் (UHI) சிறப்பான மற்றும் கூடுதல் அளவு சிக்கல்களை உருவாக்குகின்ற நகர்ப்புறப் பகுதிகள் தடுப்பு நடவடிக்கைக்கான வாய்ப்புகளையும் வழங்குகின்றன. நகரங்கள் மற்றும் சிறுநகரங்கள் தங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைக் காட்டிலும் பெரும்பாலும் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிக அளவிலான வெப்பநிலையை அனுபவிக்கின்றன. நகர்ப்புற வெப்பத் தீவு (UHI) விளைவு எனப்படும் ஒரு நிகழ்வே அதற்கான காரணமாக இருக்கிறது. கான்கிரீட் உள்கட்டமைப்பு மற்றும் கட்டிடங்கள், தார்ச்சாலைகள் மற்றும் பிற வகையான மேற்பரப்புகளாலேயே நகர்ப்புற வெப்பத் தீவு உருவாகிறது. பகலில் வெப்பத்தை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் இந்த வெப்பத் தீவுகள் பின்னர் அந்த வெப்பத்தை மீண்டும் சுற்றுப்புறச் சூழலுக்குள் பரவ விடுகின்றன. காற்றின் இயக்கத்தைத் தடுக்கும் வகையில் நகரங்களில் இருக்கின்ற உயரமான கட்டிடங்கள், நெரிசலான பகுதிகள் வெப்பம் மற்றும் காற்று மாசுகளை ஈர்த்து நகர்ப்புறங்களைச் சுற்றிலும் ஒரு வகையான குமிழுக்குள் தக்க வைத்துக் கொள்கின்றன. நகரப்பகுதிகளில் காணப்படும் அதிக அளவிலான குறைந்தபட்ச வெப்பநிலைக்கு இந்த நகர்ப்புற வெப்பத் தீவுகளே காரணமாக உள்ளன.
திட்டமிடப்படாத நகர்ப்புற மேம்பாடு மற்றும் நீரை உறிஞ்சி நீராவியாக்கும் செயல்பாடு மூலம் ஈரப்பதத்தை வெளியிடுவதன் மூலம் வெப்பநிலையைக் குறைப்பதில் பங்களித்து குளிர்ச்சியான சூழலை உருவாக்கும் அதே நேரத்தில் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டுள்ள தாவரங்களுடனான பசுமை வெளிகளின் அளவு குறைவது போன்றவற்றால் பிரச்சனை மேலும் மோசமடைகிறது. நீர்நிலைகள் குறைவதாலும் இதுபோன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்புகளுக்கு நுண்-காலநிலை நலன்களை வழங்கும் வகையில் பரவலாக சுமார் இருபது சதவிகித பசுமைவெளிகளை உறுதி செய்து கொள்வதன் மூலம் நகர்ப்புற வெப்பநிலையை இரண்டு முதல் இரண்டரை டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும்.
குளிரூட்டிகள், தானியங்கி வாகனங்கள் மற்றும் பிற இயந்திரங்களிலிருந்து வெளியாகின்ற வெப்பக் கழிவு நகர்ப்புற வெப்பத் தீவுகள் உருவாவதற்கான மற்றொரு முக்கிய பங்களிப்பை நகர்ப்புறச் சூழலில் செய்து வருகிறது. நகரங்களில் ஐம்பது சதவிகித மின்சாரம் குளிரூட்டிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் குளிரூட்டிகள் ஆற்றல் சேமிப்புத் திறன் கொண்டவையாக இருப்பதையும், இருபத்தியாறு டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பநிலையில் அவையனைத்தும் செயல்படுவதையும் உறுதி செய்கின்ற வகையிலான கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் நகர வெப்பநிலையை ஒன்றரை முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஆற்றல் சேமிப்புத் திறனுடைய கட்டிடங்களை உறுதி செய்வது, கூடுதல் பசுமைவெளிகளை உருவாக்குவது போன்ற செயல்பாடுகள் நகர்ப்புற வெப்பத் தீவை மட்டுப்படுத்த உதவலாம். ஆனாலும் நகர்ப் பகுதிகளில் கூடுதல் பசுமை வெளிகளை உருவாக்குவதற்கான இடத்திற்கான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன.
பாதிப்புகள்
வெப்பம் தொடர்பான நோய்களால் முதியவர்கள், கைக்குழந்தைகள், சிறார்கள், கர்ப்பிணிப் பெண்கள், ஏற்கனவே நோய்களுடன் குறிப்பாக இதய நோய்களுடன் இருப்பவர்கள் மிக எளிதில் பாதிக்கப்படுவார்கள் என்பதை எவராலும் உடனடியாகப் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பிரிவினர் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருப்பதற்கும், முடிந்தவரை அவர்கள் உடல் உழைப்பைத் தவிர்ப்பதற்கும், சரியான அளவில் நீரேற்றம் செய்து கொள்வதற்கும், வேறு பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பொது சுகாதார அமைப்புகள் உதவலாம் அல்லது அவ்வாறிருக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கலாம். பள்ளிக்கூடங்களை மிகக் கடுமையான வெப்ப அலைகளின் போது மூடுவதன் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவலாம்.
வெளிப்புறங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் கடினமான உழைப்பில் ஈடுபடுபவர்கள், சாலையோர வியாபாரிகள், தற்காலிக வேலைகளில் ஈடுபடுபவர்கள், விநியோகப் பணி செய்யும் தொழிலாளர்கள், ‘வியர்வை கடைகள்’ என்று மிகச்சரியாக அழைக்கப்படும் இடங்களில் பணி புரியும் அமைப்புசாராத் தொழிலாளர்கள், பணிப்பெண்கள், வீட்டு வேலை செய்பவர்கள் போன்றவர்கள் திறந்த வெளிகளில் வேலை செய்யும் போது கடுமையான வெப்பத்தை எதிர்கொள்கிறார்கள். வீடற்றவர்கள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர் போன்றவர்களும் நிவாரணம் எதுவுமின்றி மிகமோசமான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பிரிவினருக்கு கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாப்பைத் தருவது மட்டுமல்லாது அவர்கள் மீது சிறப்புக் கவனமும் செலுத்தப்பட வேண்டும். ஆனால் இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் அனைத்தும் மிகப் பலவீனமாக, ஒழுங்கற்றே இருந்துள்ளன.
வெப்பச் செயல் திட்டங்கள் (HAP)
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (NDMA) வெப்ப அலைகளுக்கு எதிர்வினையாற்றும் வகையில் தேசிய அளவிலான வழிகாட்டுதல்கள் வரையப்பட்டுள்ளன. அந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும், நகராட்சிகளும் வெப்பச் செயல்திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத்தில் அந்தச் செயல்திட்டம் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. அவையனைத்தும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன. வெப்பச் செயல் திட்டங்கள் முழுமையாகப் புதுப்பிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த வழிகாட்டுதல்களும், பெரும்பாலான வெப்பச் செயல் திட்டங்களும் கட்டுப்படுத்த முடியாமல் ஏற்கனவே நிகழ்ந்த மற்றும் உடனடியான எதிர்வினைக்கு அழைப்பு விடுக்கின்ற இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொள்வதற்கு உண்மையின் அடிப்படையில் பிரச்சனைகளை அணுகி எதிர்வினையாற்றுகின்ற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முத்திரையுடன் இருக்கின்றன. தற்போதுள்ள வெப்பச் செயல் திட்டங்கள் தாங்கள் உள்ளடக்கிக் கொண்டுள்ளவை மற்றும் நிறுவன ஏற்பாடுகள் ஆகிய இரண்டிலும் மாநிலத்திற்கு மாநிலம் பரவலாக வேறுபடுகின்றன. அதன் விளைவாக மேலே விவாதிக்கப்பட்டுள்ள வெப்ப அலை குறித்து முறைப்படுத்தப்பட்ட, கட்டமைக்கப்பட்ட வரையறையால் மேற்கொள்ளப்படும் நீண்ட கால நடவடிக்கைகள் உள்பட பெரும்பாலான நடவடிக்கைகள் தயாரிப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகளுக்கு சிறிதளவு அல்லது எந்தவொரு முக்கியத்துவமும் தராமலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரிந்துரைக்கப்படும் நடவடிக்கைகள் அதன் காரணமாக கலவையான பரிந்துரைகளாக, அதிகாரமற்ற நிறுவன ஏற்பாடுகளாக மட்டுமே இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக கட்டுமானத் தொழிலாளர்கள் மதியம் பன்னிரண்டு முதல் மாலை நான்கு மணி வரையிலான உச்ச வெப்ப நேரத்தைத் தவிர்த்தே வேலை செய்ய வேண்டும் என்று பல வெப்பச் செயல் திட்டங்கள் பரிந்துரைக்கின்றன. அந்த நேரத்தில் அந்த தொழிலாளர்களுக்கு குடிநீர், குளிர்ச்சியைத் தரும் ஏற்பாடுகளுடன் இருக்கும் தங்குமிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றைக் கட்டாயமாக்காதது அல்லது குறிப்பிட்ட அதிகாரிகள் அல்லது முகமைகளிடம் மீது பொறுப்பைத் தந்து விடுவது போன்ற செயல்பாடுகள் அந்த வழிகாட்டுதல்களைப் பயனற்றவையாக ஆக்கி வைத்துள்ளன.
இறுதியாக மக்களுக்கு – குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு நிவாரணம் மற்றும் வழிகாட்டுதலை வழங்குவது, அதிகாரிகளுக்கு சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுப்பது என்று தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், அமைப்புசாராத் தொழிலாளர்களுடன் பணிபுரிபவர்கள், மக்கள் அறிவியல் இயக்கங்கள், பிற குடிமைச் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்த பாணியில் செயல்பட்டு சுகாதார அமைப்புகளை, வெப்பச் செயல் திட்டங்களை வலுப்படுத்திட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. மிகக் கடுமையான வெப்பநிலை குறையப் போவதில்லை என்பதால், அதன் விளைவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளும், நகர்ப்புறங்களில் சாத்தியமான இடங்களில் வெப்பநிலையைக் குறைப்பதற்கான முயற்சிகளும் அவசியம் தேவைப்படுகின்றன.
டி.ரகுநந்தன் தில்லி அறிவியல் இயக்கம் மற்றும் அகில இந்திய மக்கள் அறிவியல் வலையமைப்பு போன்ற அமைப்புகளுடன் செயல்பட்டு வருகிறார்.
https://www.newsclick.in/extreme-heat-here-stay
நன்றி: நியூஸ்க்ளிக்
தமிழில்: தா.சந்திரகுரு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.