ஏழாவது விரல் (Ezhavathu Viral) – நூல் அறிமுகம்
இந்திய வரலாற்றில் முதன்முறையாக அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஆசிரியர்களை எழுத்தாளர்களாக மாற்றிய புத்தகம் என்று சொன்னால் “ஏழாவது விரல் (Ezhavathu Viral)” மற்றும் “முன்னத்தி ஏர்” புத்தகங்களையேச் சாரும். தொடர் வாசிப்பின் அடுத்த கட்ட நகர்வு எழுத்தாற்றலை வெளிக்கொணர்வது தான். அவ்வகையில் ஆசிரியர்களை மாணவர்களாக்கி தொடர் வாசிப்பில் ஈடுபடுத்தி , அவர்களை ஆசிரிய எழுத்தாளர்களாக மாற்றிய பணி இப்புத்தகத்தின் தொகுப்பாசிரியர் திரு.மு.சிவக்குமார் ஐயா அவர்களால் மட்டுமே சாத்தியமாகும்.
எந்த இயக்கத்தையும் எழுச்சி கொள்ளச் செய்ய ஏதேனும் ஒரு இதயம் துடிக்க வேண்டும் என்ற எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் கூற்றுப்படி, இங்கு திரு. மு.சிவக்குமார் என்பவரின் மனித இதயம் துடித்ததன் விளைவு வாசிப்பு இயக்கமாக இயங்கி, இடைவிடா வாசிப்பும் , அதனால் பிறந்த இந்த சிறுகதை தொகுப்பும் உயிர் கொண்டிருக்கிறது.
ஆசிரியர் ஒருவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு என்றால் அதில் எப்படியேனும் ஒருவரின் எண்ணத்தின் வெளிப்பாடே வெளிப்பட்டிருக்கும் . ஆனால் இங்கே கதம்பமாக பெண் கல்வி , பாலின சமத்துவம் , விளிம்பு நிலை மக்களின் கல்வி , அரசு பள்ளிகளின் தரம் , அறிவியல் புனைவு கதைகள், மரங்களின் முக்கியத்துவம் , உழைப்பின் பெருமை என பல வண்ண மலர்களால் கோர்க்கப்பட்ட கதம்ப மாலையை போல் இச்சிறுகதைத் தொகுப்பு அமைந்துள்ளது.
இனி கதம்ப மாலையிலுள்ள ஒவ்வொரு மலர்களையும் நுகர்ந்து வருவோம் வாருங்கள்….
1.கண் தேடும் கனா – செ. யோகேஸ்வரி
என் உறவு முறையில் ஒருவர் விற்பனையாளராக பணிபுரிகிறார். அவர் பணிபுரிய செல்லும் பகுதி வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த காடாமங்கலம் ரயில்வே கேட்டில் நின்றுவிடாமல் தாண்டி செல்வதிலேயே குறியாக இருக்கும். சில சமயங்களில் அதிர்ஷ்டம் அவர் கையில் இருக்கும். பல நேரங்கள் விரைவாக கிளம்பினாலும் அங்கே சென்று காத்திருக்க நேரிடும். இந்த கதையை வாசித்தவுடன் ஆதர்ஷினியாக ஆவேசம் கொண்டு யாரேனும் ஒரு வீர மங்கை பிறந்து வர மாட்டாளா என்றும் , இதே போன்ற ஒரு மேம்பாலம் அந்த பகுதியில் கட்டப்பட்டால் எத்தனை பேரின் இன்னல்கள் களையப்படும் என்றும் எனக்குள் தோன்றியது.
ஆனால் இங்கு கேள்விக்குறியே ஆதர்ஷினியாக ஆகப்போவது யார் என்பது தான்..! காடமங்கலத்திற்கான விடிவு காலத்தை எதிர்நோக்கி நிற்கும் பலருள் நானும் ஒருத்தி தான் என்பதில் வெட்கி தலைகுனிய வைத்தது முதல் கதை.
- மோனம்வாசியா- வி.ராஜகோகிலா
‘விவான்’ என்ற சிறுவனின் மூலம் மலைகளால் மறைக்கப்பட்ட சொர்க்கத்தின் வரலாறு தோண்டி எடுக்கப்படுகிறது. கிரீஸ் நாட்டின் வளமிக்க வயல்வெளிகளும் பயிர்களும் திராட்சை தோட்டங்களும் ஆலிவ் தோப்புகளும் அழிந்து…
பூமியில் ஏற்பட்ட அதிர்வால், மேல் எழும்பிய பூமி கிரீசில் மலைகளாகவும் பள்ளத்தாக்குகளாகவும் மாறிய விதம் தான் “மோனம்வாசியா” உருவான விதம் என்பதை அழகான புனைவுக் கதையாக கூறியிருக்கிறார். சிறுகதையில் மறைக்கப்பட்ட சொர்க்கத்தையும் அழகாக நமக்கு காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
- ஆரஞ்சு மிட்டாய் – சு. மாரியப்பன்
இரு வேறு சூழலில் வாழக்கூடிய மாணவர்களின் பிறந்த நாளை அழகான கோணத்தோடு கதையாக்கி இருக்கிறார். தூங்கி எழும்போது உடன் தாய் இல்லாத குழந்தைகள் தான் , அரசுப்பள்ளிகளில் தாய்மையை தேடி வருகிறது என்பதனை இக்கதை உணர்த்துகிறது. அதனை குணவதி டீச்சர் போல் பல ஆசிரியர்கள் நிவர்த்தி செய்து கொண்டும் இருக்கிறார்கள் என்ற கதை முடிவும் அருமை.
- ஸ்டார் கேமரா ரோலிங் ஆக்சன் – ச.கதிரேசன்
இந்த கதை வாசித்ததும் எனக்கு பிரபல தொழிலதிபர் ஒருவர், மருத்துவர் ஒருவர் தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக திரைப்படங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்தது நினைவுக்கு வந்தது . ஆனால் அதே கதையை சலிப்பே தட்டாமல் அறிவியல் பானியில் வெள்ளை மாளிகை வரை நம்மை கொண்டு வந்து , கதையில் அடுத்து என்னவாக இருக்கும் என்று நகர்த்திச் சென்று முடிவை ஜோவியலாக தந்திருக்கிறார் ஆசிரியர். நல்ல கற்பனை கலந்த கதை.
- நாங்களும் மனுஷங்க தான்- சி.க.வசந்தலட்சுமி
ரகு என்ற மனிதனின் இயல்பை மட்டும் கூறாமல் , சமுதாயத்தின் பொது புத்தியில் மூன்றாம் பாலினத்தவர் குறித்து உள்ள சிந்தனையை கதைக்களமாக அமைத்து நாங்களும் மனுஷங்க தான்… என்று தொலைந்த பணத்தை திரும்ப தருகையில் மனிதன் நிறைந்த உருவாக காட்சி தருகிறார் அந்த திருநங்கை. திருநங்கைகள் குறித்தான நல்ல பார்வையை குழந்தை பருவத்திலேயே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறது இந்த கதை.
- மூன்றாம் உலகப்போர்- இ ரா. சங்கீதா
தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கு என்று ஒளிபரப்பப்படும் கார்டூன் படத்தில் நிகழும் ஒளிச்சித்திரம் போல் இருந்தது இக்கதை. ஸ்நாக்ஸ் டப்பாவுக்குள் புகுந்து அங்கே நடக்கும் மந்திர சபை ஆலோசனைகளை கேட்டும் , அதனால் கேட்ட மனமாற்றத்தை எல்லோரிடமும் சொல்லும் பிரியா, பிரெஞ்ச் ப்ரைஸ் உணவாக தன்னை நினைத்துக் கொண்டு பாரம்பரிய தின்பண்டங்களை விடுதலையாக்கும் காட்சிகள் உண்மை நிலையிலும் விடுதலை ஆக்கப்பட வேண்டும். ஆம் , கண்டிப்பாக மூன்றாவது உலகப்போர் உணவிற்கும் நீருக்கானதுமாகவே அமையும். அதற்குள் விழிப்புணர்வு கொள்வோம்.
- நிலாவின் வேலு நாச்சியார் – நா.சங்கீதா
பெண் குழந்தைகளை வேண்டாம் என்று சொன்ன காலம் மாறினாலும் , நாச்சியாவாக இங்கே பிறக்கும் குழந்தை பின்னர் நீட் தேர்வில் வெற்றி கண்டபின் தன் தந்தையின் வார்த்தைகளில் தேடப்படும் மகளாக மாறுவது மனதில் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது.
ஆண் பெண் சமத்துவம் பேசி பெண்ணுக்கு எல்லா உரிமைகள் கொடுத்தாலும் அவளிடமிருந்து அடுக்களையை மட்டும் பிடுங்கிக்கொள்ள ஆண் சமூகம் ஒருபோதும் ஒப்புக் கொள்வதில்லை. நாச்சியாவுக்கு கிடைத்த நிலா என்னும் அம்மாவைப் போல கிடைக்காத வரை….
- பெரிய யானை- தீ.தாஜ்தீன்
சமூகத்தில் குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டும் இருக்கும் மதிப்பும் மரியாதையும் எல்லா தொழில்களுக்கும் கிடைப்பதில்லை. அதிலும் குறிப்பாக ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு உண்ணத் தேவைப்படும் விவசாயத்தை கையில் எடுக்கும் தொழில்களை ஏளனமாக பார்க்கும் நிலை கட்டாயம் மாற வேண்டும் என்பதுதான் இக்கதை. பெரிய யானைகளாக காணப்படும் விவசாயிகள் முதன்மை நிலையில் வைக்கப்படும் பொழுதே “விவசாயி” என்ற அங்கீகாரமும் அங்கீகரிக்கப்படும். அதற்கு அவர்களின் கூலியும் , பருவ மழை பொய்ப்பால் வேலையின் நிரந்தரமின்மையுமே ஒரு காரணமாகவும் அமையலாம்.
- பார்வை புதிது – ச.துர்கா தேவி
சமுதாயத்தில் சிலர் சுந்தரம் போன்று எல்லோரையும் மட்டம் தட்டி , தான் தான் என்ற எண்ணத்தோடு வாழ்பவர்கள். நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து தவறான முறையில் புரிந்து கொள்ளும் சுந்தரம் போன்ற மனிதர்களின் பார்க்கும் பார்வையின் கோணங்கள் கண்டிப்பாக மாற வேண்டும் என்கிறது கதை. மாற்றுத்திறனாளிகளை மதிக்க வேண்டும் . எந்த நேரத்திலும் நம் வாழ்விலும் மாற்றம் எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பதற்கு சுந்தரம் சாட்சியாக இருக்கிறார்.
- வீடு- ச.பூங்குழலி
புதிதாக வீடு கட்டும் வரை தேவைப்படும் ஒரு மரத்தின் நிழலானது , தனக்கு என்று அமைந்து போன வீட்டிற்கு தொந்தரவாக இருக்குமென்று இறுதியில் வெட்டப்படும் மரத்தின் அழுகுரலாக இக்கதையை பார்க்கின்றேன். கதை மாந்தராக பறவை குடும்பத்தின் கருத்துப் பரிமாற்றங்கள் , இறுதியில் நமக்கென்று நாமே கூடு (வீடு) கட்டிக் கொள்ளும் திறன் இருக்க நாம் ஏன் தயங்க வேண்டும் என்று தாய் குருவி தன் குஞ்சுகளை அழைத்துச் செல்லும் காட்சி.. யார் ஆறறிவு உள்ளவர்கள் என்பதை நமக்கு சுட்டுகிறது.
- நினைவு பலித்தது -சே.ஷீபா
பாரதி டீச்சர் போல ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஒருவர் கிடைத்துவிட்டால் போதும் , தனியார் பள்ளியை நோக்கி படையெடுக்கும் கூட்டம் காணாமல் போய்விடும்.
சக உயிர் தன் முன் கூனிக் குறுகுவதை, செயலிழந்து அணிவதைத் தான் தங்கள் சாதியின் கௌரவம் என்று பாடும் கலாச்சார பிரியர்களுக்கு நல்ல பாடம் புகட்ட பாரதி போன்ற ஆசிரியர்கள் கண்டிப்பாக தேவை. ஆனால் இது நடைமுறை சாத்தியமாகும் வரை பாரதிகள் பிறக்க வேண்டும்.
- கலைவாணியின் கவலை – எஸ். இந்திராணி ராதாகிருஷ்ணன்
படித்து பணிக்குச் செல்லும் பல பெண்களின் மனக்குமறல்களை கதையாக வடித்து இருக்கிறார் ஆசிரியர். ஆணாதிக்க சமூகம் கை கொண்டு இருக்கும் மற்றும் ஒரு பிரச்சனை இது . ஏடிஎம் கார்டு போன்ற டெக்னாலஜிகள் வந்தபோதிலும் அதனை இயக்குவதும் கூட ஆண்கள் கையில் தான் உள்ளது. கால நேரம் பார்க்காமல் குடும்பத்திலும் சமூகத்திலும் உழைக்கும் கண்டுகொள்ளப்படாத கலைவாணிகள் , கணவரிடம் கை நிறைய சம்பளத்தையும் கொடுத்து வேலை செய்யும் வேலைக்காரிகள் தான். மாற்றம் கலைவாணிகளின் கையில் தான் உள்ளது.
- அம்மாவின் லட்சுமி -தி சுமதி
கிராமப்புற மாட்டு தொழுவத்தில் அம்மாவின் இடத்தில் நம்மை இருத்தி , லட்சுமியை நாமே வளர்த்து தாரை வார்த்து கொடுத்தது போல் ஒரு உணர்வு இந்த கதை தந்தது . எப்போதும் பிற உயிர்களிடம் இரக்கம் காட்டும் மனது , மீண்டும் அது போன்ற ஒரு இழப்பை ஏற்க மனம் இல்லாமல் லட்சுமியின் வாரிசுகளை பிறருக்கு வழங்கும் போதும் , அதற்கு மாற்றாக கோழி குஞ்சுகளை வளர்க்கும் அம்மாவின் மனப்பாங்கும் எல்லோர் மனதிலும் இருக்கும் இயல்பான குணங்கள். ஏனோ லட்சுமிக்கு கிடைக்கும் இடம் காளைகளுக்கு கிடைக்காமல் போகிறது தொழுவத்தில்.
- மீள்கதிர்- ரெ.வனிதா
சமுதாயத்தில் எத்தனை அறிவியல் சார்ந்து கண்டுபிடிப்புகள் வந்தாலும் , ஒரு சில தொழில்களை செய்வதற்கு மட்டும் ஆறறிவு படைத்த மனிதனுக்கு மூளை செயல்படாது. காரணம் அந்த வேலையை செய்வதற்காகவே அந்த பிறவிகள் பிறக்கப்பட்டதன் பிரதிபலிப்பு. மனிதக்கழிவுகளை அள்ளுவதற்கும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதற்கும் படைக்கப்பட்ட மக்கள் என்று வரம் பெற்றவர்களா அவர்கள்..!
மனதில் தன்னம்பிக்கையும் , சலனப்படும் போது தெளிவான முடிவு எடுக்கக் கூடிய சூழ்நிலைகள் வாய்க்கப் பெற்ற மாணவர்களாலேயே கல்வி மீது கவனம் செலுத்த முடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கு மேரி குட்டியை ஆதரிக்கும் ஆசிரியர்கள் நிச்சயம் தேவைப்படுவார்கள்.
- காகேசிலாய்டுகள்-க. சுமித்ரா சத்தியமூர்த்தி
படைக்கும் சிறுகதையில் ஏதேனும் ஒரு புதிய கருத்தை வாசிப்பவர்கள் அனுபவிக்கும் விதமாக காகேசிலாயிடுகள் கதை அமைந்துள்ளது . பசிபிக் கடலில் இருக்கக்கூடிய லட்சக்கணக்கான தீவுகளில் அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் இருக்கக்கூடிய தீவு மிட்வே. இந்த தீவில் மட்டுமே வாழக்கூடிய பறவைகளைப் பற்றிய கணக்கெடுப்புக்காக செல்லும் ஒரு குழு அங்கே வாழும் மக்களை அவர்களாகவே வாழ விட்டுச் செல்லும் கதை தான் இது. எதிர்காலத்தில் நடக்கும் டைம் ட்ராவல் கதை போல அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கருத்தை அழுத்தமாக கூறிச் செல்கின்றன. கதைகள் எழுதிய ஆசிரியர் எழுத்தாளர்களுக்கும் அதனை தொகுத்து புத்தகமாக வழங்கிய தொகுப்பாசிரியர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் . மென்மேலும் இது போன்ற பல புத்தகங்களை வெளியிடவும் , மாணவர்களிடத்திலே கல்வியில் மாற்றத்தை கொணரவும் வாசிப்பு அமையட்டும் என்று கூறி வாழ்த்துகிறேன்.
இந்த புத்தகத்திற்கு கதைகளுக்கு ஏற்ற கருத்து ஓவியம் வரைந்த ஓவியர் செந்தமிழ்ச்செல்வன் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். கதையை நன்முறையில் உள்வாங்கி மிக தத்ரூபமாக ஓவியம் வரைந்து உள்ளார்.
சிறுகதைகளை எழுதும் பொழுது சமகாலத்தில் எழுதும் ஆசிரியர்களின் சிறுகதைகளை வாசிப்பதும், நம் எழுத்தை செம்மைப்படுத்த உதவும் . அதற்கான போதிய நேரங்கள் வாய்க்கப்படாவிட்டாலும் , கிடைக்கும் சொற்ப நேரங்களைப் பயன்படுத்தி இன்னும் எழுத்தாற்றலை செம்மைப்படுத்த வாழ்த்தும்…
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர் : ஏழாவது விரல் (Ezhavathu Viral)
தொகுப்பாசிரியர் : திரு. மு. சிவகுமார்
பக்கங்கள் : 14
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 150
தலைப்பு : சிறுகதை
நூலிப் பெற : https://thamizhbooks.com/product/ezhavathu-viral/
நூல் அறிமுகம் எழுதியவர் :
பா. விமலா தேவி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.