வாழ்வின் தீராத கனவாக ஒவ்வொருவருக்குள்ளும் இழையோடிக் கொண்டிருப்பது உலகைச் சுற்றிவர வேண்டும் என்ற பெருவிருப்பம் எனலாம். மனிதர்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழவும் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு தருணத்திலும் ஆனந்தத்தை சொந்தமாக்கிக் கொள்ளவும் பயணங்கள் வழி செய்கின்றன. ஆதி மனிதன் தொடங்கி இன்று வரை வாழ்வை செம்மையாக ஆக்குவதற்கு மனிதனுக்கு உதவியது அவன் நடத்திய பயணங்களே எனலாம்.
பயணங்களின் வழி மனிதர்கள் புதிய உலகத்தைக் கண்டடைகிறார்கள். புதிய அனுபவங்களைச் சேமிக்கிறார்கள். பயணக் கட்டுரைகள் எனப்படுபவை ஒருவர் தாம் கண்டு ரசித்த இடங்களை, கண்டு களித்த காட்சிகளை, அனுபவித்த அனுபவங்களை எழுத்தின் வழியாகவோ காட்சிகளின் வழியாகவோ நமக்குள் கடத்தும் உன்னத முயற்சி எனலாம். ஒவ்வொரு மொழியிலும் பயணக்கட்டுரைகள் அதிகரிக்கும் பொழுது மக்கள் தங்களின் தேடலின் தொடர்ச்சியாக பயணங்களை வடிவமைத்துக் கொள்வதற்கு உதவி செய்கின்றன என்பது உண்மையே பயணங்களின் மூலமாக ஆனந்தத்தை மட்டுமல்ல அறிவையும் பெற முடியும். அனுபவத்தையும் பெற முடிகிறது. பயணங்கள் நமக்குள் ஒளிந்து கிடக்கும் புதிய புதிய கற்பனை வளத்தையும் மேம்படுத்து உதவுகின்றன. பயணங்களின் வழியாக நம் மனதிற்குள்ளான ஏக்கங்கள் தீர்கின்றன. பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும் சிலருக்கு பயணங்கள் நற்பாதை அமைத்துக் கொடுக்கின்றன.
மனிதர்களின் பயணங்களை அடிப்படையாக வைத்து சுற்றுலாத்துறை ஒவ்வொரு நாட்டிலும் சிறப்புற செயல்பட்டு வருகிறது. பயணங்கள் நம் ஆன்மாவை ஆனந்தமயத்தில் ஆழ்த்திவிடும் ஆற்றல் பெற்றது. இன்று சுற்றுலாவில் பலவிதமான வகைப்பாடுகளுடன் பயணங்கள் வடிவமைக்கப்படுகின்றன. கல்விச் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா, வரலாற்றுச் சுற்றுலா என சுற்றுலாவை வகைப்படுத்திக் கொண்டே போகலாம்.
அவ்வகையில் ஏழு கடல் தாண்டி என்ற பயணக் கட்டுரைகளை எழுதிய கவிஞர் இரா ஆனந்தி அவர்கள் புனிதப்பயணம் என்ற தலைப்பில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தை, அனுபவமாக பெற்ற நிகழ்வுகளை காட்சிப்படுத்தி கட்டுரைகளாக வெளியிட்டு இருக்கிறார். இப்பயணத்தில் தான் கண்ட இடங்களின் சிறப்புகளை விரிவாக எடுத்துரைக்கிறார். அந்த சிறப்புகளினால் மக்களுக்கு எவ்விதமான பயன்பாடுகள் நேர்கின்றன என்பதை விவரிக்கிறார். அதே சமயம் தனது பயணத்தை எந்த இடங்கள் எவ்விதம் சிறப்பாக்கின என்பதையும் தேர்ந்த நடையிலும் எளிய வார்த்தைகளுடனும் அழகான வரிகளுடனும் எடுத்த இயம்புகிறார். இந்நூலில் தத்துவம், கவித்துவம், புனிதத்துவம், வரலாற்று அழகியல் சுவையான நிகழ்வுகள் அனைத்தும் சங்கமிக்கின்றன.
தான் கண்டு வந்த இடங்களின் சிறப்புகளை மட்டும் தருவதோடு நிறுத்திக் கொள்ளாமல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பை நம் நாடு மேற்கொண்டால் நிறைய சாதிக்க முடியும் என்ற சமூக அக்கறையுடன் கூடிய எழுத்துக்களில் நம்மை கவர்கிறார் இவர்.
இவர் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் நம்மையும் கைபிடித்து உடன் அழைத்துச் செல்லும்படியான வர்ணனைகளில் நேரடிக்காட்சியாக அந்த இடங்கள் நம் கண் முன்னே வருகின்றன. பயணங்களின் வழியாக அறிவை விருத்தி செய்ய முடிகிறது. அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. சென்று வந்த இடங்களில் சந்தித்த மனிதர்களின் நடத்தைகளை பின்பற்ற முடிகிறது. அவர்களின் வாயிலாக அவர்களின் பண்பாட்டை உணர்ந்து கொள்ள முடிகிறது என ஏழுகடல் தாண்டி பயண கட்டுரைகளில் ஆசிரியர் எழுதுகிறார்.
தான் சென்று வந்த இடங்களான நாடுகளான எகிப்து பாலஸ்தீனம் இஸ்ரேல் ஜோர்டன் ஆகியவற்றில் சிறந்த சுற்றுலா தளங்களை தேர்ந்தெடுத்து அவற்றைக் கண்டுகளித்து அதன் வழியாக தாம் பெற்ற அனுபவங்களை விவரிக்கிறார்.
நல்ல சமாதானம், சந்தோசம், இறை அன்பு, பணிவு, பொறுமை, விட்டுக் கொடுக்கும் தன்மை, பகிர்தல், ஒத்துழைப்பு இவையும் ஒரு பயணத்தின் வழியாக மனிதர்கள் பெற முடியும் என்பதை நூலின் வழியாக விவரிக்கிறார்.
தோகா விமான நிலையம் கெய்ரோ மணல்மேடுகள், கெய்ரோவில் உள்ள சர்ச் ஆப் த ஹோலி ஃபேமிலி எனப்படுகின்ற ஹேங்கிங் சர்ச் பற்றிய விவரங்கள் அருமை. இந்த சர்ச் உலகின் மிகப் பழமையான பெரிய சர்ச் என்று கூறப்படுகிறது. இந்த சர்ச்சில் குழந்தை இயேசுவும் அவரது தாயார் மேரி மாதாவும் ஆறு மாத காலம் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
உலகிலேயே மிகப்பெரியதான மியூசியம் என்று கூறப்படும் எகிப்து மியூசியம் எவ்வாறு சுத்தமாகவும் அனைத்து வசதிகளுடனும் வரும் சுற்றுலா பயணங்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய கட்டுரை மிக அருமை. இங்கே 3600 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட மன்னர்களின் சிலைகள் கற்சிலைகளாக அமைக்கப்பட்டு நம்மை வரவேற்கின்றன. அவர்களின் சிலைகள் அனைத்தும் இடது கால் முன்னே வைத்து இருப்பது போல் செதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் இதயம் சொல்வதைக் கேட்டு நடப்பவர்கள் என்பது அதன் பொருள். கெய்ரோவில் உள்ள கோல்டன் ஈகி கிரிஸ்டல்ஸ் என்று அழைக்கப்படுகிற வாசனை திரவிய விற்பனை நிலையத்தைப் பற்றிய கட்டுரையில் வாசனை திரவியத்தை வாங்கச் சொல்லி விற்பவர்கள் பற்றி எழுதும் பொழுது”” முதலில் அவர்கள் பேசியது சிரிப்பாக இருந்தது;சிறப்பாக ரசிக்கும்படியாக இருந்தது; நேரம் ஆக ஆக மணம் தாங்க இயலாமல் தவித்து விட்டோம்”” என்று நகைச்சுவையாக குறிப்பிடுகிறார்.
கெய்ரோவில் அடுத்ததாக அவர் கண்ட மிக முக்கியமான இடங்களில் ஒன்று பாப்பிரஸ் பேக்டரி. நைல் நதியின் கரையில் காணப்படும் இதில் காகிதம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது பற்றிய செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்படுகிறது. பாப்பிரஸ் என்ற புல்லின் மேல் பகுதி பசு, குதிரை போன்ற பிராணிகளுக்கு உணவாகவும் மத்திய பகுதி மனிதர்களுக்கு உணவாகவும் மீதமுள்ள கீழ்ப்பகுதியில் வெளிப்பகுதி ஷூக்கள், படகுகள், கயிறுகள், கூடைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது. உள்பகுதியை நீளநீளமாய் வெட்டி எடுத்து நன்றாக அழுத்தம் கொடுத்து சாறு எடுத்துவிட்டு ஐந்து நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து பதப்படுத்தி வெளியே எடுத்து நெசவாளர்கள் நூல்களை அடுக்குவது போல் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி மீண்டும் அழுத்தம் கொடுத்து காய வைக்கிறார்கள். இதையே காகிதமாக பயன்படுத்துகிறார்கள். இந்த காகிதத்தில் எழுதப்பட்டவை தண்ணீரில் கரையாது. இதில் வரையப்பட்ட ஓவியங்கள் காலத்தால் அழியாது. இதுவே பாப்பிரஸ் புல்லின் சிறப்பு.
எகிப்து என்றாலே நாம் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது மம்மிகளும் பிரமிடுகளும். அத்தகைய பிரமிடுகள் காணப்பட்ட இடங்களை சுற்றிப் பார்த்த கட்டுரை ஆசிரியர் அவற்றைப் பற்றி தனிக்கட்டுரையாகவே எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 4500 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட பிரமிடுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது பற்றியும் அவற்றின் உயர அளவுகள் பற்றியும் எடை பற்றியும் இவர் விவரிக்கும் பாங்கே சிறப்பான ஒன்று. உலகின் மிகப்பெரிய பிரமிடுகள் மூன்றும் ஒரே இடத்தில் காணப்படும் அற்புதத்தையும் ரசித்து வந்திருக்கிறார். அதேபோல் மனித முகமும் சிங்க உடலமாய் காணப்படும் ஸ்பிங்க்ஸ் எனப்படும் பிரமிடு பற்றியும் விரிவாக விளக்குகிறார்.
எகிப்தின் மிக முக்கியமான ஒரு பகுதி என்றால் அது நைல் நதி. நைல் நதி இல்லாமல் எகிப்து இல்லை. நீர்ப்பாசனத்திற்கும் விவசாயம் செழிப்பதற்கும் நதிக்கரையோர நாகரிகங்களை அறிமுகப்படுத்திய நைல் நதி பற்றியும் இக்கட்டுரையில் அழகாக எடுத்துக் கூறுகிறார்.
செங்கடலையும் மத்திய தரைக் கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் பற்றி அவர் கூறும் போது “”இந்த கால்வாய் இல்லை என்றால் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் கப்பல்கள் முழு ஆப்ரிக்க கண்டத்தையும் சுற்றியே போக வேண்டும். அந்த வகையில் சூயஸ் கல்வாயை எழுப்பிய எகிப்தின் அதிபர் நாசர் அவர்களுக்கு உலகமே நன்றி கூறிக்கொண்டிருக்கிறது சூயஸ் கால்வாயின் வழியாக””என்று எழுதுகிறார்.
இயேசு கிறிஸ்து காட்டிக் கொடுக்கப்பட்ட இடம், இயேசு கிறிஸ்து மலைப் பிரசங்கம் செய்த இடம், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடம் என தனது பயணத்தின் தொடர்ச்சியாக இவர் கண்டு வந்த காட்சிகளை நடுநிலைத்தன்மையோடும் வரலாற்றின் உண்மைகளுடனும் வழிவழியாக கேட்கப்படும் கதைகளில் சொல்லப்படும் நம்பிக்கைகளின் வழியாகவும் இக்கட்டுரையில் அனைத்து தகவல்களையும் பதிவு செய்கிறார்.
“”கடலும் மலையும் வானும் பார்க்க பார்க்க நிறைய கதைகள் சொல்வது போல இருந்தன. மலையின் கம்பீரம் கண்களை கட்டிப் போட்டால் வானும் கடலும் அவைகளுக்குள் சங்கமமாகச் சொல்கின்றன. இயற்கை பித்துப் பிடிக்க வைக்கிறது. குழந்தையாய் குதூகளிக்க வைக்கிறது. கவிஞனை பாடச் சொல்கிறது”” என்று சாக்கடல் பற்றி கவித்துவமான வரிகளால் எழுதிச் செல்கிறார். நீரின் அடர்த்தி அதிகமாக காணப்படுவதால் இந்த கடலில் எந்த பொருளும் அமிழாது மிதக்கும் என்பதை இக்கடலில் எப்படி எல்லாம் விளக்கமாகச் செய்து காண்பிக்கின்றனர் என்பதையும் அதை எவ்வாறு அழகாக பராமரிக்கின்றனர் என்பதையும் அதுவே சுற்றுலாத் துறைக்கு பெரும் பங்காக மாறி வருகிறது என்பதையும் கோடிட்டும் காட்டுகிறார்.
இஸ்ரேல் நாட்டுப் பயணத்தைப் பற்றி கூறும் போது அந்நாட்டின் விவசாய யுக்திகளை வெகுவாக பாராட்டுகிறார். “”இஸ்ரேல் நவீன விவசாய விஞ்ஞானத்திலும் அணு ஆயுத தயாரிப்பிலும் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. சாலை வழி எங்கும் விவசாய செழிப்பினை மேற்கொண்டு விவசாயத்தில் அந்நாடு புரட்சி செய்துள்ளதைப் பார்க்கும்போது அந்நாட்டின் நவீன விவசாயத்தில் மக்களின் பங்களிப்பை உணர முடிகிறது. பார்க்கும் இடமெல்லாம் தூய்மை, அறிவில், ஆற்றலில் ஒப்பற்ற நிலைக்கு தன்னை உயர்த்தி கம்பீரமாய்த் திகழும் அழகே அழகு”” என்று இஸ்ரேலை கண்டு களித்து இன்புறுகிறார்.
உலகப் புகழ்பெற்ற கொலேசியம் காணப்படும் நாடான ஜோர்டானில் அவர் பார்த்துள்ள இடங்களைப் பற்றியும் கூறும்போது பாலைவனத்திற்கும் வளமான ஜோர்டான் பள்ளத்தாக்கிற்கும் இடையே அமைந்துள்ள மலைப்பிரதேசத்தில் உள்ள அம்மான் நகரம் பழமையும் புதுமையும் கலந்து அற்புதமான நகரம் என்கிறார். அம்மான் மையப் பகுதியில் அந்நாட்டின் கொடி பறக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் கொடிகள் ஏற்றப்பட்டு இருப்பது அவர்களின் தேச அபிமானத்தை பறைசாற்றுகிறது.
கொலேசியம் என்பது ராஜா ராணி மக்கள் அனைவரும் ஒருங்கே அமர்ந்து மல்யுத்தம் வாள்சண்டை பார்த்து ரசிக்கும் இடமாகத் திகழ்ந்திருக்கிறது. . முக்கியமாக சிறைக்கைதிகளை தண்டிக்கும் விதமாக மிருகங்களுடன் மோத வைத்து அவர்கள் வதையுறும் காட்சிகளை அக்காலத்தில் அனைவரும் கண்டு ரசித்துள்ளனர். இது பற்றிய தகவல்கள் இந்த மியூசியத்தில் பார்க்க வரும் சுற்றுலா பயணியருக்கு தெளிவாக விளக்கப்படுகிறது.
மழைநீர் சேமிப்பு பற்றியும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறைகள் பற்றியும் பழங்காலத்திலேயே மக்கள் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்கள் என்பது பற்றிய தகவல்களையும் இந்நூலின் வழியாக அவர் எடுத்துக் காட்டுகிறார்..
வண்ணப் புகைப்படங்கள் 18 பக்கங்களில் நம்மை வசீகரிக்கின்றன. வானமே உலகமென பறக்கும் பறவையின் சிறகைக் கொண்டு மனிதர்களும் உலகமெங்கும் பறந்து திரிந்து பரந்த அனுபவங்களைப் பெற வேண்டும் என்ற அடிப்படையில் இக்கட்டுரைகள் தனது குறிக்கோளை வெற்றிகரமாக நிறைவேற்றுகின்றன என்று சொன்னால் மிகையில்லை.
நூலின் தகவல்கள்
நூல் : ஏழு கடல் தாண்டி
தமிழில் : கவிஞர் இரா ஆனந்தி
வெளியீடு : சுதைமண் பதிப்பகம்
தொடர்புக்கு : 96 98 24 55 67
முதல் பதிப்பு : மார்ச் 2021
பக்கம் : 88
விலை : ரூ. 150
எழுதியவர்
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
புத்தக மதிப்பீட்டுக்கு மிகவும் நன்றி.
கவிஞர்.ரா.ஆனந்தி
எழுத்தாளரின் உணர்வுகளை அப்படியே படம் பிடித்து காட்டி எழுதிவிட்டீர்கள். எங்களையும் ஏழு கடல் தாண்டி அழைத்துச் சென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
படிப்பதற்கு வியப்பாக இருக்கிறது.
நல்வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்.